அரசு ஊழியர்களின் ஆயுதம் தபால் ஓட்டு! 'ஒரு விரல் புரட்சி'யால் யாருக்கு ஆபத்து?

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான தபால் ஓட்டுப்பதிவு துவங்கி விட்டது. செல்லாத ஓட்டுகளே இல்லாமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தபால் ஓட்டுகளை அளிக்க சபதம் எடுத்துள்ளனர். இவர்களின் சபதம், தேர்தலில் யாருக்கு சாதகமாக அமையப் போகிறது என்ற எதிர்பார்ப்பு, மாநிலம் முழுவதும் எழுந்துள்ளது.

போலீசார் ஓட்டு:தமிழகத்தில், லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத் தேர்த லுக்கான ஓட்டுப்பதிவு, 18ம் தேதி நடக்கிறது. தேர்தல் பணியில் ஈடுபடும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான தபால் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. அடுத்து, போலீசாருக்கான ஓட்டுப்பதிவு நடந்து வருகிறது. கடந்த சட்டசபை தேர்தலில், ஓட்டு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டுகளில் சிறிய தவறுகளால், முடிவுகளே மாறின. தபால் ஓட்டுக்கு, ஓட்டு சீட்டுடன் இணைக்க வேண்டிய படிவத்தில், அரசிதழ் பதிவு பெற்ற அலுவலரிடம், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கையொப்பம் பெற வேண்டும்.

ஆனால், 2016 தேர்தலில், ராதாபுரம் சட்டசபை தொகுதியில், உரிய அலுவலரிடம் கையொப்பம் பெறவில்லை என்று காரணம் காட்டி, 250க்கும் மேற்பட்ட ஆசிரியர்களின் ஓட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன. இந்த முடிவால், அந்த தொகுதியின் வெற்றி வாய்ப்பே மாறியது. தபால் ஓட்டுகளில், சிறிய தவறு நேர்ந்தாலும், அவை செல்லாததாக மாறும் என்பதால், இந்த முறை ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உஷாராக உள்ளனர். தபால் ஓட்டு போடுவது குறித்து, தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இருப்பினும், பயிற்சியை சரிவர கடைப்பிடிக்காமல், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிலர், அலட்சியப்படுத்தி விடுகின்றனர்.

செல்லாமல் போவது ஏன்?தபால் ஓட்டுக்கான கவருக்குள், உறுதி மொழி படிவமும், ஓட்டுச் சீட்டும், இரு சிறிய கவர்களில், தனித்தனியாக இருக்கும். உறுதி மொழி படிவத்தில், வாக்காளர் பெயர், அவரின் கையெழுத்து, அங்கீகரிக்கும் அதிகாரியின் கையெழுத்து, ஓட்டுச் சீட்டின் வரிசை எண் போன்ற விபரங்கள் இருக்க வேண்டும். இவற்றில் ஏதாவது ஒன்று இல்லை அல்லது சரியாக இல்லை என்றாலும், உறுதி மொழி படிவம் ஏற்கப்படாது; உறுதி மொழி படிவம் ஏற்கப்படாத நிலையில், அவரது தபால் ஓட்டுக்கான கவர் பிரிக்கப்படாமல், தகுதியற்றதாக அறிவிக்கப்படும்.

உறுதி மொழி படிவத்தில் அனைத்தும் சரியாக இருந்தால், ஓட்டுச் சீட்டுக்கான கவர் பிரிக்கப்படும். ஓட்டுச்சீட்டில், ஓட்டு பதிவாகாமல் இருந்தாலோ, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை பதிவு செய்திருந்தாலோ, ஓட்டுச் சீட்டு கிழிந்து, நனைந்து இருந்தாலோ ஏற்கப்படாது. ஓட்டுச் சீட்டு, உரிய கவருக்குள் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு வைக்கப்படாமல், வேறு கவருக்குள் இருந்தாலும், செல்லாததாக அறிவிக்கப் படும்.

கடும் போட்டி நிலவும் தொகுதிகளில், ஓட்டு எண்ணிக்கை தொடர்பான சந்தேகங்கள் எழும்போது, வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை நிர்ணயிப்பதாக, தபால் ஓட்டுகள் மாறி விடுவதுண்டு. அதாவது, வெற்றி பெற்றவருக்கும், தோல்வி அடைந்தவருக்கும் உள்ள வித்தியாசத்தை விட, மொத்த தபால் ஓட்டுகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தால், அனைத்து தபால் ஓட்டு களையும், தேர்தல் நடத்தும் அதிகாரி, பார்வையாளர் உள்ளிட்ட அதிகாரிகள், மீண்டும் எண்ண வேண்டும்.

யாருக்கு சாதகம்?'தபால் ஓட்டுகள், வேட்பாளரின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறக்கூடியது என்பதால், 'ஒரு விரல் புரட்சி'யாக, இந்த முறை தபால் ஓட்டுகளை கூடுதல் கவனத்துடன் போடுவோம்' என, சபதம் எடுத்து, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் களத்தில் குதித்துள்ளனர். அவர்களின் ஒரு விரல் புரட்சி யாருக்கு மகுடம் சூட்டும்; யாரை வீட்டுக்கு அனுப்பும் என்பதை அறிய, மே, 23 வரை பொறுத்திருப்போம்.

'ஆன்லைன்' ஓட்டு:தபால் ஓட்டு முறையை மாற்றி, 'ஆன்லைன்' வழியாக ஓட்டளிக்கும் முறையை, தேர்தல் ஆணையம் பரீட்சார்த்த முறையில் சோதித்துப் பார்த்திருக்கிறது. தபால் ஓட்டு செலுத்துவோர், 'இ - மெயில்' அல்லது மொபைல் போன் வழியாக ரகசிய எண்ணை பெற்று, தபால் ஓட்டுச் சீட்டை, ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். இதை உறுதி செய்து கொள்ள, தனிப்பட்ட அடையாள எண்ணையும், அங்கு பெற்றுக்கொள்ள முடியும். அதன்பின், பதிவு செய்யப்பட்ட ஓட்டுகளை, தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தபாலில் அனுப்பி வைக்க வேண்டும். ஆனால், இந்த முறை முழுமையாக அமலுக்கு வரவில்லை.

சந்தேகம் கிளப்புவது ஏன்?வழக்கமாக, தபால் ஓட்டுகளில், தி.மு.க., முன்னிலையில் இருப்பது வழக்கம். சமீபகாலமாக, அ.தி.மு.க.,வுக்கும், தபால் ஓட்டுகள் பதிவாகி வருகின்றன. தபால் ஓட்டுகள், அ.தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்தால், தி.மு.க.,வும், தி.மு.க.,வுக்கு சாதகமாக இருந்தால், அ.தி.மு.க.,வும் மாறி மாறி, இதில் சந்தேகத்தைக் கிளப்புவது வழக்கம். இந்த முறை எப்படி என்பதைப் பார்க்க, ஒரு மாதத்திற்கு மேல் காத்திருக்க வேண்டும்.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)