'சில ஆண்டுகளாக, உடல் நலம் சரியின்றி இருந்த, தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு, வெளிநாட்டில் உயர்தர சிகிச்சை அளித்திருக்கலாம்; ஸ்டாலின் அவ்வாறு செய்யவில்லை. கருணாநிதி, இரண்டு ஆண்டுகளாக, வீட்டு சிறையில் வைக்கப்பட்டிருந்தார். அவரது மரணம் குறித்து, விசாரணை நடத்தப்படும்' என, முதல்வர், இ.பி.எஸ்., தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார். அவரது அறிவிப்பு, தேர்தல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துகள்:
அபாண்ட பழி சுமத்துகிறார்!
தேர்தல் பிரசாரத்தில், முதல்வர், இ.பி.எஸ்., ஏட்டிக்கு போட்டியாகவே பேசுகிறார். கருணாநிதி, உடல்நலம் குன்றியிருந்த காலத்தில், காங்., தலைவர் ராகுல், பிரதமர் மோடி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயகுமார், வேலுமணி போன்றவர்கள், அவரது உடல்நிலை குறித்து, காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரம் வீட்டிலும் விசாரித்தனர். முதல்வர், இ.பி.எஸ்., கூட நலம் விசாரித்ததை மறந்து விட்டாரா என, தெரியவில்லை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல், கருணாநிதிக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சை குறித்த தகவலை, டாக்டர்கள் குழுவும் வெளியிட்டு வந்தது.
ஜெ., மரணத்தில் மர்மம் உள்ளது என, தர்மயுத்தம் நடத்திய, துணை முதல்வர் பன்னீர் செல்வம், இன்னும் விசாரணை கமிஷனில் ஆஜராகவில்லை. நீதி கேட்டு, நெடும் பயணம் சென்றவர், அமைச்சர் பாண்டியராஜன். இவர்கள் இருவரும் பேசிய பேச்சுகள், முதல்வருக்கு மறந்து விட்டதா? கருணாநிதி உடல்நலம் குன்றியதிலிருந்து, இரு ஆண்டுகளாக, ஸ்டாலின் கண்ணும் கருத்துமாக, அவரை கவனித்தார். சிறிய கட்சிகளின் தலைவர்கள் முதல், என்னை போன்ற மாவட்ட செயலர்களையும், கருணாநிதியை சந்திக்க அனுமதித்தார். கருணாநிதி இறந்த பின், அண்ணாதுரையின் நினைவிடத்தில் இடம் கொடுக்க மறுத்த, கல்நெஞ்சக்காரர் தான், இ.பி.எஸ்.,
'தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், ஜெ., மரணம் தொடர்பான மர்ம முடிச்சுகளை அவிழ்ப்போம். சம்பந்தப்பட்டோரை, சட்டத்தின் முன் நிறுத்துவோம். யாராக இருந்தாலும், உரிய தண்டனை பெற்று தருவோம்' என, பிரசார மேடையில், ஸ்டாலின் முழங்கினார். அதேபோல, 'கோடநாடு பங்களாவில் நடந்த கொலை விவகாரத்திற்கும், விசாரணை நடத்துவோம்' என, ஸ்டாலின் பேசியதும், முதல்வரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் உச்சக்கட்ட வெளிப்பாடாகவே, ஸ்டாலின் மீது அபாண்டமான பழியை சுமத்தி, மிரட்ட பார்க்கிறார். எங்களின் மடியில் கனமில்லை; எனவே, வழியில் பயமில்லை. எந்த விசாரணை கமிஷனையும், நாங்கள் எதிர்கொள்ள தயார்.
- பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., மாவட்ட செயலர், தி.மு.க.,
ஆணவ பேச்சை ரசிக்கவில்லை!
தி.மு.க., தலைவர் பதவியை கைப்பற்றுவதற்காக, தன் தந்தையை, கோபாலபுரம் வீட்டில், ஸ்டாலின் சிறைப்பிடித்து வைத்தார் என, மக்கள் தெரிவித்த கருத்தையே, முதல்வர், இ.பி.எஸ்.,சும் தெரிவித்துள்ளார். முதல்வர், தன் பேச்சில், எந்த ஒரு தவறான கருத்தையும் தெரிவிக்க மாட்டார். சந்தேகத்துக்குரிய, சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்தாலும், பொத்தாம் பொதுவாக, முதல்வர் பேசி விட முடியாது. எனவே, தி.மு.க., தொண்டர்கள் மற்றும் மக்கள் எண்ணத்தையே, முதல்வர் வெளிப்படுத்தி உள்ளார். அவரது குற்றச்சாட்டுக்கு, ஸ்டாலின் மறுப்பு தெரிவிக்காமல் இருப்பது ஏன்?
ஐந்து முறை முதல்வராக இருந்தவர், கருணாநிதி. தேசிய கட்சிகளின் தலைவர்களிடம் நெருக்கமாக பழகியவர். நாட்டின் முக்கியமான தலைவராக கருதப்பட்டவர்; சாதாரண பிரஜை அல்ல. கருணாநிதியை, வீட்டு சிறையில் பொம்மைபோல் வைத்திருந்ததை, எப்படி மக்கள் ஏற்றுக் கொள்வர்? கருணாநிதிக்கு, வெளிப்படையான சிகிச்சை அளிக்கப்பட்டது எனக் கூறுவதை ஏற்க முடியாது. என்ன சிகிச்சை, எப்படிப்பட்ட சிகிச்சை கொடுக்க முடியும் என்பதெல்லாம், டாக்டர்களுக்கு மட்டும் தான் தெரியும். மருத்துவ ரகசியத்தை மூடி மறைக்க வாய்ப்பு உள்ளது.
ஆண்டுக்கு இரண்டு முறை, தனக்கு சிகிச்சை பெற, லண்டன் செல்கிறார், ஸ்டாலின். ஆனால், தன்னை பெற்று வளர்த்து, கட்சியிலும், ஆட்சியிலும் பல்வேறு பதவிகளை கொடுத்து, அழகுபார்த்த கருணாநிதிக்கு, வெளிநாட்டு சிகிச்சையை, ஏன் ஸ்டாலின் தரவில்லை? மக்கள் நலத் திட்டங்களை, ஜெ., வழியில் சிறப்பாக நிறைவேற்றி வரும் முதல்வர், இ.பி.எஸ்.,சின் நிர்வாக திறமை, அவரது ராஜதந்திரம், சாதுர்யம் ஆகியவற்றை கண்டு, ஸ்டாலின் பொறாமைப்படுகிறார். அதனால் தான், முதல்வர், இ.பி.எஸ்., மீது தனிப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து பேசுகிறார்.
'நான் நினைத்தால், தேர்தல் முடிந்ததும், ஒரு நொடியில், ஆட்சியை கவிழ்த்து விடுவேன்' என, ஆணவத்தோடு ஸ்டாலின் பேசுகிறார். அவரது, ஆணவ பேச்சை மக்கள் ரசிக்கவில்லை. அவருக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவர்.
- பா.வளர்மதி, தலைவர், தமிழக அரசு பாடநுால் நிறுவனம், முன்னாள் அமைச்சர், இலக்கிய அணி செயலர், அ.தி.மு.க.,
வாசகர் கருத்து