4 தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க., வேட்பாளர்கள் யார்?

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை, ஓரிரு நாளில், தி.மு.க., தலைமை அறிவிக்க உள்ளது.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம், 19ம் தேதி நடக்கிறது. இதற்கான, அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

திருப்பரங்குன்றம் தொகுதியில், ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., மருத்துவ அணியின், மாநில துணைத் தலைவர், டாக்டர் சரவணன், 70 ஆயிரம் ஓட்டுகள் பெற்றிருந்தார். மறைந்த, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., - ஏ.கே.போஸுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரும் படிவத்தில், ஜெயலலிதா கைரேகை சந்தேகத்துக்குரியது என, உயர் நீதிமன்றத்தில், டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவருக்கு, மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கலாம்.

அரவக்குறிச்சியில், தி.மு.க., வேட்பாளர், கே.சி.பழனிசாமியை எதிர்த்து, அ.தி.மு.க., வேட்பாளர், செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டதால், அவரது, எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்டது. அ.ம.மு.க., மாவட்ட செயலராக பணியாற்றிய, செந்தில் பாலாஜி, தற்போது, தி.மு.க.,வில் இணைந்து விட்டார். எனவே, அவர் மீண்டும் போட்டியிட, தி.மு.க., வாய்ப்பு வழங்கவுள்ளதாக, சமீபத்திய பிரசாரத்தில், கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவித்தார்.

சூலுார் தொகுதியில், கடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளர், மனோகரன், மறைந்த, எம்.எல்.ஏ., கனகராஜிடம், 36 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். காங்கிரசின், 41 வேட்பாளர்களில், அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தவர், மனோகரன். எனவே, இந்த இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு, அத்தொகுதியை ஒதுக்க வாய்ப்பு இல்லை. தி.மு.க., பிரமுகர்கள், ராஜேந்திரன், மன்னவன், தளபதி முருகேசன் ஆகிய, மூவரில் ஒருவருக்கு, 'சீட்' கிடைக்க வாய்ப்புள்ளது.

அதேபோல, ஒட்டப்பிடாரம் தொகுதியில், கடந்த பொதுத் தேர்தலில், தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த, புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில், தென்காசி லோக்சபா தொகுதியில் போட்டியிடுகிறார். எனவே, தி.மு.க., வேட்பாளராக, ஒட்டப்பிடாரம் ஒன்றிய, தி.மு.க., செயலர், சண்முகய்யாவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
நான்கு தொகுதி வேட்பாளர்கள் தேர்வு குறித்து, தி.மு.க., தலைவர், ஸ்டாலின், நேற்று திருநெல்வேலியில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்; ஓரிரு நாளில், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

- நமது நிருபர் -வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)