அரசியலில் ராஜகுருக்கள் புதுசு அல்ல!

Tamilnadu Assembly Election News: அரசியலில் ராஜகுருக்கள் புதுசு அல்ல!

பேராயர் பிரகாஷ்இந்திய சுயாதீன திருச்சபைகள் தென் ஆப்பிரிக்கா தேசிய காங்கிரசின் தலைவராக இருந்து, நெல்சன் மண்டேலாவை விடுதலை செய்ய வேண்டும் என, போராடி வெற்றி பெற்ற, டெஸ்மண்ட் டூ டூ ஒரு பிஷப். கறுப்பர்களின் விடுதலைக்காக, அமெரிக்காவில் போராடி, சுட்டுக்

கொல்லப்பட்ட மார்ட்டின் லுாதர் கிங், ஒரு பாதிரியார்.


இவர்கள் எல்லாம் ஒரு மதத்தின் பிரதிநிதியாக இருந்தவர்களே. ஆனால், மக்கள், அவர்கள் சார்ந்த விடுதலை என்கிறபோது, நேரடியாக களத்தில் குதித்து போராடியவர்கள்.எனவே, மத குருமார்கள் எல்லாம் அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள் எனச் சொல்லி ஒதுக்கிவிட முடியாது. இந்தியாவில், மன்னர் ஆட்சி இருந்த போது, ராஜகுரு இல்லாமல் ஆட்சி நடந்தது இல்லை. மன்னருக்கு இணையான அதிகாரத்தை பெற்றவர்கள் ராஜகுருக்கள். அவர்கள் தான், ஆட்சியின் முக்கிய நிகழ்வுகளை நடத்தக் கூடியவர்கள்.

ராஜ குருவை கேட்காமல், மன்னர் எந்த முடிவையும் எடுக்க மாட்டார். ராஜகுருவாக இருப்பவர்கள் பெரும்பாலும், நல்லாட்சிக்கும், மக்களின் நல்வாழ்வுக்கும், மன்னருக்கு வழிகாட்டியாக விளங்கியவர்கள். மன்னரின் அமைச்சரவையில், மன்னருக்கு இணையான சிம்மாசனம், ராஜ

குருவுக்கும் அளிக்கப்பட்டது.


இங்கு, ஆன்மிகத்தோடு சமூக மேம்பாட்டுக்கும், ராஜகுருக்களின் பங்கு இருந்தது என்பது வரலாறு. மன்னர் ஆட்சி போய், மக்கள் ஆட்சி வந்ததும், ராஜகுரு என்ற பதவி நீக்கப்பட்டது. மன்னர் ஆட்சியில் இருந்தது போன்ற, ஒரு அதிகார அமைப்பாக, ராஜகுருக்கள் இல்லை.ஆனால், மக்களின் அன்றாட தேவைகளையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அறிந்த மத குருமார்கள், மக்களின் கோரிக்கையை அரசிடம் கொண்டு செல்கின்றனர். இதில், தவறு இருப்பதாகத் தெரியவில்லை.


மதகுருமார்கள் நேரடியாக அரசியல் பிரசாரங்களில் ஈடுபடுகின்றனர். 'ஆன்மிகம் தான், அவர்களின் பணி. அரசியல் ஆசை இருந்தால், ஆன்மிகப் பொறுப்பை விட்டு, அரசியலுக்கு வரட்டும்' எனச் சொல்கின்றனர்.அரசியல் பிரசாரம் என்பது, ஒரு நல்லதை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் பணி. மக்களுக்கு அரசியல் ரீதியான நல்வழி காட்டுவதும், மத குருமார்களின் பணிகளில் ஒன்று. எனவே, மத குருமார்கள் செய்யும் அரசியல் பிரசாரத்தை, கொச்சைப்படுத்த வேண்டிய அவசியமில்லை.


