தளி தொகுதியில் தள்ளாடும், அ.தி.மு.க., கூட்டணி

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, தளி சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு, 20.9 சதவீத ஓட்டு வங்கி மட்டுமே உள்ளது.

ஆனால், கம்யூ., - தி.மு.க.,வுக்கு, 75.32 சதவீத ஓட்டு வங்கி உள்ளதால், அ.தி.மு.க., வேட்பாளர் முனுசாமிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், தளி சட்டசபை இடம் பெற்றுள்ளது. மலை கிராமங்கள் அதிகமுள்ள இந்த தொகுதியில், அ.தி.மு.க., வளர்ச்சி என்பது, பெரிய அளவில் இல்லை என்றே சொல்லலாம். அதற்கு, 2016 சட்டசபை தேர்தலையே உதாரணமாக கூறலாம்.

அந்த தேர்தலில் மொத்தம், 1 லட்சத்து, 89 ஆயிரத்து, 350 ஓட்டுகள் பதிவாகி இருந்தன. அதில், அ.தி.மு.க., வேட்பாளர் நாகேஷ், 31 ஆயிரத்து, 415 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இது, மொத்தம் பதிவான ஓட்டுகளில், 16.59 சதவீதமாகும்.தற்போது, அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள, பா.ம.க.,வின் அருண்ராஜனுக்கு, 5,253 ஓட்டுகளும், பா.ஜ., வேட்பாளர் ராமச்சந்திரனுக்கு, 2,908 ஓட்டுகளும் கிடைத்தன.

மொத்தமாக பார்த்தால், அ.தி.மு.க.,- பா.ம.க., - பா.ஜ.,வுக்கு பதிவான ஓட்டு எண்ணிக்கை, 20.9 சதவீதம் தான்.ஆனால், தி.மு.க., வேட்பாளர் பிரகாஷ், 39.31 சதவீத ஓட்டுகளும், இந்திய கம்யூ., வேட்பாளர் ராமச்சந்திரன், 36.01 சதவீத ஓட்டுகளும் பெற்றனர்.தி.மு.க., மற்றும் கம்யூ., கட்சிகள் சேர்ந்து, தற்போது லோக்சபா தேர்தலை சந்திப்பதால், அந்த இரு கட்சிகளும் பெற்ற, 75.32 சதவீத ஓட்டுகள், தற்போது, லோக்சபா தேர்தலில், காங்., சார்பில் போட்டியிடும் செல்லக்குமாருக்கு கிடைக்கலாம்.

கடந்த சட்டசபை தேர்தலில், கம்யூ., கூட்டணியில், தே.மு.தி.க., இருந்தது. அது, தற்போது, அ.தி.மு.க.,வை ஆதரிக்கிறது.அக்கட்சிக்கு அதிகபட்சம், தளி தொகுதியில், 2 சதவீத ஓட்டுகள் இருந்தால் பெரிய விஷயம்.கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., - பா.ம.க.,- பா.ஜ., மொத்தமாக பெற்ற, 20.9 சதவீத ஓட்டுகள் மற்றும் தே.மு.தி.க., வசமுள்ள, 2 சதவீத ஓட்டுகள் மட்டுமே, அ.தி.மு.க., வேட்பாளர் முனுசாமிக்கு உள்ளது.

இதனால், தளி தொகுதி தவிர, மற்ற ஐந்து சட்டசபை தொகுதிகளில், அதிக ஓட்டுகளை அள்ளினால் மட்டுமே, முனுசாமி வெற்றி பெற முடியும் என்பதால், மற்ற தொகுதிகளில், .தி.மு.க.,வினர் தீவிர களப்பணியாற்றி வருகின்றனர்.

ஒதுங்கும் அ.ம.மு.க., வேட்பாளர்

கிருஷ்ணகிரி லோக்சபா தொகுதியில், அ.ம.மு.க., சார்பில், கணேஷ்குமார் என்பவர் போட்டியிடுகிறார். இவர், கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில், வேட்புமனு தாக்கல் செய்ய, 100க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்தது, மற்ற அரசியல் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தினகரன் பிரசாரத்தில் ஈடுபட்ட போது, சொந்த செலவில் வாகனங்கள் வைத்து, பொதுமக்களை அழைத்து வந்து, வேட்பாளர் பலத்தை காட்டினார். 'இந்த கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, தினகரனிடம் இருந்து கோடிக்கணக்கில் பணம் தரப்படுகிறது' என, பரவலாக பேசப்பட்டது.ஆனால், தினகரன் பிரசாரம் முடித்து போனதும், தேர்தல் செலவுக்கு, கட்சியில் இருந்து பணம் வராத நிலையில், இதற்கு மேலும் பிரசாரம் செய்ய வேண்டாம் என, வேட்பாளர் முடிவெடுத்துள்ளதாக, அவருக்கு நெருங்கிய வட்டாரங்களில் இருந்து, தகவல் வெளியாகி உள்ளது.

நாளுக்கு நாள், கட்சியினரின் எண்ணிக்கை குறைதபடி வருவதால், அ.ம.மு.க., வேட்பாளர், பெயரளவுக்கு மட்டுமே பிரசாரத்தில் ஈடுபடுகிறார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)