எதிர்பார்த்தது நிறைய; கிடைத்தது குறைய!

எத்தனை படங்கள் வேண்டுமானாலும் வரலாம்; ரஜினி படம் வருகிறதென்றால், அதற்கான மவுசே தனி தான். தேர்தல் அரசியலில், அப்படியொரு எதிர்பார்ப்பை தான் ஏற்படுத்தியது, பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கை.காங்கிரசின் தேர்தல் அறிக்கை, ஏற்கனவே மக்களின் கற்பனையைக் கவர்வதற்கு முயற்சி செய்கிறது. இந்நிலையில், அதற்கு, 'கவுன்டர்' கொடுக்கும் விதத்தில், 'சூப்பர் ஸ்டாராக' பா.ஜ., தேர்தல் அறிக்கை இருக்கும் என்ற, நம்பிக்கை இருந்தது.மோடி, அமித் ஷா மற்றும் ராஜ்நாத் சிங் ஆகியோர் சேர்ந்து வெளியிட்ட அறிக்கையைப் படிக்க ஆரம்பித்ததுமே, ஆயாசமே தலைதுாக்கியது.
எனக்குத் தான் பார்வைக் குறைபாடோ என்ற பயத்தில், மீண்டும் ஒருமுறை அறிக்கையை படித்தேன்; விமர்சனங்களும் கேள்விகளுமே தலைதுாக்கின.உதாரணமாக, ராணுவ வீரர்களின் நலனில் அக்கறை என்ற பகுதி. இதில், ராணுவ வீரர்கள் ஓய்வு பெறுவதற்கு மூன்றாண்டு களுக்கு முன்பிருந்தே, அவர்களுடைய ஓய்வுக்குப் பின்னான வேலை என்ன; அதற்குத் தகுதிப்படுத்திக் கொள்ளும் திறன் மேம்பாட்டுப் பயிற்சி என்ன என்பதை, திட்டமிட்டுக் கொள்ளலாம். அதற்கு, அரசாங்கம் உதவி செய்யும் என்று, தேர்தல் அறிக்கை சொல்கிறது.உண்மையில், பிரச்னையே வேறு. எப்படி ஒரு வேலை, ஒரு ஓய்வூதியத் திட்டத்துக்காக, ராணுவ வீரர்கள் போராடினரோ, அதேபோல், அவர்கள் இன்னொரு விஷயத்துக்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
அதற்கு, 'நான் பங்கஷனல் அப்க்ரடேஷன்' என்று பெயர். அதாவது, ஒரு 'பேட்ஜ்'சில் சேர்ந்த ராணுவ வீரர்களில், பத்தாண்டுகளுக்குப் பின், ஒரு சிலருக்குத் தான் பதவி உயர்வு கிடைக்கும்; பிறருக்குக் கிடைக்காது. அந்தச் சமயத்தில், அந்த பேட்சில் உள்ள இதரர்களுக்கு, அதே அளவுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும்.என்ன லாபம்?இது, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ். உள்பட, பல்வேறு மத்திய அரசு பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டு விட்டது. இதே நடைமுறையை, ராணுவ வீரர்களுக்கு மட்டும் மறுத்து வருகிறது, அரசாங்கம். அதை வழங்குவற்கு உறுதி சொல்லாமல், அவர்களுடைய எதிர்காலத்துக்கு வழியேற்படுத்துவேன் என்பது, என்ன உறுதிமொழி?பதவி உயர்வு இல்லை என்றாலும், சம்பள உயர்வு இருக்குமானால், இவர்களுக்கு ஓய்வூதியப் பலன்களும், இதர சலுகைகளும் கூடுதலாக கிடைக்குமே?வரும், 2022க்குள், குடிசைகளில் உள்ள அனைவருக்கும், வீடுகள் கட்டித் தரப்படும் என்கிறது, தேர்தல் அறிக்கை. சமீபத்திய அறிக்கையின் படி, இந்தியாவில், 42 சதவீத பேர், குடிசைகளில் வசிக்கின்றனர். இதில், கிராமங்களிலும், நகரத்தில் விளம்புநிலையில் வசிப்போரும் அதிகம்.முதலில், இது சாத்தியமே இல்லை. இதன் எண்ணிக்கையும், நில விஸ்தீரணமும் எங்கே இருந்து வரப் போகிறது; இதற்கான தொகையை, எங்கிருந்து கொண்டு வருவீர்கள்; சென்னை நகர ஏழைகளை, ஏற்கனவே, கண்ணகி நகர் மாதிரியான பகுதிகளில் குடிவைத்து, என்ன பலனைக் கண்டோம்; மேன்மேலும், கண்ணகி நகர்களை உருவாக்குவதில், யாருக்கு என்ன லாபம்?தொழிற்சாலைகள் அமைக்கப்படும்போது, குழு குழுவாக அமைப்போம்.
