முதல்வர் கனவில் முதல் முயற்சி!

பா.ம.க., நேற்று முன்தினம், 2016 சட்டசபை தேர்தலுக்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், நிறுவனர் ராமதாசின் மகனும், கட்சியின் இளைஞர் அணித் தலைவருமான அன்புமணி, 'முதல்வர்' என்றே குறிப்பிடப்பட்டுள்ளார்.

'மக்களுடன் சேர்ந்து' தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கையைப் படிக்கும்போது, முதல் முயற்சியில் திணறல் ஏற்பட்டுள்ளது தெரிந்தாலும், கல்வி, மருத்துவம், நிர்வாகம், மொழி ஆகியவற்றில் அதிக அக்கறை காட்டியுள்ளதை உணர முடிகிறது.வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் வகையிலான அறிவிப்பு இருப்பதும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு நிதியுதவி என்று அறிவிக்காமல் இருப்பதும் ஆறுதலான விஷயங்கள்.மற்ற அனைத்து அறிவிப்புகளும், சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவினரையும், ஏதாவது ஒரு வகையில் திருப்திபடுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டுள்ளதும், தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை ஒட்டி அமைந்துள்ளதும் தெரிகிறது. எந்த கட்சி, 'ஈ அடித்ததோ' தெரியவில்லை!

'தமிழக கட்சிகள், இலவசங்களைக் கொடுத்து மக்களைச் சோம்பேறிகளாக்கி விட்டன' என்ற பொதுவான கருத்து உள்ள இந்த நேரத்தில், பாலுாட்டும் பெண்களுக்கு தினமும் ஒரு லிட்டர் பால், அனைத்து மக்களுக்கும் இலவச முழு உடல் பரிசோதனை, மாணவர்களுக்கு பேனா முதல், ஐ - பேட் வரை அனைத்தும் இலவசம் எனக் கூறி, 'ஒரு குடும்பத்துக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் இலவசம்' என்று, 'அள்ளி' விட்டிருக்கிறார்.சாத்தியமே இல்லாத மேலும் சில, 'கிச்சு கிச்சு' அறிவிப்புகளும் உள்ளன. இந்த அறிக்கையில், 'இரண்டாவது தலைநகராக திருச்சி அறிவிக்கப்படும்; காவல் துறையினருக்கு, எட்டு மணி நேர பணி வரம்பு நிர்ணயிக்கப்படும்; முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள், ஆண்டுதோறும் வெளியிடப்படும்; இந்தியாவின் பிற மாநில மொழிகளையும், பிற வெளிநாட்டு மொழிகளையும் கற்றுக் கொள்ள மாணவர்கள் விரும்பினால், அதற்கான உதவிகள் வழங்கப்படும்' ஆகியவை, மிகவும் பாராட்டத்தக்கவை. இவற்றில் கடைசி இரண்டும், மாநிலத்தில் ஊழல் குறைந்து, மக்கள் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வதற்கான வழிமுறைகள்.தி.மு.க., தேர்தல் அறிக்கையை விட, ஒரு படி உயர்த்தி மதிப்பிடும் வகையில் இது அமைந்துள்ளது. வாழ்த்துக்கள்!

பா.பானுமதிமுதன்மை செய்தி ஆசிரியர், தினமலர்


கல்வி
* கல்விக்கான நிதி ஒதுக்கீடு ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில், 4 சதவீதமாக அதிகரிக்கப்படும். இந்த நிதி இரட்டிப்பாகும்.

கல்விக்கு பட்ஜெட்டில் மேலும் முக்கியத்துவம் கொடுத்தால் தான் அரசு பள்ளிகளில் தரமான வசதிகளோடு, பயிற்சியும் தர முடியும்.

* கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு இணையாக, தமிழக அரசின் பள்ளிகள் தரம் உயர்வு. மாவட்டந்தோறும் பள்ளித் தர இயக்குனர் நியமனம்.


வரவேற்புக்கு உரியது. கேந்திரிய வித்யாலயா போல் மும்மொழி கொள்கையை, பா.ம.க., ஆதரிக்க முன்வந்தால், இன்னும் பாராட்டலாம்.


* மழலையர் வகுப்பு முதல், அனைவருக்கும் இலவச கல்வி. தனியார் பள்ளி மாணவர்களுக்கும், அரசே கல்வி கட்டணம் செலுத்தும்.

அரசு பள்ளிகளில், ஏற்கனவே இலவச கல்வி உள்ளது. ஆறு முதல், 14 வயது வரையுள்ள மாணவர்களுக்கு, கட்டாய இலவச கல்வி உரிமை சட்டம் நடைமுறையில் உள்ளது. தனியார் பள்ளிகளில், 25 சதவீத மாணவர்களுக்கு, இந்த சட்டத்தின் படி, மத்திய அரசே கல்விக் கட்டணத்தை செலுத்துவதும் நடைமுறையில் உள்ளது.

* கையடக்க கணினிகள் வழங்கப்பட்டு, 'இ-பேக்' என்ற மென்பொருள் மூலம் பாடங்கள் தொகுத்து வழங்கப்படும். புத்தகப்பை சுமக்க வேண்டியதில்லை.

புத்தகம், நோட்டு இல்லாவிட்டால், எழுதும் பழக்கம் மாயமாகி விடும். அப்புறம் எல்லாரும், கைநாட்டு தான்.

* மாணவர்களுக்கு தனி பேருந்துகள் இயக்கப்படும்.

தனியார் பள்ளிகளில் ஏற்கனவே அமலில் உள்ளது. அரசுக்கு அவ்வளவு பஸ்கள் இருப்பில் இல்லை.


* தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளிகளுக்கு இணையான ஊதியம் வழங்க திட்டம்

தனியார் பள்ளிகளின் கல்விக் கட்டணம், மேலும் உயர இந்த திட்டம் வழி வகுக்கும்.

* பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள் பள்ளி மேலாண் குழுக்களாக மாற்றம்.

தற்போதும், இந்த குழுக்கள் உள்ளன; ஆனால், செயல்படுவதில்லை.

* தமிழ் வழி கல்வி முறைக்கு முக்கியத்துவம்தற்போதும் அமலில் உள்ளது.


* ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதியத்திலும் பணியாற்றும் ஆசிரியர்கள் பணி நிரந்தரம்.

காப்பி அடிக்கப்பட்டது. பல கட்சிகளால் அறிவிக்கப்பட்டு, நடைமுறைக்கு வராத அறிவிப்பு.


* பேனா முதல், 'ஐ - பேட்' வரை இலவசம். இலவச இணைய இணைப்பு.

ஏற்கனவே, பள்ளி மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' இலவசமாகவழங்கப்படுகிறது. அதன் தொடர்ச்சி தான், இந்த இலவசமும்.


* மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., போல் புதிய கல்வித் திட்டம் உருவாக்கப்படும்.

காப்பி அடிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தையே பயன்படுத்தலாமே.


* தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள, 9ம் வகுப்பு முதல் பயிற்சி.

இதுபோன்ற பயிற்சிகள், பள்ளிகளில் இல்லை. அமலுக்கு வந்தால், உயர் கல்வி படிப்போர் எண்ணிக்கை உயரும்.

* திறன்சார் கல்வி முறை, அறிவுசார் கல்வி முறை, தொழிற்கல்வி முறை அறிமுகம். பிளஸ் 2ல் வழக்கமான பாடங்களுடன் வேலைவாய்ப்பு திறனுக்கு பயிற்சி பாடம்.

