பட்டுவாடா செய்ய பல வழிகள்! கட்சிகள் கண்டுபிடிப்பு; களத்தில் சுறுசுறுப்பு

லோக்சபா தேர்தல் மற்றும் 18 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு, நான்கு நாட்களே உள்ளன. வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ய, இரு கட்சிகளும் ஆயத்தமாகி வருகின்றன.

பணப் பட்டுவாடா பணியில், சொந்த கட்சியினர் மட்டுமின்றி, தனியார் ஏஜன்சியையும் ஈடுபடுத்துவது உள்ளிட்ட, புதிய வியூகங்களை, இக்கட்சிகள் வகுத்து வருகின்றன.

அதன் விபரம்:
* சென்னையில், ஒரு ஓட்டுச்சாவடியில் சராசரியாக, 750 - 1,200 வாக்காளர்கள் உள்ளனர். தலா, 100 பேருக்கு, பணப் பட்டுவாடா செய்ய, ஒருவரை, அரசியல் கட்சிகள் நியமித்துள்ளன. அவர், அந்த ஓட்டுச்சாவடிக்கு உட்பட்டவர். கட்சி தலைமை, வாக்காளர்களுக்கு வழங்க வேண்டிய பணம், வேட்பாளரின் தலைமை ஏஜன்ட் - மாவட்ட செயலர் - பகுதி செயலர் வாயிலாக, வட்ட செயலரிடம் தரப்பட உள்ளது. அவர், ஓட்டுச்சாவடி முகவர் முன்னிலையில், பணம் வழங்க நியமிக்கப்பட்ட நபரிடம், தலா, 25 வாக்காளர்களுக்கான பணத்தை தருவார். நான்கு கட்டங்களாக, 100 பேருக்கு உரிய பணம் வழங்கப்பட உள்ளது.

பணத்தை பெறும் நபர், அதை, தன் வயிற்று பகுதியில் மறைத்து வைத்து, அதன் மேல் சட்டை போட்டு கொள்வார். கட்சி சின்னம், வேட்பாளர் பெயர் அச்சிடப்பட்ட துண்டறிக்கையுடன், ஒவ்வொரு வாக்காளரின் வீடுகளுக்கு சென்று, பணத்தை வழங்குவார். தரை தளத்தில் உள்ள, ஒரு வீட்டிற்கு, 20 வினாடிக்குள் பணம் வழங்கி விட வேண்டும். பணம் தருவோர், வாக்காளர்களிடம் எதுவும் பேசக் கூடாது. பணம் வாங்க மறுத்தால், அந்த இடத்தை விட்டு சென்று விட வேண்டும். பெண்களை எளிதாக சோதனையிட முடியாது என்பதால், அவர்களும், இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

இதன் வாயிலாக, பணம் கொடுப்பவரை, எதிரணியினர், தேர்தல் அதிகாரிகளிடம் பிடித்து கொடுத்தால், ஒரே சமயத்தில், அதிக பணத்தை கைப்பற்ற முடியாது. பணம் வினியோகம் செய்யும் நபர்கள், தங்களிடம் உள்ள பணத்தை, தங்கள் சொந்த பணம் என்று கூறி, 'எஸ்கேப்' ஆகி விட அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

* ஒரு கிராமத்தில், 500 - 1,500 குடும்பங்கள் உள்ளன. இதனால், கட்சியினர், ஒவ்வொரு கிராமத்திற்கும், 200 குடும்பங்கள் வீதம், இரு சக்கர வாகனங்களில், பணத்தை எடுத்து சென்று, வினியோகிக்க உள்ளனர். அதன்படி, இரு சக்கர வாகனத்தில், இருவர் பணத்தை எடுத்து செல்வர். அவர்கள், ஊரில் தன் கட்சியை சேர்ந்த இருவரையும், இரு முக்கியஸ்தகளையும் அழைப்பர். வாகனத்தில் வந்த ஒருவர், கட்சிக்காரர், ஒரு முக்கியஸ்தர் என, மூன்று நபர்கள், இரு குழுக்களாக பிரிந்து, வாக்காளர்களை சந்தித்து, பணம் வழங்க உள்ளனர்.

* தேனி, நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில், தேயிலை, காபி தோட்டங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், பல ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களின் வீடுகள், அதிக தொலைவில் இருக்கும். அதனால், வீடுகளுக்கு செல்லாமல், ஆலைகளுக்கு சென்று, பணியாளர்கள், அவர்களில், எத்தனை வாக்காளர்கள் உள்ளனர் உள்ளிட்ட விபரங்களை, கட்சிகள் சேகரித்து வைத்துள்ளன. தலா, 100 பேர் செல்லும் வகையில், இரு பஸ்களை, ஆலைகளின் அருகில், கட்சியினர் நிறுத்தி வைக்க உள்ளனர். அதில், பணி முடித்து திரும்பும் ஊழியர்கள் ஏற்றப்பட்டு, ஒவ்வொரு நபரிடமும், பணம் வழங்க உள்ளனர்.

* அடுக்குமாடி குடியிருப்பு பகுதிகள், குடியிருப்போர் நல சங்கத்தை சேர்ந்த வாக்காளர்களுக்கு, அதன் நிர்வாகிகள் வாயிலாக, பணம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, அந்த குடியிருப்போர் சங்க நிர்வாகிகளின் விபரத்தை சேகரித்து, கட்சியினர் தயாராக வைத்துள்ளனர். அவர்களிடம், மொத்த ஓட்டுக்கள், அதற்கான பணமும் வழங்கப்பட்டு உள்ளது. மொபைல் போன் வாயிலாக, குடியிருப்போர் சங்க நிர்வாகிகளை தொடர்பு கொண்டு, ஏதேனும் ஒரு இடத்திற்கு வர சொல்லி, 'எங்கள் வேட்பாளருக்கு, உங்கள் குடியிருப்பில் வசிப்போரை ஓட்டளிக்க சொல்லுங்கள்; அவர்களிடம், இதை கொடுத்து விடுங்கள்' எனக்கூறி, முகவர்கள் முன்னிலையில், பணம் தருகின்றனர்.

* குடிசை மாற்று வாரியம், அரசு ஊழியர் குடியிருப்புகளில், ரேஷன் கடை ஊழியர்கள் வாயிலாக பணம் வழங்கப்பட்ட உள்ளது. இவ்வாறு, பணப் பட்டுவாடா பணி முடிந்த பின், வாக்காளர்களை சந்தித்து, அந்த பகுதியில் உள்ள வட்ட செயலர், பகுதி செயலர் உள்ளிட்ட கட்சியினர், ஓட்டு கேட்பர். அப்போது, அவர்களிடம், பணம் வழங்கிய விபரத்தையும் கேட்டு, தெரிந்து கொள்வர். ஓட்டுச்சாவடி மையங்களில், அதிகாரிகளுடன், வேட்பாளர்கள் சார்பில், முகவர்கள் இருப்பர். இதனால் தான், முகவர்கள் முன்னிலையில், கட்சிகள், வாக்காளர்களுக்கு பணம் வழங்குகின்றன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)