ஏற்கனவே, குழுக்களாக இருக்கும் இடங்களில் இருந்து, கொள்முதல் அதிகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கிறது, தேர்தல் அறிக்கை. இதன் பின்னே உள்ள அபாயம் தான், என்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஏற்கத்தக்கதல்லஉதாரணமாக, பட்டாசுத் தொழில், அச்சுத் தொழில், சைக்கிள் உற்பத்தி, வைரம் இழைத்தல் போன்ற தொழில்கள், ஒருசில குறிப்பிட்ட பகுதிகளைச் சுற்றி உருவாகியுள்ளன. அவற்றில், ஒருசில குறிப்பிட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்களே, கோலோச்சி வருகின்றனர்.இங்கே தான் ஏராளமான சமூக ஏற்றத்தாழ்வு கள் நிலவுகின்றன. ஒருசில சமுதாயங்களுக்குள், ஒரு சில தொழில்கள் சுருங்கிப்போவது என்பது, நமது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. ஒரு காலத்தில், இயற்கையாக, இத்தகைய குழுக்கள் உருவாயின என்பது ஏற்கத்தக்கது; வரலாற்றை மாற்ற முடியாது. ஆனால், இனிமேலும், அப்படிப்பட்ட குழுக்களை உருவாக்க, கட்சி முனைப்பு காட்டும் என்று, தேர்தல் அறிக்கையில் தெரிவிப்பது, ஏற்கத்தக்க தல்ல.மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், சட்டம், பொறியியல், அறிவியல், நிர்வாக கல்லுாரிகளில், குறைந்தபட்சம், 50 சதவீத இடங்கள், கூடுதலாக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கிறது, பா.ஜ., அறிக்கை. முதலில், நாடெங்கும் இருக்கும் ஆசிரியர் பணியிடங்கள், இன்னும் நிரப்பப்படாமல் உள்ளன.
பல தேசிய கல்வியகங்களிலேயே, பகுதிநேர ஆசிரியர்கள் தான் பாடங்கள் எடுக்கின்றனர். இதில், இடங்களை அதிகப்படுத்துவதன் வாயிலாக, கல்வி பரவலாகாது; நீர்த்துப் போகவே செய்யும்.இதுபோன்ற உயர் கல்வியில், தனியார் கல்லுாரிகளை அனுமதிப்பதும், அவர்களுடைய தரத்தை மட்டும், கண்காணிக்கும் இடத்தில் அரசாங்கம் இருப்பது தான் புத்திசாலித்தனமே தவிர, நானே இடங்களை அதிகப்படுத்துவேன் என்றால், அதனால் ஏற்படக்கூடிய கூடுதல் செலவுக்கு, எங்கிருந்து பணம் வரும்?'டிஜிட்டல்' முறைசிங்கப்பூர், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில், ஒரே இடத்தில் படித்துக்கொண்டு, இரண்டு வேறு வேறு நாடுகளில், 'டுவல் டிகிரி' என்னும் இணை பட்டங்களை பெறும் வசதி இருக்கிறது.
இங்கே அப்படிப்பட்ட சிந்தனைகள்கூட இல்லையே, ஏன்?மனத்தைக் கவரும் ஒருசில திட்டங்கள் உண்டு. விவசாய விளைபொருட்களைச் சேமித்து வைக்க, கிராமங்கள் தோறும் கிடங்குகள்; நில ஆவணங்கள் அனைத்தும், 'டிஜிட்டல்' முறையில் பதிவு செய்வது; நாடெங்கும் பொருந்தக்கூடிய, ஒரே வாக்காளர் பட்டியல் உருவாக்குவது.மாணவர்களிடையே படைப்பாளுமையை மேம்படுத்த, ஓரிடத்தில் அத்தகைய திறமையாளர்களை ஒருங்கிணைத்து, அவர்களுக்குப் பயிற்சி வழங்குவது; அறிவியல், தொழில்நுட்ப தகவல்களை, ஆங்கிலத்தில் இருந்து, இந்திய மொழிகளுக்கு மாற்றம் செய்ய திட்டம், நடைமுறைக்கு வந்தால், நிச்சயம் பயன் தரும்.தேர்தல் அறிக்கை மொத்தத்திலும், 'வேலைவாய்ப்பு' என்ற சொல், மூன்றே மூன்று இடங்களில் மட்டுமே இடம்பெற்றிருப்பது, தற்செயலா என்று தெரியவில்லை.உண்மையில், தேர்தல் அறிக்கைக்கு வெளியே தெரிவிக்கப்பட்ட விஷயங்கள் கூட, இதற்குள் இடம்பெறவில்லை என்பது தான் ஆச்சரியம். நேற்று பேசிய பிரதமர், 'நாடெங்கும் தொலைபேசி அழைப்புகள் இலவசமாகும்' என்று தெரிவித்து இருந்தார்.
அதெல்லாம் திட்டமாகக் கூட, இதில் இடம்பெறவில்லை.அடுத்த ஐந்து ஆண்டு களில், உலககெங்கும் ஏற்படப் போகும் மாற்றங்களைப் பற்றிய துளி சிந்தனையும், இதில் பிரதிபலிக்கவில்லை என்பது இருக்கட்டும், அவர்களுடைய, 'சங் பரிவார்' அமைப்புகளைத் திருப்திப்படுத்தும் அம்சங்கள் கூட, அதிகம் இடம்பெறவில்லை.உண்மையில், இந்தத் தேர்தல் அறிக்கையைக் குற்றம் சொல்லிப் பிரயோஜனமில்லை. ராஜ்நாத் சிங் சொல்ல வேண்டியதையெல்லாம், ஏற்கனவே இடைக்கால பட்ஜெட்டில், பியுஷ் கோயல் சொல்லி விட்டார். வருமான வரி விதிப்பு முதற்கொண்டு, முக்கிய அறிவிப்புகள் அங்கே இடம்பெற்று விட்டதாலோ என்னவோ, இந்தத் தேர்தல் அறிக்கை, 'சப்'பென்று இருக்கிறது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)