ஜெ,வின் நிர்வாக சீர்கேடே அனைத்துக்கும் காரணம்

Tamilnadu Assembly Election News: ஜெ,வின் நிர்வாக சீர்கேடே அனைத்துக்கும் காரணம்

விலைவாசி உயர்வு, நாடு முழுவதும் கட்டுக்குள் இருக்கும் போது தமிழகத்தில் மட்டும் அதிகரித்து உள்ளதற்கு, தமிழக அரசின் நிர்வாக சீர்கேடே காரணம். ஆனால், மத்திய அரசின் மீது பழியை சுமத்திவிட்டு, தேர்தல் நேரத்தில் தப்பித்து விடலாம் என, முதல்வர் ஜெயலலிதா நினைக்கிறார்.


அதன் எதிரொலி தான், 'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மத்திய அரசு காரணம். பெட்ரோல், டீசல் விலை உயர்வால், விலைவாசி உயர்ந்து விட்டது' என, பொய்யான தகவலை சொல்கிறார். அப்படியானால், ஆவின் பால் விலை உயர்வு, மின் கட்டணம் உயர்வுகளுக்கு எல்லாம் யார் காரணம்?
பெட்ரோல், டீசல் விலை குறித்து, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். அவரது விளக்கத்தின் படி, 'ஒரு லிட்டர் கச்சா எண்ணெய், 13 ரூபாய்; சுத்திகரிப்பு செலவு, ஒன்பது ரூபாய்; எண்ணெய் நிறுவனங்களின் லாபம், இரண்டு ரூபாய்; கலால் வரி, 24 ரூபாய்; இந்த கலால் வரியில், தமிழக அரசின் பங்கு தொகை, ஒன்பது ரூபாய்; இதுதவிர, மதிப்பு கூட்டு வரியாக, 13 ரூபாயை, தமிழக அரசு விதிக்கிறது. இந்நிலையில், ஒரு லிட்டர் எண்ணெயில், 22 ரூபாய், தமிழக அரசுக்கு செல்கிறது' என்கிறார்.


மேலும், நிதி அமைச்சர் கூறுகையில், 'கச்சா எண்ணெய் விலை குறையும் போது, விலையை குறைத்தால், அது மக்களுக்கு போய் சேர்வது இல்லை. காரணம் பொருள்களின் விலையை, எந்த நிறுவனமும் குறைப்பது இல்லை. பெரு நிறுவனங்களும், அரசுமே விலை குறைப்பின் பயனை அடைகின்றன' என்றும் கூறி உள்ளார்.


கடந்த இரு ஆண்டுகளில், பெட்ரோல் விலை, லிட்டருக்கு, 20 ரூபாயும்; டீசல் விலை, 15 ரூபாயும் குறைந்துள்ளது. இதற்கு ஏற்ப, தமிழக அரசு பஸ் கட்டணத்தை குறைத்ததா? பஸ் கட்டணத்தை உயர்த்தும் போது, டீசல் விலை உயர்வை காரணம் காட்டிய தமிழக அரசு, டீசல் விலை குறைந்த அளவுக்கு ஏன், பஸ் கட்டணத்தை குறைக்கவில்லை?


மக்களின் மீது அக்கறை கொண்ட அரசாக இருந்தால், மாநில அரசுக்கு கிடைக்கும் கலால் வரியை குறைத்தோ, மதிப்பு கூட்டு வரியை ரத்து செய்தோ, பெட்ரோல், டீசல் விலையை குறைத்து இருக்கலாம். அதன் மூலம், விலைவாசி உயர்வையும் தடுத்திருக்கலாம். இதை எல்லாம் செய்யாத, தமிழக முதல்வர் ஜெயலலிதா, விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்கிறார்.


