குஜராத்தின் பழங்குடியினர், 'சஸ்பென்ஸ்'

குஜராத்தில் உள்ள, நான்கு பழங்குடியினர் தொகுதிகளில், எந்தக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு கிடைக்கும் என்பது, மிகப் பெரிய, 'சஸ்பென்சாக' உள்ளது.

குஜராத்தில் உள்ள, 26 தொகுதிகளுக்கு, 23ல் தேர்தல் நடக்கிறது. கடந்த, லோக்சபா தேர்தலில், 26 தொகுதிகளிலும், பா.ஜ., வென்றது. மாநிலத்தில், நான்கு தொகுதிகள், பழங்குடியினருக்கான தொகுதியாக ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது, கணிக்க முடியாத அளவுக்கு, சஸ்பென்சாக உள்ளது.

தலைவலி:
கடந்த, ஐந்து ஆண்டுகளில், பல கட்சிகளைச் சேர்ந்த, முன்னாள், இந்நாள், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், பா.ஜ.,வில் சேர்ந்துள்ளனர். அதே நேரத்தில், பா.ஜ.,வில் இருந்து, காங்கிரசுக்கு சென்ற, பாபு கடாரா, மத்திய குஜராத்தில் உள்ள, தாஹோத் பழங்குடி யினருக்கான தொகுதியில், பா.ஜ.,வுக்கு பெரும் தலைவலியாக இருப்பார்.

தற்போதைய, எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான, ஜஸ்வந்த் சிங் பாபரை எதிர்த்து, காங்கிரஸ் சார்பில், பாபு கடாரா போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில், 1999 மற்றும் 2004ல், கடாரா, பா.ஜ.,சார்பில் வென்றார்.இந்த லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஏழு சட்டசபை தொகுதிகளில், நான்கு, பா.ஜ., வசம் உள்ளது. கடந்த தேர்தலில், 2.32 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில், பாபர் வென்றாலும், தற்போது கடும் சவாலை சந்திக்கிறார்.தெற்கு குஜராத்தில் உள்ள, பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள, பர்தோலி தொகுதியில், காங்கிரசில் இருந்து, பா.ஜ., வில் சேர்ந்த தற்போதைய, எம்.பி.,யான பிரபு வசவா, கடும் சவாலை சந்திக்கிறார்.

காங்கிரஸ் சார்பில், முன்னாள் மத்திய அமைச்சர், துஷார் சவுத்ரி நிறுத்தப்பட்டுள்ளார். 2014 வரை இருவரும், காங்கிரசில் இருந்தனர். நண்பர்களான இருவரும், தற்போது எதிர்த்து போட்டியிடுகின்றனர். சவுத்ரி, 2004 மற்றும் 2009ல் இந்தத் தொகுதியில் வென்றவர். அதே நேரத்தில், 2014ல், பிரபு வசவாவிடம், 1.24 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், சவுத்ரி தோல்வி அடைந்தார்.கடந்த, 2017ல் நடந்த சட்டசபை தேர்தலில், இந்த தொகுதிக்கு உட்பட்ட, ஏழு தொகுதிகளில், மூன்றில், காங்கிரஸ் வென்றுள்ளது.

மூன்று முறை:
மத்திய குஜராத்தில் உள்ள, சோட்டா உதேபுர் தொகுதியில், மூத்த காங்கிரஸ் தலைவர், மோகன் சிங் ரத்வாவின் மகன், ரஞ்சித் ரத்வா போட்டியிடுகிறார். பா.ஜ., சார்பில், கீதா ரத்வா நிறுத்தப்பட்டுள்ளார். மூன்று முறை, எம்.பி.,யாக இருந்த, ராம்சிங் ரத்வா, கடந்த தேர்தலில், 1.79 லட்சம் ஓட்டுகளில் வென்றார். ஆனால், சட்டசபை தேர்தலில், ஏழில், நான்கு தொகுதி களை, பா.ஜ., இழந்தது. அதனால், அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டு, கீதா ரத்வா நிறுத்தப்பட்டுள்ளார்.

தெற்கு குஜராத்தில் உள்ள, வல்சாத் தொகுதி, பா.ஜ.,வுக்கு சாதகமாக உள்ளது. இங்கு, காங்கிரஸ் சார்பில், நான்கு முறை, எம்.எல்.ஏ.,வாக இருந்த, ஜீது சவுத்ரி நிறுத்தப்பட்டுள்ளார்.ஆனாலும், தற்போதைய, எம்.பி.,யான, பா.ஜ.,வின், கே.சி.படேலுக்கு, வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. கடந்த தேர்தலில், இரண்டு லட்சம் ஓட்டுகளில் இவர் வென்றார். உள்ளூர் பிரச்னைகள் அதிகமாக உள்ளதால், கடைசி நேரத்தில், திருப்பம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

- தர்ஷன் தேசாய் -
சிறப்பு செய்தியாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)