ராஜஸ்தான் மாநில கவர்னர் கல்யாண் சிங்கிற்கு சிக்கல்! தேர்தல் விதிமுறைகளை மீறியதால் ஜனாதிபதி அதிரடி

புதுடில்லி: 'பிரதமர் மோடிக்கு ஆதரவாக, ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங் பேசியது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திடம், தேர்தல் ஆணையம் புகார் அளித்தது. இதையடுத்து, கல்யாண் சிங்கிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பரிந்துரை செய்துள்ளார். இதனால், கல்யாண் சிங்கின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநில கவர்னராக பதவி வகிப்பவர், கல்யாண் சிங், 87. உத்தர பிரதேச மாநில முன்னாள் முதல்வரான இவர், பா.ஜ., வில், பல முக்கிய பொறுப்புகளையும் வகித்தவர்.

அதிருப்தி:லோக்சபா தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பின், உ.பி., மாநிலத்தில் உள்ள, தன் சொந்த ஊரான அலிகாருக்கு, கல்யாண் சிங், சமீபத்தில் சென்றிருந்தார். அலிகார் தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட, பா.ஜ., வேட்பாளருக்கு அதிருப்தி தெரிவித்து, அந்த கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அவர்களை தன் வீட்டுக்கு அழைத்து, கல்யாண் சிங் சமாதானப்படுத்தினார்.

அப்போது, கல்யாண் சிங் பேசுகையில், 'நாடு வளர்ச்சி பெற, பிரதமர் மோடி, மீண்டும் வெற்றி பெற வேண்டும்; அதுதான் நம் லட்சியம். அதற்காக தான், நாம் பணியாற்ற வேண்டும். கருத்து வேறுபாடுகளை மறந்து, மோடியை மீண்டும் பிரதமராக்க பாடுபடுவோம்' என்றார். கல்யாண் சிங்கின் இந்தப் பேச்சு, சமூக வலை தளங்களிலும், ஊடகங்களிலும் வெளியானது.

புகார்:கவர்னராக உள்ள ஒருவர், தேர்தலில், பிரதமரை தேர்வு செய்வது தொடர்பாக கருத்து தெரிவித்தது, சர்ச்சையை கிளப்பியது. காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தன.

இதையடுத்து, உ.பி., மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு, தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில், 'ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங், அலிகாரில் பேசிய விபரங்கள் குறித்த அறிக்கையை, ஆதாரங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டிருந்தது. அலிகாரில், கல்யாண் சிங் பேசியது தொடர்பான, 'வீடியோ, ஆடியோ' பதிவுகளை, மாநில தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைத்தார். அதை, ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், 'பிரதமர் மோடிக்கு ஆதரவாக, கல்யாண் சிங் பேசியது உண்மை' என, உறுதி செய்தது.

இதையடுத்து, 'அரசியல் அமைப்பு சட்டப் பதவியில் உள்ள ஒருவர், இவ்வாறு பேசுவது, தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல்' என, தெரிவித்த தேர்தல் ஆணையம், இது பற்றி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் அனுப்பியது. வெளிநாடு பயணத்தை முடித்து, நேற்று முன்தினம் டில்லி திரும்பிய, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கல்யாண் சிங் தொடர்பாக, தேர்தல் ஆணையம் அனுப்பிய புகார் கடிதத்தை, ஆய்வு செய்தார். அந்த கடிதத்தை, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, நேற்று அனுப்பி வைத்தார்.


நடவடிக்கை:மேலும், 'தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியது தொடர்பாக, கல்யாண் சிங் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உள்துறை அமைச்சகத்தை, ஜனாதிபதி கேட்டுக் கொண்டுள்ளார். 'அரசியல் சட்ட பதவிகளில் உள்ளவர்களை, தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்படுத்தாது; எனினும், அந்த பதவியில் உள்ளவர், தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதை ஏற்க முடியாது' என, ஜனாதிபதி தெரிவித்ததாக, அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இதையடுத்து, ராஜஸ்தான் கவர்னர் கல்யாண் சிங்கின் பதவிக்கு, சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அவர், தன் பதவியை, ராஜினாமா செய்வார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவது கவர்னர்: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில், 1993ல், கவர்னராக இருந்தவர், குல்ஷர் அகமது. அப்போது, மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தலில், காங்., சார்பில் போட்டியிட்ட, தன் மகனுக்கு ஆதரவாக, அவர் பிரசாரம் செய்தார். இதையடுத்து, தேர்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில், அவர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. தற்போது, கல்யாண் சிங் மீதும், அதே குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)