தி.மு.க., தேர்தல் அறிக்கை: ராமதாஸ் பாய்ச்சல்

Tamilnadu Assembly Election News:  தி.மு.க., தேர்தல் அறிக்கை: ராமதாஸ் பாய்ச்சல்


சென்னை :''எங்கள் கட்சியின் வரைவு தேர்தல் அறிக்கையை, தி.மு.க., காப்பியடித்து தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கான, பா.ம.க.,வின் தேர்தல் அறிக்கையை, நேற்று வெளியிட்டு, கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசியதாவது:பா.ம.க., சார்பில், 13 ஆண்டுகளாக, வரைவு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறோம். அதில், கல்வி, வேலை வாய்ப்பு, விவசாயம், மருத்துவம், தொழில் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் தரப்படும்; தமிழகத்தில், ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரப்படும்.
தமிழகத்தில், 50 ஆயிரம் கோடி பனை மரங்கள் இருந்தன. இந்த மரங்களை, செங்கல் சூளை போடுவதற்காக, வெட்டி அழித்து விட்டனர். தற்போது, 4.5 கோடி பனை மரங்கள் மட்டுமே பாக்கி உள்ளன.
பனை மரங்கள் அழிந்து வருவதைத் தடுத்து, அவற்றின் எண்ணிக்கையை அதிகரிக்க, சிறப்பு திட்டம் கொண்டு வரப்படும். நீரா, பானம், வெல்லம், பனங்கற்கண்டு உள்ளிட்ட பொருட்களின் உற்பத்தியும், விற்பனையும் ஊக்கப்படுத்தப்படும். இப்படி பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்த பா.ம.க., வரைவு தேர்தல் அறிக்கையை காப்பியடித்து தான், தி.மு.க., தேர்தல் அறிக்கை தயாரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மது ஒழிப்புக்காக, 35 ஆண்டுகளாக, போராட்டம் நடத்தி
வருகிறேன். பா.ம.க., ஆட்சிக்கு வந்தால், முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும் என, மக்களுக்கு வாக்குறுதி கொடுத்து
உள்ளோம்.
மதுவை ஒழிக்க, பா.ம.க.,வால் மட்டும் முடியும் என, பெண்கள் உறுதியாக நம்புகின்றனர். தமிழகத்தில், 100 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வரப்படும். இதில், உயர்ந்த ஜாதியினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும்.
இவ்வாறு ராமதாஸ் பேசினார்.
நிகழ்ச்சியில், பா.ம.க., இளைஞர் அணி தலைவர் அன்புமணி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வந்து செல்லும் மாணவர்களுக்கு, பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்படும். மாநிலத்தில், 17 மாவட்டங்களில், அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. 15 மாவட்டங்களில், அரசு மருத்துவ கல்லுாரிகள் இல்லை. இந்த மாவட்டங்களில் மருத்துவக் கல்லுாரி கொண்டு வரப்படும்.
கள்ளச் சாராயம் விற்பனை செய்தால், ஆயுள் தண்டனை வழங்கவும், வழக்குகளை விரைந்து ஆறு மாதங்களில் முடிக்க, தனியாக நீதிமன்றமும் அமைக்கப்படும்.
வேலுார் மாவட்டத்தில், 36 லட்சம் மக்கள் உள்ளனர். இங்கு, 13 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதனால், 12 லட்சம் மக்கள் தொகை அடிப்படையில், மாவட்டங்கள் உருவாக்கப்படும்; 65 மாவட்டங்கள் ஏற்படுத்தப்படும். 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், 350 ரூபாயாக சம்பளம் உயர்த்தப்படும். ஜெயலலிதா, கருணாநிதி என, யாராலும் மதுவிலக்கை கொண்டு வர முடியாது; பா.ம.க.,வால் மட்டுமே முடியும். இவ்வாறு அன்புமணி பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016