இதற்கான தேவை, தற்போது அதிகரித்துள்ளது.

* விளையாட்டு, யோகா, தொழிற்பயிற்சி, நீதி போதனைக்கு அதிக பாட வேளைகள்.

தனியார் பள்ளிகளில் உள்ளன. அரசு பள்ளிகளில் வந்தால், ஏழை மாணவர்கள் பயன்பெறுவர்.

* ஆண்டுதோறும் மருத்துவ ஆய்வு. மருத்துவ, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்.

ஆரம்ப பள்ளிகளில் இருந்து அமல்படுத்தினால் மிகவும் நல்லது.


திரைப்படத்துறை
* திருட்டு வி.சி.டி., ஒழிக்கப்படும்.

படங்களின் வெளிநாட்டு உரிமத்தை தடை செய்ய வேண்டியது அவசியம். இதற்கு அனைத்து தரப்பு ஒத்துழைப்பு அவசியம் மட்டுமல்லாது, தியேட்டர் கட்டணங்கள்
குறைப்பதும் முக்கியம்.* சென்னையில், உலகத்தரம் வாய்ந்த படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும்; சிறிய பட்ஜெட் படங்கள் அதிகரித்து வரும் நிலையில், புதிய படப்பிடிப்பு தளங்கள் உதவியாக இருக்கும்.
பழைய படம்; புதிய காப்பி என்றாலும், அது ஏன் சென்னையில்; மதுரை, கோவையில் அமைக்க கூடாதா?


* அரசு கட்டடங்களில் நடைபெறும் படப்பிடிப்புக்கான கட்டணங்கள் குறைக்கப்படும்.

இதனால் அரசுக்கு என்ன லாபம்? ரசிகனுக்கு என்ன பலன்?

* திரைத்துறையில் அரசியல் தலையீடு இல்லாமல், தனி நபர் ஆதிக்கம் ஒழிக்கப்படும்.

திரைத்துறையையும், அரசியலையும் பிரிப்பது, தமிழகத்தில் இயலாத காரியம்.

* குறைந்த பட்ஜெட் படங்களை ஊக்குவிக்க சிறப்பு திட்டம்.

வரிவிலக்கு, மானியம் போன்ற திட்டங்கள், ஏற்கனவே உள்ளன.

* திரைப்படத் துறையினருக்கு ஓய்வூதியம், வீட்டுவசதி சலுகைகள் வழங்கப்படும்.

கோடிகளில் புரளும் சினிமா துறையினருக்கு, அரசு சலுகை அவசியமே இல்லை என்பதே பொது மக்கள் கருத்து.


நகர்புற மேம்பாடு

* சென்னை தவிர்த்த, 11 மாநகரங்களிலும் அனைத்து வீடுகளுக்கும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்; மழைநீர் சேகரிப்பு வசதி. அனைத்து வீடுகளிலும் நவீன கழிப்பறைகள்; மக்கள் கூடும் இடங்களில், இலவச பொது கழிப்பிட வசதிகள்.

பொது இடங்களை அசிங்கப்படுத்துவோர் எண்ணிக்கை குறைந்தால் சரி.

* மாநகரங்களில் மக்கள் கூடும் பகுதிகளில், அதிவேக இணைய சேவைக்கான, வை - பை வசதி.
* தரமான சிமென்ட் சாலைகள்; நீர்வளத்தை மேம்படுத்தும் வகையில், சாலையோரங்களில் நீர் ஊடுருவும் நடைபாதைகள்.
இரு அறிவிப்புகளும் நிலுவையில் இருப்பவை.

காவல்துறை
* சட்டம் - ஒழுங்கை காப்பாற்ற காவல் துறைக்கு முழு சுதந்திரம்.
அரசு இயந்திரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் காவல் துறைக்கு கடிவாளம் அவசியம்.
* அரசு ஊழியர்கள் - காவலர்கள் இடையிலான ஊதிய முரண்பாடு களையப்பட்டு, ஒரே கல்வி தகுதி, ஒரே ஊதியம் என்ற நிலை ஏற்படுத்தப்படும்.
ஒரே கல்வி தகுதி, ஒரே ஊதியம் நடைமுறைக்கு ஒத்துவராதே.
* காவலர்களுக்கு, ஏழு ஆண்டுகளுக்கு ஒரு பதவி உயர்வு.
கேட்க நல்லாத்தான் இருக்கு.
* ராணுவத்திற்கு வழங்கப்படுவது போன்ற சலுகைகள் காவல் துறைக்கும் வழங்கப்படும்.
சலுகை இருக்கட்டும்; ராணுவம் போன்றா இருக்கிறது காவல் துறை?
* காவல் துறைக்கு சலுகை விலையில் பொருட்கள் வழங்கும் கேன்டீன் வசதி, 32 மாவட்ட தலைநகரங்களுக்கும் நீட்டிக்கப்படும்.
திருச்சி, மதுரை, கோவை என, எல்லா மாவட்டங்களிலும், மலிவு விலை கேன்டீன் உள்ளது. ஸ்மார்க் கார்டு வசதி கூட செய்து தரப்படுகிறது. சரியாக விசாரித்திருக்கலாம்.
* காவல் துறையில் அனைத்து நிலைகளிலும், மகளிருக்கு, 33 சதவீதம் இடஒதுக்கீடு.
கான்ஸ்டபிள் முதல் டி.ஜி.பி., வரையிலுமா? தலை சுற்றுகிறது.

* காவல் துறையினருக்கான அனைத்துப் படிகளும், நிகழ்கால தேவைக்கு ஏற்ப உயர்த்தப்படும்.
எஸ்.பி.சி.ஐ.டி., - சி.பி.சி.ஐ.டி., உள்ளிட்ட பிரிவுகளில்
பணியாற்றும் போலீசாருக்கு, 'டிஏ' என்ற போக்குவரத்து படி
வழங்குவதில், 3,000 ரூபாய் வித்தியாசம் உள்ளது. இந்த
அறிவிப்புக்கு வரவேற்பு இருக்கும்.
* பாலியல் வன்கொடுமைகளைத் தடுக்க, தனிக்காவல் பிரிவு.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில், தமிழகம் முதலிடத்தை நோக்கி செல்வதை தடுக்க உதவலாம்.

* காவல் துறையின் சுதந்திரத்தை உறுதி செய்ய, மாநில பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்படும்.
நான்காவது காவலர் ஆணையம் அமைக்கப்படும் என, ஏற்கனவே ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.
* காவல் துறையினருக்கு, எட்டு மணி நேர பணி.
பல ஆண்டுகளாக உள்ள கோரிக்கை. சட்டசபையில் கூட, தோழர்கள் பேசியதாக தகவல்.
* காவலர்களின் எண்ணிக்கை தேவையான அளவுக்கு உயர்த்தப்படும்.
இந்த அறிவிப்பை கீறல் விழுந்த, 'சிடி' போல சொல்கின்றனர்.
* பொது இடங்களில் புகை பிடித்தல், சாலை விதிகளை மீறுதல் உள்ளிட்ட சமூக குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் நடைமுறையில் உள்ளது.
* அனைத்து மாவட்டங்களிலும், காவலர்கள் நல அமைப்பு.
* காவலராக பணியில் சேருபவர்கள், ஓய்வு பெறும்போது ஆய்வாளர் நிலைக்குப் பதவி உயர்வு பெறுவது உறுதி.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
* சிறைகள், தண்டனைக் கூடங்களாக இல்லாமல், குற்றம் செய்பவர்களை திருத்தும் இடமாக திகழும் வகையில், சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
* சிறைகளில் மனித உரிமை மீறல் உள்ளிட்ட குற்றங்கள் நடப்பதற்கு வழியே இல்லாத வகையில் சிறைக் கையேடு திருத்தி அமைக்கப்படும்.
எல்லாமே பழசு; எதுவும் புதிது அல்ல.
* சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதில் காவல் துறைக்கு உதவ, ஒவ்வொரு ஊரிலும், இளைஞர் தனிப்படை.
சிறப்பு காவல் இளைஞர் படை ஏற்கனவே உள்ளது.


