கவித... கவித...

Tamilnadu Assembly Election News: கவித... கவித...

அக்கால கட்சிகளும், இக்கால க(ா)ட்சிகளும்


காலத் தேவைக்காக கட்சிபல தோன்றியது

அந்தக்காலம்!

இக்கோலம் மாறி

கொடி துாக்கி

புதுக்கட்சி தோன்றுவது

இந்தக் காலம்!

அந்நியரை அகற்ற

மண்ணுரிமை விரும்பியும்

பெண்ணுரிமையுடனே

சமநீதி பேணவும்,

பொதுவுடைமை கருத்துக்களை

பொதுவிலேயே வைத்திடவும்,

காங்கிரசும், கழகங்களும்

கம்யூனிஸ்டு கட்சிகளும்,

கருக்கொண்டு

உருக்கொண்டவைதான்!

அய்யோ பரிதாபம்,

அவையெல்லாம் இந்நாளில்

ஓட்டுக்கும், நோட்டுக்கும்

வயிற்றுப் பாட்டுக்கும்

கொள்கைகளை அடகுவைத்து

'கோபுரத்தை' ஆள எண்ணி

பண்பாடு நீங்கி

பல துண்டுகளாகி

மக்களை சந்திக்காமல்

நித்தமும் நிந்திக்கின்றன!

கவைக்கும் உதவாத

காலத்திற்கும் மாறாத

பழமை கொள்கையாலே

பாழ்பட்டு நிற்கின்றன!

கணினிக் காலத்தில்

ஏற்றமும் மாற்றமும்

எவர் தருவார்?

புதுமை நலம் பேண

புறப்படுமா புதுக்கட்சி

என்றிருக்கையில்

புற்றீசலாய் சிறகடிக்குது

வெற்றிரைச்சல் கூட்டங்கள்.

பகல் கொள்ளையர்களும்,

பல்கலை வல்லுநர்களும்,

அரிதார பூச்சு

அழிவு நிலை

கண்டவரும்,

அதிகார வர்க்கத்தை

அண்டிப் பிழைத்தோரும்,

பாதை எது, பகுத்தறிந்த

கொள்கை எதுவென்று

தெரியாமல்

வீதிதோறும் கொடிகட்ட

நாள்தோறும் தனிக்கட்சி

துவக்குகிறார்.

விளங்குமா இந்நாடு

துலங்குமா தமிழ்நாடு!

மக்கள் பிரச்னையில்

எக்காலும் விலகிநின்று

தேர்தல் நாளில் மட்டும்

தேறும் அணிஇதுவென்று

தேர்ந்தெடுத்து,

பாய்விரிக்கவும்

பல்லக்கு துாக்கவும்

ஆலாய் பறக்கின்றன!

ஒன்றிரண்டு சீட்டுக்காக

நன்றியையே கொன்று

நழுவி ஓடுகின்றன!

ஓட்டளிக்கும் ஓட்டாளரே

வாக்களிக்கும் வாக்காளரே

இவையெல்லாம் யோசித்து

கைவிரலில் மை பெற்று

என்வாழ்வு என்றிராமல்

எந்நாடு எனப் பார்த்து

ஓட்டுக்களை அளிப்பதிலே

ஒருமைப்பாடு காணுங்களேன்!

- ஜி.மனோகரன், திண்டுக்கல்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016