ஜெ., ஆட்சியில் யாருமே திருப்தியுடன் இல்லை - விளாசி தள்ளுகிறார் ஜி.கே.மணி

Tamilnadu Assembly Election News: ஜெ., ஆட்சியில் யாருமே திருப்தியுடன் இல்லை - விளாசி தள்ளுகிறார் ஜி.கே.மணி

''பா.ம.க., தலித் மக்களுக்கு எதிரானது அல்ல. சிலர், அப்படி ஒரு மாயையை ஏற்படுத்திஉள்ளனர்,'' என, பா.ம.க., தலைவர் ஜி.கே. மணி கூறினார்.

நமது நாளிதழுக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி:


லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இருந்த, பா.ம.க., சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுவது ஏன்? லோக்சபா தேர்தல் என்பது, நாடு முழுவதுக்குமான தேர்தல். சட்டசபை தேர்தல் என்பது, மாநிலத்துக்கான தேர்தல். தமிழகத்தில், பா.ம.க., ஒரு பலமான கட்சி. மாநிலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நினைப்பதால், பா.ம.க., சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது.


அன்புமணியை முதல்வர் வேட்பாளராக அறிவித்த பின், பா.ம.க., வளர்ச்சி எப்படி உள்ளது?

முதல்வர் வேட்பாளராக அறிவித்த பின், அன்புமணி மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து உள்ளார். ஒரு மாநில மாநாடு, எட்டு மண்டல மாநாடுகள், ஏழு மண்டல தலைநகரங்களில் பொது விவாதங்கள், 32 மாநிலங்களில் பொதுமக்களிடம் பிரசாரம் என, தீவிர கட்சி பணியாற்றி உள்ளார்.

மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு குறித்த அவரது பேச்சு, பா.ம.க.,வுக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் பெருத்த ஆதரவை ஏற்படுத்தி உள்ளது. இதனால், பா.ம.க., குறுகிய காலத்தில், அபார வளர்ச்சியை எட்டியுள்ளது.


வட மாவட்டங்களில், பா.ம.க., நிர்வாகிகள் பலருக்கும், 'சீட்' கிடைக்கவில்லை என்ற அதிருப்தி உள்ளதே?

தவறு, ஓரிருவருக்கு மட்டுமே, 'சீட்' கிடைக்கவில்லை. அவர்களுக்கும், கட்சி தலைமை எடுத்த முடிவு மீது துளியளவும் அதிருப்தி கிடையாது. சம்பந்தப்பட்ட தொகுதி நிர்வாகிகள் அனைவரின் ஆலோசனைப்படியே, வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.


தமிழக கட்சிகள், குடும்ப கட்சிகளாக உள்ளன என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளாரே? அது குறித்து உங்கள் கருத்து?

தமிழகத்தில் சில கட்சிகளில், சம்பந்தப்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் ஆர்வத்துடன் பணியாற்றுகின்றனர். அவர்களால் கட்சி வளர்கிறது. இதை யாரும் மறுக்க முடியாது. இதுபோன்ற வளர்ச்சியை எட்ட முடியாத கட்சிகள், தமிழக கட்சிகளை, குடும்ப கட்சிகள் என விமர்சிக்கின்றன. அதில் நியாயம் எதுவும் இல்லை.


தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து, 2006 தேர்தலில், 31 தொகுதிகளில் போட்டியிட்டு, 18ல் வெற்றி பெற்றீர்கள். 2011ல், 30 தொகுதிகளில் போட்டியிட்டு, மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றீர்கள்.

இந்நிலையில், 2016 தேர்தலில், 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும், பா.ம.க.,வுக்கு வெற்றி சாத்தியமா?

கூட்டணி அமைத்து, குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டதால், பா.ம.க.,வின் ஓட்டு வங்கி குறைவாக இருப்பது போல, பிற கட்சிகள் எண்ணுகின்றன. கூட்டணி அமைப்பதால், பா.ம.க.,வின் பலம் தெரியாமல் போய் விடுகிறது. தற்போது, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதால், பா.ம.க.,வின் தனிப்பட்ட ஓட்டு வங்கி பற்றி வெளியே தெரியவரும்.


ஜாதி கலப்பு திருமணத்துக்கு, பா.ம.க., எதிரான நிலையில் இருப்பது ஏன்?

காதல், கலப்பு திருமணத்துக்கு, பா.ம.க., எதிரானது அல்ல. இளம் வயதில் ஏற்படும் மன மாற்றத்தால் உருவாகும் பெரும்பாலான காதல் திருமணங்கள் நிலைப்பதில்லை. பெண்ணின் திருமண வயதை, 21 ஆக உயர்த்த வேண்டும். அப்போது, மனது ஒரு பக்குவத்துக்கு வந்து விடும். அதன்பின் செய்யும் திருமணங்கள் தான் நிலைக்கும் என்பது எங்கள் கருத்து. இதைத்தான், நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.


