யாருக்காக ஓட்டு கேட்கின்றனர் கம்யூ.,க்கள்?

'ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துகின்றனர்' என்பது போல, கம்யூனிஸ்ட் கட்சிகள், யாரையும் பிரதமராக அடையாளம் காட்டி, ஓட்டு கேட்க முடியாமல் தவிக்கின்றனர்.பொதுவாக, லோக்சபா தேர்தலில் எந்த கட்சியும் அல்லது கூட்டணியும், 'இவர் தான் எங்கள் பிரதமர் வேட்பாளர்' எனக் கூறி, ஓட்டு கேட்டால் தான், மக்கள் அவர்களுக்கு ஓட்டளிப்பர்.

மோடி அலைகடந்த, 1996 முதல், 1999 வரை, மூன்று தேர்தல்கள் நடந்து, மூன்று பிரதமர்கள் - தேவகவுடா, குஜ்ரால், வாஜ்பாய் - நான்கு முறை பொறுப்பேற்று, நிலையற்ற ஆட்சிகள் அமைந்தன. அப்போது எல்லாம், எந்த கட்சியும், 'இவர் எங்கள் பிரதமர்' என, தேர்தலுக்கு முன் அடையாளம் காட்டவில்லை.கடந்த, 2014 தேர்தலில் கூட, ஆளுங்கட்சியாக இருந்த காங்கிரஸ், பகிரங்கமாக பிரதமர் வேட்பாளரை அறிவிக்கவில்லை. 10 ஆண்டுகள் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் மீண்டும் தொடர்வாரா, ராகுல் அல்லது சோனியாவா என்றெல்லாம் தெளிவுபடுத்தவில்லை.ஆனால், இந்த முறை காங்கிரஸ் தெளிவாகவே, ராகுலை, பிரதமர் வேட்பாளராக அறிவித்து விட்டது. 2009 தேர்தலில், வாஜ்பாயா, அத்வானியா அல்லது வேறு ஒருவரா பிரதமர் வேட்பாளர் என்பதை தெளிவுபடுத்தாத, பா.ஜ., 2014ல், மோடியே எங்கள் பிரதமர் வேட்பாளர் என அறிவித்தது.தொடர்ந்து, நாடெங்கும் மோடி அலை வீசியது. தனி மெஜாரிட்டியுடன், காங்கிரஸ்அல்லாத தனிக் கட்சி அமைச்சரவை அமைந்தது.எனவே ஓட்டளிக்கும் முன், பிரதமர் யார் என்ற கேள்வி, வாக்காளன் மனதில் எழுவது எதார்த்தம். இந்த தேர்தலில், மூன்றாவது அணி ஏதும் உருவாக்கப்படவில்லை. ஆந்திரா, தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் போன்றவற்றில், மாநில கட்சிகள் கோலோச்சுகின்றன.

தொகுதி தர மறுப்புதேசியக் கட்சி என அறியப்பட்டாலும், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் கேரளாவிலும், மேற்கு வங்கத்திலும் தான், குறிப்பிட்ட அளவு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இவர்களுக்கு, பல மாநிலங்களில், அங்குள்ள மாநில கட்சிகள், ஓரிரு தொகுதிகள் கூட தர மறுத்து விட்டன.எனவே, தேர்தலுக்கு பின், கம்யூனிஸ்ட்கள், மூன்றாம் அணி அமைக்க முயற்சிக்க சாத்தியங்கள் குறைவு. சந்திரபாபு நாயுடு போன்றவர்கள் முயற்சித்தால், மம்தா போன்றவர்கள் அனுமதித்தால், அதில் போய் ஒட்டிக் கொள்ளலாம். எனவே, இவர்களால் பிரதமர் வேட்பாளர் யார் என சொல்ல முடியவில்லை.தமிழகத்தில், தி.மு.க.,- - காங்கிரஸ் கூட்டணியோடு இணைந்து, நான்கு கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களும், கம்யூனிஸ்ட் தலைவர்களும், மறந்தும் கூட, 'எங்கள் பிரதமர் வேட்பாளர் ராகுல் தான்' என, எங்கும் பேசவில்லை.கூட்டணியின் தலைவரான, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், 'எங்கள் பிரதமர் ராகுல்' என, ராகுல் முன்னிலையில் நாகர்கோவிலில் அறிவித்த போது, இரண்டு கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களும் கூடவே நின்று, கைகோர்த்து, 'போஸ்' தந்தனர். ஆனாலும், ராகுல் தான் பிரதமர் என பேசவில்லை.இப்போது, ராகுல் பிரதமர் என ஏற்றுக் கொள்ளாமல், கன்னியாகுமரியில், காங்கிரசிற்கு ஓட்டு கேட்கிறது மார்க்சிஸ்ட். இந்த வேட்பாளர் ஜெயித்து வந்தால், ராகுலை பிரதமராக ஏற்க மாட்டார் என தெரிந்தே, கோவையில், மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஓட்டு கேட்கிறது காங்கிரஸ்.இந்த இரண்டு தொகுதிகளின் பக்கத்தில் உள்ள கேரள மாநில தொகுதிகளில், காங்கிரசும், மார்க்சிஸ்ட்டும் நேருக்கு நேர் மல்லு கட்டுகின்றன.

