ராகுலின் திடீர் பாசம்

பிரசாரம் செய்ய தமிழகம் வந்த ராகுல், பேசிய சில தகவல்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன. ஒரு தேசிய கட்சி, இப்படி பேசி, இதுவரை கேட்டதில்லை.உதாரணமாக...

* தமிழகத்தின் வரலாறு பிரதமர் மோடிக்கு தெரியவில்லை. தமிழர்கள் விரும்பாததை அவர்கள் மீது திணிக்க முடியாது. ஈ.வெ.ரா., கருணாநிதி ஆகியோர் புத்தகங்களை மோடிக்கு பரிசளிக்க விரும்புகிறேன்.
* தமிழர்களையும், தமிழையும் யாராலும் கட்டுப்படுத்த முடியாது; தமிழர்களால் மட்டுமே, அது முடியும்.
* நாக்பூரில் இருந்து நடத்தப்படும் ஆட்சியை மக்கள் அகற்ற வேண்டும்.
* நீட்' தேர்வு காரணமாக, அனிதா தற்கொலை செய்தது, தமிழக மக்களின் உணர்வை வெளிப்படுத்தியது. 'நீட்' தேவையா... தேவையில்லையா என்பதை, மாநில அரசு முடிவுசெய்ய வேண்டும்.இத்தகைய கருத்துகளை கேட்டு, ராகுலுக்கு தமிழர்களின் உணர்வுகள் புரிந்துள்ளன, அவர், ஈ.வெ.ரா., கருணாநிதி புத்தகங்களை படித்துள்ளார். அதனை இப்போது வெளிப்படுத்துகிறார் என்று பலர் கொண்டாடுகின்றனர். உண்மையில், இதனை புரிந்துகொள்ள வேண்டிய விதமே வேறு. கடந்த ஆண்டு முதல், தேசிய அளவில் நடந்து வரும் பல்வேறு சம்பவங்களை ஒருங்கிணைத்துப் பார்த்தால், இந்த பேச்சுகளுக்கான அர்த்தம் புரியும். காங்கிரஸ் பல மாநிலங்களில் ஆட்சியில் இல்லை. அங்கே, மாநில கட்சிகள் ஆட்சி செலுத்துகின்றன. காங்கிரஸ் மக்களிடம் இருந்து அன்னியப்பட்டு விட்டது.


இந்நிலையில், மாநிலங்களில் உள்ள மக்களோடு, தொடர்பை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. 'இதுநாள்வரை பேசிய தேசியம் செல்லுபடியாகவில்லை, அதனால் நிராகரிக்கப்பட்டுளோம்' என்ற உணர்வு, காங்கிரசுக்கு வந்துவிட்டது. அதை சரிசெய்தால்தான், மாநிலங்களில் காலுான்ற முடியும் என்ற உண்மை ராகுலுக்கு உரைத்து விட்டது. இதன் தொடர்ச்சியாகவே, மாநில கட்சிகள் என்ன குரலில் பேசுமோ, என்னென்ன கோரிக்கைகளை முன்வைக்குமோ, ஆதங்கங்களைத் தெரிவிக்குமோ, அதே பாணியில் ராகுல் பேசியிருக்கிறார்.


