ஊழலும், சர்வாதிகாரமும் தான் ஜனநாயகத்தின் பாதைகள்!

கடந்த தேர்தலில், ஊழலும், விலைவாசி உயர்வும் முக்கிய பிரச்னைகளாக முன்வைக்கப்பட்டன. விலைவாசியை விட, ஊழல் தான் மிகப்பெரிய விவாதப் பொருளாக இருந்தது. 5,000 கோடி ரூபாய்; 10 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று ஆரம்பித்து, 500 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்றெல்லாம் வந்த போது, மக்களுக்கு தலை சுற்றி விட்டது.

அவ்வளவு கோடி ரூபாய்க்கு, எத்தனை பூஜ்யங்கள் வரும் என்றே தெரியவில்லை என, கிண்டல் அடித்தனர். ஊழலுக்கு மரியாதை 'ஐந்து ரூபாய்க்கு டிக்கெட் எடுக்கவில்லை என்றால், 'செக்கிங் ஸ்குவாடு' போட்டு, ஏதோ பயங்கரவாதியை பிடிப்பது போல, பஸ்சின் இரண்டு படிகளிலும் நின்று, விரட்டி விரட்டிப் பிடிக்கிறீர்கள். ஆனால், 500 கோடி ஊழல் செய்தால், மரியாதை அல்லவா கொடுக்கிறீர்கள்...' இதுதான், அப்போது, ஒட்டுமொத்த இந்தியர்களின் அங்கலாய்ப்பாக இருந்தது.

நரேந்திர மோடிக்கு ஆதரவாக, தேசமே திரண்டது. சுதந்திர போராட்டத்தையே நடத்திக் காட்டிய காங்கிரஸ், வெறும், 44 தொகுதிகளையே வெல்ல முடிந்தது. இது, பழைய கதை. ஆனால், ஜனநாயக நாட்டில், பிரதமர் நினைத்து விட்டால் மட்டும், ஊழலை ஒழித்து விட முடியாது. அதற்கென்று பல துறைகள் இருக்கின்றன.

திருப்பு முனை:அதிலொன்று, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு இல்லாமல், சுதந்திரமாக இயங்கும் நீதித்துறை. 'இருந்தாலும், அரசியல்வாதிகள் மட்டும், ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்படுவது இல்லையே ஏன்?' என்ற கேள்வி, மக்கள் மனதில் நீடிக்கிறது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் ஊழலுக்கு எதிராக, நீதிபதி குன்ஹா வழங்கிய தீர்ப்பு, இந்திய நீதித்துறையின் மீது, மக்களுக்கு அழுத்தமான நம்பிக்கையை ஏற்படுத்த காரணமாக அமைந்தது. குன்ஹாவின் தீர்ப்பை, உச்ச நீதிமன்றமும் உறுதிப்படுத்தியது. நீதித்துறை வரலாற்றில், இது ஒரு முக்கியமான திருப்புமுனை.

வழிமேல் விழி வைத்து:கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், பெரும் விவாதப் பொருளாக இருந்த, '2ஜி' ஊழலை, மத்திய புலனாய்வு துறையான, சி.பி.ஐ.,யால், நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியாமல் போனது. இது, ஊழலுக்கு எதிரான போராட்டத்திற்கு கிடைத்த பின்னடைவு தான். '2ஜி' ஊழலை விசாரித்த நீதிபதி சைனியின், 1,553 பக்கங்கள் கொண்ட தீர்ப்பில், 'ஏழு ஆண்டுகளாக, கோடை விடுமுறை உட்பட, எல்லா வேலை நாட்களிலும், எங்கள் நீதிமன்றத்தில், நான், காலை, 10:00 மணியிலிருந்து, மாலை, 5:00 மணி வரை, வழிமேல் விழி வைத்து உட்கார்ந்திருந்தேன்...


'யாராவது சட்டபூர்வமான சாட்சியை எடுத்து வருவார்களா என்று... ஆனால், யாருமே வரவில்லை' என்று, அவர் குறிப்பிட்டிருந்த வாக்கியத்தை மட்டும், என்னால் மறக்கவே முடியவில்லை.

சூளுரைத்த மோடி:கடந்த தேர்தலில், ஊழலை ஒழித்து விடுவதாக, ஒவ்வொரு கூட்டத்திலும் சூளுரைத்தார் மோடி. ஆனால், ஊழலை ஒழிப்பதற்கான முதல் அடியைக் கூட, அவரால் எடுத்து வைக்க முடியவில்லை. கேட்டால், 'அதற்கெல்லாம், 10, 20 ஆண்டுகளாகும்' என, பதில் வருகிறது; இதுதான் பிரச்னை. தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்தபடி, என்ன வேண்டுமானாலும், வாக்குறுதியை அள்ளி வீசுவர். ஐந்து ஆண்டுகள் ஆன பின் கேட்டால், 20 ஆண்டுகள் வேண்டும் என்பர்.

மக்களுக்கு இப்போதைய நிலையில், இரண்டு வழிகள் தான் உள்ளன. ஒன்று, சர்வாதிகாரத்தை நோக்கிய பாதை. இரண்டு, ஊழல் அரசியல். இதற்கு மாற்றாக உள்ள தேசிய கட்சிகளும், அவ்வளவு நம்பிக்கை அளிப்பதாக இல்லை. யாதவ்களின் சமாஜ்வாதி கட்சியின் அடையாளம் ஊழல், ஜாதி, நிலப்பிரபுத்துவம்.