மீனவர் நலன்
* மீனவர்களுக்கு படகுகளும், வலைகளும் மானிய விலையில் வழங்கப்படும்; மீன்களை பாதுகாக்க குளிர்பதன கிடங்குகள் அமைக்கப்படும்.
இது தொடர்பாக ஏற்கனவே பல அறிவிப்புகள் உள்ளன.
* ஆழ்கடல் மீன்பிடிக்கும் முறை ஊக்குவிக்கப்படும்; படகுகள், வலைகள் வாங்க நிதி.
ஆழ்கடல் மீன்பிடி படகுகளுக்கு, அரசு மானிய உதவி வழங்கி வருகிறது.
* மீன்பிடி தடைக்கால நிவாரணம் இரட்டிப்பாக்கப்படும்
உதவித்தொகை உயர்த்தப்படும் என, ஏற்கனவே பல வாக்குறுதிகள் வந்துள்ளன.


* ஒருங்கிணைந்த மீன்பிடி துறைமுகங்கள்; கடலரிப்பைத் தடுக்க, துாண்டில் வளைவுகள், அலையாத்தி காடுகள்.
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்; கடலரிப்பு பிரச்னைக்கு தீர்வாகும்.
* உள்நாட்டு மீனர்களுக்கான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்
ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு ஊக்கம் அளிப்பதுபோல், உள்நாட்டு மீனவர்கள் நலனினும் அக்கறை செலுத்துவது நல்லது.
* மீனவப் பெண்கள் மீன் வளர்க்கவும், கடல் பாசி வளர்க்கவும் ஊக்கப்படுத்தப்படும்.மீனவப் பெண்கள் பொருளாதார ரீதியாக முன்னேற வழிவகுக்கும்.


* தமிழக மீனவர்கள் மீதான சட்ட விரோத தாக்குதல் தொடர்ந்தால், 'இன்டர்போல்' உதவியுடன் கைது செய்ய நடவடிக்கை.
சாத்தியமில்லை.
* கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள அணு உலை, ரசாயன தொழிற்சாலைகள் அகற்ற நடவடிக்கை.
தொழில் துறை மேம்பாட்டுக்கு வழிவகுக்காமல், இதுபோன்ற நடவடிக்கை எடுப்பது பெரும் ஆபத்தாக அமையும்.
* கச்சத்தீவை மீட்க உறுதியான நடவடிக்கை.
ஒரு மாநில அரசால் செய்ய முடியாத காரியம்.
* மீனவர்கள் பெற்ற கூட்டுறவு சங்கக் கடன் தள்ளுபடி.
கூட்டுறவு சங்கங்கள் திவாலாகி விடும்.
* முதல்வர் தலைமையிலான குழு, இலங்கை அதிபர், இந்திய பிரதமரையும் சந்தித்து, பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்துப்படும்.
பல தரப்பிலும் சொல்லப்பட்ட வாக்குறுதி.


போக்குவரத்து துறை
* சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட நகரங்களில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, சில பகுதிகளில் மிதிவண்டி பயணம் ஊக்குவிக்கப்படும். அரசு சார்பில், மிதிவண்டி மையங்கள்
அமைக்கப்படும். எங்கு வேண்டுமானாலும் எடுத்து, எங்கு
வேண்டுமானாலும் விடும் வசதி ஏற்படுத்தப்படும்.
ஏற்கனவே, சென்னை மாநகராட்சி அறிவித்த திட்டம் இது. செயலுக்கு வந்ததாக தெரியவில்லை.
* சென்னையில், பொது போக்குவரத்தை வலுப்படுத்தும் நோக்குடன், பஸ் விரைவு போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும்.
ஏற்கனவே அரசு அறிவித்து, ஆரம்ப கட்ட பணிகளை துவங்கி உள்ளது.

* அரசு போக்குவரத்து கழகத்துக்கான மக்கள் சாசனம் வெளியிடப்படும். அதில் பயண நேரம், பேருந்து புறப்படும் நேரம், சேரும் நேரம், பேருந்தின் துாய்மை, சொகுசு உறுதி செய்யப்படும்.
இது ஏற்கனவே, தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டது தான்.

* போக்குவரத்து கழகங்களில் நடக்கும் ஊழல்களையும், அரசியல் தலையீடுகளையும், முழுமையாக களையும் வண்ணம் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்
ஆளுங்கட்சி சங்கத்தினர், 'ஆன் டூட்டி', 'அதர் டூட்டி' என, 5,000 பேர் வரை பணி செய்யாமல், சுற்றுவதை நிறுத்தும் வகையில் சீர்திருத்தம் அமைய வேண்டும்.


* ஆம்னி பஸ்களுக்கு போட்டியாக, அனைத்து வசதிகளுடன் கூடிய அரசு பஸ்கள்.
ஆம்னி பஸ்களுக்கு இணையான வசதியை, பயணிகள் விரும்புகின்றனர். ஆனால், பஸ்களை முறையாக பராமரிக்க வேண்டும்.
* லாபத்தில் இயங்கும் சுங்க சாவடிகளில், கட்டணம் ரத்து செய்யப்படும். பராமரிப்புக்காக, 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும்.
குறிப்பிட்ட சாலைகளில், ஆண்டுதோறும் அதிகரிக்கும் வாகனங்களின் அடிப்படையிலும், கட்டணம் மாற்றம் செய்ய முடியும். அதையும் செய்தால் சிறப்பு.
* சென்னை போன்ற நகரங்களில்,
ஒருங்கிணைந்த போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும்
ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். முழுமை அடையவில்லை. பிற நகரங்களிலும்,
இது செயலுக்கு வந்தால் நல்லது.
* பஸ் கட்டணங்கள் குறைக்கப்படும்
நஷ்டத்தில் இயங்கும் கழகங்களை, லாபகரமாக மாற்றினால் மட்டுமே இது சாத்தியம். இருக்கும் கட்டணத்தை உயர்த்தாமல் இருந்தாலே போதும்.
* நிர்வாகத்தின் முடிவுகளில், தொழிலாளர்களுக்கு பங்களிப்பு அளிக்கும் வகையில், நிர்வாக அமைப்பு மாற்றப்படும்.
நிர்வாகத்தில் தேவையான மாற்றங்களை, இதுவரை செய்ய முடியவில்லை. பங்களிப்பு என்பதெல்லாம் சாத்தியமில்லை.
* ஓய்வு பெற்றவர்களுக்கான நிலுவை தொகை, 2,000 கோடி ரூபாய் உடனடியாக வழங்கப்படும்.
நிதி நிலைமையை பார்க்கும்போது, இதெல்லாம் உடனடி சாத்தியமில்லை. சில தவணைகளில் தரும் வகையில், திட்டத்தை வகுக்கலாம்.
* ஆம்னி பஸ்கள் கட்டணம் முறைப்படுத்தப்படும்.
இந்த பஸ்களில் பல, 'பர்மிட்' இல்லாமலே ஓடுகின்றன. அப்படி இருக்கையில், எப்படி கட்டணத்தை முறைப்படுத்தப்படும் என்ற கேள்வி எழுகிறது.
* சென்னையில் மாநகர பஸ்களின் எண்ணிக்கை, 8,000 ஆக
உயர்த்தப்படும்.
தற்போது, 3,600 பஸ்கள் உள்ள நிலையில், ஐந்தாண்டு ஆட்சிக்குள், 8,000 பஸ்களாக உயர்த்துவது சாத்தியமில்லை.
* சென்னையில், அனைத்து பஸ்களிலும் இலவசமாக பயணம் செய்ய மக்கள் அனுமதிக்கப்படுவர்
கொடுக்கிற காசுக்கு, முறையாக பஸ்களை பராமரித்து, நேரத்துக்கு இயக்குங்கள் என்பது தான், பயணிகளின் விருப்பம். மாற்றி யோசிக்கவும்.


மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை

* சுயதொழில் துவங்க முன்வரும் மாற்றுத் திறனாளிகளுக்கு, உள்ளாட்சிகளில் கட்டப்படும் வணிக வளாகங்களில், முன்னுரிமை அடிப்படையில் கடைகள்.
மாற்றுத் திறனாளிகள், சொந்த காலில் நிற்க உதவும்.

* குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து; 60 வயதான அனைவருக்கும் மாதம், 2,000 ரூபாய்; மாற்றுத் திறனாளிகளுக்கு மாதம், 2,500; கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் மாற்றுத் திறனாளிகளுக்கு, 3 சதவீத இடஒதுக்கீடு.
இவை பல முறை அறிவிக்கப்பட்டவை.

* மாற்றுத்திறன் கொண்ட முதியோருக்கு அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் விடுதிகள் அமைக்கப்படும்.
மாற்றுத் திறனாளிக்கென தனியாக இல்லாமல், முதியோரும் தங்கும்
வசதி நடைமுறையில் உள்ளது.

* அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொதுஇடங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் சென்று வரும் வகையில் கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.
இது ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.

உயர்கல்வி
* உயர்கல்வி கற்பதற்காக, பொதுத்துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக்கடன் தள்ளுபடி செய்யப்படும்.அதற்கான தொகையை வங்கிகளுக்கு அரசே செலுத்தும்.
மதுவிலக்கை கொண்டு வரும் நிலையில், மது வருவாய் இழப்பால், நிதி பற்றாக்குறை ஏற்படும்.
எனவே, வங்கிக் கடனை அடைக்க ஏது பணம்?
* பள்ளி, கல்லுாரிகள் மற்றும் பாலிடெக்னிக்களில்
திறன்சார் கல்வி வழங்கப்படும்.
பல முறை அறிவிக்கப்பட்ட ஒன்று. இருக்கும் திறன்சார் மையங்களே முறையாக செயல்படவில்லை.

* கல்லுாரி படிப்பு முடிக்கும்போது வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும்.
தனியார் நிறுவனங்களில், காலியிடங்கள் உள்ளன. திறன்மிக்க மாணவர்களுக்கு தான் பற்றாக்குறை.
* தொழில்நுட்ப கல்வி மற்றும் பயிற்சி வழங்க உலகத் தரத்தில், கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்படும். இதில் படிப்போருக்கு வேலை உறுதி.
ஐ.ஐ.டி.,யில் படித்தவர்களே, வேலை இல்லாமல் உள்ளனர்.
* பல்கலைகளை நிர்வகிக்க, நிர்வாக பொது சட்டம் கொண்டு வரப்படும்.
கோடிக்கணக்கில் நிதி உதவி தரும், பல்கலை மானியக் குழுவின் பரிந்துரைகளையே, தமிழக பல்கலைகள் மதிப்பதில்லை.
* சென்னை பல்கலை, அண்ணா பல்கலைகள் திறன்சார் அறிவு மையங்களாக தரம் உயர்த்தப்படும்.
ஏற்கனவே, திறன்சார் பல்கலைகளாக அந்தஸ்து பெற்றுள்ளன.
* ஆராய்ச்சிக்காக மட்டுமே, ஆறு ஒருமை பல்கலைகள் அமைக்கப்படும்.
பல்கலைகளின் முக்கிய பணிகளே ஆராய்ச்சி தான்.
* இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி
நிறுவனம், மத்திய அரசிடம் வலியுறுத்தி அமைக்கப்படும்.
இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில்; அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை; இந்திய அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்; தேசிய கல்வி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் போன்றவை ஏற்கனவே உள்ளன.
* தமிழகத்தை, ஐந்து மண்டலங்களாக பிரித்து, ஐ.ஐ.டி.,க்கு இணையான, மாநில உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் அமைக்கப்படும். ஒவ்வொரு மண்டலத்திலும், ஒரு வேளாண் மற்றும் சட்டக் கல்லுாரி அமைக்கப்படும்.
அண்ணா பல்கலை, ஏற்கனவே உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனம் போன்று தான் செயல்படுகிறது.


* அங்கீகாரம் பெறாத கல்லுாரிகள் அனைத்தும்
மூடப்படும். உள்கட்டமைப்பு இல்லாத கல்லுாரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.
முறையாக அமலுக்கு வந்தால் வரவேற்கலாம்.
அங்கீகாரம் அற்ற கல்லுாரிகளில், லட்சக்கணக்கான பணத்தை இழந்து, தற்கொலை செய்யும் மாணவர் எண்ணிக்கை குறையும்.
* பல்கலை பேராசிரியர்கள், பணியாளர்களை தேர்வு செய்ய தனி ஆணையம் அமைக்கப்படும். இதன்மூலம் ஊழல் ஒழிக்கப்படும்.
பணம் வாங்கிக்கொண்டு பணி நியமனம் செய்வது குறையும்.


ரயில்வே துறை
* நிலுவையில் இருக்கும் ரயில் பாதை பணிகளை, விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக திட்ட செலவில், 50 சதவீதத்தை மாநில அரசு வழங்கும்.
இன்றைய தேவை மற்றும் யதார்த்தத்தை அறிந்து, அறிவித்துள்ள திட்டம். திட்ட நிதி தொடர்பாக, ரயில்வேயுடன் மாநில அரசு கைகோர்த்தால் மட்டுமே, விரைவில் பல ரயில் திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர முடியும்.
* சென்னையில், மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்தப்படும். கோவை, மதுரை, சேலம், திருச்சி, நெல்லை ஆகிய மாநகரங்களில், மெட்ரோ ரயில்கள் அறிமுகப்படுத்தப்படும்.
கோவை, மதுரை விரைவில் சாத்தியம். மற்ற நகரங்களில் எப்படி சாத்தியம் என்பது தெரியவில்லை.


அறநிலையத்துறை
* கோவில் நிர்வாகத்தில், அரசியல்
தலையீடு முற்றிலும் ஒழிக்கப்படும்.
கோவில் நிர்வாகம் என்பது, அரசின் கீழ் இயங்கும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் வரையில், அரசியல் தலையீட்டை ஒழிக்க முடியாது.
* கோவில்களுக்கான மின் கட்டணம்,
40 சதவீதம் வரை குறைக்கப்படும்.
பெரிய கோவில்களில் மட்டும் செயல்
படுத்தினாலே, மின் துறைக்கு நஷ்டம் அதிகமாகும். 38 ஆயிரம் கோவில்களுக்கு எப்படி சாத்தியமாகும்?


* கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் மீட்பு
தமிழகத்தில் இரண்டு லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள், ஆக்கிரமிப்பில் உள்ளன. இவற்றை மீட்டால் போதும்; ஒவ்வொரு கோவிலும், திருப்பதி தேவஸ்தானம் அளவுக்கு உயரும்.
* ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் இடங்கள் மீட்கப்படும்.
அறநிலையத் துறைக்கு சொந்தமான, 22 ஆயிரம் சதுர அடி கட்டடங்கள்; மூன்று கோடி சதுர அடி நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. இவை மீட்கப்பட வேண்டும்.
* பழங்கால கோவில்கள் சீரமைக்கப்படும்
லட்சத்துக்கும் அதிகமான கோவில்கள் உள்ளன. இதில், அறநிலையத் துறை வசம், 38 ஆயிரம் கோவில்கள் உள்ளன. கவனிக்கப்படாமல், சிதிலமடைந்த கோவில்கள் நிறைய உள்ளன. பழமையை எடுத்துக்கூறும் இக்கோவில்கள் சீரமைக்கப்பட வேண்டும்.

மது ஒழிப்பு
* முழு மதுவிலக்கு அமல்படுத்தப்படும்.
பக்கத்து மாநிலங்களில், மது விற்பனை உள்ளதால், மதுவிலக்கை அமல்படுத்துவது சிரமம்.
* கள்ளச்சாராய விற்பனையை கட்டுப்படுத்த தவறிய ஊராட்சி தலைவர், கிராம நிர்வாக அதிகாரி, காவல் ஆய்வாளர் ஆகியோர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவர்.
ஒவ்வொரு அரசு ஊழியர் அமைப்புக்கும் சங்கம் இருப்பதால், பணியிடை நீக்கம் செய்வது சுலபம் அல்ல. போலீஸ் மட்டும் விதிவிலக்கு.
* கள்ளச்சாராய வழக்குகளை விசாரிக்க, சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். ஆறு மாதங்களில் விசாரித்து
தீர்ப்பு அளிக்கப்படும். தீர்ப்பு வழங்கப்படும் வரை, பிணையில் வெளிவர முடியாத வகையில், சட்ட திருத்தம் செய்யப்படும்.
வழக்கறிஞர்களுக்கு வேலை வாய்ப்பு. ஆனால், நீதிபதிகளுக்கு பற்றாக்குறை உள்ளதால், கள்ளச்சாராய சிறப்பு நீதிமன்றம் அமைத்தாலும் பலன் இல்லை.

ரேசன் கடை
* தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் கணினி மயமாக்கப்படும்.
இத்திட்டத்திற்கான அறிக்கை ஏற்கனவே தயாரிக்கப்பட்டு, அதற்கான பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளது.
* அனைத்து ரேஷன் பொருட்களையும், அனைத்து நாட்களிலும் வழங்க வகை செய்யப்படும்.
அறிவிப்போடு நின்று, ரொம்ப வருஷம் ஆகி விட்டது.
* சென்னை உள்ளிட்ட நகரங்களில், சிறிய அளவில் நடத்தப்பட்டு வரும் பண்ணை பசுமை கடைகள், தமிழகம் முழுவதும்
நீட்டிக்கப்படும்.
ஏற்கனவே மாவட்டம்தோறும் நீட்டிக்கப்பட்டு வருகிறது


* அரிசி, 20 கிலோ மூட்டையாகவும், பிற பொருட்கள், ஒரு கிலோ பாக்கெட்டுகளிலும் வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம், எடையில் தில்லுமுல்லு செய்ய முடியாது.
* 200 குடும்ப அட்டைகள் உள்ள பகுதிகளில், பகுதி நேர ரேஷன் கடைகள் திறக்கப்படும்
இதன்மூலம் ஊழியர்களும், பொது மக்களும்
சிரமப்பட வேண்டியதில்லை.
* பண்ணை பசுமை கடைகளுக்காக, மாவட்ட அளவில், அரசு கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும். இதனால், காய்கறிகளுக்கு, நல்ல விலை
கிடைப்பது உறுதி செய்யப்படும்.
விவசாயிகளுக்கு உரிய விலையும், பொது மக்களுக்கு நியாய விலையிலும் கிடைக்கும்.

வேளாண்துறை
* வேளாண் துறைக்கு தனிபட்ஜெட் தாக்கல்
செய்யப்படும்.
இது விவசாயிகளின் எதிர்பார்ப்பு என்பதால், எல்லா தரப்பிலும் இருந்து அறிவிப்பு வருகிறது. எந்த வாக்குறுதியை விவசாயிகள்
நம்புவர் என தெரியவில்லை.
* தமிழகத்தில் பாயும் நதிகளை இணைக்க
நடவடிக்கை
எடுக்கப்படும்.
இது, நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்
பட்ட விஷயம் தான். நாடு முழுவதும், நதிகள் இணைப்பு திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்த திட்டமிட்டுள்ளது.
* சென்னையில் கூவம், அடையாறு உள்ளிட்ட
நீர்நிலைகள் துாய்மைப்படுத்தி
அழகாக்கப்படும்.
துரைமுருகனை துாக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட, அச்சு பிசகாமல் அப்படியே சொல்வார்.
* உழவர் பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்.
உழவர்களுக்கு இனி எந்த வங்கியும் கடன் தர மறுக்கும் நிலைமை ஏற்படலாம்.

* தோட்டக்கலைத் துறை, நீர்ப்பாசனத் துறை ஆகியவற்றிற்கு தனித்தனி அமைச்சகங்கள் உருவாக்கப்படும். புதிய
அமைச்சர்கள் நியமிக்கப்படுவர். இவர்களை சேர்த்து வேளாண் துறைக்கு, மொத்தம், மூன்று அமைச்சர்கள் இருப்பர்.
தோட்டக்கலைத் துறைக்கு புதிய அமைச்சர் தேவையற்றது. நீர்பாசனத் துறைக்கு
தனி அமைச்சர் தேவை. அமைச்சர் நியமனத்தை விட, துறை செயலர்களை கூடுதலாக நியமனம்
செய்வதே சிறந்தது என்கிற கருத்து, விவசாயிகள் மத்தியில் உள்ளது.
* உரம், பூச்சி மருந்து, விதைகள், மின் மோட்டார் இலவசம்.
இலவசமாக வழங்குவதால், விவசாயிகள்
மத்தியில் சாகுபடி ஆர்வம் குறையும்.
கட்டுப்படியாகும் விலையிலும், தட்டுப்பாடு இன்றியும், இடு பொருட்களை வழங்கினால் போதும்.