கொள்கைகள் எங்கே?அட, யார் பிரதமர் வேட்பாளர் என்பதை விடுங்கள்... மாநிலத்திற்கு மாநிலம், கொள்கைகள், சித்தாந்தங்கள் எல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்து, மக்களிடம் பதில் சொல்ல முடியாமல், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், 'தேர்தல் அரசியலில்' நெளிவது தான் பரிதாபம்.கேரள வாக்காளர்களும், ஓட்டு கேட்டு வரும் கம்யூனிஸ்ட் வேட்பாளர்களிடம் கேட்கின்றனர்... 'நாங்கள் ராகுல் அல்லது மோடியை தானே தேர்வு செய்ய வேண்டி உள்ளது. இடையில் நீங்கள் எப்படி' என்று. போதாக்குறைக்கு தங்கள் கோட்டையான, கேரளாவில், ராகுல் போட்டியிடுவது, கம்யூனிஸ்ட்களை இன்னும் கடுப்பாக்கி விட்டது.'காங்கிரசின் எதிரி, பா.ஜ., என்றால், தென் மாநிலங்களில் போட்டியிட விரும்பிய ராகுல், கர்நாடகாவை தானே தேர்வு செய்திருக்க வேண்டும்; பா.ஜ.,வுக்கு ஆதரவில்லாத கேரளாவை தேர்வு செய்து, நாங்கள் தான் அவரது போட்டியாளர் என்று நினைக்கிறாரா' என்கிறார், மார்க்சிஸ்ட் கட்சியின் கேரள முதல்வர் பினராயி விஜயன்.இதனால், பயந்த ராகுல், வேட்பு மனு தாக்கல் செய்த கையோடு, 'நான் மார்க்சிஸ்டிற்கு எதிராக ஏதும் பேச மாட்டேன்; அவர்கள் என் நண்பர்கள்' எனக் கூறி, அங்கு, 20 தொகுதிகளிலும் இதுவரை மோதிக் கொண்டிருந்த இரண்டு கட்சி வேட்பாளர்களையும், வாக்காளர்களையும் குழப்பி விட்டார்.ஆனால் மறுநாள், மாநில, காங்., தலைவர்ரமேஷ் சென்னிதலா, 'ராகுல் கம்யூனிஸ்ட்களை குறை கூறவில்லை என்றாலும், நாங்கள் அவர்களை சும்மா விடமாட்டோம்' என்றார். பினராயி விஜயனோ, 'காங்கிரஸ் தலைவர் ராகுலின் கருணை எங்களுக்கு தேவை இல்லை' என்கிறார்.இதைக் கேட்ட கேரள மாநில, பா.ஜ.வோ., 'எங்களை தோற்கடிக்க கம்யூனிஸ்டும், காங்கிரசும் கள்ள உறவு கொண்டுள்ளது' என்கிறது.

ஜெயிக்கும் கட்சிக்கு ஓட்டு

ஜெயிக்கிற கட்சிக்கு ஓட்டு அளித்தால், நம்மூருக்கு ஏதாவது நல்லது நடக்கும் என்ற மனநிலை, மக்களுக்கு உண்டு. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன் கூட, 'இவர் தான் ஜெயிப்பார்; இவருக்கு ஓட்டளிப்போம்' என, 'டிரென்ட்' மாறுவது வாடிக்கை.லோக்சபா தேர்தலை பொறுத்தவரையில், பா.ஜ.,வா-, காங்கிரசா, மோடியா-, ராகுலா என்ற கேள்வியே மக்களிடம் உள்ளது. இந்த இரண்டிலும் இல்லாமல், இரண்டும் கெட்டான் நிலையில், மூன்றாவதாக ஒரு அணியையும் உருவாக்க முடியாமல், பிரதமரையும் சுட்டிக்காட்ட முடியாமல் தவிக்கும் கம்யூனிஸ்ட்களின் எதிர்காலம் இனி எப்படி இருக்கும்?கடந்த, 2009 லோக்சபாவில், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும், மொத்தம், 20 எம்.பி.,க்கள் இருந்தனர். 2014ல், இது, 10 பேராக சுருங்கியது. 2019ல்...?தமிழகத்தில் போட்டியிடும்,நான்கு வேட்பாளர்களும் யாருக்காக ஓட்டு கேட்கின்றனர்...? காலம் பதில் சொல்லும்! ஜி.வி.ரமேஷ் குமார்எழுத்தாளர்வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)