காவி வேட்டி, அங்கி, குல்லாவை கழற்றிவிடுங்கள்!

Tamilnadu Assembly Election News: காவி வேட்டி, அங்கி, குல்லாவை கழற்றிவிடுங்கள்!

சன்னிதானமும் இந்திய நாட்டின் குடிமகனே. ஒரு வாக்காளன் என்ற முறையில் அவரால், அரசை ஒதுக்கிவிட்டு இருக்க முடியாது. எனவே, தனக்குள் மட்டும், ஒன்றை ஆதரிக்கணும்; இல்லை எதிர்க்கணும். இரண்டும் இல்லை என்றால்,

நடுநிலையாக இருக்கணும்.


ஆனால், நான் ஆதரிக்கிறேன் எனக் கூறி, 'ஒரு பெண்மணி இவ்வளவு துன்பங்கள், வழக்குகள், இடையூறுகளை சந்தித்தாலும், நல்ல முறையில் ஆட்சி செய்யறாங்க. அவங்களை ஆதரிக்க வேண்டியது, சன்னிதானத்தின் கடமையாக நினைக்கிறேன்' என்று, ஜெயலலிதாவுக்கு சான்றிதழ் கொடுத்து, அரசியல் பிரசாரத்தை செய்து வருகிறார், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர். இந்த நாட்டில், கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அதை நாங்கள் மறுக்கவில்லை.ஆன்மிக மறுமலர்ச்சி, தாய் சமய நெறி பரப்புதல், ஆலய குடமுழுக்கு செய்தல், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல், அவர்களுக்கு நல்வழி காட்டுதல் என்ற அடிப்படையிலேயே ஞானசம்பந்தர் சபை ஏற்படுத்தப்பட்டது.


அந்த ஆதீன பரம்பரையில் வந்த அருணகிரிநாதர் மட்டும், ஆன்மிக வேலை ஒருபுறம் இருந்தாலும், அரசியல் மீது அதிக நாட்டம் கொண்டவராக இருப்பது, வேதனை அளிப்பதோடு, தன்னிலையில் இருந்து தாழ்ந்து, பீடத்தின் பெருமையை குறைக்கும் வகையிலும் செயல்படுகிறார். ஒரு குறிப்பிட்ட கட்சியை மட்டும் ஆதரிப்பது, சரியான நிலையாகத் தெரியவில்லை. திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம், பேரூர் போன்ற தொன்மையான மடங்களைச் சேர்ந்த அதிபர்கள் எல்லாம், தமிழுக்கும், சமயத் தொண்டுக்கும், தாய் சமயம் திரும்புவதற்கு உதவுதல் போன்ற செயல்களுக்கே முன்னுரிமை தருகின்றனர். அரசியல் சாமியார்களாக மாறாமல், பீடத்தின் பெருமையையும் காப்பாற்றி வருகின்றனர்.


'துறவிக்கு வேந்தனும் துரும்பு' என்பார் வள்ளுவர். அரசை ஆள்பவர்களே துறவியை தரிசனம் செய்து, ஆலோசனை கேட்பர். ஆசீர்வாதம் செய்வதே துறவியரின் செயல். மதுரை ஆதீனமோ, அரசை ஆள்பவர்களை சந்தித்து ஆலோசனை கேட்பதும், அவர்களின் அன்பிற்கும், ஆசீர்வாதத்துக்கும் ஏங்குவதும் என இருக்கிறார்.


அரசியல் தலைவர்களின் வீடு தேடிச் சென்று வாழ்த்துவது, கிறிஸ்துமஸ் கேக் ஊட்டுவது, நோன்பு திறப்பது போன்ற நிகழ்ச்சிகளை, சாமியார்களும், பாதிரிமார்களும், முஸ்லிம் மத குருமார்களும் செய்வது, தமிழகத்தில் தான் நடக்கிறது. இதற்கு, அரசியல் தலைவர்களை குறை சொல்ல மாட்டேன்.அவர்கள், அவர்களது நிலையில் சரியாகத் தான் இருக்கின்றனர்.


