தேர்தலுக்கு தேர்தல் ஜெ., விசிட்: கோவை மக்களுக்கு தீராத 'டவுட்'

Tamilnadu Assembly Election News: தேர்தலுக்கு தேர்தல் ஜெ., விசிட்: கோவை மக்களுக்கு தீராத 'டவுட்'தேர்தல் நேரத்தில் மட்டுமே, ஜெ., கோவைக்கு வருகிறார் என்ற எதிர்க்கட்சியினரின் பிரசாரம், ஆளும்கட்சியினருக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஐந்தாண்டுகளில், கோவைக்கு, மூன்று முறை ஜெ., வந்துள்ளார். கடந்த சட்டசபை தேர்தலுக்கு முன்பாக, கோவையில் தான், அவர் தனது பிரசாரப் பொதுக்கூட்டத்தைத் துவக்கினார். அந்த கூட்டத்தில், தி.மு.க.,வின் அதிகார மையங்கள் ஆதிக்கம், மின் தடை, தொழில் பாதிப்புகள் குறித்துப் பேசினார். அதுவே, ஆட்சி மாற்றத்துக்கான அடித்தளமாக அமைந்தது.

அதன்பின், உள்ளாட்சித் தேர்தலின் போது, கோவையில் பிரசாரம் மேற்கொண்ட போது, 'கோவை நகரின் மேம்பாட்டுக்கு சிறப்புத் திட்டங்களை நிறைவேற்றுவேன்' என்றார். அதற்கேற்ப, அந்தத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றது, ஆளும்கட்சி. அடுத்து அவர் வந்தது, லோக்சபா தேர்தலுக்கு. அப்போதும், பழைய திட்டங்களைப் பற்றிச் சொல்லி, 'கண்டிப்பாக நிறைவேற்றுவேன்' என்று வாக்குறுதியைப் புதுப்பித்தார்.

அவரது வழக்கப்படி, தற்போது நடக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கு தான் அவர் பிரசாரத்துக்கு வந்திருக்க வேண்டும். லோக்சபா தேர்தலில், வெற்றி வித்தியாசம் பெருமளவில் குறைந்ததுடன், நகரப்பகுதிக்குள், மூன்று சட்டசபை தொகுதிகளில், அ.தி.மு.க., ஓட்டு, பா.ஜ., வேட்பாளரை விட குறைந்ததால், ஓர் அதிசய மாற்றம் நிகழ்ந்தது. மேயர் பதவி பறிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.

அப்போது தான், 2,378 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை, ஜெ., அறிவித்தார். அவற்றில், குடிசை மாற்று வாரியத் திட்டத்தைத் தவிர, வேறு எதையுமே நிறைவேற்றாமல், மீண்டும் சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்கு, ஜெ., வந்தது, எதிர்க்கட்சியினரின் வெறும் வாய்க்குக் கிடைத்த அவலாகி விட்டது. இப்போதும், அவர் அறிவித்த திட்டங்கள் பற்றி, எந்த பதிலும் சொல்லாமல் சென்றது, எதிர்க்கட்சியினருக்கு நல்ல வேட்டையாகியுள்ளது.

தேர்தல் நேரத்தில் மட்டுமே, மக்களைச் சந்திப்பவர் ஜெ., என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மற்றும் பேச்சாளர்கள், அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தலின் போது தான், ஜெ., இங்கு வருவார் என்றும் 'டவுட்' கிளப்புகின்றனர். அது மட்டுமின்றி, கோவையில், மேயர் மற்றும் அமைச்சர்கள் பதவி பறிப்பு குறித்தும், தங்களது பிரசாரங்களில், கேள்விகளால் திணறடிக்கின்றனர்.

ஏனெனில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், வேலுமணி அமைச்சராக்கப்பட்டார். சில மாதங்களில் மாற்றப்பட்டார். கிணத்துக்கடவு எம்.எல்.ஏ., தாமோதரனுக்கு அமைச்சர் பதவியுடன், மாவட்டச் செயலாளர் பதவியும் தரப்பட்டது. பின்பு, மீண்டும் இவ்விரு பதவிகளும் பறிக்கப்பட்டு, வேலுமணியிடம் தரப்பட்டது. மேயராக இருந்த வேலுச்சாமியிடம், மேயர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவிகள் பறிக்கப்பட்டன.

ராஜ்குமாருக்கு மேயர் மற்றும் மாவட்டச் செயலாளர் பதவி தரப்பட்டது. பின்பு, மாவட்ட பதவி பறிக்கப்பட்டது. கட்சிப் பதவியைப் பறிப்பது, கட்சித்தலைமை விருப்பமாக இருக்கலாம் என்று கூறும் எதிர்க்கட்சியினர், அமைச்சர் மற்றும் மேயர் பதவிகளைப் பறித்ததற்கான காரணங்கள் என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர். இந்த பிரசாரம், பொது மக்களிடம் விவாதத்தைக் கிளப்பி இருப்பதால், ஆளும்கட்சியினர் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். -நமது நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016