லாலு - சரத் ஆடு புலி ஆட்டம்

புதுடில்லி: அரசியல் என்றுமே வினோதமானது. நண்பர்கள் பகைவர்கள் ஆவதும், பகைவர்கள் நண்பர்கள் ஆவதும் இதில் சகஜம்.முன்னாள் மத்திய அமைச்சரும் ஜனதா தள தலைவர்களில் ஒருவருமான சரத் யாதவும் விதிவிலக்கு அல்ல.
இட ஒதுக்கீடு தொடர்பான மண்டல் கமிஷன் பரிந்துரையை அமல்படுத்தி பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு கிடைக்க காரணமானவர்களில் ஒருவர் சரத்யாதவ். இதனால் பயனடைந்தவர்கள் லாலு பிரசாத் யாதவ், முலாயம் சிங் யாதவ் போன்றவர்கள்.கட்சியில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த சரத்யாதவை இப்போது லாலு பிரசாத் அரவணைத்து தனது ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி சார்பாக மாதேபுரா தொகுதியில் போட்டியிட ஒப்புதல் அளித்துள்ளார். சரத்துக்கு லாலு சீட் கொடுக்க ஒரே காரணம், பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை சரத் எதிர்த்தது தான்.


2017 ம் ஆண்டு, லாலுவுடன் கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ், பா.ஜ., உடன் கைகோர்த்துக்கொண்டார். மாதேபுரா, லாலுவுக்கு செல்வாக்கான தொகுதி. இங்கு சரத் யாதவ் வெற்றி பெற ஒரு முறை லாலு உதவினார். இன்னொரு முறை, அதே சரத்தை லாலு தோற்கடிக்க பாடுபட்டார். சரத்தும் ஒரு முறை லாலுவை தோற்கடிக்க வேலை செய்தார். தனிக்கட்சி துவங்கியயும் போணியாகவில்லை. இப்போது சரத்தை மீண்டும் லாலு அரவணைத்திருக்கிறார்.1990 மார்ச்சில் முதல்முறையாக லாலு பீகார் முதல்வர் ஆன பிறகு மாதேபுராவில் போட்டியிடுமாறு சரத்தை லாலு கேட்டுக்கொண்டார். 1991 மற்றும் 1996ல் மாதேபுராவில் இருந்து சரத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


1997 ல் ஜனதா தளம் உடைந்து ராஷ்ட்ரீய ஜனதா தளத்தை லாலு ஆரம்பித்த பிறகு, இருவரும் எலியும் பூனையுமாக மாறினர். 1998 தேர்தலில் மாதேபுராவில் லாலுவும் சரத்தும் எதிரெதிரே மோதினர். மாட்டுத் தீவன ஊழல் குற்றச்சாட்டு இருந்தும் லாலு வெற்றி பெற்றார். அடுத்து சரத்துக்கும் ஒரு வாய்ப்பு வந்தது. 1999 தேர்தலில் லாலுவை தோற்கடித்தார். அப்போது வாஜ்பாய் அமைச்சரவையில் சரத்தும் ஒரு அமைச்சரானார். 2004ல் மீண்டும் நிலைமை மாறியது. சரத்தை லாலு தோற்கடித்தார். 2015ல் மெகா கூட்டணியை நிதிஷ் அமைக்கும் வரை இவர்களுக்கு இடையே மோதல் தொடர்ந்தது. கூட்டணியால் லாலுவை சரத் ஏற்றுக்கொண்டார்.2017 ல் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் நிதிஷ் சேர்ந்தபோது, லாலு கட்சியுடன் சரத் சேர்ந்தார். இப்படித்தான் அங்கு ஆடு புலி ஆட்டம் நடந்துகொண்டு இருக்கிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)