நவீன தீண்டாமையை, தி.மு.க., கடைப்பிடிக்கிறதா?

சென்னையில், பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி, தேர்தல் பிரசாரத்தில் பேசும் போது, 'விடுதலை சிறுத்தைகள் கட்சி பெயரையோ, கொடியையோ பயன்படுத்தக் கூடாது. தி.மு.க., நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு, வி.சி., கொடி பிடித்து, யாரும் வரக்கூடாது. திருமாவளவன், பிரசாரத்திற்கு வேறு எங்கும் போகக் கூடாது; அவரை அழைக்கவும் கூடாது என, தி.மு.க., தடை போட்டுள்ளது. இப்படி, தி.மு.க., தலைமை, நவீன தீண்டாமையை கடைப்பிடிக்கிறது' என்றார்.அவரது பேச்சுக்கு ஆதரவும், எதிர்ப்பும் இதோ..


நுாற்றாண்டின் சிறந்த நகைச்சுவை!


ஆடு நனைகிறதே என, ஓநாய் கவலைப்பட்டது போல, அன்புமணி பேச்சு அமைந்துள்ளது. வட மாவட்டங்களில், ஜாதி வெறி ஆதிக்கத்தை நிலைநாட்டி, பல ஆயிரம் இளைஞர்களை, தவறான பாதையில் வழிநடத்தி செல்பவர்கள், இன்று, தலித் சமுதாயத்தினர் மீது, அதீத அக்கறை இருப்பது போல நடிக்கின்றனர். இது, ஒரு நாடக அரசியல்.அன்புமணி பேசுவதை, அனைத்து சமுதாய மக்களும் நம்ப மாட்டார்கள். சமூக நீதி கொள்கைகள், தி.மு.க., ஆட்சியில் சட்டமாக கொண்டு வரப்பட்டன. தி.மு.க., மீது, அவதுாறு பரப்பும் வகையிலும், உள்நோக்கம் கற்பிக்கும் வகையிலும், அன்புமணி பேசியது, கண்டிக்கத்தக்கது.கொடி ஏற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கலவரம் செய்ய துாண்டி விடுவது, ஒரு அமைதியான, சமத்துவத்திற்கு எதிரான அரசியலை நடைமுறைப்படுத்துவது தான், பா.ம.க., எண்ணம். வன்னியர் சமுதாயத்தினருக்கு கூட, ராமதாஸ், அன்புமணி, எந்த ஒரு நல்ல காரியமும் செய்தது இல்லை. காடுவெட்டி குருவின் மகன், கனல் கேட்ட கேள்வியை தான், என்னால் கேட்க முடிகிறது.தங்கள் குடும்பத்தை வளமாக்கும் நோக்கத்துடன், பா.ம.க., நடத்தப்படுகிறது. மதம், ஜாதி கடந்து, தி.மு.க., இயங்கி வருகிறது. ஸ்டாலின், அனைத்து மதத்தினருக்கும், சமுதாயத்தினருக்கும் பாதுகாவலராக விளங்குகிறார்.ஜாதி ஒழிக்கப்பட வேண்டும்; சமதர்மம் வெல்ல வேண்டும் என்ற கோட்பாட்டை, தி.மு.க., விரும்புகிறது. இப்படிப்பட்ட, தி.மு.க., நவீன தீண்டாமையை கடைபிடிக்கிறது என, அன்புமணி சொல்வது, இந்த நுாற்றாண்டின் சிறந்த நகைச்சுவை.சிதம்பரத்தில், திருமாவளவன் போட்டியிடுகிறார். பானை சின்னம், கடைசியாக தான் கிடைத்தது. தேர்தல் பிரசாரத்தில், தீவிர கவனம் செலுத்தி வருகிறார். கடந்த தேர்தலில், வௌியூர் சுற்றுப்பயணம் சென்றதால், தேர்தல் பணிகள் பாதித்து, கட்சி தோல்வி அடைந்தது. இந்த தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியை தோற்கடிக்க முடிவு செய்திருக்கிறோம்.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்களும், திருமாவளவனை பிரசாரத்திற்கு அழைக்கின்றனர். ஆனால், தொகுதியில் கவனம் செலுத்தி வருகிறோம். திருமாவளவனை, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்கள் அழைக்கவில்லை என்ற, பொய் பிரசாரத்தை, பரப்பி வருகின்றனர். கவிஞர் திலகபாமா,மாநில பொருளாளர், பா.ம.க.

