தரம் தாழ்ந்த பிரசாரம் ஒழிக...

சென்னை: இந்த தேர்தலில், நாடு முழுக்க, மதத்தையும், ஜாதியையும் முன்வைத்து, பிரசாரம் தீவிரமாக நடந்து வருகிறது. பிரசாரத்தின் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விதிமுறைகளை, அனைத்து கட்சிகள், வேட்பாளர்களுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்திருந்தாலும், பெரும்பாலான கட்சிகளின் வேட்பாளர்கள், அதை கடைபிடிப்பதில்லை.


ஹர்ப்ரீத் மன்சுகானி என்ற வெளிநாட்டுவாழ் இந்தியர் , '2019 லோக்சபா தேர்தலில், மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும், பிரிவினை உண்டாக்கும் வகையில், பிரசாரம் நடக்கிறது. இதை தடுக்க, தேர்தல் ஆணையம் தவறி விட்டது. சுப்ரீம் கோர்ட் தலையிட வேண்டும்' என்று வழக்கு தொடர்ந்தார். விசாரணையின்போது, ஆணையம் தெரிவித்த பதில் கோர்ட்டுக்கே அதிர்ச்சி அளித்தது. 'உ.பி., முதல்வர் யோகியும், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியும் பிரிவினையை துாண்டும் வகையில் பேசியதற்கு என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்' என்று தலைமை நீதிபதி கேட்டபோது, 'இருவரிடமும் விளக்கம் கேட்டுள்ளோம்' என்றது ஆணையம்.


தலைமை நீதிபதி விடவில்லை, 'உங்கள் நோட்டீஸ்படி அவர்கள் ஏப்., 12க்குள் பதில் அளித்திருக்க வேண்டும். இன்று தேதி, 15. இன்னும் பதிலளிக்கவில்லை. நீங்கள் என்ன செய்தீர்கள்? ' என்று கேட்டார். அதற்கு தேர்தல் ஆணைய வக்கீல், 'அறிவுரை அனுப்பியுள்ளோம். இது குறித்து புகார் அளிப்போம்' என்றார்.'தேர்தல் ஆணையம், பல்லில்லாத அமைப்பு. வெறுப்பை துாண்டும் பேச்சுக்களை தடுக்கவோ, நடவடிக்கை எடுக்கவோ உங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறலாமா ' என்று கேட்டார் தலைமை நீதிபதி. 'கட்சி அங்கீகாரத்தை, ரத்து செய்யவோ, வேட்பாளரை தகுதி நீக்கவோ எங்களுக்கு அதிகாரம் இல்லை' என்று ஆணைய வக்கீல் சொன்னார்.


ஆணையத்தின் அதிகாரங்கள் குறித்து, விரிவாக விசாரிக்கப் போவதாக, கூறி, வழக்கை தள்ளி வைத்தது கோர்ட். கோர்ட்டில் இந்த கடுமையான கேள்விகளுக்கு பிறகே, தேர்தல் ஆணையம், மாயாவதிக்கு ஏப்., 16 முதல், 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது. முதல்வர் யோகியும் ஏப்., 16 முதல், 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.
தமிழகத்திலும், வெறுப்புணர்வை துாண்டும் பேச்சு மட்டுமின்றி, தரக் குறைவான பிரசாரமும் நடந்தது. முதல்வர் பழனிசாமியை, 'மண்புழு' என்றார் ஸ்டாலின். ஒவ்வொரு கூட்டத்திலும், பழனிசாமியை, 'எடுபிடி முதல்வர்' என்றார். 'இந்த தேர்தலோடு, பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகி விடும்' என்றார்.பதிலுக்கு பழனிசாமி, 'நான் பேச ஆரம்பித்தால், ஸ்டாலின் காது ஜவ்வு கிழிந்து விடும்' என்றார். முந்தைய தேர்தல்களிலும், மூன்றாம் தர பேச்சுக்களை கேட்டுள்ளோம். அவ்வாறு பேசுபவர்கள், கட்சிகளின், மூன்றாம் கட்ட தலைவர்களாக இருப்பார்கள். அது, மக்களிடம் தாக்கத்தை உண்டு பண்ணியதில்லை. இன்றோ, கட்சியின் தலைவரே தரக்குறைவாக பேசுவதால், மற்றவர்கள் இன்னும் தரம் தாழ்ந்து பேசுகின்றனர். ஜெயலலிதாவோ, கருணாநிதியோ, பிரசாரத்தை நாசூக்காக கையாள்வர். தவறான வார்த்தை பிரயோகங்களால், எதிர்க்கட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்த இடம் தரக் கூடாது என்பதில் கவனமாக இருப்பர்.


பேசுவதற்கு பிரச்னைகள் இல்லாமல் இல்லை. அவற்றை பேசாமல், 'உனக்கு திராணி இருக்கிறதா, என் திராணியோடு உன்னால் மோத முடியுமா' என, தெருச்சண்டை போடுகின்றனர். தேர்தலில், வெல்வதும், தோற்பதும் இயல்பான ஒன்று. தேர்தலை கடந்து, மேடை நாகரிகத்தை, பேண வேண்டியது அனைவரின் கடமை. வெற்றி பெற்றே ஆகவேண்டிய நெருக்கடியில், தி.மு.க., - - அ.தி.மு.க., இரண்டுமே, முகம் சுளிக்கும் வகையில் பிரசாரம் செய்தது, ஏற்க முடியாத விஷயம்.


தமிழ் இலக்கியத்தையும், தமிழர் பெருமையையும் பேசி வளர்ந்த திராவிட இயக்கங்களின் இந்த வீழ்ச்சி, வேதனை தருகிறது. பிரசாரம் முடிந்து விட்டதால், இனி இவர்கள் பேசுவதற்கு எதுவும் இல்லை. அடுத்து வரக்கூடிய தேர்தல்களிலாவது நாகரிகமான பிரசாரம் செய்து மக்களை கவர வேண்டும். அதற்குள் சுப்ரீம் கோர்ட் தயவில் தேர்தல் ஆணையத்துக்கு ஏதாவது அதிகாரமும், உறுதியான புத்தியும் கிடைத்து, அநாகரிக பிரசாரத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயாராகும் என்று நம்புவோம்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)