ஐந்து ஆண்டு, அ.தி.மு.க., ஆட்சி குறித்து உங்கள் கருத்து?

அ.தி.மு.க., ஆட்சியில் விவசாயம் வளர்ச்சியடைவில்லை. விவசாய வளர்ச்சி, 12.25 சதவீதமாக குறைந்து விட்டது. தொழில் வளர்ச்சி, 1.35 சதவீதம் குறைந்துள்ளது. விவசாய நிலப்பரப்பு குறைந்து விட்டது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வணிகர்கள், நெசவாளர்கள் என யாருமே, ஜெயலலிதா ஆட்சியில் திருப்திகரமாக இல்லை.


தென் மாவட்டங்களில், பா.ம.க., வளர்ச்சியடைந்து உள்ளதா? தென் மாவட்டங்களில் உங்கள் கட்சிக்கு கிளை நிர்வாகி கூட கிடையாது என கூறப்படுகிறதே?

நெல்லை, துாத்துக்குடி உட்பட தென் மாவட்டங்களில், பா.ம.க., அதிவேக வளர்ச்சியை எட்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு, மக்கள் மவுன புரட்சி நிகழ்த்த உள்ளனர். சட்டசபை தேர்தலில், தென் மாவட்டங்களின் சில தொகுதிகளிலும், பா.ம.க., வெற்றி பெறும்.


தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கு சாத்தியமா?

சாத்தியமே. மதுவிலக்கு அமல்படுத்தினால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்டவும், அதை விட, இரண்டு மடங்கு வருவாயை பெருக்கவும், எங்கள் தேர்தல் அறிக்கையில் மாற்று கொள்கையை அறிவித்துள்ளோம். தேர்தல் அறிக்கையை முழுமையாக படித்தால் புரியும்.


தேர்தல் அறிக்கையில் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை, அரசே செலுத்தும் என, பா.ம.க., கூறியுள்ளது. இது, தனியார் பள்ளிகளுக்கு சாதகமாக இருப்பது போல உள்ளதே?

தனியார் பள்ளிகளுக்கு, அரசு நிதி கிடையாது. இதனால், தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் என, கூறியுள்ளோம். அதே நேரம், அரசு பள்ளிகளை சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்துவோம். அரசு பள்ளிகளில் தேவையான ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களுக்கு தரமான கல்வி இலவசமாக வழங்கப்படும்.


தமிழக சட்டசபையில், 'லோக் ஆயுக்தா' சட்ட மசோதா நிறைவேற்றுவது சாத்தியமா?

இந்தியாவில் பல மாநிலங்கள், 'லோக் ஆயுக்தா' சட்ட மசோதாவை நடைமுறைபடுத்தியுள்ளன. தமிழகத்தில், 'லோக் ஆயுக்தா' எனப்படும் சக்தி வாய்ந்த, அதிகாரம் மிகுந்த நீதி அமைப்பு மூலமே ஊழலை முற்றிலும் ஒழிக்க முடியும். அதற்கான சட்ட மசோதாவை, தமிழக சட்டசபையில் நிறைவேற்ற நடவடிக்கை எடுப்போம்.


பா.ம.க., தேர்தல் அறிக்கையை, தி.மு.க., காப்பிஅடித்து விட்டதாக ராமதாஸ் கூறுகிறாரே?

கடந்த செப்டம்பர் மாதம், பா.ம.க., வரைவு தேர்தல் அறிக்கை வெளியிட்டது. அதிலுள்ள மது ஒழிப்பு, வேளாண்மைக்கு தனி பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. நாங்கள் சொன்ன விஷயங்களையே அவர்கள் சொல்லி உள்ளதால், தி.மு.க, காப்பியடித்துள்ளது என்று சொல்கிறோம்.


சென்னை தலைநகரமாக உள்ள நிலையில், தேர்தல் அறிக்கையில், இரண்டாவது தலைநகரமாக திருச்சி ஏன்?

சில முக்கிய துறைகளின் துணை அலுவலகங்கள் மட்டும், திருச்சியில் இயங்கும். தமிழகத்தின் நெற்களஞ்சியமாக டெல்டா மாவட்டங்கள் உள்ளன. இதனால், திருச்சியில் வேளாண் துறை துணை அலுவலகம் இயங்கினால், விவசாயிகள் பயனடைவர். இதுபோல, சில துறைகளின் துணை அலுவலகங்களை கொண்ட, இரண்டாவது தலைநகரமாக, திருச்சியை மாற்ற திட்டமிட்டோம். இதில் தவறில்லை.


