மண்ணின் மைந்தனா; தைலாபுரம் தவப் புதல்வனா!

வன்னியர் சமுதாய மக்கள் அதிகம் வசிக்கும் தர்மபுரி லோக்சபா தொகுதியில், அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., சார்பில், அன்புமணியும், தி.மு.க., சார்பில், டாக்டர் செந்தில்குமாரும், அ.ம.மு.க., சார்பில், முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் போட்டியிடுகின்றனர்.

அன்புமணி - பா.ம.க.,தற்போது, இத்தொகுதி, எம்.பி.,யாக உள்ள அன்புமணி, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம், தைலாபுரத்தில் வசிப்பவர். இவர், கடந்த லோக்சபா தேர்தலில், தான் பெற்ற ஓட்டுகள், கூட்டணியில் உள்ள, அ.தி.மு.க., - பா.ஜ., - தே.மு.தி.க.,வின் ஓட்டுகள் மட்டும் கிடைத்தால், வெற்றி பெற்று விடலாம் என்ற கனவோடு வலம் வருகிறார். ஆனால், இங்கு நடப்பதே வேறு.கூட்டணி தலைவர்கள், அன்புமணியை வேட்பாளராக ஏற்றுக் கொண்டாலும், உள்ளூர் தொண்டர்கள், அவரை ஏற்றுக் கொள்ளவில்லை

.
குறிப்பாக, கூட்டணி அமைவதற்கு சில வாரங்களுக்கு முன், அன்புமணி, உள்ளூர் அமைச்சர் அன்பழகனை, 'ஆண்மையற்றவர்' எனக் கூற, அதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர், 'எனக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்' என்றார்.


கூட்டணிக்கு பின், இதை மறந்து, இருவரும் ஒன்றாக பிரசாரத்துக்கு சென்றாலும், அ.தி.மு.க., வினர் மறக்கவில்லை. அவர்கள் மனதில், அன்புமணியின் பேச்சு,கனலாக கொதித்து கொண்டிருக்கிறது. இதே போல் தான், விஜயகாந்த் பற்றி, முன்பு, அன்புமணியும், ராமதாசும் பேசியவற்றை, தே.மு.தி.க.,வினரும் மறக்கவில்லை.


பலம்


தொகுதி நிதியை முழுமையாக பயன்படுத்தியது. வன்னியரான தனக்கு, சமுதாய ஓட்டுகள் கிடைத்து விடும் என்ற நம்பிக்கை. ராமதாஸ் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பிரசாரம் மூலம் வெற்றி பெற்று விடலாம் என, சுற்றி வருவது.

பலவீனம்


தர்மபுரி, நத்தம் காலனி சம்பவத்தை, அப்பகுதி மக்கள் மறக்காமல் இருப்பது. கடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, 'வெற்றி பெற்றால், தர்மபுரியில் வீடு எடுத்து தங்குவேன்' எனக் கூறிவிட்டு, கடைசி வரை செய்யாதது. தேர்தல் அறிவிப்பு வரும் முன், அவசர அவசரமாக, ரயில்வே அமைச்சரை அழைத்து வந்து, தர்மபுரி - மொரப்பூர் ரயில் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியது.

செந்தில்குமார் - தி.மு.க.,


தி.மு.க., வேட்பாளர் டாக்டர் செந்தில்குமார்; மண்ணின் மைந்தர். இவரும் வன்னியர் தான்.
இவரது குடும்பத்தினர், பரம்பரை பரம்பரையாக தர்மபுரியில் வசிக்கின்றனர். காமராஜரால், இவரது தாத்தா வடிவேல், எம்.எல்.ஏ., ஆக்கப்பட்டவர். அவர் மூலம் தான், தர்மபுரி மாவட்டம் உருவானது.வடிவேல், சேலம், பெங்களூரு ரயில் பாதை அமைக்கவும், தர்மபுரி ரயில்வே ஸ்டேஷன் அமைக்கவும், தர்மபுரியில் அரசு மருத்துவமனை அமையவும் முக்கிய காரணமாக
இருந்தார். இவரது பேரன் தான் தற்போது வேட்பாளர் என்பதால், மாவட்ட மக்களிடம் வரவேற்பு உள்ளது.


பலம்


இவரது குடும்பத்தார், வன்னியர் சமுதாயம் மட்டுமின்றி, பிற சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்கும் உயர் கல்வி படிக்க, நிதியுதவி செய்து வருகின்றனர். தொடர்ந்து, ஏழாண்டுகளாக வடிவேல் நினைவாக, கிராமப் புறங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தி, மக்கள் மத்தியில், செந்தில்குமார் நல்ல தொடர்பில் உள்ளார். தர்மபுரியில் எங்கு நல்லது, கெட்டது நடந்தாலும், இவரது குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் அங்கு சென்று வருவர்.


பலவீனம்


தர்மபுரி மாவட்ட, தி.மு.க., வில் நிலவும் உச்சக்கட்ட கோஷ்டி பூசல்.


பழனியப்பன் - அ.ம.மு.க.,


அ.ம.மு.க., வேட்பாளரான, முன்னாள் அமைச்சர் பழனியப்பன், கொங்கு வேளாள கவுண்டர் சமூகத்தை சேர்ந்தவர். கடந்த சட்டசபை தேர்தலில், பாப்பிரெட்டிபட்டி தொகுதி, எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு, தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்.தொகுதியில் உள்ள, 14 சதவீத கொங்கு வேளாள கவுண்டர் சமூக ஓட்டுகளையும், அ.தி.மு.க அதிருப்தி ஓட்டுகளையும் மட்டும் நம்பி, களத்தில் உள்ளார்.


தர்மபுரி லோக்சபா தொகுதியில் வெற்றி பெறப் போவது, தைலாபுரம் தவப் புதல்வன் அன்புமணியா, மண்ணின் மைந்தர் செந்தில்குமாரா என்ற கேள்வி தொகுதி முழுவதும் எதிரொலிக்கிறது.அதே சமயம், வெற்றி பெறா விட்டாலும், இரண்டாவது இடத்தை பிடிக்க வேண்டும் என்ற முனைப்போடு, பழனியப்பனும் போராடி வருகிறார். சமீபத்திய நிலவரப்படி, தர்மபுரியில், சூரியன் பிரகாசிக்கிறது. மாம்பழம் பழுக்காமல் உள்ளது.கடந்த வாரம், டில்லிக்கு, மத்திய உளவுத்துறை அனுப்பிய அறிக்கையிலும், இதே தகவல் இடம் பெற்றுஉள்ளது.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)