இதற்கெல்லாம் பதில் இருக்கா...? தமிழகம் கேட்கிறது ஸ்டாலின்!

மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தெலுங்கானாவின் சந்திரசேகர ராவ், உத்தர பிரதேசத்தின் முலாயம் சிங், மாயாவதி உள்ளிட்ட அனைவருக்கும், பிரதமர் பதவி மீது மோகம் இருக்கிறது. 'பிரதமராகும் முடிவை, லோக் சபா தேர்தலுக்குப் பின் எடுப்பேன்' என, முலாயம் சிங் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

'தேர்தலில், உங்கள் தயவு எங்களுக்கு தேவையில்லை' என, காங்கிரசிடம், மாயாவதி அப்பட்டமாக சீறினார். இவை அனைத்தையும் உணர்ந்தும், 'ராகுலே அடுத்த பிரதமர்' என, மேடை தோறும் விடாப்பிடியாய் முழங்கி வரும் ஸ்டாலின் அவர்களே... உங்களது இன்றைய பிரசாரத்திலாவது, கீழ்க்காணும் கேள்விகளுக்கு பதில் உண்டா... தமிழகம் கேட்கிறது! விவசாயிகளுக்கு எதிராகவும், செல்வந்தர்களுக்கு ஆதரவாகவும், பா.ஜ., அரசு செயல்படுகிறது என்கிறீர்களே... 2013ல், காங்., தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, ரூபாய் மதிப்பு கடுமையான வீழ்ச்சியை சந்தித்ததே!

இதற்கு, இந்தியாவின் வெளிநாட்டு கடன், 12 லட்சம் கோடி ரூபாயை தொட்டது, முக்கிய காரணமாக சொல்லப்பட்டது. இதில், 44 சதவீத கடனுக்கு காரணம், ரத்தன் டாடா மற்றும் அம்பானி குழும நிறுவனங்கள் என்பது உங்களுக்கு தெரியும் தானே? மூலதன ஆதாய வரி தவிர்ப்பை மட்டுமே நோக்கமாக கொண்ட, வெளிநாட்டு முதலீடுகளுக்கு கடிவாளம் போடும் வகையில், பிரணாப் முகர்ஜி, மூலதன ஆதாய வரி தவிர்ப்புக்கு எதிரான, பொது விதிகளை (General anti avoidance rules) உருவாக்கினார். இதை, 'ஷோமே கமிட்டி' அறிக்கை வழியாக நீர்த்துப் போக வைத்து, பன்னாட்டு நிறுவனங்களுக்கு வரிச்சலுகை வழங்கியது, ப.சிதம்பரம் தான் என்பதை, சிவகங்கை பிரசாரத்திலாவது சொல்லியிருக்கலாமே; ஏன் சொல்லவில்லை?

யாரெல்லாம் பிரதமர்?'காங்கிரசுக்கு ஆணவம் அதிகம்' என்கிறார், கெஜ்ரிவால்; 'பிரதமர் மோடியும், மேற்கு வங்க முதல்வர், மம்தாவும் ஒரே மாதிரியானவர்கள்; பொய்யான வாக்குறுதி அளிப்பவர்கள்' என்கிறார் ராகுல். 'உத்தர பிரதேசத்தில் உடன் சேர மறுப்பதும், கேரளாவில், எதிர்த்து மோதத் துணிவதும் என்ன மாதிரியான அரசியல்' என, காங்கிரசிடம் கேள்வி எழுப்புகிறது கம்யூனிஸ்ட். இப்போதாவது, ஆற அமர யோசித்து சொல்லுங்கள்... உங்கள் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்?

பா.ஜ.,வுடன் மோதி ஜெயிக்கும் துணிச்சல், உங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுலுக்கு உண்டு என நினைக்கிறீர்களா; 'ஆம்' எனில், மூன்று முறை வெற்றி தந்த அமேதி தொகுதி இருக்கையில், வயநாடு எதற்கு; 'பெரு மழை' உண்ட மாநிலம் என்பதாலா, இல்லை... 'சபரிமலை' கொண்ட மாநிலம் என்பதாலா? 'ராகுலை, வயநாட்டின் வேட்பாளராக அறிவித்தது, அறிவில்லாத செயல்' என, இந்திய கம்யூ., தேசிய செயலர், டி.ராஜா சொல்கிறார். 'ராஜா சொல்வது சரிதானே; ராகுலின் வெற்றியில் வீழ்வது, பா.ஜ.,வாக இருக்க வேண்டுமே தவிர, கம்யூனிஸ்ட்டாக இருக்கக் கூடாது!' என, உங்கள் மனசாட்சி, உங்களிடம் சொன்னதா?

வளைவாரா?உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில், ராகுலுக்கு எதிராக, சுயேச்சையாக களம் காண்கிறார், ஹாஜி ஹாரூண் ரஷீத். காங்., மூத்த தலைவரான, மறைந்த, ஹாஜி சுல்தான் கானின் மகன் என்பது, இவரது அடையாளம். 'ராஜிவ், சோனியா காலத்தில் கட்சிக்கு தீவிரமாய் உழைத்த என் தந்தையின் உழைப்பு, ராகுலால் அங்கீகரிக்கப்படவில்லை' என்பதே, ஹாரூண் ரஷீத்தின் குற்றச்சாட்டு. நிலைமை இப்படியிருக்க, ராகுல் பிரதமரானால் உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப, வளைந்து கொடுப்பார் என, நினைக்கிறீர்களா?

