பா.ஜ.,வுக்கு தி.மு.க., ஆதரவு கிடைக்குமா?


'நடந்து முடிந்த முதல் கட்ட தேர்தல், எங்கள் கட்சிக்கு, புது உத்வேகத்தை கொடுத்துள்ளது. மீண்டும், நாங்கள் ஆட்சி அமைக்க உள்ளோம் என்ற, தகவல் உறுதியாகி உள்ளது. எங்களுடைய கூட்டணி கட்சிகளும், வெற்றி பெறும் என, நம்புகிறோம். காங்கிரஸ் மற்றும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளுடன், தேர்தலுக்கு பின், கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் ஏற்படாது. ஆனால், தேசத்தின் நலனுக்காக, தி.மு.க., உள்ளிட்ட எந்த கட்சியாக இருந்தாலும், அதன் ஆதரவு வேண்டும் என்றால், பா.ஜ., அரசு கேட்க தயங்காது' என, சமீபத்தில், பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அவரது கருத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் இதோ.

* தோல்வி பயத்தை காட்டுகிறது!

கோல்கட்டாவில், மம்தா பானர்ஜி தலைமையில் நடந்த, எதிர்கட்சிகள் கூட்டத்தில், ஸ்டாலின் பேசுகையில், 'பிரதமர் மோடி, நுாறு கூட்டம் பேசினால், ஆயிரம் பொய்களை சொல்கிறார். அவர் சொன்ன, மிகப்பெரிய பொய், வெளிநாட்டிலிருந்து, கறுப்புப் பணத்தை மீட்டு வந்து, ஒவ்வொருவர் கணக்கிலும், 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்பது தான். போட்டாரா... வாயில் கல்லையும், மண்ணையும் தான் போட்டார்' என்றார்.'பிரதமர் மோடி சர்வாதிகாரியாகவும், கட்டப்பஞ்சாயத்து தலைவராகவும் செயல்படுகிறார்' என, ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார். முதல் கட்ட தேர்தல் முடிந்த பின், தன்னை விமர்சித்தவர்களின் ஆதரவை பெறுவதில், பிரதமர் மோடி ஆர்வம் காட்டுகிறார் என்றால், அது, அவருடைய தோல்வி பயத்தையே வெளிப்படுத்துகிறது.இனிமேல், 'எந்தக் காலத்திலும், பா.ஜ.,வுக்கு ஆதரவு தர மாட்டோம்; பா.ஜ., எந்த உருவில் வந்து ஆதரவு கேட்டாலும், நாங்கள் ஆதரிக்க மாட்டோம்' என, ஸ்டாலின் உறுதி அளித்து உள்ளார்.காஷ்மீரில் நடந்த, புல்வாமா தாக்குதலுக்கு முன், ராணுவ வீரர்கள், விமானத்தில் செல்ல அனுமதி தராமல், அவர்களை சாலை வழியாக, அனுப்பி வைத்ததால், 48 வீரர்களின் உயிர் பறிக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், பாகிஸ்தான் ஆட்சி செய்வது போலாகி விடும் என, பிரதமர் மோடி கூறுகிறார். ஆனால், பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கானோ, 'மீண்டும் மோடி பிரதமரானால், எங்கள் உறவு வலுப்பெறும்' என்கிறார்.எனவே, பிரதமர் மோடியின் தேசப்பற்று பற்றி, நாட்டு மக்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும். தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி, எக்கு கோட்டையில் உருவான கூட்டணி. சித்தாந்தம், சமூக நலன், தமிழர்களின் உரிமையை மீட்டெடுக்க, அமைந்த கூட்டணி என்பதை, இரு கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக, வெளிப்படுத்தப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 40 தொகுதிகளிலும், தேசிய அளவில், 350 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, மத்தியில், ராகுல் தலைமையில் ஆட்சி அமையும். தமிழகத்தில், 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக முதல்வராக, ஸ்டாலின் பதவி ஏற்பது நிச்சயம்.எஸ்.டி.நெடுஞ்செழியன்,முன்னாள் பொதுச்செயலர்,தமிழக காங்கிரஸ் கட்சி

* வெற்றி நுாறு சதவீதம் உறுதி!

தேசிய அளவில், பா.ஜ., தலைமையில் அமைந்துள்ள, தேசிய ஜனநாயக கூட்டணி, குறைந்தபட்சம், 320 தொகுதிகளிலும், அதிகபட்சமாக, 350 தொகுதிகளிலும், வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். தமிழகத்தில், 30 தொகுதிகளுக்கும், அதிகமானவற்றில் வெற்றி கிடைக்கும். எனவே, தேர்தல் முடிந்த பின், மற்ற கட்சிகளின் ஆதரவு பெற வேண்டிய அவசியமிருக்காது.அப்படியே, ஆதரவு பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டால், அப்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப, நாட்டின் ஸ்திரத்தன்மை, பொருளாதார வளர்ச்சி, மக்கள் முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து, பிரதமர் மோடியும், பா.ஜ., தேசியத் தலைவர் அமித்ஷாவும், நல்ல முடிவு எடுப்பர். அவர்கள் எடுக்கிற, எந்த முடிவும், கட்சி மற்றும் நாட்டின் நலன் கருதி தான் இருக்கும். முதல் கட்ட தேர்தலில், பா.ஜ., வெற்றி, 100 சதவீதம் உறுதி செய்யப்பட்டுள்ளது.லோக்சபா தேர்தலில், மாநில கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கி, மக்கள் ஓட்டு அளித்து வந்த காலம் மாறி, தேசிய அளவில், நிலையான ஆட்சியை, பா.ஜ.,வால் மட்டுமே தர முடியும் என்பதை, மக்கள் உணர்ந்து, ஓட்டு அளிக்க உள்ளனர். இது, ஆரோக்கியமான வளர்ச்சி.கடந்த, ஐந்தாண்டு கால, பா.ஜ., ஆட்சியில், கிராமங்களில் கழிப்பறை வசதி, அனைவருக்கும் வீடு, மாணவர்களுக்கு திறன் மேம்பாடு, மருத்துவ காப்பீடு, அனைத்து வகையான மானியங்களையும், பயனாளிகள் நேரடியாக பெறும் வகையில், அவர்களின் வங்கி கணக்குகளில் செலுத்தியது போன்ற திட்டங்கள், மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளன.அடுத்த பத்தாண்டுகள், இந்த ஆட்சி தொடர்ந்தால் தான், நாட்டின் முன்னேற்றமும் தொடரும். பா.ஜ.,வின் சமூக வலைதளங்களை, சமீபத்தில், எதிர்கட்சிகள் முடக்கின. இரு வாரங்களாக, வானதி சீனிவாசன் உட்பட பலருடைய, 'பேஸ்புக்' தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த தடைகளை, நாங்கள் உடைத்தெறிந்துள்ளோம். பா.ஜ.,வின், ஐந்தாண்டு கால ஆட்சி சாதனைகளை, சமூக வலைதளங்கள் வாயிலாக வெளிப்படுத்தி வருகிறோம். ஒரு நாளைக்கு, 30 லட்சம் பேரிடம், சாதனைகளை கொண்டு செல்கிறோம். எங்கள் அணியின் வெற்றி உறுதி.சி.டி.ஆர்.நிர்மல்குமார்,மாநில தலைவர், தகவல் தொழில்நுட்ப அணி,தமிழக பா.ஜ.,***வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)