கதிர் ஆனந்த் தகுதி நீக்கம் செய்ய கோரி மனு

வேலுார்:கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய கோரி, சுயேச்சை வேட்பாளர் உட்பட இருவர், கலெக்டர் அலுவலகத்தில், மனு கொடுத்தனர்.


வேலுார் லோக்சபா தொகுதியில், தி.மு.க., சார்பில், துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் போட்டியிடுகிறார். சில நாட்களுக்கு முன், துரைமுருகன், கதிர் ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடு, கடைகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, பல கோடி ரூபாயை பறிமுதல் செய்தனர்.


விசாரணையில், வாக்காளர்களுக்கு கொடுக்க, அந்த பணம் கவரில் போடப்பட்டு, பதுங்கி வைத்திருந்தது தெரிந்தது. 'இதனால், வேட்பாளர் கதிர் ஆனந்தை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, எதிர்க்கட்சியினர் வலியுறுத்தினர்.


குடியாத்தம் அடுத்த, அக்கவாரம் மூங்கப்பட்டு கிராமத்தை சேர்ந்த, எம்.கே.கதிரவன், வேலுார் லோக்சபா தொகுதியில், சுயேச்சையாக போட்டியிடுகிறார். இவரும், குடியாத்தம், மீனுாரைச் சேர்ந்த வக்கீல் கோதண்டன் என்பவரும், நேற்று கலெக்டர் அலுவலகம் சென்று, தேர்தல் பிரிவு தாசில்தார் ஸ்ரீராமிடம், தனித்தனியாக மனு கொடுத்தனர்.அதில், கூறியிருப்பதாவது:


கடந்த இரண்டு நாட்களாக, தி.மு.க., பொருளாளர் துரைமுருகன் மகனும், வேலுார் லோக்சபா தொகுதி, தி.மு.க., வேட்பாளருமான கதிர்ஆனந்த் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி, கோடிக்கணக்கான பணத்தை பறிமுதல் செய்துள்ளனர். வார்டு, பூத் வாரியாக வழங்க, தயாரித்த பட்டியலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தேர்தல் விதிகளுக்கு மாறாக, பல கோடி ரூபாயை, வாக்காளர்களுக்கு வழங்க வைத்திருந்தார்.


இதன் மூலம் இவர், ஜனநாயக படுகொலை செய்துள்ளார். ஓட்டுக்கு பணம் கொடுப்பதும், வாங்குவதும் குற்றம். உரிய முறையில் விசாரணை நடத்தி, கதிர் ஆனந்த் மீது நடவடிக்கை எடுத்து, அவரை தகுதி நீக்கம் செய்தும், வரும் காலத்தில், அவர் தேர்தலில் நிரந்தரமாக நிற்க, தடை விதிக்க வேண்டும்.


மற்ற வேட்பாளர்களை பாதிக்காத வகையில், தேர்தலை நிறுத்தாமல் நடத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் தரப்பில் நுாற்றுக்கணக்கான மனுக்கள், தேர்தல் கமிஷனுக்கு, தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)