கேட்பவர்கள் இருக்கும் வரை சொல்பவர்கள் இருப்பர்

Tamilnadu Assembly Election News: கேட்பவர்கள் இருக்கும் வரை சொல்பவர்கள் இருப்பர்

தேர்தல் விளையாட்டை, உளவுத்துறை தனியாக நடத்துவது போல் சித்தரிப்பது தவறு. மக்கள், ஓட்டு போட்டு புதிய அரசை தேர்வு செய்யும் ஜனநாயகப் பணியில், உளவுத் துறையை

அனுமதிப்பது யார்? இதற்கு காரணம் என்ன என்பதை, மக்கள் உணர வேண்டும்.

நாட்டின் அமைதியை உறுதி செய்வதற்கும், பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் துவங்கப்பட்ட உளவுத் துறையில், மதப் பிரிவு, அரசியல் பிரிவு, ஜாதிப் பிரிவு என எண்ணற்ற பிரிவுகள் உள்ளன. இந்தப் பிரிவு அதிகாரிகளும், ஊழியர்களும், அந்தந்தப் பிரிவில் என்ன நடந்து வருகிறது என்பதை உற்று நோக்கி, அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வர். விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்க இருப்பதைத் தடுத்து, மக்களின் வாழ்வுக்கு உத்தரவாதம் அளிக்க, உளவுத் துறையின் கருத்துக்களை, அரசு ஏற்றுக் கொண்டு செயல்படும். இதுதான், உளவுப் பிரிவின் வேலை. இதைத் தவிர, உளவுப் பிரிவுக்கு எந்த அதிகாரமும் இல்லை.

இந்நிலையில், பல கோடி மக்கள் ஓட்டு போட்டு தேர்வு செய்யும், ஒரு ஜனநாயக அமைப்பில் உளவுத் துறையின் பங்கு எங்கிருந்து வருகிறது. ஒட்டுமொத்தமாக, உளவுத்துறை தான் அனைத்துக்கும் காரணம் என, சொல்லிவிட முடியாது.

மத்தியில் தொடர்ந்து காங்கிரஸ் ஆட்சி நடந்தது. தமிழகத்தில் மட்டும் தி.மு.க., ஆட்சி, மத்திய அரசுக்கு பெரும் எதிர்ப்பை அளித்துக் கொண்டு இருந்தது. இந்நிலையில், தி.மு.க.,வை உடைத்து, எம்.ஜி.ஆர்., மூலம், அ.தி.மு.க., உருவாக்கப்படுகிறது. இது, காங்கிரசின் ஆசீர்வாதத்தில் நடக்கிறது. உளவுத் துறை அதிகாரி, எம்.கே.நாராயணன், இந்த திட்டத்தை, மத்தியில் உள்ள காங்கிரசின் ஆலோசனைப்படி நிறைவேற்றினார்.இங்கு, உளவுத் துறையா தி.மு.க.,வை உடைத்து, அ.தி.மு.க.,வை உருவாக்கியது? அனைத்துக்கும், அரசியல்வாதிகளும், ஆட்சியில் இருக்கும் கட்சியின் விருப்பமுமே காரணம்.ஆனால், உளவுத் துறையை அதன் வேலையை மட்டும் செய்ய பணித்தவர்கள், எனக்குத் தெரிந்து மூன்று தலைவர்கள் தான். அவர்களில் ஒருவர், உளவுத்துறையை கடுமையாகவே எதிர்த்தார். அவர், இந்திராவின் இளைய மகன் சஞ்சய் காந்தி.மற்ற இருவரும் பிரதமராக இருந்த நரசிம்மராவும், வாஜ்பாயும். இவர்கள்

இருவரும் உளவுத்துறையின் அறிக்கையை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொண்டது இல்லை. பிரதமரிடம், உளவுத் துறை அதிகாரிகள், நாள்தோறும் தங்களின் தகவல்களை தெரிவிப்பர். இது, தினமும் நடக்கும் ஒரு பணி.