வயநாட்டில் வேட்புமனு தாக்கல் செய்தபோது கூட, 'இடதுசாரிகளுக்கு எதிராக ஒரு வார்த்தையும் பேசமாட்டேன்' என்று தெரிவித்ததும் இந்தப் பின்னணியில் தான். மாநில உணர்வுகளை வலுவாக வெளிப்படுத்தி வரும் இடதுசாரிகளை குறைசொல்வது, தம் கட்சிக்கு, கேரளத்தில் பலவீனத்தை ஏற்படுத்தலாம் என, ராகுல் கருதுகிறார். தமிழகத்திலும் இதே நிலைப்பாடு தான். இங்கே, ஈ.வெ.ரா பெயரைச் சொன்னால், திராவிட ஆதரவாளர்களிடம் எடுபடலாம். கருணாநிதி மரணத்தின் போது, ஸ்டாலின் அவமானப்பட்டதாகச் சொன்னால், அது, தி.மு.க.வினரை ஈர்க்கலாம், அனிதா பெயரைச் சொன்னால், கிராமப்புற மக்களிடம் சென்றடையலாம் என்று, ராகுல் கணக்குப் போடுகிறார்.இதனை, ஒரு தேர்தல் உத்தியாகத்தான் பார்க்கவேண்டி இருக்கிறது. சோதனை முயற்சி என்று வேண்டுமானால் சொல்லலாம். இப்படியெல்லாம் பேசி, அதன்மூலம், வெற்றி கிடைக்குமானால், இதே பாணியை, காங்கிரஸ் தலைமை தொடரக்கூடும். தோல்வி கிடைக்குமானால், பழைய தேசிய நிலைப்பாடுகளுக்கே, காங்கிரஸ் திரும்பிவிடும்.


தமிழகத்தில் ஒரு உதாரணம் சொல்ல முடியும். 2011ல், தி.மு.க., மெகா கூட்டணியை அமைத்தது. 15 கட்சிகளை கொண்ட இந்த அணி, அப்போது ஜாதியக் கூட்டணி என்றே வர்ணிக்கப்பட்டது. அ.தி.மு.க.,வை எதிர்கொள்ள உருவாக்கப்பட்ட இந்த கூட்டணி, அப்போது தோல்வியைத் தழுவியது.ஒருவகையில், அது சோதனை முயற்சி. அந்த முயற்சி தோல்வி அடைந்த பின்னர், தி.மு.க., - - அ.தி.மு.க., இரண்டுமே, ஜாதியக் கட்சிகளை, அடுத்து வந்த தேர்தல்களில் முழுமையாக கைகழுவின என்பது வரலாறு.


ஆனால், பிராந்திய பார்வையை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் சிக்கல்களை கொஞ்சம் கவனிக்கவேண்டும். உதாரணமாக, அனிதா மரணத்துக்கு, 'நீட்' காரணமா, இங்கே ஆட்சி செய்த கட்சிகளின் செயலின்மை காரணமா?தேசிய அளவில் பாடத் திட்டமும், பாடப் புத்தகங்களும், 10 ஆண்டுகளுக்கு முன்பே மாறி விட்டன. அவற்றை அடியொற்றி, பல மாநிலங்களும் பாடப் புத்தகங்களை மாற்றி அமைத்தன. கடந்த 2007 - 08க்குப் பின்னர், தற்போதுதான் புதிய பாடநுால்கள், தமிழகத்தில் தயாரிக்கப்படுகின்றன.பின்னடைவுக்கு யார் காரணம்?இங்கே ஆட்சி செய்த திராவிட கட்சிகள் தானே?தேசிய பார்வை கொண்ட, ஒரு கட்சி, மாநில உணர்வுகளுக்கு மதிப்பளிக்க கிளம்பும் போது, நியாயமான கேள்விகளையும் புதைத்துவிட வேண்டியது தானா?காவிரி நீர் பங்கீடு விவகாரத்தில், மேகதாது அணை விவகாரத்தில், காங்கிரஸ் என்ன நிலைப்பாடு எடுக்கும்?தமிழக கோரிக்கைகளையும், கர்நாடக உணர்வுகளையும், ஒரே நேரத்தில், திருப்தி செய்ய முடியுமா? தேர்தல் நேரத்தில் எதைப் பேசினால், ஓட்டு கிடைக்கும் என்பதை கட்சிகள் தெரிந்து வைத்திருக்கின்றன. இதெல்லாம் நாளையே, 'பூமராங்' ஆகலாம் என்பதையும் நினைவில் கொள்வது நல்லது!

-ஆர். வெங்கடேஷ்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)