ஆன்மிகத் தலைவர்களே, அரசியல் கட்சி பொதுக்கூட்டங்களில் பங்கேற்று, கட்சி பேச்சாளர்கள் போல, வேண்டாதவர்களை வேகாத வார்த்தைகளில் வறுத்தெடுக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால், ஹெலிகாப்டர் தளத்துக்கு அமைச்சர்கள் போல ஓடுவது, விமான தரிசனம் செய்வது போன்றவற்றையும் செய்கின்றனர்.ஒரு கட்டத்தில், வழக்கில் வென்றவரை வரவேற்க வாசலில் தவம் கிடப்பது; அரசியல் கூட்டணிக்கு தரகு வேலை செய்வது போன்ற தகுதி குறைந்த செயல்களில் ஈடுபட்டும் வருகின்றனர். இந்த வேலைகள், ஆன்மிக நெறியாளர்களையும், மடத்தின் பக்தர்களையும் அவமதிக்கிறது.


மீனாட்சி அம்மனை போற்றிப் பாட வேண்டிய வாயால், மீனாட்சி, காமாட்சி, அன்னபூரணி, மங்கையர்க்கரசி என, கரைவேட்டி கட்டிய அமைச்சர்கள் போல, காவி வேட்டி கட்டிய ஆதீனம் பேசுகிறார். அவரது நா கூசவில்லையா? இது தான் ஆதீனத்தின் பார்வையில், ஆன்மிக வேலையா?

ஒரு பெண் இவ்வளவு கஷ்டப்படுகிறார் என மதுரை ஆதீனம் ஏங்குகிறார். ஆனால், மது குடியால் மாங்கல்யம் இழந்து விதவைகளாக வாழும் பெண்கள், ஆதீனத்தின் கண்களில் படவில்லையா?

பாதிரியார் எஸ்றா சற்குணம், 'தி.மு.க., தலைவர் கருணாநிதியை, இயேசுபிரான் வடிவில் பார்க்கிறேன்' என்கிறார். இயேசுவின் மகளும், மருமகனும், பேரனும், பேத்தியும் எந்த ஊழல் வழக்கிலும் சிறை சென்றதாக, நான் படித்த வரை பைபிளில் இல்லை. மற்றொருவரோ, கருணாநிதியை இறை துாதர் என்கிறார்.


அற்புதங்கள் செய்திட்ட ஆண்டவன் புகழ் பரப்பும் வேலையை செய்யாமல், அரசியல் மற்றும் அதிகார வெற்றிக்காக, புகழுக்காக இறைவனை கேவலப்படுத்தும் வேலையை, எந்த மத சாமியார்களும் செய்ய வேண்டாம். உங்கள் அனைவருக்கும் அரசியல் ஆசை உள்ளது என்றால், காவியை, அங்கியை, குல்லாவை கழற்றி வைத்துவிட்டு, விரும்பிய கட்சியின் வேட்டியை கட்டி, அரசியல் பணி செய்யுங்கள். அதுதான் சரியாகவும் இருக்கும்.

நீங்கள் விரும்பும் கரை வேட்டியை வாங்கி அனுப்பவும், நான் தயாராக உள்ளேன். புனிதமான ஆன்மிக கங்கையோடு, கேவலமான அரசியல் சாக்கடையைக் கலந்து, துர்நாற்றம் வீசச் செய்து விடாதீர்கள்.'இறைவனே... இந்த அரசியல் சாமியார்களுக்கு நல்ல புத்தி கொடு!' என்று வேண்டுவதைத் தவிர, வேறு எந்த பிரார்த்தனையும், உன்னிடம் எனக்கு இல்லை.


ராம.ரவிகுமார்மாநில பொது செயலர், இந்து மக்கள் கட்சி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016