வாரிசு அரசியல் என்பது, நம் நாட்டில் தவிர்க்க முடியாத ஒன்றாக எப்போதோ மாறிவிட்டது. மாநில அளவிலான கட்சிகள் உதயமான பிறகு, கடந்த, 40 ஆண்டுகளில், இது மேலும் அதிகரித்துள்ளது.
தற்போது, கட்சியில் பல உறவினர்கள் இருந்தாலும், அதில் யாருக்கு முக்கியத்துவம் என்ற, உள்போட்டி நடந்துவருகிறது.தெலுங்கானாவில் ஆளும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியில், உள்போட்டி நடக்கிறது.
ரத்தம்
மகனா, மருமகனா என்ற போட்டியில், உறவை விட, சொந்த ரத்தமான மகனுக்கே முக்கியத்துவம் கொடுத்து வருகிறார், கட்சியின் தலைவரும், முதல்வருமான, சந்திரசேகர ராவ்.
தெலுங்கானா தனி மாநிலம் கோரி, 2001ல், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியை உருவாக்கினார், சந்திரசேகர ராவ். அப்போது, அவருக்கு வலது கரமாகவும், தளபதியாகவும் இருந்தவர், அவரின் அக்கா மகனான, டி. ஹரிஷ் ராவ், 46.கடந்த, 2004ல் தனி மாநிலம் உருவான போது நடந்த, சட்டசபை தேர்த லில் வென்று, ஆட்சி அமைத்தார், சந்திரசேகர ராவ். அந்த வெற்றியில், ஹரிஷ் ராவின் பங்கு முக்கியமாகும். அதற்கு பிரதிபலனாக, ஹரிஷ் ராவை, அமைச்சராக்கினார் சந்திரசேகர ராவ்.
அமெரிக்காவில் வேலை பார்த்து வந்தார், மகன், கே.டி. ராமா ராவ், 42; அவரை தெலுங்கானாவுக்கு வரச் சொல்லி, அமைச்சர் பதவி தந்தார்.ஒரு பக்கம், ராமா ராவை அரசியலில் வளர்த்து வந்த சந்திரசேகர ராவ், ஹரிஷ் ராவ் மூலம், கட்சியை வளர்த்து வந்தார்.
அபிமானம்
மிகவும் குறைந்த வயதில், ஆறு முறை, எம்.எல்.ஏ., என்ற பெருமையை பெற்றவர் ஹரிஷ். மாநிலத்தின் மூலை முடுக்கெல்லாம் கட்சியை வளர்த்தவர். தொண்டர்களின் அபிமானத்தை பெற்றவர்.ஒவ்வொரு கல்லாக எடுத்து வைத்து, மகனுக்கான ராஜ்ஜியத்தை உருவாக்கி வந்தார், சந்திர சேகர ராவ். கடந்தாண்டு இறுதியில் நடந்த சட்டசபை தேர்தலில் வென்று, மீண்டும் முதல்வரானார்.
அமைச்சரவையில், மகன் ராமா ராவ் மற்றும் உறவினரான ஹரிஷ் ராவை அவர் சேர்க்கவில்லை. இருவருக்கும், லோக்சபா தேர்தலில் முக்கிய பங்களிக்கப்படும்; அதனால் தான், அமைச்சராக்கப்படவில்லை என்று கூறப்பட்டது.இதற்கிடையே, கட்சியின் செயல் தலைவராக, மகன் ராமா ராவை நியமித்தார், சந்திரசேகர ராவ். அப்போதே, கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கான கட்சியின் முக்கிய பேச்சாளர்கள் பட்டியலை, கட்சி சமர்ப்பித்துள்ளது.
அதில், ஹரிஷ் ராவ் பெயர் இல்லை. ராமா ராவ் தலைமையில், தெரியாத பெயர்கள் எல்லாம், பட்டியலில் இடம்பெற்று உள்ளன.அதனால், ஹரிஷ் ராவ் ஓரங்கட்டப்படுகிறார் என்று பேச்சு எழுந்தது. இது, கட்சித் தொண்டர்கள் இடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி யது; ஆனால், யாரும்எதுவும் பேசவில்லை.இதற்கிடையே, ஹரிஷ் ராவின் பெயரையும் சேர்த்து, புதிய பட்டியலை, கட்சி சமர்ப்பித்துள்ளது.
முக்கியம்
லோக்சபா தேர்தலில், கட்சியின் வெற்றிக்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்பதால், இந்த முடிவு செய்யப்பட்டிருக்கலாம் என, கூறப்படுகிறது. ஒரு பக்கம், லோக்சபா தேர்தலில், தன் மகள் கவிதாவை இறக்கியுள்ளார். மறுபக்கம், இந்த தேர்தல் வெற்றி, தனக்கும், மகன் ராமா ராவுக்கும் மிகவும் முக்கியம் என்பதை உணர்ந்தே, இதை சந்திரசேகர ராவ் செய்திருப்பார் என, கூறப்படு கிறது.லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, ஹரிஷ் ராவ் முழுவதுமாக ஒதுக்கி வைக்கப்படலாம். அதனால், கட்சியில் பிளவு ஏற்படலாம் என, அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வாசகர் கருத்து