* நான்கு வேளாண் பல்கலைகள் அமைக்கப்பட்டு, இஸ்ரேல் வேளாண் துறைஉடன் உடன்பாடு
செய்யப்படும்.
இருக்கும் ஒரு பல்கலையை மேம்படுத்தினாலே போதும்.
* பிரேசில், ஆஸ்திரேலியா, சிரியா போன்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தை
பயன்படுத்தி, சீமை கருவேல மரங்கள் அழிக்கப்படும்.
அதிகாரிகளின் வெளிநாட்டு பயணத்திற்கு தான் வழிவகுக்கும்.
* அரசு நிலங்கள் மற்றும் புறம்போக்கு நிலங்களில் வளர்ந்துள்ள யூகலிப்டஸ் தைல மரங்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
யூகலிப்டஸ் இலைகளில் தைலம் தயாரிக்கப்படுகிறது; மூலிகையாகவும் பயன்படுகிறது.
* டெல்டா மாவட்டங்களில், கூடுதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
இருக்கும் நிலையங்களே போதுமானவை தான். அங்கு நடக்கும் முறைகேடுகளை களைந்தால் நல்லது.
* டில்லி, பெங்களூரு போல, திருச்சியில், 'சபல் சந்தை' அமைக்கப்படும்.
அரசு மூலம், பிரம்மாண்ட சந்தை அமைக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
* பனையில் இருந்து பதநீரும், தென்னையில் இருந்து நீராவும் இறக்கி விற்க, அனுமதி அளிக்கப்படும்.
இதில், விவசாயிகளிடம் இரு கருத்துகள்
உள்ளன. விவசாயிகளின் முழு கருத்தையும் அறிவது அவசியம்.
* ஐந்து ஆண்டுகளில், 50 ஆயிரம் கோடி
ரூபாயில் நீர்ப்பாசனம் பெருக்கு திட்டம் செயல்படுத்தப்படும்.
ஒரே துறைக்கு இவ்வளவு கோடி ரூபாயை
ஒதுக்கி பணிகளை மேற்கொள்வது சாத்தியம் இல்லை.
* ஆறுகள் மற்றும் கால்வாய்களில், 5 கி.மீ.,க்கு, ஒரு தடுப்பணை கட்டப்படும்.
ஆறுகளில் தடுப்பணைகள் அமைப்பது வரவேற்கத்தக்கது. கால்வாய்களில், தடுப்பணைகள் கட்டுவது, எந்த அளவிற்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை.

* விவசாயிகள் பயன்பாட்டுக்காக, ஒவ்வொரு ஊராட்சிக்கும், ஒரு டிராக்டர் இலவசமாக வழங்கப்படும்.
அதை அவர்கள் வாடகைக்கு விடாமல் இருந்தால் சரி.
* ஒவ்வொரு மாவட்டத்திற்கும், ஒரு வேளாண்சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும்.
அதனால், விவசாயிகளுக்கு
என்ன பயன் என்பதை
பொறுத்து, இதற்கு வரவேற்பு கிடைக்கும்.
* மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்கள் அனுமதிக்கப்படாது. மத்திய அரசின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே பலனளிக்கும்.

மின்துறை

* மின் துறை சீர்திருத்தம் மூலம், 15 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்படும்.
மின் வாரியத்தின் கடன், ஒரு லட்சம் கோடி ரூபாயை எட்டி உள்ளது; விவசாயம், குடிசைகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படுவதால், மின் கட்டணத்தை குறைக்க வாய்ப்பில்லை.

* இரு மாதங்களுக்கு, ஒரு முறை மின் கட்டணம் செலுத்துவதற்கு பதில், மாதத்திற்கு ஒரு முறை செலுத்தும் முறை வரும். இதனால், 25 சதவீதம் வரை கட்டணம் குறையும்.
முன்பு நடைமுறையில் இருந்த ஒன்று தான். இந்த தேர்தலுக்கு வாக்குறுதியாக பயன்படுகிறது.
* வீட்டின் கூரைகளில், சூரிய ஒளி மின் உற்பத்தி ஊக்குவிக்கப்படும். அந்த மின்சாரத்தை அரசு பெற்று, அதற்கான விலையை வழங்கும்.
மின்சாரத்திற்கு தட்டுப்பாடு நிலவும் காலகட்டம்
என்பதால், ஆட்சிதோறும் இந்த அறிவிப்பு
இடம்பெறுகிறது.


* தமிழகத்தில் உள்ள, 12,500 ஊராட்சிகளிலும், தலா, 1 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி மின் நிலையம் அமைக்கப்பட்டு, அதில் இருந்து, அங்குள்ள வீடுகளுக்கு மின்சாரம் வழங்கப்படும். இது, 10 ஆண்டு கால திட்டமாக செயல்படுத்தப்படும்.
கிராமங்களுக்கு, தடையில்லா மின்சாரம் வழங்க முடியும்; தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்குவதை நிறுத்த முடியும்.
* மின்வாரியத்திற்கு புத்துயிர் ஊட்ட, வல்லுனர்
குழு அமைக்கப்படும்.
மத்திய அரசில், பல நேர்மையான அதிகாரிகள் உள்ளனர். அவர்களை கொண்டு வல்லுனர் குழு அமைத்தால், மின் வாரிய கடனை குறைத்து,
பணிகளை சிறப்பாக்க முடியும்.

மருத்துவம்
* மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லுாரி; அதி உயர் சிறப்பு மருத்துவமனை ஏற்படுத்தப்படும்.
டாக்டர்களுக்கு பற்றாக்குறை உள்ளது; தேவை அதிகம் உள்ளதால், மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லுாரி
இருப்பது நல்லது.
* மருந்து விலையைக் கட்டுப்படுத்த, பிராண்ட் பெயர் இன்றி, ஜெனிரிக் மருந்து ஊக்கப்படுத்தப்படும்.
பிரபல நிறுவனங்களின் பெயரில் விற்பனையாகும் மருந்துகள் விலை அதிகம். குறித்த டாக்டர் தரும் மருந்து, அவரது மருந்து கடையில்தான் கிடைக்கும் என்ற நிலை உள்ளது. இந்த சிக்கல் தீர்க்கவும், மருத்துவ செலவை குறைக்கவும், ஜெனிரிக் மருந்து அவசியம்.
* மகப்பேறு கால உதவி, 12 ஆயிரம் ரூபாயில் இருந்து, 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
தாய், சேய் நலன் சார்ந்த திட்டம்; உதவித்தொகையை உயர்த்துவது, ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
* ஆரம்ப சுகாதார நிலையங்கள் அனைத்தும் படிப்படியாக, 24 மணி நேரமும், முதல் உதவி தரும் வகையில்
தரம் உயர்த்தப்படும்.
எல்லாவற்றுக்கும் தனியார் மருத்துவமனை செல்ல தேவை குறையும்.
* பள்ளி மருத்துவ பரிசோதனை திட்டத்தின் கீழ், அனைத்து மாணவர்களுக்கும், முழு உடல் பரிசோதனை.
பள்ளி சுகாதார திட்டம் இருந்தாலும், தற்போது, முழு உடல் பரிசோதனை என்பது, ஆரம்ப நிலையில்
நோய்களைக் கண்டறிந்து தடுக்க முடியும்; மாணவர் கல்வித் திறன் கூடும்.
* பொதுமக்கள் அனைவருக்கும், முழு உடல் பரிசோதனை செய்யப்படும்; இதற்காக, 'ஸ்மார்ட் கார்டு' வழங்கப்படும்.
இதை கட்டாயம் ஆக்கலாம்; நோய் பாதிப்புகள் அதிகமாவது தடுக்கப்படும்.
* விழுப்புரம் மாவட்டத்தில், சித்த மருத்துவக் கல்லுாரி துவங்கப்படும்.
தமிழகத்தில் ஏற்கனவே இரண்டு கல்லுாரிகள் உள்ளன. சித்த மருத்துவம் மீதான விழிப்புணர்வு
அதிகரித்து வருவதால், கூடுதல் கல்லுாரிகள் அவசியம்.

