முதல் தேர்தல் நடந்தது எப்படி?

தற்போதைய, 17வது லோக்சபா தேர்தல், ஒரு மாதம் நடைபெறும் நிலையில், சுதந்திர இந்தியாவின், முதல் தேர்தல், ஆறு மாதங்கள் நடந்தது. அதில், பல சுவாரஸ்யங்களும் இடம் பெற்றன.

முன்னேறிய நாடுகள், பொதுத் தேர்தலை நடத்த படாதபாடு படும் நிலையில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், பல மொழிகள், இனங்கள், நிலப்பிரிவுகள் உள்ளிட்டவை, தேர்தலை நடத்த சவாலாகவே இருக்கும் என்ற நிலையில், உலகம், நம்மை உற்று நோக்குகிறது.

35 ஆயிரம் வேட்பாளர்கள்:தற்போது, 130 கோடி மக்கள் உள்ள நாட்டில், ஒரு சில இடங்களில், அசம்பாவிதங்கள் நடந்தாலும், தேர்தலை மிகவும் கட்டுக்கோப்பாக நடத்தும், தேர்தல் ஆணையத்தை பாராட்ட வேண்டும்.நாடு சுதந்திரம் அடைந்த பின், 26 மாநிலங்கள் மற்றும், யூனியன் பிரதேசங்களின் சட்டசபை தேர்தல் மற்றும் பார்லிமென்டுக்கான முதல் தேர்தல், 1951 அக்டோபரில் தொடங்கி, 1952 ஏப்., 17ம் தேதி வரை நடந்தது. மொத்தம், 4,000 தொகுதிகளுக்காக நடந்த தேர்தலில், 35 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

அப்போது, 17.40 கோடி வாக்காளர்கள் இருந்த நிலையில், 52 கோடி ஓட்டுச் சீட்டுகள் அச்சடிக்கப்பட்டன. ஒவ்வொரு சின்னத்துக்கும், ஒரு பெட்டி என ஒதுக்கப்பட்டிருந்ததால், வாக்காளர்களிடம், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் கொடுத்து, ஓட்டுச் சீட்டுகளை வாங்கி, தங்கள் பெட்டிகளில் போட்டவர்களும் உண்டு. எனினும், 1,000 பேருக்கு, ஒரு ஓட்டுச்சாவடி என்ற அடிப்படையில், 1.75 லட்சம் ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டன.

அவற்றில், 19 லட்சம் ஓட்டுப் பெட்டிகள் வைக்கப்பட்டன. ஓட்டுப்பதிவு துவங்கும் நேரமும், முடியும் நேரமும், சங்கு ஒலித்து அறிவிக்கப்பட்டது. மும்பையில் மட்டும், 28 இடங்களில், சங்கொலி எழுப்பப்பட்டது. அந்த தேர்தலில், இந்திய தேசிய காங்கிரஸ், சோஷலிஸ்ட் கட்சி, அகில இந்திய பாரதிய ஜனசங்கம், கம்யூனிஸ்ட், பாரதிய ஹிந்து மகாசபை, புரட்சி சோஷலிஸ்ட் கட்சி உள்ளிட்ட, 14 தேசிய கட்சிகளும், சில மாநில கட்சிகளும் போட்டியிட்டன.

கை சின்னம்:தேர்தலில், 45 சதவீத ஓட்டுகள் பதிவாகின. அதில், இந்திய தேசிய காங்கிரசுக்கு, 35 சதவீத ஓட்டுகளும், சோஷலிஸ்ட் கட்சிக்கு, 10.6 சதவீத ஓட்டுகளும் கிடைத்தன.முதல் தேர்தலிலேயே, வேட்பாளர்கள் பற்றிய, 1.50 லட்சம் புகார் கடிதங்கள், தேர்தல் ஆணையத்திற்கு வந்தன. சுதந்திரத்துக்கு முன் நடந்த தேர்தலில், ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு நிற பெட்டி வைக்கப்பட்டிருந்த நிலையில், 1952ல் நடந்த தேர்தலில் தான், ஒவ்வொரு கட்சிக்கும், ஒவ்வொரு சின்னம் ஒதுக்கப்பட்டது.

அந்த தேர்தலில், ஏர் கலப்பையுடன் கூடிய, இரட்டை காளைகள் சின்னத்தில், காங்கிரஸ் போட்டியிட்டது. அடுத்தடுத்த தேர்தல்களில், சின்னங்கள் மாற்றப்பட்டு, பின், கை சின்னம் நிரந்தரமாகி உள்ளது.இப்போது நடப்பது போலவே, பீஹாரில், அப்போதும், வன்முறை நிகழ்ந்தது. அங்கு, 19 ஆயிரத்து, 427 ஓட்டுச் சாவடிகள் இருந்த நிலையில், 60 ஓட்டுச் சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு நடந்தது.

'டிபாசிட்' தொகை:அப்போதெல்லாம், சமூக விரோதிகளை, தேசிய கட்சிகள் சேர்த்துக் கொள்வதில்லை. 1967க்கு பின், அந்த நிலை மாறியது. தற்போது, கட்சிகளின் கொள்கைகள், கோடீஸ்வரர்களாலும், லட்சியங்கள், லட்சாதிபதிகளாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. நாட்டின், முதல் தேர்தலை நடத்தி முடிக்க, 10.50 கோடி ரூபாய் தான் செலவானது. எம்.பி., வேட்பாளருக்கு, 500 ரூபாயும், எம்.எல்.ஏ., வேட்பாளருக்கு, 250 ரூபாயும் தான், 'டிபாசிட்' தொகையாக நிர்ணயிக்கப்பட்டது.

தபால், தந்தி அலுவலகங்களில், ஓட்டு போடுவது பற்றிய, விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அந்த தேர்தலில், விமானம், ரயில், கார், படகுகளில் ஏறி, ஒன்பது வாரங்கள், 'பாரத யாத்திரை' என்ற பெயரில், நாடு முழுவதும், ஜவஹர்லால் நேரு பிரசாரம் செய்தார். அதில் ஈர்க்கப்பட்ட, 100 வயது மூதாட்டி, 'எனக்கு, முதலும் கடைசியுமான தேர்தல் என்பதால், என் உடல்நலக் குறைவையும் பொருட்படுத்தாமல், ஓட்டுப் போட்டேன்' என்றார்.

காந்தியின் ஆவி:காங்கிரசார், ஓட்டுப் பெட்டியின் உள்ளே, காந்தியின் ஆவி இருப்பதாக கூறி, நுாதன முறையில், ஓட்டு சேகரித்த வினோதமும், மஞ்சள் குங்குமம், மாலை இட்டு, ஓட்டுப் பெட்டியை வணங்கிய சம்பவங்களும் நடந்தன. தற்போதைய, சட்டீஸ்கரில் உள்ள, பிலாஸ்பூர் மன்னரை எதிர்த்துப் போட்டியிட்ட, இரண்டு வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் வாபஸ் பெற்றதால், முதல், எம்.பி.,யாக, ராஜா ஆனந்த் சந்த் என்பவரை, 1951 அக்., 22ல், தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தல் முடிந்து, நாட்டின், முதல் பிரதமராக நேரு தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன், 292 தேர்தல் பிரசார கூட்டங்களில், அவர் பேசியி ருந்தது குறிப்பிடத்தக்கது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)