கடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், தனித்து களம் கண்ட, 'ஆம் ஆத்மி' கட்சி இந்த முறை, திருவிழாவில் காணாமல் போன குழந்தையாகி விட்டது. ஒரு தொகுதியில் கூட போட்டியிடாதது, அந்த கட்சி தொண்டர்களிடம், சோர்வை ஏற்படுத்தி உள்ளது.
புதுடில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியின், ஆட்சி நடக்கிறது. ஊழலை ஒழிக்க, 'லோக்பால்' அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன், சமூக ஆர்வலரான காந்தியவாதி, அன்னாஹசாரே நடத்திய, தொடர் போராட்டத்துக்கு உறுதுணையாக இருந்தவர், கெஜ்ரிவால். ஒரு கட்டத்தில், அரசியலில் குதித்தார்; ஆட்சியையும் பிடித்தார். பஞ்சாப் மாநிலத்தில் போட்டியிட்டு, நான்கு, எம்.பி., தொகுதிகளை கைப்பற்றினார். ராஜ்யசபாவிலும், இந்த கட்சிக்கு, மூன்று, எம்.பி.,க்கள் உள்ளனர்.
24 தொகுதிகள்:
கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், தமிழகத்தில், 24 தொகுதிகளில், ஆம் ஆத்மி போட்டியிட்டது. தனித்து தேர்தலை சந்தித்த, இந்த கட்சியின் வேட்பாளர்கள், இரண்டு லட்சம் ஓட்டுகள் வரை பெற்றனர். அதிகபட்சமாக, துாத்துக்குடி தொகுதியில், ௨௬ ஆயிரத்து, ௪௭௬ ஓட்டுகளை, புஷ்பராயன் என்பவர் பெற்றார்.
மத்திய சென்னையில், 19 ஆயிரம்; தென் சென்னையில், 17 ஆயிரம்; ஸ்ரீபெரும்புதுாரில், 19 ஆயிரம் ஓட்டுகள் என்ற அளவில், பெற்றனர். இவ்வளவு ஓட்டுகளை பெற்ற தால், ஆம் ஆத்மி கட்சியினர் மத்தியில், நம்பிக்கை துளிர் விட்டது. தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், சில தொகுதிகளில் போட்டியிடலாம் என்ற நம்பிக்கையில், ஆம் ஆத்மி கட்சியினர் இருந்தனர். பா.ஜ.,வுக்கு எதிராக, காங்., - தி.மு.க., - தெலுங்கு தேசம் உள்ளிட்ட, கட்சிகளின் தலைவர்கள் அணி திரண்டபோது, அதில், ஆம் ஆத்மியும் இருந்தது.
எதிர்பார்ப்பு:
அந்த கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும், மற்ற தலைவர்களுடன் பங்கேற்றார். அதனால், தமிழகத்தில், தி.மு.க., தலைமையிலான அணியில் இடம்பெறலாம் என்ற, எதிர்பார்ப்பில் இருந்தனர்.தேர்தல் அறிவிப்புக்கு பின், கூட்டணி முயற்சி எதுவும் நடக்கவில்லை. மோடி எதிர்ப்பு என்ற ரீதியில், காங்கிரசுடனாவது அணி சேரும் என்றும் எதிர்பார்த்தனர். அதுவும், இதுவரை சாத்தியப்படவில்லை. தமிழகத்தில், தேர்தல் திருவிழா நடந்து கொண்டிருக்கும்போது, காணாமல் போன குழந்தையாகி விட்டது, ஆம் ஆத்மி!
- நமது நிருபர் -
வாசகர் கருத்து