உளவு துறையின் தேர்தல் விளையாட்டு

Tamilnadu Assembly Election News: உளவு துறையின் தேர்தல் விளையாட்டு

எல்லைகளில் எதிரிகளின் ஊடுருவல், உள்நாட்டில் நிலவும் சூழல் ஆகியவற்றை கவனித்து, மக்களின் அமைதியான வாழ்க்கைக்கு உத்தரவாதம் அளிக்க உருவாக்கப்பட்டது உளவுத் துறை. மன்னர் ஆட்சிக் காலத்திலிருந்து, இன்றைய தேதி வரை, உளவுத் துறையின் பணி இது தான்.


நாளடைவில் எதிரி நாட்டுக்காரன் நாட்டுக்குள் புகுந்து, குடித்தனம் நடத்தியதை அறிய முடியாத உளவுத் துறை, ஆடு மேய்ப்பவன் மூலமே, அதைத் தெரிந்து கொண்டு, எதிரியை விரட்ட, நீண்ட நாட்கள் போரை நடத்தியது. ஆனால், ஆடு மேய்ப்பவனின் உள்ளூர் அரசியலைத் தீர்மானிப்பதில், உளவுத் துறை தீவிரம் காட்டுகிறது.தமிழகத்தில் நடக்கும் சட்டசபைத் தேர்தலில், அணி சேர்க்கை, அணிகளை உடைத்தல், கட்சித் தலைவரின் தனிப்பட்ட விஷயங்கள் ஆகியவற்றில், பெரும் பங்கு வகுக்கிறது உளவுத் துறை. ஆளுங்கட்சியின் கைப்பாவையாகி, அவர்களுக்காக அரசியல் விளையாட்டை முன்னெடுப்பதில், மிகுந்த அக்கறையுடன் செயல்படுகிறது.

கொள்கை அடிப்படையில் ஒரு கட்சி, நிர்வாகிகளையும், தொண்டர்களையும் அரவணைத்து செல்லும்போது, அதன் தலைமையின் கட்டுப்பாட்டில், கட்சி இருக்கும். இன்றைய பல அரசியல் கட்சிகள், இதுபோல இல்லை. கட்சித் தலைமையோ, நிர்வாகிகளையும், தொண்டர்களையும் நம்புவதில்லை. கட்சியினரையும், அமைச்சர்களையும் கண்காணிக்க, உளவுத் துறையையே நம்பி உள்ளது.

உளவுத் துறை கொடுக்கும் அறிக்கையின்படியே, கட்சியை நடத்துகின்றனர். ஆளுங்கட்சி அறிவித்த, 234 வேட்பாளர்களில், 10 சதவீத வேட்பாளர்கள், அறிவிக்கப்பட்ட வேகத்தில் மாற்றப்பட்டு உள்ளனர். வேட்பாளரை கட்சித் தலைமை தேர்வு செய்வதிலிருந்து, பிரசாரத்தை செய்வது, எங்கு எவரை கவனித்தால், வெற்றி பெற முடியும் என்பது வரை, தேர்தல் வியூகத்தைக் கூட, உளவுத்துறையே வகுத்துக் கொடுக்கிறது.

உள்ளூரில் உள்ள அமைப்புகள், கட்சிகளின் செயல்பாடு எப்படி இருக்கிறது. அதனால், உள்ளூர் அமைதிக்கு குந்தகம் ஏற்படுமா என, உளவுத்துறை கவனித்து வருவது இயல்பான ஒன்று. ஆனால், பல கோடி மக்கள் பங்கேற்கும் தேர்தல் ஜனநாயகத்தின் திசையை மாற்றி, ஆளுங் கட்சிக்கு சாதகமாக உளவுத்துறை அதிகாரிகள் செயல்படுவது, பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

ஆட்சியில் உள்ள அரசியல் கட்சி, தனக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பயன்

படுத்த முயற்சிக்கிறது. அதற்கு, உளவுத்துறை அதிகாரிகள் இணைந்தே செயல்படுகின்றனர். இதற்காக, ஆளுங் கட்சி மூலம், பதவி உயர்வு உள்ளிட்ட சலுகைகளை பெற்றுக் கொள்ளவும்

விரும்புகின்றனர்.

