அவமானம் அரசியல் கட்சிகளுக்கே..

Tamilnadu Assembly Election News: அவமானம் அரசியல் கட்சிகளுக்கே..

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்தேர்தலுக்கு இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அதிகாரிகளை இடமாற்றம் செய்தால், தேர்தல் நேர்மையாக நடந்து விடுமா என, கேள்வி எழுப்பப்படுகிறது. ஒரு இடத்திலோ, ஒரு நபரிடமோ தவறு இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டால், அவரை அங்கிருந்து அகற்றிவிட்டு, தேர்தலை நடத்துவது தான் சரியான முடிவு.


இந்த நடவடிக்கையை, ஓட்டுப்பதிவுக்கு, முந்தைய இரவில் கூட எடுக்கலாம். இதை ஏதோ, ஒரு அலங்கார நடவடிக்கை என்று ஒதுக்கிவிட முடியாது. தேர்தல் ஆணையத்தைப் பொறுத்தவரை, நேர்மையான, அமைதியான தேர்தல் நடக்க வேண்டும். அதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமோ, அதை எல்லாம் எடுத்தாக வேண்டும்.

ஒரு இடத்திலிருந்து, ஒரு அதிகாரியை தேர்தல் ஆணையம் மாற்றுகிறது என்றால், காகிதத்தில் பெறப்படும் புகார்களை அடிப்படையாகக் கொண்டு மட்டும் செய்வதில்லை. அந்த இடத்தின் முதன்மை தேர்தல் அதிகாரியோடு, தீவிர ஆலோசனை நடத்தப்படும்.

சம்பந்தப்பட்ட அதிகாரியின் செயல்பாடு, அவரது நோக்கம் என்ன என்பது பற்றி எல்லாம் விசாரித்தே, தேர்தல் பணியிலிருந்து அந்த அதிகாரி விடுவிக்கப்படுகிறார். அவசர கோலத்திலோ, வெளியிலிருந்து வரும் அழுத்தங்கள் காரணமாகவோ, ஒரு அதிகாரி, தேர்தல் பணியிலிருந்து விடுவிக்கப்படுவது இல்லை.


அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் உறவு இருக்கிறது. அதனால், ஒரு அரசியல் கட்சிக்கு சார்பாக, அவர்கள் செயல்படுகின்றனர் என, ஒட்டுமொத்தமாக சொல்லிவிட முடியாது. ஒரு சில அதிகாரிகளிடம், பணி ஒழுக்கநெறி குறைவாக இருக்கலாம். அவர், ஒரு சார்பாக நடந்து கொள்ளலாம். அப்படிப்பட்டவர்கள் மீது, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கிறது.

ஒரு சில அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதாலேயே, அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக, பணி ஒழுக்கம் இல்லாதவர்கள்; அரசியல் சார்பு நிலையைக் கொண்டவர்கள் என சொல்லக்கூடாது. நேர்மையான, நடுநிலையான அதிகாரிகள் எண்ணிக்கையே, ஒட்டுமொத்த அதிகாரிகள் எண்ணிக்கையில் அதிகம்.


நேரடியாக, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்து பெறுபவர்கள் நேர்மையானவர்கள். மாநில அரசு அதிகாரியாக தேர்வு பெற்றபின், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்து பெறுபவர்கள், அரசியல் சார்புடையவர்கள் என, சொல்லிவிட முடியாது. எல்லா தரப்பிலும், நேர்மையானவர்கள் இருக்கின்றனர். ஒரு சில அரசியல் சார்பு உடையவர்களும் உள்ளனர்.எனவே, நேரடியான ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., பெற்ற அதிகாரிகளுக்கும், மாநில அரசு அதிகாரியாக இருந்து, ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அந்தஸ்து பெற்ற அதிகாரிகளுக்கும் இடையே பிரிவினையையோ, அவர்களின் செயல்திறனில் ஏற்றத் தாழ்வையோ ஏற்படுத்த முயற்சிப்பது, நிர்வாகத்துக்கு உகந்தது அல்ல.


தேர்தல் தொடர்பாக நடக்கும் முறைகேடுகள் மூலம், அரசியல் கட்சிகளின் பலவீனங்கள் தான் வெளிப்படுகின்றன. அவமானம், கட்சிகளுக்குத் தான். இதில், தேர்தல் ஆணையத்தின் செயலற்ற தன்மை எங்கும் இல்லை. தேர்தல் ஆணையம் தனக்கு உட்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஒரு இடத்தில் தேர்தல் முறைகேடுகள் மிக அதிக அளவில் இருக்கிறது என தெரியவந்தால், தேர்தல் ஆணையத்தின் அதிரடிப்படை அங்கு சென்று விசாரிக்கிறது. நிலைமை மோசம் என்றால், தேர்தலை ரத்து செய்து, மறு தேர்தலுக்கு உத்தரவிடுகிறது. நான், தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது, பீஹார் மாநிலத்தின் ஒரு தொகுதியில், இதுபோன்ற நடவடிக்கை எடுத்தோம்.


எந்த ஒழுங்கீனத்தையும் தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது. ஆனால் அரசியல் கட்சிகள், மிக எளிதாக தேர்தல் ஆணையத்தின் மீது பழி சுமத்துகின்றன. இப்படி செய்வது, அவற்றுக்கு எளிதானதும் கூட. தேர்தல் முடிவுகள் வரும் முன்பே, ஆணையத்தின் மீது பழி போடுவதன் மூலம், தேர்தலில் தோல்வி அடைந்தால், அதை ஒரு காரணமாக, அரசியல்வாதிகள் சொல்லி விடலாமே! இந்த அடிப்படையில் தான், தேர்தல் ஆணையத்தின் மீது, குற்றம் சொல்கின்றனரோ என தோன்றுகிறது.


தேர்தல் ஆணையம் நிரந்தர ஊழியர்களைக் கொண்டு இயங்கத் துவங்கினால், உள்ளூர் அதிகாரிகளின் தலையீடு இல்லாமல் இருக்கும் என, சொல்வது சாத்தியம் இல்லை. நிரந்தர ஊழியர்கள் எங்கிருந்து வருவர்? உத்தரபிரதேசத்தை சேர்ந்தவரை, தமிழகத்தில் நியமித்து, வாக்காளர் சேர்ப்பு, நீக்கத்தை எப்படி செய்ய முடியும்?


எனவே, நிரந்தர ஊழியர்களை நியமித்தால், தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படும் என்ற வாதத்தை ஏற்க முடியாது. தேர்தலில் தற்போது நிலவும் முறைகேடுகள், விதிமீறல்களை தடுத்து, நேர்மையான தேர்தலை நடத்த வேண்டுமானால், கூடுதல் அதிகாரங்களை, ஆணையத்துக்கு வழங்க வேண்டும்.


முறைகேடுகளில் ஈடுபடும் வேட்பாளர் மற்றும் வாக்காளர்களை, அவர்களின் நிலையிலிருந்து தகுதி நீக்கம் செய்வது; அரசியல் கட்சிகளின் சின்னத்தை, அங்கீகாரத்தை முடக்குவது போன்ற அதிகாரங்களை, தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி, தேர்தல் சீர்திருத்தத்தை அமல்படுத்துவதே, தற்போதுள்ள தேர்தல் அத்துமீறல்களுக்கு நிரந்தர தீர்வாக இருக்கும்.


டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016