நிலவையும் பிடிப்பார் ராகுல்: அகாலி தளம்

காங்., தலைவர் ராகுல், வானத்தில் இருந்து நிலாவை பிடித்து தருவேன் என, வாக்குறுதி கொடுத்தாலும் ஆச்சரியப்பட முடியாது' என, சிரோன்மணி அகாலி தளம் கிண்டல் அடித்து உள்ளது.


லோக்சபா தேர்தலுக்கான, காங்கிரஸ் வாக்குறுதியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் வெளியிட்டு உள்ளார். அதில், அடுக்கடுக்கான, 'பளபள' அறிவிப்புகளை கொடுத்துள்ளார்.அதைப் படிக்கும் அனைத்து தரப்பினரும் காங்கிரசுக்கு ஓட்டளிக்க வேண்டும் என கருதி, பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து உள்ளார். அதன் மூலம், இந்த தேர்தலில் எப்படியும் ஆட்சியில் அமர்ந்து விட வேண்டும் என, அவர் திட்டமிட்டிருப்பது, தெளிவாக தெரிகிறது.


இந்த அறிவிப்புகளுக்கு, பா.ஜ., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சார்பில், எதிர்ப்புகளும், கண்டனங்களும், கேலி, கிண்டல்களும் துவங்கியுள்ளன.தேர்தல் அறிக்கையை வைத்து, பஞ்சாபில், சிரோன்மணி அகாலி தளம் - பா.ஜ., கூட்டணி, ஆம் ஆத்மி ஆகியன, காங்கிரசை மாறி மாறி விமர்சனம் செய்கின்றன. தேர்தல் அறிக்கை குறித்து, சிரோன்மணி அகாலி தள மூத்த துணை தலைவர், தலிஜித் சிங் சீமா, கடும் விமர்சனங்களை வைத்துள்ளார்.


அவர் கூறியிருப்பதாவது:மக்களை முட்டாளாக்கும் வகையில், தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்துள்ளனர். எந்த வாக்குறுதிகளையும், காங்., கட்சியால் நிறைவேற்ற முடியாது. ஆனாலும், தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில், ராகுலும், காங்., தலைவர்களும், பல வியூகங்களை வகுத்துள்ளனர். அதன் பிரதிபலிப்பே, இந்த தேர்தல் அறிக்கை.


வானில் உள்ள நிலாவை கொண்டு வந்து, ஒவ்வொருவருக்கும் கொடுப்பேன் என, ராகுல் சொன்னாலும் ஆச்சரியப்பட முடியாது. அவ்வளவு பொய் மூட்டைகளை அவர் அவிழ்த்து விட்டு உள்ளார். ஏற்கனவே, பஞ்சாபில் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வதாக, ஆளும், காங்., வாக்குறுதி அளித்தது.பஞ்சாபில் சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதியையே, இரண்டு ஆண்டுகளாக, காங்., நிறைவேற்றவில்லை.


அவர்களின் ஆட்சியில், பஞ்சாபில் மட்டும், 900 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். பஞ்சாபில் கொடுத்த பொய் வாக்குறுதியை, தற்போது இந்தியா முழுமைக்கும், காங்., கொடுத்துள்ளது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.ஆம் ஆத்மியும் தன் பங்குக்கு, காங்கிரஸ் மற்றும் பா.ஜ., அகாலி தள கட்சிகளை வாட்டி எடுக்கின்றது.


பஞ்சாப் சட்டசபை ஆம் ஆத்மி தலைவரான, ஹர்பல் சிங் கூறியதாவது:கடந்த, 1964ல், லால் பகதுார் சாஸ்திரி பிரதமராக இருந்தபோது, 5,000 விவசாயிகளுக்கு, இலவச நிலம் வழங்கினார். அந்த நிலத்தை, காங்., மற்றும் பா.ஜ.,வில் உள்ள சிலர் அபகரித்து விட்டனர். நீதிமன்றத்துக்கு சென்று விவசாயிகள் போராடினர். தீர்ப்புக்காக, விவசாயிகள் காத்திருக்கின்றனர்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


இவற்றையெல்லாம் கேட்டும், கேட்காதது போல, பஞ்சாப், காங்., தலைவர்கள், ஆளுங்கட்சி செல்வாக்கை பயன்படுத்தி, மே, 19ல் நடக்கும் தேர்தலில், 13 லோக்சபா தொகுதிகளையும் கைப்பற்றி விட வேண்டும் என்ற கோணத்தில், தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

- ஸ்மிருதி சர்மா -சிறப்பு செய்தியாளர்'வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)