சீர்திருத்தங்கள் வெற்றிக்கு உதவுமா?

சென்னை: 'புதிய இந்தியா பிறக்கப்போகிறது. நல்ல நாட்கள் வரப்போகின்றன. கறுப்புப் பணத்தையும், லஞ்சத்தை அறவே ஒழித்து விடுவோம்' என்ற தேர்தல் அறைகூவல்களுக்குப் பின், 2014ல், பா.ஜ., ஆட்சியில் அமர்ந்தது.

'மாநிலங்களின் கூட்டுறவுடன் மத்தியில் ஆட்சி' என்ற கவர்ச்சியான கோஷத்துடன் தொடங்கிய மோடி அரசு, அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசுக்கே என்ற அணுகுமுறையை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஜனநாயக ரீதியாக செயல்படும், தன்னாட்சி அமைப்புகள், ஒரே அதிகார மையத்தின் கீழ் கொண்டு வரப்படுவதாக கூறுகின்றன, எதிர்க்கட்சிகள். மாறுதல்களைச் செய்ய விரும்புவது, புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவது, எந்த ஆட்சி மாற்றத்திலும் நிகழக்கூடியது. நீண்ட நாட்களாக பின்பற்றிய நடைமுறைகள் மாற்றி அமைக்கப்பட்டன. இந்த மாற்றங்கள், நாட்டின் மக்களின் நலன் கருதிச் செய்யப்பட்டவை. இதை அரசியலாக்குவது தவறு என்கிறது, ஆளும் கட்சி. உண்மையில், நிகழ்ந்த மாற்றங்களும், அதன் விளைவுகளும் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

கடந்த, 2014 தேர்தல் பிரசாரத்தில் பிரதமர் மோடி, 'குஜராத் மாடல்' எனும் பிம்பத்தை முன்வைத்தார். பொருளாதார முன்னேற்றம், வளர்ச்சி, வேலை வாய்ப்பு, முதலீடு, எல்லாரையும் அரவணைத்து முன்னேற்றம் (ஸப்கா சாத், ஸப்கா விகாஸ்) என்ற கோஷங்கள் முன்வைக்கப்பட்டன. இந்தியாவை வல்லரசாக்கும் தலைவராக, மோடி முன்னிறுத்தப் பட்டார்.ஆனால், ஐந்து ஆண்டுகள் முடிந்த நிலையில், செய்த சாதனைகளை சொல்லாமல், தேசபக்தி, நாட்டு பாதுகாப்பு என புதிய விஷயங்களை, பா.ஜ., பேச ஆரம்பித்ததிருக்கிறது. பொருளாதார முன்னேற்றம் பற்றிய விவாதத்தில், மொத்த உள்நாட்டு உற்பத்தி எனப்படும், ஜி.டி.பி., கணக்கீட்டை, தனக்கு வசதியாக மாற்றிக் கொண்டது. வேலை வாய்ப்பு பற்றி பேசவே மறுக்கிறது இந்த அரசு. பண மதிப்பிழப்பு, கிராமங்களில் எப்பேர்ப்பட்ட பாதகங்களை நிகழ்த்தியது என்பது பற்றிய எந்த ஆய்வும் இந்த அரசால் நடத்தப்படவில்லை.

ஜி.எஸ்.டி., கொண்டு வந்ததில், சிறு குறு நிறுவனங்கள் எப்படி சிதிலமாகின என்பது பற்றி, அறிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன. திட்டக்குழுவை மாற்றியமைத்ததில் இருந்து துவங்கி, உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் அதிருப்தி, சி.பி.ஐ.,யின் தலைமையில் குழப்பம், தலைமை கண்காணிப்பு அமைப்பில் குழப்பம், நிதி ஆணையத்தின் வரம்பு எல்லைகளை குறைப்பது, ரிசர்வ் வங்கியின், ரிசர்வ் நிதியை அரசின் செலவினங்களுக்குப் பயன் படுத்த முயன்றது போன்ற பல விஷயங்களில், மாற்றங்களைச் செய்ய முயன்ற, பா.ஜ., அரசு பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இந்த மாற்றங்கள், அதன் தாக்கங்கள் சராசரி வாக்காளனை எந்தளவில் பாதித்திருக்கிறது, அது தேர்தலில் எதிரொலிக்குமா என்பதுதான் கேள்வி.

மோடி அரசு வந்த புதிதில், 'மத்திய அரசுக்கு ஆதரவாக அடுத்த தேர்தலிலும் ஓட்டு போடுவோம்' என, 39 சதவீதம் மக்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இதே போன்ற ஆய்வை தொடர்ந்து, ஒவ்வொரு, ஆறு மாதத்திலும் செய்து வந்ததில், கிடைத்த முடிவு மோடியின் செல்வாக்கு சரிகிறது என்பது தான். ஆய்வு முடிவுகள், தேர்தலில் எதிரொலிக்குமா என்ற கேள்விக்கு விடை, இருக்கும் ஆனா இருக்காது என்ற சினிமா நகைச்சுவை போல இருக்கிறது என்றாலும், இந்திய தேர்தல் வரலாறு, நகர்ப்புற மக்களைவிட, கிராம மக்கள் தான் ஓட்டு போட்டவர்களில் அதிகம் என்கிறது என்பதையும், நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


வி.ரமணன்,
பத்திரிகையாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)