அதிகாரிகளை மாற்றினால் மட்டும் போதுமா?

Tamilnadu Assembly Election News: அதிகாரிகளை மாற்றினால் மட்டும் போதுமா?

நிர்வாக அதிகாரத்தின் இரும்பு கோட்டையாக கருதப்படுவது, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள். மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், தேர்வு செய்யப்படும் இவர்கள்,

உரிய பயிற்சி பெற்று, இந்திய அரசின் நிர்வாகத் துறைக்கு

நியமிக்கப்படுகின்றனர்.


ஆங்கிலேயர் ஆட்சியின் போது, மாவட்ட கலெக்டர்கள், இறைவனுக்கு சமமாகப் பாவிக்கப்பட்டனர். மக்களின் அனைத்து குறைகளையும் போக்கி, செம்மையான நிர்வாகத்தை அளிப்பவர்கள், அவர்கள் மட்டுமே என பார்க்கப்பட்டனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பின், நிர்வாகத் துறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன. தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சியின் ஆட்சி துவங்கியது. ஆங்கிலேயேர் ஆட்சியின் போது, மாவட்ட நிர்வாகங்களுக்கு நியமிக்கப்பட்டவர்கள், வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். உள்ளூர், ஜாதி, மதம் மற்றும் பிற விவகாரங்களுக்கு அப்பாற்பட்டவர்களால் மட்டுமே, பாரபட்சமின்றி மாவட்ட நிர்வாகத்தை அளிக்க முடியும் என்பதால், இந்த அணுகுமுறை கையாளப்பட்டது.இதே அணுகுமுறை, நீதித் துறையிலும் பின்பற்றப்பட்டது. குறிப்பாக, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, வேறு மாநிலத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்பது, இன்றும் நடைமுறையில் உள்ளது.


தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சிகள், ஆட்சிக்கு வந்த பின், அரசு நிர்வாகத்தில், மாநில அரசு ஊழியர்களுக்கும் பங்கு வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றது. மொத்தமாக உள்ள ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் எண்ணிக்கையில், மாநில அரசு ஊழியர்களுக்கு, 10 சதவீத பங்கு அளிக்கப்பட்டது. இந்த, 10 சதவீத பங்கை, அரசியல் கட்சிகள், தங்கள் விருப்பப்படி, வேண்டப்பட்டவர்களை நியமித்துக் கொள்கின்றன. இப்படி, ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அந்தஸ்து பெறுபவர்கள், அவர்களை இந்த அந்தஸ்துக்கு கொண்டு வந்தவர்களுக்கு, விசுவாசமாக இருக்கின்றனர்.


இன்றைய நிலையில், தமிழகத்தின், 32 மாவட்டங்களில், 24 மாவட்டங்களில், ஐ.ஏ.எஸ்., அந்தஸ்து பெற்ற மாநில அதிகாரிகளே கலெக்டர்களாக உள்ளனர். எஸ்.பி.,யாக இருப்பவர்களும் இந்த சதவீதத்தில் இருக்கலாம்.இவர்களால், ஆளுங்கட்சிக்கு ஆதரவாகத் தான் செயல்பட முடியும். இவர்களை வைத்துக் கொண்டு, நேர்மையான தேர்தலை நடத்த முடியாது என, எதிர்க்கட்சிகள், தேர்தல் ஆணையத்தில் முறையிட்டன. மாற்ற வேண்டிய அதிகாரிகள் பட்டியலை, தி.மு.க.,வும் அளித்தது.


சில குறைகளைக் கூறும்போது, அதை கவனிக்க வேண்டும். இல்லையேல், அக்குறை பெரிதாகி விடக்கூடாது என்பதற்காக, சில அதிகாரிகளை, தேர்தல் ஆணையம் மாற்றுகிறது. இதன்மூலம், நேர்மையான தேர்தல் நடக்கும் என்ற தோற்றத்தை ஏற்படுத்த, ஆணையம் முயற்சிக்கிறது.

இந்த முயற்சி, தோற்றத்தில் ஒரு அழகியல் மாற்றமாக இருக்கலாமே தவிர, ஒட்டுமொத்தமாக மாற்றத்தை ஏற்படுத்தும் அறுவை சிகிச்சையாக இருக்காது.


அதிகாரிகள் மீது, இதுபோன்ற புகார்கள் சொல்லப்படுவதற்கு, ஒரு காலத்தில் இரும்புக் கோட்டையாக, கருதப்பட்ட நிர்வாகம், பிளாஸ்டிக் கோட்டையாக மாறியதே காரணம்.அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையேயான உறவு, நிர்வாகத்தின் மீது, அதிருப்தியையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.நிர்வாக சீர்திருத்த ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகளை பெற்றபோது, 'அரசியல்வாதிகளுடன் வைத்துக் கொள்ளும் உறவை, அதிகாரிகள் துண்டிக்க வேண்டும்' என்பதே, முதல் பரிந்துரையாக இருந்தது. இப்படிப்பட்ட அவல நிலைக்கு, நிர்வாகம் செல்வதற்கு, அரசியல் கட்சிகள் மூலம், அதிகாரிகள் சலுகை பெறுவதும், அதிகாரிகள் மூலம், அரசியல் கட்சிகள் அனுகூலம் பெறுவதுமே முக்கியக் காரணம்.


தேர்தல் நடக்க, இன்னும் இரு வாரங்களே உள்ள நிலையில், அதிகாரிகள் சிலரை மாற்றுவதால் மட்டுமே, நேர்மையான தேர்தலை நடத்திவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மக்கள் முற்றிலும் நம்பிக்கை இழந்து விடக்கூடாது என்பதற்காக, இந்த மாற்றங்களை தேர்தல் ஆணையம் செய்கிறது.அதிகாரிகளை தேர்தல் ஆணையத்தால் மாற்ற முடியும் என்பதே, கடந்த சில ஆண்டுகளாகத் தான் அறிய வந்துள்ளது.அரசியல் அமைப்பு சட்டத்தின், 324வது பிரிவு, இந்த அதிகாரத்தை, தேர்தல் ஆணையத்துக்கு வழங்கி உள்ளது. இதில், நாங்கள் தலையிட முடியாது என, உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் அறிவித்தும் உள்ளன.


அதிகாரிகள் மாற்றம் தீர்வு அல்ல. அதிகாரிகள் மாற்றம் என்பது, தாற்காலிக ஏற்பாடு தான். மாற்றப்பட்ட அதிகாரிகள், தேர்தல் முடிந்ததும், அப்பதவிக்கு மீண்டும் வந்து விடுவர். எனவே, அதிகாரிகளை நம்பி, தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டுமானால், தேர்தல் ஆணையத்துக்கு, முதலில் ஆள் பலம் வேண்டும். வாக்காளர்களை சேர்ப்பது, நீக்குவது, பட்டியல் தயாரிப்பது, ஓட்டுப்பதிவு நடத்துவது, பாதுகாப்பு அளிப்பது என அனைத்துக்கும், மத்திய, மாநில அரசுகளை நம்பி இருக்காமல், தேர்தல் ஆணையமே தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அதுவரை, தேர்தல் முறைகேடுகளை முற்றிலும் களைவதற்கு, நிரந்தரத் தீர்வு இல்லை.


சந்துரு

முன்னாள் நீதிபதி, சென்னை உயர் நீதிமன்றம்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016