பா.ஜ., தேர்தல் அறிக்கை: நடிகர் ரஜினி ஆதரவு

சென்னை: பா.ஜ. தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள நதிகள் இணைப்பு திட்டத்திற்கு நடிகர் ரஜினி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ரஜினி நடிக்க உள்ள 'தர்பார்' படத்தின் படப்பிடிப்பு இன்று மும்பையில் துவங்க உள்ளது. இதற்காக ரஜினி நேற்று மும்பை சென்றார். விமான நிலையம் கிளம்பும் முன் சென்னையில் உள்ள தன் வீட்டில் ரஜினி அளித்த பேட்டி: என் அரசியல் நிலைப்பாட்டை நான் ஏற்கனவே கூறிவிட்டேன். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏதாவது சொல்லி எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை கெடுத்து விடாதீர்கள்.

நான் நதிகள் இணைப்புக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறேன். மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கும் அது தான் கனவாக இருந்தது. ஒரு முறை நான் அவரை சந்தித்த போது நதிகள் இணைப்பு திட்டத்திற்கு 'பகீரத யோஜனா' என பெயர் வைக்க கூறினேன். அதாவது சாத்தியமாகாததை சாத்தியமாக்குவது என்பதாகும். அவரும் நன்றாக இருக்கிறது என்றார்.

பா.ஜ. தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு திட்டம் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக ஆணையத்தை உருவாக்குவதாகவும் கூறியுள்ளனர்; பா.ஜ. கூட்டணிக்கு தேர்தலில் எந்தளவு ஆதரவு கிடைக்கிறது என தெரியாது. மக்கள் ஆதரவு பெற்று அவர்கள் மத்தியில் ஆட்சி அமைத்தால் முதலில் நதிகளை இணைக்க வேண்டும். அதை செய்தால் நாட்டில் பாதி வறுமை போய் விடும்; பலருக்கு வேலை கிடைக்கும்; விவசாய மக்களின் வாழ்வாதாரம் பெருகும். இது தேர்தல் நேரம். ரொம்ப உணர்ச்சிகரமான சூழல். இதற்கு மேல் தயவு செய்து எதையும் கேட்காதீர்கள். இவ்வாறு அவர் கூறனார்.

ரஜினியின் கருத்து பா.ஜ. கூட்டணிக்கு ஆதரவு போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளதால் அக்கட்சியினர் மகிழ்ச்சியில் உள்ளனர். சமூக வலைதளங்களில் பா.ஜ. தேர்தல் அறிக்கையை பாராட்டி ரஜினி அளித்த பேட்டியை 'ஹேஸ்டேக்' செய்து வருகின்றனர்.
குஷ்பு எதிர்ப்பு: நடிகையும் காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குஷ்பு 'டுவிட்டரில்' கூறியுள்ளதாவது: நடிகர் ரஜினி ஒரு குடிமகனாக அவர் கருத்தை சொல்ல உரிமை இருக்கிறது. நதிகள் இணைப்பு பற்றி ஒரு வார்த்தை பேசியுள்ளார். அதை ஏன் அரசியலாக்க வேண்டும்; இதற்காக ஊடகங்கள் இவ்வளவு பேசுவது ஆச்சரியமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)