* அனைவருக்கும் இலவச மருத்துவம் வழங்கப்படும்; மருத்துவத்துக்காக, ஒரு காசு கூட சொந்தப் பணத்தை செலவு செய்ய வேண்டியது இல்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
கேட்பதற்கு நன்றாக உள்ளது; நடைமுறைக்கு சாத்தியமில்லை; பல சிக்கல்கள் உருவாகும்.
* புற்றுநோய் சிகிச்சைக்கான மருந்து அதிக விலை கொண்டது என்பதால், அவற்றை வாங்க மக்களுக்கு நிதி உதவி வழங்கப்படும். இதற்காக, தனி நிதியம் ஏற்படுத்தப்படும்.
நிதியுதவிக்கு பதிலாக, அந்த மருந்து, மாத்திரைகளையே வாங்கி தரலாமே.
* உலகின் சிறந்த மருத்துவ நிறுவனங்களுடன், தமிழகத்தில் உள்ள மருத்துவக் கல்லுாரிகள், மருத்துவமனைகள் இணைக்கப்படும்.
இன்னும் மாநில அளவில் அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லுாரிகளைக் கூட சரியாக
ஒருங்கிணைக்க முடியாதபோது, இது, நடைமுறைக்கு சாத்தியம் இல்லை.
* குழந்தைகளுக்கு, 1 வயது நிறைவடையும் வரை, தாய்க்கு தினமும், 1 லிட்டர் பால் இலவசம்.
வினியோகத்தில் பல சிரமங்கள் உருவாகும். இலவசங்கள் கூடாது என்ற பா.ம.க.,வின் நிலைப்பாட்டுக்கு முரணாக உள்ளது; நடைமுறையிலும்
சாத்தியம் இல்லை.
* மாநில மருத்துவமனை தரக் கட்டுப்பாட்டு வாரியம் உருவாக்கப்படும். அரசு, தனியார் மருத்துவமனைகளும், இந்த சான்றிதழ் பெற வழி வகுக்கப்படும்.
ஊழலுக்கே வழி வகுக்கும்.
* தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்; பொட்டலங்கள், பெட்டிகளில் உள்ள உணவின் சத்து விவரங்கள் வெளிப்படை ஆக்கப்படும்.
உணவு பாதுகாப்பு தர நிர்ணயச் சட்டத்தை நடைமுறைப்படுத்தினால், இந்த சிக்கல்கள் தீரும். காலத்திற்கேற்ப திருத்தம் செய்ய, மத்திய அரசு குழு அமைத்துள்ளது.

* அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்; பிரிமியம் தொகையை அரசு செலுத்தும்.
முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

ஊழல் ஒழிப்பு
* ஊழலை ஒழிப்பதற்காக, லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வரப்படும்.
ஏற்கனவே பல மாநிலங்களில், நடைமுறையில் உள்ளது.
* தகவல் ஆணையம், 10 உறுப்பினர்கள் மற்றும் தலைவரைக் கொண்ட, வெளிப்படையான அமைப்பாக மாற்றப்படும்.
ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.
* அனைத்து அரசு அலுவலகங்களும், கம்ப்யூட்டர்
மயமாக்கப்படும்.
ஏற்கனவே பணிகள் நடந்து வருகின்றன.
* பொதுச்சேவை பெறும் உரிமை சட்டம்.
இதுவும் பல மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது.

* மாவட்ட அளவில், கலெக்டர்களும், துறை அளவில் செயலர்களும், ஊழல் ஒழிப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். அவர்களின் அலுவலகங்களில், ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால், தவறு செய்தவர்கள் மட்டுமின்றி, தடுக்கத் தவறிய பொறுப்பு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது வரவேற்கத்தக்கது. தடுக்க தவறுபவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுவது, தவறை குறைக்க உதவும்.
* அனைத்து அரசு அலுவலகங்களிலும், கண்காணிப்பு கேமரா பொறுத்தப்படும்.
வீண் அரட்டை அடிப்போரை கண்டுபிடிக்க உதவும்.
* ஊழல் குறித்து புகார்
தெரிவிக்க, மூன்று இலக்க இலவச டெலிபோன் சேவை.
நடவடிக்கை இருந்தால் மட்டுமே, இந்த எண் பயனுள்ளதாக இருக்கும்.

வணிகர் நலன்
* விதிமீறி செயல்படும் வணிக நிறுவனங்களை, மூடும் நடவடிக்கை எடுக்காமல், பிற நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
வரி ஏய்ப்பு நிறுவனங்களுக்கு சலுகை காட்டுவது சரியாக அமையாது.
* சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தை அமல்படுத்தும்போது, அது ஒருமுனை வரியாக இருக்க வலியுறுத்தப்படும்.
பல வரிகள் உள்ளதால், நடைமுறைசிக்கலுக்கு தீர்வு காணவே, ஒருமுனை வரியாக, ஜி.எஸ்.டி., கொண்டு வரப்படுகிறது.


நிர்வாகம்:
* முதல்வர் மற்றும் அமைச்சர்களின் சொத்து விவரங்கள், ஆண்டுதோறும் ஜனவரி முதல் நாளில் வெளியிடப்பட்டு, மக்கள் தணிக்கைக்கு உட்படுத்தப்படும்.

இதன்மூலம், அவர்களின் சொத்து விவரங்களை, மக்கள் அறிய முடியும்.
*
புதிய அரசு பதவியேற்று, ஒவ்வொரு ஆண்டின் நிறைவிலும், அமைச்சர்களின் செயல்பாடுகள் ஆய்வு செய்யப்பட்டு, அதன் முடிவுகள், மக்கள் பார்வைக்காக வெளியிடப்படும்.


அமைச்சர்கள் செயல்படுகின்றனரா, இல்லையா என்பதை அறியலாம்.

* இரண்டாவது தலைநகரமாக, திருச்சி அறிவிக்கப்படும்.

தென் மாவட்ட மக்களுக்கு, உதவியாக இருக்கும்.

* முடிவுகளை விரைவில் எடுக்க, எல்லாத் துறைகளிலும், மாவட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம்.

கோப்புகள் விரைவாக நகர உதவியாக இருக்கும்.

* கலெக்டருடன் தபேதார் செங்கோல் ஏந்தி வரும், ஆங்கிலேயர் ஆட்சி முறையின் அடையாளம் ஒழிக்கப்படும்.

ஆடம்பரம் குறைவது நல்லது.

* 12 லட்சம் பேர் இருக்கும் வகையில், மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.
மாவட்டத்தின் கடைகோடியில் இருப்போர், கலெக்டர் அலுவலகத்திற்கு, நீண்ட துாரம் அலைவது தவிர்க்கப்படும்.


* எல்லா அரசு அலுவலகங்களிலும், மக்கள் சாசனம்; அனைத்து அலுவலகங்களிலும், மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடம்.

ஏற்கனவே நடைமுறையில் உள்ளது.