இதுவரை எட்டு முறை, உங்களை பா.ம.க., தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். கட்சியில் தலைவர் பதவிக்கு தகுதியான நிர்வாகிகள் வேறு யாரும் இல்லையா?

கட்சி வளர்ச்சிக்காக இரவும், பகலும் உழைக்கும் ஒருவரே தலைவராக இருக்க வேண்டும் என்பது, டாக்டர் ராமதாசின் விருப்பம். கட்சியினர் விருப்பமும் அதுதான். நான் கட்சிக்காக இரவு, பகல் பாராது உழைப்பதால், கட்சியினர் அனைவரும் தொடர்ந்து தலைவராக இருக்க விரும்புகின்றனர்.


தேர்தல் பிரசாரத்தில், சினிமா நட்சத்திரங்களை ஈடுபடுத்துவீர்களா?

இந்த சட்டசபை தேர்தலில், சினிமா நட்சத்திரங்களை, எங்கள் கட்சி பிரசாரத்துக்கு ஈடுபடுத்தவில்லை.


மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் மோதல் நீடிப்பது, தமிழகத்தின் வளர்ச்சிக்கு நல்லதா?

மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் கொள்கை வேறுபாடு, கருத்து முரண்பாடு இருக்கலாம். ஆனால், மோதல் போக்கு இருக்கக் கூடாது.இது மாநில அரசின் வளர்ச்சியை பாதிக்கும். மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவதில், சிரமத்தை ஏற்படுத்தும். மோதல் நீடிப்பது, மாநில அரசை மட்டுமின்றி, அந்த மாநிலத்தால் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கும்.


பா.ம.க.,வில் வன்னியர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதாக கூறப்படுகிறதே?

நிச்சயமாக இல்லை. பா.ம.க.,வில் பிற சமூகத்தை சேர்ந்தவர்களும் நிர்வாகிகளாக உள்ளனர். பிற


சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும், சட்டசபை தேர்தலில் போட்டியிட, பா.ம.க., சார்பில், 'சீட்' வழங்கப்பட்டுள்ளது.

திராவிட கட்சிகள், மாறி மாறி ஆட்சி அமைப்பதால் தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளதா?

பிற மாநிலங்களை ஒப்பிடுகையில், தமிழகத்தில் கடந்த, 50 ஆண்டு கால திராவிட கட்சிகள் ஆட்சி, நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதில் மிகவும் பின்தங்கியுள்ளது. வேளாண்மையும் வளர்ச்சியடைவில்லை. தொழில், வேலைவாய்ப்பு இல்லை. வேலையில்லா திண்டாட்டம் மட்டுமே அதிகரித்துள்ளது.


உங்கள் மகன் தமிழ்குமரன் போட்டியிட வாய்ப்பு அளிக்காதது ஏன்?

பா.ம.க., தலைவர் என்ற முறையில், நான் தேர்தலில் போட்டியிடுவதால், என் மகனுக்கு,

'சீட்' வழங்கப்படவில்லை.


பா.ம.க., கூட்டணியில் சேர, பல்வேறு கட்சிகள் ரகசிய பேச்சு நடத்துவதாக அன்புமணி கூறினார். ஆனால், எந்த கட்சியும் கூட்டணி சேராதது ஏன்?

இரு மாதங்களுக்கு முன், சில கட்சிகள் கூட்டணிக்காக, ரகசிய பேச்சு நடத்தின. எனினும், பா.ம.க., தலைமையில் கூட்டணி அல்லது தனித்து போட்டி என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். அதனால், கூட்டணி அமையவில்லை.


மக்கள் நலக் கூட்டணியில், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் செயல்பாடு குறித்து உங்கள் கருத்து?

மக்கள் நலக் கூட்டணிக்கு, மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை என பரவலான கருத்து உள்ளது. விஜயகாந்த் குறித்து, பேசவே விரும்பவில்லை.


ஜெயலலிதா தேர்தல் பிரசார கூட்டத்தில், தொண்டர்கள் ஐந்து பேர் உயிரிழந்துள்ளனரே?

மனித உயிர் விலை மதிப்பில்லாதது. எக்காரணம் கொண்டும், உயிரிழப்புக்கு காரணமாக இருக்க கூடாது; இந்த நிகழ்வு ஏற்புடையது அல்ல.


எந்த நம்பிக்கையில் சட்டசபை தேர்தலில், பா.ம.க., தனித்து போட்டியிடுகிறது?