இறைவனுக்கு இணையாக, அரசியல் தலைவர்களை பாராட்டலாமா என்றும் கேட்கின்றனர். ஒரு அரசியல் தலைவர் பல்வேறு தியாகங்களை செய்து, தலைவர் என்ற இடத்தைப் பிடிக்கிறார். மக்களின் மனதே இறைவனின் மனது. அப்படிப்பட்ட மக்களின் மனதில், ஒரு தலைவர் இடம் பிடிக்கிறார் என்றால், அவரை பாராட்டுவது ஒன்றும் தவறில்லை. தனக்கு பிடித்த தலைவரை, ஒருவர் புகழ்வதும், பாராட்டுவதும் இயல்பே.


'ஆன்மிகவாதிகளை நாடியே, அரசியல் தலைவர்கள் சென்று, ஆசி பெற்றனர். இப்போது, அரசியல்வாதிகளை நாடி, ஆன்மிக தலைவர்கள் செல்கின்றனர்' என, விமர்சிக்கின்றனர். ஆன்மிகவாதியும் சரி; அரசியல்வாதியும் சரி, பிறந்ததும் திடுமென அப்பதவிகளுக்கு வந்து விடுவது இல்லை. இருவரும் கடுமையாக உழைத்து, பல்வேறு துன்பங்களை கடந்தே, அப்பதவிகளுக்கு வருகின்றனர்.


ஒரு மனிதன், எந்தப் பதவிக்கு வந்தாலும், அது அவன் உழைப்பின் மூலம் கிடைத்தது. அதற்காகவே, அவனுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது. அதேநேரத்தில், 'எந்த நிலைக்கு உயர்ந்தாலும், தன்னை தாழ்த்திக் கொள்பவன் உயர்கிறான். ஆனால், தன்னை எப்போதும் உயர்த்திக் கொள்பவன் தாழ்கிறான்' என்பது பைபிளின் வசனம். இந்த அடிப்படையில், மத குருமார் என, தன்னை உயர்த்திப் பிடித்துக் கொண்டு இருப்பதால் எந்தப் பயனும் இல்லை.


மத குருமாராக இருப்பவர், தன் சமூகத்துக்காக, தன் மக்களுக்காக, அரசை சந்தித்து, கோரிக்கையை முன்வைத்து, அதன்மூலம் கிடைக்கும் பலனை, மக்களுக்குப் பெற்றுத் தருகிறார். இது, அவருடைய கடமையும் ஆகும். இங்கு, யார் பெரியவர் என்பது முக்கியமல்ல. மக்களுக்கு கிடைக்கும் பலன் தான் முக்கியம். எனவே, அரசியல் தலைவர்களையும், அரசாங்கத்தில் இருப்பவர்களையும், மத குருமார்கள் சந்திப்பதில் தவறு ஏதும் இல்லை.


மக்களில் ஏழை, நடுத்தரம், பணக்காரன் என, பல தரப்பட்டோர் உள்ளனர். இவர்கள் அனைவரும், சந்திக்கும் ஒரு இடம் உள்ளது என்றால், அது இறை வழிபாட்டு தலங்களே. அங்கு இருக்கும் மத குருமார்களுக்கு, மக்களின் மத்தியில் உள்ள பல்வேறு பிரிவினரை நன்கு தெரியும். அவர்களின் நிலை பற்றியும் அறிந்திருப்பர்.ஆனால், அரசாட்சி நடத்துபவர்கள், இப்படிப்பட்ட பிரிவினர் ஒவ்வொருவரையும் சந்திக்கும் வாய்ப்பை தொடர்ந்து பெற முடியாது.


எனவே, மக்களின் நிலையை நன்கு அறிந்த மத குருமார்கள். அவர்கள் பற்றிய நிலையை, அரசுக்கு கொண்டு செல்கின்றனர். இதன்மூலம், அரசின் செயல்பாடுகளை, மக்களை நோக்கி திருப்புகின்றனர்.


அரசு என்பது, வெறும் பொருளாதாரம் சார்ந்த பிரச்னைகளை மட்டும் பார்ப்பது அல்ல. சமூக பிரச்னைகளையும் பார்க்க வேண்டும். அதற்கு, அனைத்து மதங்களைச் சேர்ந்த குருமார்களும் அவசியமே!

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016