மத்திய அரசோடு எந்த திட்டத்துக்கும், தமிழக அரசு ஒத்துழைப்பது இல்லை. அதனால், தமிழக மக்களுக்குத் தான் இழப்பு ஏற்படுகிறது. குறிப்பாக, மின் துறையில், 'உதய்' திட்டத்தை ஏற்க, தமிழக அரசு முன்வரவில்லை.வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை மேற்கொண்டால், மின் கொள்முதல் மூலம் கிடைக்கும் கொள்ளைப் பணம் பறிபோய் விடும் என்ற ஆதங்கத்தால், 'உதய்' திட்டத்தை, தமிழக அரசு ஏற்கவில்லை.


இலவச கால்நடைகள் திட்டத்தை தமிழக அரசு, கடந்த ஐந்தாண்டுகளில் அமல்படுத்தியது. இத்திட்டத்தில், 'ஐந்து வயதுக்கு குறைந்த மாடுகளைத் தான் வாங்க வேண்டும். ஆந்திர மாநிலத்திலிருந்து வாங்கும் மாடுகளால், உரிய பலன் கிடைக்காது. எனவே, ஆந்திராவில் மாடு வாங்க வேண்டாம்' என, கால்நடைகளை கொள்முதல் செய்வதற்காக நியமிக்கப்பட்ட வழிகாட்டி குழு பரிந்துரைத்தது.


இப்பரிந்துரைகள் எதையும், தமிழக அரசு பின்பற்றவில்லை. வாங்கிய மாடுகளில், 60 சதவீத மாடுகள், 10 வயதுக்கு மேற்பட்டவை. அதுவும், ஆந்திராவில் வாங்கப்பட்டவை. இதைவிடக் கொடுமை, இத்திட்டம் தாழ்த்தப்பட்ட பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்திய திட்டம்.


ஆனால், குறிப்பிட்ட சில இடங்களில், தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு, இத்திட்டம் சென்றடைய வில்லை என, புகார் எழுந்தது.இப்புகாரை சரி செய்ய முயற்சிக்காத தமிழக அரசு, அப்பகுதிகளில் தாழ்த்தப்பட்ட பெண்களே இல்லை என, ஒரு அறிக்கையைக் கொடுத்ததன் மூலம் முறைகேடுகளுக்கு முழு துணையாக இருந்த அவலம் நடந்துள்ளது. இதை, ஆடிட்டர் ஜெனரலின் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டி உள்ளது. இதற்கு, இந்த அரசு என்ன பதில் சொல்லப் போகிறது.


வெள்ள நிவாரணத்துக்காக, தமிழக அரசுக்கு, 3,250 கோடி ரூபாயை, மத்திய அரசு, 2010ம் ஆண்டே ஒதுக்கியது. இதற்கான முதல் தவணையாக, 350 கோடி ரூபாயை, 2011ல் தமிழக அரசு பெற்றது. இந்தத் தொகையை செலவிட்டதற்கு உரிய கணக்கை, மத்திய அரசுக்கு கொடுத்தால் தான் ஒதுக்கப்பட்ட மீதித் தொகையைப் பெற முடியும். ஆனால், கணக்கை ஒப்படைக்கவில்லை. இதனால், தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட தொகை, இன்னும் முழுமையாகக் கிடைக்காமல் உள்ளது.


கணக்கை ஒப்படைக்க என்ன தயக்கம் என தெரியவில்லை. ஒருவேளை, கணக்கு கொடுக்க முடியாத நிலையில், அத்தொகை செலவிடப்பட்டதா என்பதற்கு தமிழக அரசு தான் பதில் சொல்ல வேண்டும். இப்படிப்பட்ட நிர்வாக சீர்கேடுகளால், தமிழக மக்களுக்கு கிடைக்க வேண்டிய பல்வேறு திட்டங்களையும், நிதி ஒதுக்கீடுகளையும் தடுத்த, அ.தி.மு.க., அரசு தான், விலைவாசி உயர்வுக்காக, மத்திய அரசின் மீது பழியைப் போட்டு, தேர்தல் நேர அரசியல் செய்கிறது.


நாராயணன் திருப்பதி

செய்தித் தொடர்பாளர், தமிழக பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016