குடும்ப கட்சிகள்: நிதின் கட்காரி பாய்ச்சல்

Tamilnadu Assembly Election News:  குடும்ப கட்சிகள்: நிதின் கட்காரி பாய்ச்சல்

சென்னை,:''வளர்ச்சி திட்டங்களுக்காக, மாநில நிர்வாக தலைமையை பலமுறை சந்திக்க முயன்றும் முடியவில்லை,'' என, மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.

பா.ஜ., தேர்தல் அறிக்கையை, சென்னையில் நேற்று, மத்திய கப்பல் மற்றும் சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி வெளியிட்டு பேசியதாவது:தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, பா.ஜ., தொலை நோக்குடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஒருவர் சொல்வதை தான் கேட்க வேண்டும்; அவரை யாரும் கேள்வி கேட்க முடியாது. தமிழக அரசியல் கட்சிகள் குடும்ப கட்சிகளாக உள்ளன. ஆனால், பா.ஜ., அனைத்து தரப்பினருக்கான கட்சியாக உள்ளது.

தமிழகத்தில் உள்ள தொழில் முனைவோர் பலர், பிற மாநிலங்களுக்கு செல்லப் போகிறோம் என, என்னிடம் கூறுகின்றனர். இத்தகைய போக்கு, மாநில வளர்ச்சிக்கு உகந்தது அல்ல..வளர்ச்சி திட்டங்கள் குறித்து, தமிழகத்தில் உள்ள அதிகாரிகளை சந்திக்க முயன்றால், முடிவ தில்லை. தலைமைச் செயலரை தொடர்பு
கொண்டாலும், நான் முதல்வரை கேட்டு தான் சொல்ல முடியும் என கூறும் அவல நிலை இருக்கிறது.இது போன்ற நிலை மாற வேண்டுமானால், தமிழகத்தில் பா.ஜ., ஆட்சி அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

தேர்தல் அறிக்கை முத்துக்கள்: தமிழக பா.ஜ., வெளியிட்ட தேர்தல் அறிக்கையின் முக்கிய வாக்குறுதிகள்:

* தமிழகத்தில் பூரண மதுவிலக்கு
* விவசாயத்திற்கு தனி பட்ஜெட். கரும்பில் இருந்து, எத்தனால் எடுக்க தடைகள் விலக்கப்படும்
* நீர்நிலைகள், ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்படும். உள்ளூர் நதிகள் இணைக்கப்படும்; மாநில நீர்வழி போக்குவரத்து உண்டாக்கப்படும்
* அரசே மணல் வினியோகம் செய்யும்; தாது மணல் கொள்ளைகள் தடுக்கப்படும்
* எளிமையான, வெளிப்படையான தொழில் கொள்கை உருவாக்கப்படும். தென் மாவட்டங்களில், தொழில் துவங்க வரிச் சலுகைகள் தரப்படும்
* புதிய ஜவுளிக் கொள்கை உருவாக்கப்படும். ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா உருவாக்கப்படும்
* மின் துறையை சீரமைக்க, மத்திய அரசின், 'உதய் திட்டம்' அமலாக்கப்படும்; 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்
* 'லோக் ஆயுக்தா' கொண்டு வரப்படும். அரசு பள்ளிகளில், சி.பி.எஸ்.இ., பாடத்திற்கு நிகரான கல்விகற்பிக்கப்படும்
* அடுத்த ஆண்டு முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்
* ஆன்மிக சுற்றுலா திட்டம் உருவாக்கப்படும்; கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்
* ஸ்மாட் ரேஷன் கார்டு வழங்கப்படும். எல்லா நேரங்களிலும், எல்லா பொருட்களும் கிடைக்கச் செய்வோம் * பாரம்பரிய பசு இனங்கள் பாதுகாக்கப்படும்
* வெளிநாடு வாழ் தமிழர்களின் தொடர்பை ஏற்படுத்த தனி அமைப்பு உருவாக்கப்படும்.

ஜெ., மீது கட்காரி தாக்கு: சென்னை, விருகம்பாக்கத்தில் நடந்த பா.ஜ., பிரசாரக் கூட்டத்தில், நிதின் கட்காரி பேசியதாவது: இத்தேர்தல், தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தேர்தல். மோடி ஆட்சியில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்ததுடன், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் அதிகரித்துள்ளது. ஆனால், தமிழகத்தின் நிலை தலைகீழாக உள்ளது.

தமிழக அரசின் ஒத்துழைப்பு இல்லாததால், மத்திய அரசின் திட்டங்களை, இங்கு செயல்படுத்த முடியவில்லை. மத்திய அரசு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அதன் மொத்த பலனும் பா.ஜ.,வுக்கும், மோடிக்கும் சென்று விடும் என்ற அச்சத்திலேயே, மொத்த திட்டங்களையும் முடக்கி வைத்திருக்கிறார், ஜெயலலிதா.தமிழகத்தில் குடும்ப அரசியலும், வாரிசு அரசியலுமே நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016