* வெளுக்கிறது தி.மு.க.,வின் சாயம்

ஆங்கிலேயர் காலத்திலேயே, தமிழகத்தில் துவங்கிய, சமுதாய அடிப்படை அரசியல், இன்றைக்கு, அனைத்து அரசியல் கட்சிகளாலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. பா.ம.க., மட்டுமே, அனைத்து சமுதாயங்களையும், ஒருங்கிணைக்கும் நோக்கத்துடன், சமூக நீதியை கடைபிடிக்கும் எண்ணத்துடன் செயல்படுகிறது.பா.ம.க.,வுக்கு கிடைத்த, ஏழு தொகுதிகளில், நான்கு தொகுதிகளை, அனைத்து ஜாதிகளுக்கும் பிரித்து கொடுத்து, சமூக நீதியை கடைபிடித்துள்ளது. இதற்கு எதிர்மாறாக, நவீன தீண்டாமையை, தி.மு.க., கடைபிடிக்கிறது. இதற்கு எடுத்துக்காட்டு தேவை என்றால், திருமாவளவன், சிதம்பரம், விழுப்புரத்திலும் மட்டுமே பிரசாரம் செய்கிறார்.திருமாவளவனின் பெயரை எழுதாமல் தவிர்ப்பது, கொடியை தவிர்ப்பது, அனைத்து சமுதாயத்தினரின் முன்னிலையில், விடுதலை சிறுத்தைகளை தனிமைப்படுத்துவது, இவை அனைத்தையும் விட, அவர்களை தங்களின் சின்னத்தில் போட்டியிடும்படி வலியுறுத்தியது எல்லாம், தீண்டாமையின் இன்னொரு வடிவமாகமே உள்ளது. இது, சுயமரியாதை சொல்லி தந்த, திராவிட இயக்கத்திற்கு அழகல்ல.சமுதாய ரீதியிலான தேர்வு என்பதையும் தாண்டி, சமுதாயங்களை பிளவுபடுத்தி, அதன் வாயிலாக, ஓட்டுக்களை கைப்பற்றுவதையே, தி.மு.க., நோக்கமாக வைத்திருக்கிறது. தலித் சமுதாய மக்களிடமும், பிற சமுதாய மக்களிடமும் பிளவை ஏற்படுத்தி, தங்களை ஒடுக்கப்பட்ட, பிறப்படுத்தப்பட்ட மக்களின் காவலர்கள் என, காட்டிக் கொண்டிருக்கும், தி.மு.க.,வின் சாயம், தேர்தல் முடிவில் வெளுத்து விடும்.சிறுபான்மையினருக்கும், பட்டியல் இனத்தவர்களுக்குமான கட்சி அல்ல தி.மு.க., என்பதை, இந்த தேர்தலில், பா.ம.க., நிரூபித்து காட்டும். தோல்வி பயத்தில், கூட்டணி கட்சியினரை, அடையாளம் இழக்கச் செய்யும் வேலைகளை, ஸ்டாலின் செய்கிறார். ஸ்டாலினின் பேச்சுக்களாலும், நடவடிக்கைகளாலும், இந்த தேர்தலில், தி.மு.க., தனித்து விடப்படப் போகிறது. பசுந்தோல் போர்த்திய புலிகள், துரத்தியடிக்கப்பட வேண்டும்.வன்னியரசு,துணை பொதுச்செயலர்,விடுதலை சிறுத்தைகள் கட்சி.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)