'செல்வந்தர்களுக்கு ஆதரவாக, மோடி அரசு செயல்படுகிறது' என, பிரியங்கா, நீங்கள் உட்பட, மோடியை எதிர்க்கும் அத்தனை பேரும் குற்றம் சாட்டும் நிலையில், விஜய் மல்லையா, நிரவ் மோடி உள்ளிட்டோர் செல்வந்தர் ஆனதும், வங்கி கடன் பெற்றதும், 2014க்கு பின் தானா; 'ஆம்' என்றால், விஜய் மல்லையா நாடு கடத்தப்பட இருப்பதற்கும், லண்டனில் நிரவ் மோடி கைதாகி இருப்பதற்கும் யார் காரணம்?

விடுதலை எப்போது?'உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், 161வது அரசியல் சட்டப்பிரிவின் அதிகாரத்தின் கீழ், ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட ஏழு பேரையும் விடுதலை செய்ய, அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியும், கவர்னர் காலம் தாழ்த்தி வருவது குற்றம்' என கூறுகிறீர்கள். அதேபோல், 'மத்தியில் ஆட்சி மாறினால், அடுத்த நாளே, தமிழகத்தில் ஆட்சி மாறும்' எனச் சொல்லும் சிதம்பரத்திடம், ஏழு பேரின் விடுதலைக்கு, இதேபோல் உத்தரவாதம் பெற்றுத் தருவீர்களா?

'ராஜிவ் கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலை விஷயத்தில், நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்கிறார்' ராகுல். நீதிமன்றம், மாநில அரசை கைக்காட்டி விட்டது. மாநில அரசு, கவர்னருக்கு பரிந்துரைத்து விட்டது. ஆனால், கவர்னர் முடிவெடுக்க மறுக்கிறார். சரி... இப்போதாவது சொல்லுங்கள்; கவர்னர், பா.ஜ.,வின் கைப்பாவையா?

உங்கள் நிலைப்பாடு என்ன?'பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருக்கும் தமிழக முதல்வர், மேகதாது அணை கட்டுவதை கைவிடும் நிபந்தனையை, பா.ஜ.விடம் வைத்திருக்கிறாரா' என கேட்கிறீர்களே... உங்கள் கூட்டணியில் இருக்கும் காங்., தயவில் தானே, கர்நாடகாவில் ஆட்சி நடக்கிறது. இப்படி ஒரு நிபந்தனையை, காங்.,கிடம் நீங்கள் வைத்திருக்கிறீர்களா? 'கடந்த, 2014ல், பா.ஜ., ஆட்சிக்கு வந்தபோது, 18 ஆயிரம் கிராமங்கள் இருளில் தான் இருந்தன. நாங்கள் தான் ஆட்சிக்கு வந்த, 1,000 நாட்களில் இருளுக்கு வெளிச்சம் பாய்ச்சினோம்' என்கிறார் மோடி.இதற்கு, நீங்கள் ஆதாரத்துடன் மறுப்பு தெரிவிப்பீர்களா?

நாகர்கோவில் பிரசார பொதுக்கூட்டத்தில், 'சில வாரங்களில், நாட்டின் பிரதமராக ராகுல் பதவி ஏற்பார். அதன்பின், அவரது கரங்களில் இந்தியா பாதுகாப்பாக, ஆரோக்கியமாக, மதசார்பற்றதாக இருக்கும்' என்றீர்களே; அப்படி ஓர் ஆட்சியை ராகுல் தருவார் என்பதை, அவரது எந்த செயல்பாட்டின் அடிப்படையில் சொன்னீர்கள்; ஒருவேளை, அப்படி ஓர் ஆட்சியை அவர் தரவில்லை எனில், உங்கள் நிலைப்பாடு என்ன?

தொகுதி பங்கீடு பேச்சு நேரத்தில், காங்., தயவில் கர்நாடகத்தில் முதல்வராக இருக்கும் குமாரசாமி, பிரதமர் மோடியை சந்திக்கிறார். 'என்ன இந்த நேரத்தில்...' எனக் கேட்டதற்கு, 'கர்நாடக வறட்சிக்கு நிவாரணமாக, 11 ஆயிரம் கோடி ரூபாய் கேட்க வந்தேன்' என்றார். ஆனால், அவர் கேட்டது, கிடைத்ததாக செய்தியில்லை; அப்படியென்றால், அவர் கேட்கப் போனது அதுவல்ல; சரிதானே; சரி... நீங்கள் சொல்லுங்கள், தேர்தலுக்குப் பின், பா.ஜ., பக்கம் சாய்வீர்களா; மாட்டீர்களா?