உளவுத்துறை மூலமே கட்சியும், ஆட்சியும் நடக்கிறது என அறிந்து கொண்டவர்கள், தலைமைக்கு அறிக்கை கொடுக்கும் உளவுத் துறையை கவனித்து, சுயலாபம் பெறுவதோடு, எதிரிகளை வீழ்த்தவும் பார்க்கின்றனர். அ.தி.மு.க., ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள், தொடர்ந்து நடந்து வருகின்றன.

அரசில் கட்சிகள் எப்படி தேர்தலை சந்திக்க வேண்டும்; அதற்காக எதை எல்லாம் செய்ய வேண்டும்; அதற்கு எவ்வளவு தொகை செலவாகும்; இதற்கான திட்டத்தை வகுத்துக் கொடுக்க எவ்வளவு கட்டணம் கொடுக்க வேண்டும் என, பல தனியார் நிறுவனங்கள், அரசியல் கட்சிகளை அணுகும் நிலையே இப்போது இருக்கிறது. பல கட்சிகள், இந்நிறுவனங்கள் பரிந்துரைக்கும் திட்டப்படியே, தேர்தலை சந்திக்கின்றன.

மக்கள் முடிவு செய்ய வேண்டிய தேர்தல் ஜனநாயகத்தை, ஒருபுறம் உளவுத்துறை, மறுபுறம் தனியார் முகமைகள் முடிவு செய்கின்றன. இதற்கிடையே, கட்சிகளைப் பற்றியும், தலைவர்களைப் பற்றியும் பொய்யான தகவல்களை, 'செய்திகள்' போல் பரப்பும் வேலையையும்

உளவுத்துறையினர் செய்கின்றனர். திட்டமிட்டு பரப்பும் இச்செய்திகள் மூலம், தாங்கள் விரும்பும் வேலையை நடத்த, உளவுத்துறை முனைகிறது.

பல நேரங்களில், உளவுத்துறையின் செயல்பாட்டால், தேர்தல் அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. சட்டத்துக்கு உட்பட்டு, நாட்டின் நலனைக் காப்பாற்ற அமைக்கப்பட்ட உளவுத்துறை, அதன் சட்டப்பூர்வ வரையறையை மீறி செயல்படுவது, மக்களின் விருப்பத்துக்கு எதிரானது. ஒரு கட்சியின் மூத்த நிர்வாகிகள் மாற்றம், அமைச்சர்கள் மாற்றம் போன்ற செய்திகளில், 'உளவுத்துறை அறிக்கையின் படி' கட்சி மற்றும் அரசின் தலைமை முடிவை எடுத்து உள்ளது என, செய்திகள் வருகின்றன. இதுபோன்ற செய்திகள் எந்த அடிப்படையில் வெளியிடப்படுகின்றன என தெரியவில்லை. இது தொடர்பாக, கட்சித் தலைமையோ, அரசை ஆள்பவர்களோ மறுப்பும் தெரிவிப்பது இல்லை.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசு, உளவுத்துறை மூலம் இயக்கப்படுகிறதா; கோடிக்கணக்கான தொண்டர்கள் மூலம், ஒரு கட்சி செயல்படுவது இல்லை. அதை உளவுத்துறை இயக்குகிறதா; அதை விட, உலகிலேயே அதிக மக்கள் ஓட்டளிக்கும் இந்திய ஜனநாயகத்தை மக்க ளாட்சி வழி நடத்தவில்லை எனில், உளவுத்துறை அதிகாரிகள் வழி நடத்துகின்றனரா என்ற கேள்விகளுக்கு, இதுவரை பதில் இல்லை. வலிமையற்ற, நம்பிக்கையற்ற தலைமைகள் நீடிக்கும் வரை, உளவுத்துறை தான் தேர்தல் விளையாட்டுகளை நடத்தும்.


கனகராஜ்,

மாநில செயற்குழு உறுப்பினர், மார்க்சிஸ்ட்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016