தொழில்கள்
* தொழில் முதலீடு செய்ய முன்வருபவர்களை சந்திக்க முதல்வர் வாரம், 3 மணி நேரம் ஒதுக்குவார்.
அர்ப்பணிப்பு உணர்வுடன் கூடிய அதிகாரிகள், அமைச்சர் இருந்தாலே போதும். முதலீடு ஈர்ப்பது மட்டுமா, முதல்வரின் வேலை?
* கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் பணிக்குச் செல்லும் பெண்களின் குழந்தைகளை கவனிக்க மையங்கள்.
கிராமப் பகுதிகளில், முதலில் ஆலைகள் வரட்டும். விவசாயப் பணிக்குச் செல்வோருக்கு இது பொருந்துமா?
* விசைத்தறி தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை ஊதிய உயர்வு. அவர்களுக்கு தொடர்ந்து வேலை கிடைப்பதை முதலில் உறுதி செய்யுங்கள்.
* வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள், இங்கு தொழில் துவங்கினால், முன்னுரிமை அடிப்படையில் அனுமதி. 'கமிஷன்' இல்லா அனுமதி என்றால் பாராட்டி இருக்கலாம்.
* தொழில் வளர்ச்சிக்காக, தமிழகம், 5 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலமும், தனித்தனிப் பொருளாதார ஆணையரகங்களாக அறிவிக்கப்படும்.
ரொம்ப குழப்பமா இருக்கே. பெரிய முதலீடுகளுக்கு சென்னையில்தான் அனுமதி தரப்படும். அதனால், பணம், நேரம் விரயம்.
* தொழில் துறை மற்றும் முதலீட்டை ஈர்ப்பதில்
ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை முதல்வர் ஆலோசனை.
முதல்வர், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஆலோசனை தேவையற்றது.
* பன்னாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கான விளம்பரத் துாதராக முதல்வர் அன்புமணி செயல்படுவார்.
இது, ரொம்ப ஓவர்!
* அன்புமணி, முதல்வர் என்பதைவிட, தமிழகம் என்ற நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக செயல்படுவார்.
ஓ... இது தமிழகத்தை கார்ப்பரேட் நிறுவனமாக மாற்றும் முயற்சியா?* ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு தொழிற்கல்வி நிலையம்; ஒவ்வொரு வட்டத்திலும், தொழிற்பயிற்சி நிலையம்.
தொழிற்சாலைகளில் திறன்மிக்க ஊழியர்கள் தேவைப்படுவதால், அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிலையங்கள் அவசியம்.
* ஓசூரில் துவங்கி கிருஷ்ணகிரி, தர்மபுரி வரையுள்ள பகுதி, தகவல் தொழில்நுட்பத் தாழ்வாரமாக மாற்றப்படும்.
தொழில் பெருவழிப்பாதை பற்றி கட்சிகளும், அரசுகளும் பேசி வரும் நிலையில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்பத்துக்கு தனி திட்டத்தை அறிவித்திருப்பது, இத்துறையில் பின்தங்கியிருக்கும்
தமிழகத்துக்கு உற்சாகம் அளிக்கும்.
*புதிய தொழில் துவங்க முன்வருவோருக்கு, உடனடியாக நிலம் வழங்க வசதியாக, ஒன்றரை லட்சம் ஏக்கரில், நில வங்கி ஏற்படுத்தப்படும். இதில், 1 சதுர அடி கூட விளைநிலமாக
இருக்காது.
இது பழைய அறிவிப்பு போல இருந்தாலும், 1 சதுர அடி விளைநிலம் கூட பாதிக்காது என கூறியிருப்பது, வரவேற்கத்தக்கது.
* உற்பத்தி தொழில் துறை வளர்ச்சிக்கு முன்னுரிமை.
உற்பத்தி துறை வளர்ச்சி பெற்றால், ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
* சென்னை, கோவை ஆகிய நகரங்களில்,
மூலப்பொருட்கள் வங்கி.
சில தொழில்களுக்கான மூலப் பொருட்களை, வெளி மாநிலங்களில் இருந்து வாங்க வேண்டியுள்ளது. அவர்கள், சிண்டிகேட் அமைத்து, விலையை உயர்த்துவதால் ஏற்படும் இழப்பை தவிர்க்கும் இம்முயற்சி வரவேற்புக்குரியது.
* கிராமப்புறங்களில் தொழில் துவங்க முன்வருவோருக்கு அதிக வரிச்சலுகை.
வேலை தேடி நகரப் பகுதிகளுக்கு இடம்பெறுவது தவிர்க்கப்படும்.
* சீன பட்டாசு விற்பனையை தடுக்க, மத்திய அரசுடன் இணைந்து நடவடிக்கை.
பட்டாசுத் தொழில் காக்கப்படும்.
* ஏற்றுமதி அதிகரிப்பு இயக்கம் துவங்கப்படும்
நாட்டுக்கு அன்னிய செலாவணி அதிகம் கிடைக்கும்; தொழில் துறை வளரும்.

* புதிய தொழில் துவங்குவதற்கான அனைத்து அனுமதிகளும், ஒற்றைச்சாளர முறையில் வழங்கப்படும்.
புதிதாக ஒன்றும் இல்லை.
* புதிதாக தொழில் துவங்க, மூன்று வாரங்களுக்குள் அனுமதி.
பல கட்சிகள், இதையே அரைத்த மாவாக அரைத்துக் கொண்டிருக்கின்றன.
* தொழில், வணிக நிறுவன கட்டட அனுமதி,
30 நாட்களுக்குள் வழங்கப்படும்.
இது புதிது அல்ல; அ.தி.மு.க.,வும் இதை அறிவித்துள்ளது. வேறு சில கட்சிகளும், இதே கருத்தை சொல்லி வருகின்றன.
* தொழில் துவங்க விரும்புவோர் வழிகாட்டி அமைப்பு; சிறப்பு நிதி மூலம் வட்டியில்லா கடன் பெற உதவி.
ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
* தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.
இதைத்தான் எல்லா அரசியல் கட்சி களும், ஆண்டாண்டு காலமாக சொல்லி வருகின்றன.
 மதுரை - துாத்துக்குடி தொழில் தாழ்வாரத்தை விரைவாக
உருவாக்கி, புதிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை.
கடந்த முறையும் சொன்னதாக ஞாபகம்.
* நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்தில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம், அங்கு புதிய தொழிற்சாலைகளை அமைக்க நடவடிக்கை.
நாங்குநேரியை பற்றி உறுதிமொழி அளிக்காத
கட்சிகளே இல்லை.
* சிறு மற்றும் குறு விசைத்தறியாளர்களுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தின் அளவு, 100 யூனிட்டுகளாக உயர்த்தப்படும்.
இது ஓர் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தாது.
* விசைத்தறியாளர்கள், சூரிய மின் உற்பத்தி கட்டமைப்பை அமைப்பதற்கான மூலப் பொருட்கள், 90 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
ரொம்ப நாளாக பேசிக் கொண்டிருக்கிறோம்.
* தொழில் முதலீட்டை ஈர்க்க ஆணையம் ஏற்படுத்தப்படும்
இதுபோன்ற அமைப்பு ஏற்கனவே உள்ளது.
* கடலுார், நாகப்பட்டினம் துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கேட்டு கேட்டு காது புளித்து விட்டது.

* சட்ட முன்வரைவுகள், மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு, அவர்கள் விரும்பும் மாற்றத்துடன் நிறைவேற்றப்படும்.
ஒவ்வொரு சட்ட முன்வடிவையும், மக்கள் கருத்து கேட்டு நிறைவேற்றுவதாக இருந்தால், ஆட்சிக் காலத்தை 50 ஆண்டுகளாக உயர்த்த வேண்டும்.

* அமைச்சரவை கூட்டம், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மாவட்டத் தலைநகரத்தில் நடத்தப்படும்.
அமைச்சரவை எங்கு கூடினால் என்ன; அதில் எடுக்கப்படும் முடிவு தான் முக்கியம்.

* தமிழ்நாடு நிர்வாக அடிப்படையில், ஆறு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மண்டலத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக, தலைமைச் செயலர் நிலையிலான அதிகாரி நியமிக்கப்படுவார்.
வீண் செலவு.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016