அந்த நேரங்களில், உளவுத் துறை அதிகாரிகள் சொல்வதை, இந்த இருவரும் கேட்டுக் கொள்வர். அதோடு சரி. உடனடியாக எந்த உத்தரவையும், உளவுத் துறை அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு, அவர்கள் செய்ததாக, எனக்குத் தெரிந்தவரை இல்லை. இதுபோன்ற அணுகுமுறை, இப்போது இருக்கும் அரசியல் கட்சித் தலைவர்களிடம் இருக்கிறதா என்பது தான் கேள்வி. 'சொன்னதைக் கேட்டு செயல்பட ஆள் இருக்கும் வரை, சொல்பவர்கள் இருந்து கொண்டு தான் இருப்பார்கள்' என கூறுவர்.மேலும், உடன் இருப்பவர்கள் மீது நம்பிக்கை இல்லாமல், மூன்றாம் நபரின் உதவியை நாடும் அரசியல் தலைவர்கள் இருக்கும் வரை, உளவுத் துறையின் பங்கு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கும்.

ஆட்சிக்கு வரும் அரசியல் கட்சி, உளவுத் துறையை நம்புகிறது. எதிர்க்கட்சியோ, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரிகள் நடத்தும், தனியார் உளவு நிறுவனங்களை நம்புகிறது. இதனால், பாதிக்கப்படுவது அரசியல் கட்சியினரும், பொதுமக்களுமே. அரசியல் கட்சிகளை கார்ப்பரேட்

நிறுவனம் போல் நடத்தும் நிலையை உருவாக்கிய பின், உளவுத்துறை மீது குற்றம்சாட்டுவதில் பயன்இல்லை. பணம், அதிகாரம் இரண்டையும் எப்படியாவது பெற்று விட வேண்டும் என, துடிக்கும் அரசியல்வாதிகள் அதிகரித்து விட்டனர். இதற்காக, எந்த எல்லைக்கும் அவர்கள் செல்கின்றனர். அப்படியிருக்கும்போது, கிராமம் முதல் தலைநகர் வரை, பலமட்ட அமைப்புகளைக் கொண்ட, அரசியல் கட்சியைப் பற்றி, அரசியல்வாதிகளுக்கு கவலை இல்லை.

இப்போது இருக்கும் தேர்தல் சூழலில், உளவு நிறுவனம் ஒன்று, அரசியல் கட்சி தலைவர் ஒருவரை சந்தித்து, ஒரு தொகுதியை குறிப்பிட்டு, இந்த தொகுதியில் நீங்கள் நிறுத்தியிருக்கும் வேட்பாளர் வெற்றி பெறுவது சிரமம். எனவே, இவரை நிறுத்துங்கள், வெற்றி எளிதாகக் கிடைக்கும் என, ஒருவர் பெயரை குறிப்பிட்டால், அந்த கட்சி தலைமை, வேட்பாளரை மாற்றிவிடும்.

கட்சி துவங்கிய காலம் தொட்டு, அர்ப்பணிப்பாக இருக்கும்

தொண்டர்களால் தான், பல்வேறு சோதனைகளைக் கடந்து, பல கட்சிகள், இன்னும் மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருக்கின்றன. அப்படிப்பட்ட அர்ப்பணிப்பு கொண்ட தொண்டர்களை மதிக்காமல், அவமானப்படுத்தும் வகையில், கட்சித் தலைமைகள் செயல்படுகின்றன. அதன் வெளிப்பாடு தான், உளவுத்துறை வளர்ச்சி.

நேர்மையான, மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற தெளிவோடு அரசியல்வாதிகள் இருந்தால், மூன்றாம் நபரின் தலையீட்டை ஏற்க மாட்டார்கள். அதுபோன்ற தலைவர்கள் இல்லாத நிலையில், கட்சி, தேர்தல் என அனைத்தையும் உளவுத்துறையே நடத்தும்.


ரகோத்தமன்

சி.பி.ஐ., முன்னாள் அதிகாரி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016