'ஆமாமா, இல்லையா?'எதிர்க்கட்சி துணை தலைவர், கட்சி பொருளாளர், 40 ஆண்டுகளாக சட்டசபையில் இருப்பவர், 80 வயதை கடந்தவர் என்றும் பாராமல், வருமான வரித் துறையினர் வந்தனர்' என, உங்கள் துரைமுருகன் வருந்தினார். அப்போது, 'இந்த அனுபவத்திற்கும், வருமான வரித் துறையின் நடவடிக்கை கூடாது என்பதற்கும் என்ன தொடர்பு' என, நீங்கள் சிந்தித்தீர்களா? 'துாத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட, சென்னை உயர் நீதிமன்றம், 2010 செப்., 28ல், உத்தரவிட்டது' என்றும், 'அப்போது ஆட்சியில் இருந்த, தி.மு.க., அரசு, ஆலைக்கு ஆதரவாக தாக்கல் செய்த பிரமாண பத்திரம் தான், ஆலை மீண்டும் இயங்க காரணம்' என்றும் முதல்வர், இ.பி.எஸ்., ஆணித்தரமாக சொல்கிறாரே; அது உண்மையா?

அடுத்தது என்ன?'வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான ஒரு குண்டூசியை, என் மனைவி பயன்படுத்தி உள்ளார் என, ஸ்டாலின் நிரூபித்தால், நான் பொது வாழ்க்கையில் இருந்து விலகி விடுகிறேன். இல்லையேல், ஸ்டாலின் பொது வாழ்க்கையில் இருந்து விலகத் தயாரா?' என, பா.ம.க., நிறுவனர், ராமதாஸ் சவால் விடுத்துள்ளாரே... என்ன செய்யப் போகிறீர்கள்? 'சதா சங்கா' மகளிர் சுய உதவி குழுவின் தலைவியான, மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருக்கும், பிரமீளா பிசோய் என்பவரை, ஒடிசாவின் அஸ்கா மக்களவை தொகுதியின் வேட்பாளராக அறிவித்துள்ளார், அம்மாநில முதல்வர், நவீன் பட்நாயக். பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க நினைக்கும் உங்கள் பார்வையில், இப்படி ஒரு தமிழக பெண் சிக்கவே இல்லையா அல்லது தி.மு.க., அடிமட்ட பெண் தொண்டர்களில் யாரும் இப்படி இல்லையா?

'இலங்கை தமிழர் பிரச்னையில், காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாக, தமிழக மக்கள் நினைக்கவில்லை. காங்., மீது மிகுந்த அன்பு கொண்டுள்ளனர்' என, ராகுல் சொல்லி உள்ளார். அப்போது, 'இல்லை... இல்லை... உங்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், உங்களோடு கூட்டணியில் இருந்த எங்களுக்கு, அதில் பங்கு இருப்பதாகவும் தமிழக மக்கள் நினைத்ததால் தான், 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்று சொல்லி, கூட்டணியில் இருந்து, 2014ல் நாங்கள் வெளியேறினோம்' என, அவரிடம் நீங்கள் நினைவூட்டி இருக்கலாமே!

வாக்குறுதி ஏன்?'வைகோவின் அரசியல் ஆதாயத்திற்காக, புலிகள் என்னை கொல்லக்கூடும்' என, குற்றம் சாட்டினார் கருணாநிதி. ஆனால், 'ஸ்டாலின், தி.மு.க., தலைவராவதற்கு நான் இடையூறாக இருப்பேன் எனக் கருதி, தி.மு.க.,வை விட்டு என்னை நீக்கினார் கருணாநிதி' என, பதில் கூறினார் வைகோ. எது உண்மையென்று நீங்கள் உணர்ந்திருக்கும் நிலையில், 'பளிச்'சென்று சொல்லுங்கள்... வைகோவை நம்புகிறீர்களா? 'உங்கள் மகனை மத்திய அமைச்சராக்குவது என் பொறுப்பு என சொல்லி, போராடி, அன்புமணியை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆக்கினார் கருணாநிதி' என, பா.ம.க., தலைவருக்கு நீங்கள் செய்நன்றியை நினைவூட்டி இருக்கிறீர்கள்.

இதன் வாயிலாக, மன்மோகன்சிங் அமைச்சரவை நியமனத்தில், தி.மு.க., முன்னாள் தலைவரின் தலையீடு இருந்ததை பகிரங்கமாய் ஒப்புக் கொள்கிறீர்கள்; அப்படித் தானே? இறுதியாக ஒன்று... இத்தனை ஆற்றல்மிக்க உங்கள் முன்னாள் தலைவர் நினைத்திருந்தால், 2009ல், ஈழத் தமிழின அழிவை நிச்சயம் தடுத்திருக்கலாம் தானே; இதை, மனச்சாட்சியோடு மறுப்பீர்களா? தேர்தல் பரப்புரை, இன்றோடு ஓயவிருக்கும் நிலையில், கருணாநிதி பிறந்த திருவாரூர் மண்ணில், இதற்கெல்லாம் பதில் சொல்வீர்களா; தமிழகம் கேட்கிறது ஸ்டாலின்.

- வாஞ்சிநாதன் -
எழுத்தாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)