7 பேர் மீது மட்டும் ஏன் கருணை காட்டுகிறீர்கள்? : தமிழக தலைவர்களுக்கு காங்., அழகிரி கேள்வி

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில்,ஏழுபேர் விடுதலை,கவர்னர் ஒப்புதலுக்காக காத்திருப்பது குறித்து...?

துாக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை கொடுப்பதற்கு, எங்களுக்கு எந்த விதமான ஆட்சேபனையும் கிடையாது. 'நாங்கள் அவர்களை மன்னித்து விட்டோம்' என சோனியா, ராகுல் கூறிவிட்டனர்.நாங்கள், குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை தான் கொடுக்க வேண்டும் என, எந்த விதமான நிலையிலும் போராட்டம் நடத்தவில்லை.ஏனென்றால் நீதி, தன் கடமையைச் செய்யும் என்பதில், நாங்கள் உறுதியாக இருந்தோம். இப்போது கூட, நீதிமன்றம் அவர்களை விடுவித்தால் எங்களுக்கு மகிழ்ச்சியே. குற்றவாளிகளுக்கு, தமிழர் என்ற பட்டம் சூட்டக்கூடாது.இந்த ஏழு பேர் மட்டுமே, 25 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்கள் அல்ல. இவர்களைவிட ஏராளமானோர் தமிழக சிறைகளில் உள்ளனர். அவர்கள் மீது கருணை காட்டாத அமைப்புகள்,அரசியல்வாதிகள், ஏன் இவர்கள் மீது மட்டும் கருணை காட்ட வேண்டும்?


உங்கள் கூட்டணி கட்சியான, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் நடந்த வருமானவரித்துறை சோதனையில், கோடிக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டுள்ளதே...?

துரைமுருகன் மகனின் வெற்றி வாய்ப்பு பிரகாச மாக உள்ளது. அவர் வீட்டிற்கு சென்ற வருமான வரித்துறையினர், ஏதோ ஆவணங்களை எடுத்தோம் என சொல்லியிருக்கின்றனர். ஆனால், எவ்வளவு பணம் எடுத்தோம் என கூறவில்லை.எதற்காக அங்கே சென்றனர் என்றால்,'கேரக்டர் அசாசினேஷன்' என்று சொல்வர். அதாவது, ஒருவருடைய நன்னடத்தை மற்றும் புகழை கெடுப்பதற்காக செய்யும் காரியம். அதன்பின், யாரோ ஒருவர் வீட்டில் இருந்து பணத்தை எடுத்து இருக்கின்றனர். அதற்கும் துரைமுருகனுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது?அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் எவ்வளவு வசதியாக இருக்கின்றனர் என்பது ஊருக்கே தெரியும். இதையெல்லாம் பார்த்தும், தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை கண்ணை மூடிக் கொண்டா இருக்கிறது?


'வறுமையை ஒழிப்பதற்கான துல்லிய தாக்குதல்' என, காங்., தலைவர் ராகுல் அறிவித்திருக்கும் குறைந்த பட்ச வருவாய் திட்டம், நீண்ட காலத்திற்கான திட்டம் இல்லை என்ற கருத்து உள்ளதே?

இந்த திட்டம், காங்கிரஸ் கட்சியின் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது. உலக நாடுகளில் உள்ள பொருளாதார நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, இந்தியாவின் மொத்த வருமானம் எவ்வளவு, 25 கோடி மக்களுக்காக, இந்த சமூக நலத் திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்றெல்லாம் அறிந்து ஆராய்ந்து, அறிவித்துள்ளோம்.இது, நீண்டகால செயல் திட்டம். இதை மாற்றக்கூடாது என்பதற்காக, நாங்கள் சட்டமாக மாற்றுவோம்.


சுதர்சன நாச்சியப்பன், காங்., கட்சி,'சிதம்பரத்தின் சொத்தா' என கடுமையாகவிமர்சித்தாரே?

அவர் மூத்த தலைவர்; தலைமைக்கு நெருக்கமானவர். அவருக்கு வருத்தம் இருந்தது. அதை வெளிப்படுத்தினார். ஆனால், மறுநாளில் இருந்தே அவர், வேட்பாளர், கார்த்தியோடு சென்று, பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதனால், எந்த பிரச்னையும் இல்லை.


த.மா.கா., எதிரணியில் இருப்பதால், உங்கள் ஓட்டுகள் பறிபோகும் வாய்ப்பு உள்ளதா?


த.மா.கா.,விற்கு என, ஒரு ஓட்டு வங்கியும் கிடையாது. அவர்கள் செய்த மகத்தான தவறு, தங்களை கொள்கை ரீதியாக இணைத்துக் கொள்ளாமல், தனித்தன்மை பற்றியே சிந்தித்து கொண்டு இருக்கின்றனர்.மூப்பனார் தலைமையில், த.மா.கா., இருந்தபோது, லோக்சபாவில் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவு தெரிவித்து தீர்மானம் வந்தது. அப்போது, தி.மு.க., ஆதரவு தெரிவிப்பது என முடிவு செய்தது. எங்கள் ஆதரவும் கேட்கப்பட்டது.மூப்பனார், 'நான் பிறவியில் காங்கிரஸ்காரன். நான் காங்கிரசில் இருந்து வேறுபடலாம். அதற்காக, பா.ஜ.,வை ஆதரிக்க முடியாது' எனக் கூறி, பா.ஜ.,விற்கு எதிராக ஓட்டளித்தார்.ஆனால், அப்போது அவர், காங்., கட்சியில் இல்லை. அதுதான் கொள்கை நிலை. ஆனால், த.மா.கா., தற்போது செய்திருப்பது, மகத்தான அரசியல் தவறு.


அமேதி தொகுதியின், பா.ஜ., வேட்பாளர், ஸ்மிருதி இரானி, 'ராகுலுக்கு பயம் வந்து விட்டது. அதனால் தான் கேரளத்தின் வயநாடு தொகுதிக்கு ஓடி விட்டார்' என, விமர்சித்துள்ளாரே...

எந்தவிதமான பயமும் இல்லை. முன்னாள் பிரதமர் இந்திரா கூட, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார். பிரதமர், மோடி கூட, இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டுள்ளார்.அ.தி.மு.க.,வைசேர்ந்தவர்கள் எவ்வளவு வசதியாக இருக்கின்றனர் என்பது ஊருக்கே தெரியும். இதையெல்லாம் பார்த்தும், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை கண்ணை மூடிக் கொண்டா இருக்கிறது.மூப்பனார், 'நான் பிறவியில் காங்கிரஸ்காரன்; காங்கிரசில் இருந்து வேறுபடலாம். அதற்காக, பா.ஜ.,வை ஆதரிக்க முடியாது' எனக்கூறி, பா.ஜ.,விற்கு எதிராக ஓட்டளித்தார். அப்போது அவர், காங்., கட்சியில் இல்லை. அதுதான் கொள்கை நிலை. ஆனால், த.மா.கா., தற்போது செய்திருப்பது மகத்தான அரசியல் தவறுவாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)