போலீஸ் வாகனங்களில் பணம் கடத்தலா? உளறலில் இதுவும் ஒன்று உறங்க விடமாட்டோம்

'ஆளுங்கட்சியினர், தங்கள் பண மூட்டைகளை, போலீஸ் வாகனங்களில் எடுத்து சென்று, வாக்காளர்களுக்கு வினியோகிக்க திட்டமிட்டுஉள்ளனர்' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 'சந்தேகத்திற்கு இடமான, போலீஸ் வாகனங்களையும் சோதனையிட, தேர்தல் அதிகாரிகளை வலியுறுத்த வேண்டும். நடவடிக்கை எடுக்கவிட்டால், மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும்' என்று, கூட்டணி கட்சியினருக்கு, அவர் அறிவுறுத்தி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு ஆதரவாகவும், எதிராகவும் எழுந்துள்ள கருத்துகள்:


பொதுமக்களுக்கு நண்பனாகவும், காவலனாகவும், 24 மணி நேரமும் பணியாற்றி வரும், தமிழக காவல் துறையை, கொச்சைப்படுத்தும் வகையில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்; அறிக்கை விட்டுள்ளார். ஸ்காட்லாந்துக்கு இணையாக கருதப்படுகிற, தமிழக காவல் துறையின் செயல்பாடுகளை, அரசியலாக்கி விமர்சிப்பது ஆரோக்கியமானதல்ல.ஓட்டுக்கு பணம் கொடுக்க, போலீஸ் வாகனங்களை பயன்படுத்தும் காட்சியை, சினிமாவில் கூட சித்திரிக்க வாய்ப்பு இல்லை. ஆனால், தி.மு.க.,வோ, ஜமுக்காளத்தில் வடிக்கட்டிய பொய்யாக, காவல் துறை மீது குற்றம் சாட்டி உள்ளது.துணை முதல்வராக, ஸ்டாலின் பணியாற்றி உள்ளார். போலீஸ் துறையை பற்றி, அவருக்கு நன்கு தெரியும்? குற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்கவே, போலீஸ் துறை இருக்கிறதே தவிர, குற்றத்திற்கே துணை போக முடியாது. தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படை அதிகாரிகளுடன், போலீசார் தான், பாதுகாப்பு பணிகளிலும், சோதனைகளிலும் ஈடுபடுகின்றனர்.அப்படி இருக்கும் போது, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, போலீஸ் வாகனங்களை, எப்படி பயன்படுத்த முடியும்! முதல்வரை மண்புழு என்கிறார். 'விவசாயிகளின் நண்பன் மண்புழு' என, முதல்வர் பதிலடி கொடுத்ததும், விஷப்புழு என, ஸ்டாலின் மாற்றி பேசுகிறார். இப்படி வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என, ஸ்டாலின் பேசுவதை, மக்கள் ரசிக்க வில்லை; வெறுக்கின்றனர்.பிரசாரத்தின் போது ஜெயலலிதா, வாக்காளர்களிடம், 'செய்வீர்களா... செய்வீர்களா...' எனக்கேட்டு, அவர்களின் பதிலை பெறுவார். அதே பாணியை, ஸ்டாலின் காப்பி அடித்து பேசுகிறார். சுதந்திர தினத்திற்கும், குடியரசு தினத்திற்கும் வித்தியாசம் தெரியாமல், தேதியை மாற்றி சொல்கிறார்.அனிதாவை, சரிதா என்கிறார். தற்போது, போலீஸ் துறையினர் வாகனங்களில் பணம் எடுத்து செல்லப்படுகிறது என, பேசுகிறார். அவர் உளறாமல் பேசுவதற்காக, பிரத்யேகமாக ஆசிரியரை நியமித்து, பாடம் கற்பிக்க வேண்டும்.நிர்மலா அருள்பிரகாஷ்,மாநில துணைச்செயலர், இலக்கிய அணி, தலைமை நிலைய பேச்சாளர், அ.தி.மு.க.,

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், ஆளுங்கட்சியினர், பணப்பட்டுவாடா புகாரில் சிக்கினர். இடைத்தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. மீண்டும், இடைத்தேர்தல் நடந்தது. பணப் பட்டுவாடாவை தடுக்க, தேர்தல் ஆணையம், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுங்கட்சியினரின், ஒரு வாகனம் கூட பறிமுதல் செய்யப்படவில்லை.ஆர்.கே.நகரில், 89 கோடி ரூபாய் வரை, பணப்பட்டுவாடா செய்யப்பட்டதில், முதல்வரின் பங்களிப்பு, 13 கோடி ரூபாய் என தெரியவந்தும், எந்த நடவடிக்கையையும், தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. இது, தேர்தல் ஆணையத்தின் பாராமுகத்தை காட்டுகிறது.தற்போதைய தேர்தலிலும், சமீபத்திய வாகன சோதனைகளில், இதுவரை இல்லாத அளவில், 140 கோடி ரூபாய்க்கு மேல், பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சோதனையில், அ.தி.மு.க., பிரமுகர் ஒருவர் சிக்கினார் என்ற தகவல் எதுவும் இல்லை.இதிலிருந்து, ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சியாகவே, தேர்தல் ஆணையம் செயல்படுவது, அப்பட்டமாக தெரிய வந்துள்ளது.நடுநிலையாக செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம், ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது. போலீஸ் வாகனங்களில், பணம் எடுத்து செல்லப்படுகிறது என்ற நம்பகமான தகவல், சில போலீஸ் அதிகாரிகளிடமிருந்து தான் வந்திருக்கிறது.எனவே, பணம் எடுத்து செல்லப்படும் வாகனங்களை, தி.மு.க.,வினரும், கூட்டணி கட்சியினரும் கண்டுபிடித்து, பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவர்.தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சட்டரீதியாக, நாங்கள் எடுக்கப் போகும் அடுத்தகட்ட நடவடிக்கை, ஆளுங்கட்சியினரை உறங்க விடாது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கை, கடைசிப்புள்ளி அளவில் எங்களுக்கு இருக்கிறது.கடந்த, 2014ல் நடந்த, லோக்சபா தேர்தல், 2016ல் நடந்த, சட்டசபை தேர்தலில் ஆம்புலன்ஸ் வேன்கள், கன்டெய்னர்களில் பணம் கடத்தப்பட்டு, பட்டுவாடா நடந்தது என்ற தகவல் வெளியானது.அப்போது, அதை கண்காணித்து முறியடிக்க, நாங்கள் தவறி விட்டோம். இந்த முறை, தி.மு.க., கூட்டணி கட்சியினர் அனைவரும், இரவும், பகலும் கண்காணித்து, முறியடித்து காட்டுவோம்.வழக்கறிஞர் சரவணன்,செய்தி தொடர்பாளர், தி.மு.க.,வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)