பா.ம.க., தமிழகத்தில் மண், மொழி, மக்கள் ஆகியவற்றை பாதுகாப்பதற்காக போராடுகிறது. தமிழக மக்களுக்கும், பா.ம.க.,வின் வளர்ச்சி திட்டங்கள், கொள்கைகள் மீது நம்பிக்கை உள்ளது. பா.ம.க.,வுக்கு, அனைத்து தரப்பு மக்கள் ஆதரவு உள்ளது. அந்த நம்பிக்கையில் தான் தனித்து போட்டியிடுகிறோம்.


திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில் தேசிய கட்சிகள் காலுான்ற முடியாதது ஏன்?

மாநில கட்சிகளுக்கே, அந்த மாநில மக்களின் பிரச்னை, சூழல், உணர்வுகள், தேவைகள் நன்கு தெரியும். அதற்கேற்ப திட்டங்களை, மாநில கட்சிகள் உருவாக்குகின்றன. அதிகாரம் பரவலாக்கல் என்ற அடிப்படையில், தேசிய கட்சிகளோ, பல்வேறு மாநிலங்களுக்கும் சேர்த்து, ஒரே முடிவை எடுக்கிறது.

இதற்கு சில மாநிலங்களில் வரவேற்பு இருப்பதில்லை. திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்த பின், தமிழகத்தில், தேசிய கட்சிகள் காலுான்ற முடியாததற்கு இதுவே காரணம்.


மேட்டூர் தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுவது ஏன்?

மேட்டூர் தொகுதியில், 2006ல் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். அப்போது, தொகுதி வளர்ச்சிக்காக, ஏராள மான திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். இதனால், தொகுதி மக்கள் ஆதரவு இருக்கும் என்பதால் மேட்டூர் தொகுதியை தேர்வு செய்து போட்டியிடுகிறேன்.


தேர்தலில் தலித் மக்களின் ஆதரவு, பா.ம.க.,வுக்கு கிடைக்குமா?

பா.ம.க., தலித் மக்களுக்கு எதிரானது அல்ல. மற்றவர்கள் அப்படி ஒரு மாயையை ஏற்படுத்திஉள்ளனர். பா.ம.க.,வுக்கு, தலித் மக்கள் ஆதரவு மட்டுமின்றி, இதர சமூக மக்களின் ஆதரவும் நிச்சயம் உண்டு.


பா.ம.க., மாநில தலைவராக இருக்கும் நிலையில், வேட்பாளராக களத்தில் இருப்பதில் சிரமம் உள்ளதா?

வேட்பாளராக இருப்பதால், தொகுதியில் இருந்து பிரசாரம் செய்கிறேன். மாநில தலைவர் என்பதால், 234 தொகுதி வேட்பாளர்களிடம் தொகுதி நிலவரம், சூழ்நிலை குறித்து மொபைல் போனில் பேசி விடுகிறேன். இதில், சிரமம் எதுவும் இல்லை.


தினமும் கட்சி பணிக்கு எவ்வளவு நேரம் ஒதுக்குகிறீர்கள்?

துாங்கும் நேரம் தவிர, இதர நேரம் முழுவதும், கட்சி பணி தான் செய்கிறேன். தினமும்,

துாங்குவதற்கு இரவு, 1:00 மணிக்கு மேல் ஆகிவிடும். தற்போது தேர்தல் என்பதால், துாங்குவதற்கு அதிகாலை, 2:00 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. எனினும், காலை, 5:00 மணிக்கு எழுந்து விடுவேன்.


மாநில தலைவர் என்ற முறையில், கட்சி நிர்வாகிகளுக்கு, அரசியல் குறித்து பயிற்சி அளிப்பீர்களா?

தமிழகத்தில், கட்சி நிர்வாகிகளுக்காகவும், கல்லுாரி மாணவர்களுக்காகவும், அரசியல் பயிலரங்கம் நடத் தும் ஒரே கட்சி பா.ம.க., மட்டுமே. பயிலரங் கத்தில் நிர்வாகிகளுக்கு தலைமை பண்புகள், ஆளுமை திறன், குழு இயக்கம் உள்ளிட்ட அரசியலுக்கு தேவையான பயிற்சிகள் அளிக்கப்படுகிறன.

நானும் பாடம் எடுப்பேன். கடந்த, ஐந்து ஆண்டுகளில் நிர்வாகிகள் மட்டுமின்றி, தமிழகத்தில், 20 ஆயிரம் படித்த இளம்பெண்கள், 15 ஆயிரம் மாணவர்களுக்கு பயிலரங்கத்தில், நான்கு நாள் அரசியல் குறித்த பயிற்சியை அளித்துள்ளோம்.


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016