துக்ளக் ஆட்சி:மாயாவதியின் பகுஜன் சமாஜில், வேறு மாதிரியான பிரச்னை. அவர் ஆட்சிக்கு வந்தால், இந்தியா முழுவதும் யானை சிலைகள் வைக்கப்படும் என, உறுதியாக நம்பலாம். ஏனென்றால், உ.பி., முதல்வராக இருந்தபோது, மாயாவதி, மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களை செலவழித்து, அவர் கட்சியின் சின்னமான, யானை சிலையை வைத்தார். கிட்டத்தட்ட துக்ளக் ஆட்சி தான். மேற்கு வங்கத்தின், மம்தா மற்றொரு ஜெயலலிதா; மற்றொரு மோடி; முழுக்க முழுக்க சர்வாதிகாரம்.

இது தேவையா?இதை விட்டுவிட்டு தமிழகத்துக்கு வந்தால், இங்குள்ள தலைவர்கள் எப்படி இருக்கின்றனர்... என் நண்பர் ஒருவர், ஸ்டாலின் எதிர்ப்பாளர். அவர், ஒரு வீடியோ காட்சியை எனக்கு அனுப்பி வைத்தார். அதில், ஸ்டாலின் பேசுகிறார். 'A vacuum is filled when it is created' என்ற, ஒரு ஆங்கில பழமொழியை மேற்கோள் காட்டுகிறார். அதாவது, வெற்றிடம் என்பது உருவாக்கப்படும் போதே, காற்றினால் நிரப்பப்பட்டு விடுகிறது என்பதே அதன் பொருள். இதை, ஸ்டாலின், 'எ வேக்கும் இஸ் ஃபைல்ட் - filed, வென் இட் இஸ் க்ரைட் - cried' என்று வாசிக்கிறார். இது தேவையா?

முதன்மை மாநிலம் குஜராத்:நான், உடனே அந்த நண்பருக்கு, மோடியின் ஆங்கில பேச்சு ஒன்றை அனுப்பினேன். ஒரு நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிரிசேனா மற்றும் அவர் மனைவி மிஸஸ் சிரிசேனா இருவரையும் வரவேற்கிறார் மோடி. இதில், மிஸஸ் என்பதை அவர், எம்.ஆர்.எஸ்., என்று படிக்கிறார். ஒரு கட்சியின் தலைவருக்கு, ஆங்கிலம் தெரியாதது தப்பில்லை. ஆனால், ஒரு மிகப் பெரிய தேசத்தின் பிரதம மந்திரிக்கு, மிஸஸ் என்ற வார்த்தை கூடவா தெரியவில்லை? இப்படிப்பட்டவர்களால் எப்படி ஒரு தேசத்தை ஆள முடியும்... எப்படி ஒரு தேசத்தின் பிரச்னைகளையோ, அதிகாரிகள் முன்வைக்கும் செயல் திட்டங்களையோ புரிந்து கொள்ள முடியும்...

விவசாயியின் மகன் அல்ல:நண்பர் கேட்டார், 'மோடி, ஒரு முறைக்கு இரண்டு முறையாக, மாநிலத் தேர்தலில் தொடர்ந்து வெற்றி பெற்று, குஜராத்தை தன் ஆட்சியில், முதன்மை மாநிலமாக மாற்றிக் காட்டினார். 'ஆங்கிலம் தெரியாததில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், ஸ்டாலின் ஒன்றும் கிராமத்து விவசாயியின் மகன் அல்லவே... மந்திரியின் மகனாக வளர்ந்தவர் தானே... அவர் என்ன பள்ளிக்கூடமே போனதில்லையா...' என்று. இதை, நான் ஸ்டாலின் பற்றிய பிரச்னையாக மட்டும் பார்க்கவில்லை.

'சென்சிபிலிட்டி' சார்ந்த விஷயம் இது. பள்ளிப்படிப்பினால் வரக் கூடியது அல்ல. சென்னையிலேயே மிகப் பெரிய நுாலகத்தைத் தன் வீட்டில் வைத்திருக்கும் கமல்ஹாசன்-, ஸ்டாலினை விட, 'சென்சிபிலிட்டி' குறைந்தவராக இருக்கிறார். ஒரு பத்திரிகையாளர் கமலிடம், 'ஒரு எழுத்தாளராக இருக்கும் நீங்கள்…' என்று, கேள்வியை ஆரம்பிக்கிறார். இதைப் படித்ததும் எனக்குத் துாக்கிவாரிப் போட்டது.

என்ன தவறு:எழுத்தாளர் என்ற அப்பாவி ஜீவிக்கு இருக்கும் ஒரே அந்தஸ்து, அந்த எழுத்தாளர் என்ற பெயர் தான். கோடிக் கணக்கில் சம்பளம் வாங்கும் சினிமா நடிகரான நீங்கள், அந்தப் பெயரையும் பிடுங்கிக் கொண்டால் எப்படி? போலீஸ் ஸ்டேஷனில் கூடத்தான், 'ரைட்டர்' என்று ஒருவர் இருக்கிறார். அவரையும் கமல் எழுத்தாளர் என்று சொல்வாரா? ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூடப் பார்த்தேன். இயக்குனர் ஷங்கரை, பார்வையாளர்களுக்கு, 'எழுத்தாளர் ஷங்கர்' என்றே அறிமுகப்படுத்தி வைக்கிறார் கமல். ஒருமுறை அல்ல; இரண்டு முறை, ' எழுத்தாளர்... எழுத்தாளர்...' என்கிறார். உலக இலக்கியம் படித்தவரே இப்படி இருந்தால் ஸ்டாலின் வெற்றிடத்தை, பைலாக மாற்றி அழ வைத்ததில் என்ன தவறு இருக்கிறது!

- கே.சாரு நிவேதிதா, எழுத்தாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)