தி.மு.க. தேர்தல் அறிக்கை எப்படி? கிருஷ்ணமூர்த்தி ராமசுப்பு, துணை ஆசிரியர், தினமலர்.

நேற்றைய 'தினமலர்' நாளிதழில், தி.மு.க., தேர்தல் அறிக்கை பற்றிய செய்தி முதல் பக்கத்தில் வெளியாகி இருந்தது. பிரிஜ், வாஷிங் மிஷின் இலவசம் என, தேர்தல் அறிக்கையில்
ஏதாவது இலவசம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு பத்திரிகையாளர்கள் மத்தியில் இருந்தது. ஆனால், அப்படி, தமிழகத்தின் நிதி நிலையை சீர்குலைக்கும் அளவிற்கு இலவசம் ஒன்றும் இல்லை. அதனால், 'சபாஷ்' என்ற தலைப்பில் செய்தியை வெளியிட்டு இருந்தோம்.

இலவசங்களை நம்பி தேர்தல் களத்தில் இறங்காமல், தி.மு.க., துணிச்சலாக தேர்தலை சந்திப்பது பாராட்டத்தக்கது. இருப்பினும், இந்த அறிக்கையில் ஏதேனும் புதுமை இருக்கிறதா என்றால், இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த அறிக்கையின் கடைசி பகுதி, 'தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துக்கள்' என தலைப்பிடப்பட்டு இருந்தது. அதில், அறிக்கையில் உள்ளவற்றில், 121 முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தன. அவற்றில், 45 அறிவிப்புகள் வரவேற்கத்தக்கதாகவும், 35 அறிவிப்புகள் தேவையற்றதாகவும், 40 அறிவிப்புகள் பழைய திட்டங்களாகவும், கண்துடைப்பு வேலையாகவும் எங்கள் ஆசிரியர் குழு கருதியது.
இந்த கருத்துருவாக்கத்தில், தமிழகத்தின் நலன் தான் அளவுகோலாக எடுத்துக் கொள்ளப்பட்டது. வெறுப்பு அல்லது ஜாதி அடிப்படையிலான அரசியல் கண்ணோட்டத்தோடு வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும், பொருளாதார ரீதியாக கைகொடுக்காது என்ற அறிவிப்புகளையும் தேவையற்றவையாக கருதினோம்.
இந்த தேர்தல் அறிக்கையை பற்றி அதிகம் பேசப்படும் அம்சங்கள்;
1. மதுவிலக்கு
2. இலவச நவீன ரக அலைபேசி/மாணவர்களுக்கு 3ஜி, 4ஜி இணைய வசதி
3. ஆவின் பால் விலை 7 ரூபாய் வரை குறைப்பு
'வைத்தால் குடுமி, அடித்தால் மொட்டை' என்ற மன முதிர்ச்சி இல்லாத பாணியில், தற்போது, மதுவை பற்றிய தர்க்கமும், அணுகுமுறையும் உள்ளது. மதுவிலக்கை ஆதரிப்பது அரசியல் கட்சிகளுக்கு ஒரு பேஷனாகிவிட்டது. மது விற்பனை அரசின் வேலை அல்ல என்பதில், 'தினமலர்' உறுதியாக இருந்துள்ளது. அதே நேரத்தில், மது என்பது காலம் காலமாக இருக்கும் ஒன்று, தனிநபர் விருப்பத்திற்கு
உட்பட்டது, அதை தடை செய்வதற்கு அரசுக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை என்பதிலும், 'தினமலர்' உறுதியாக உள்ளது. உலகெங்கும் சாதாரணமாக அணுகப்படும் மதுவை தடை செய்வதன் மூலம், தடை செய்யக் கோருவதன் மூலம், கட்சிகள் தமிழனை கொச்சைப்படுத்துகின்றன. தமிழருக்கு நாகரிகமாக நடந்துகொள்ளத் தெரியாது, சம நிலையற்றவர்கள், மன முதிர்ச்சி இல்லாதவர்கள்
என்பனவற்றை சொல்லாமல் சொல்லும் செயல். இலவச நவீன ரக அலைபேசிகளும், மாணவர்களுக்கான இலவச இணைய வசதியும், தகவல் தொழில்நுட்பமும், அலைபேசிகளும் நம் சமுதாயத்தின் ஆணிவேர் வரை சென்றடைந்துள்ள இந்த காலகட்டத்தில் வெறும் பண விரயமே ஒழிய வேறேதும் இல்லை.
ஆவின் பால் விலையை குறைப்பதென்றாகிவிட்டது, அதில், 7 ரூபாய் என்ன கணக்கென்று தெரியவில்லை. இது அமலுக்கு வந்தால், ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் வரை செலவாகும். எப்படி சமாளிப்பர்? ஆவின் கதி என்னாகும்?
காத்திருந்து பார்ப்போம். அதுவரை, இந்த அறிக்கையில், தமிழகத்தை நவீன யுகத்திற்கு அழைத்துச் செல்வதற்கு ஒன்றுமில்லை என்பதே எங்கள் கருத்து.
தி.மு.க., தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை இந்த சிறப்பிதழில் தொகுத்துள்ளோம், நீங்களும் உங்களுக்கான கருத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள்!


மாணவர்கள் நலன்
புதிய கல்விக் கவுன்சில் அமைக்கப்படும் :
சமச்சீர் கல்வியின் தரத்தை அவ்வப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி, கால சூழ்நிலைக்கு ஏற்ப, பாடத் திட்டத்தில் மாற்றம் கொண்டு வர, கல்வி கமிட்டி அமைக்க வேண்டுமென, உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தர
விட்டது. தமிழக அரசு, இதுவரை கமிட்டி அமைக்கவில்லை. எனவே, பல்கலை மற்றும் கல்லுாரிகளின் கல்வியாளர்கள் அடங்கிய, சமச்சீர்
கல்விக்கான புதிய கல்வி கவுன்சில் அமைக்க வேண்டிய தேவையுள்ளது.
25 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி
இதற்கு போதிய உள்கட்டமைப்பு வசதி, பயிற்சியாளர்கள் இல்லை.
ஏற்கனவே பல கல்லுாரிகளிலும், தொழிற்கல்வி நிலையங்களிலும், திறன் பயிற்சி மையங்கள் முறையாக செயல்படவில்லை.

கல்விக் கடன்கள் தள்ளுபடி
இதுகுறித்து, ரிசர்வ் வங்கியின் ஆலோசனைப்படி, வங்கி நிர்வாகங்கள் முடிவெடுக்க வேண்டும். ஆண்டுக்கு, 14 சதவீத வட்டியில், பல ஆண்டுகளாக பல நுாறு கோடி ரூபாய் வங்கிகளுக்கு பாக்கி உள்ளது. அரசின் கஜானாவே திவால் ஆகும் என்பதால், இதை வழங்க, தமிழக அரசின் நிதித்துறை ஒப்புதல் வழங்காது.


* முதல் தலைமுறை ஏழை மாணவர்களுக்கு ஜாதி வேறுபாடின்றி அரசு அளவில் தொழிற்கல்வி
இந்த திட்டத்தில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, இன்ஜி., கவுன்சிலிங்கில் தனி இட ஒதுக்கீடு அமலில் உள்ளது.
* கட்டணம் செலுத்த முடியாத ஏழை மாணவர்களுக்கு அரசே தொழிற்கல்வி கட்டணம் செலுத்தும் -
இது வரவேற்கத்தக்க திட்டம்.
* புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு உறையுள் மையங்கள்
தற்போதும் அண்ணா பல்கலை, அண்ணா நுாலகம் மற்றும் சென்னை பல்கலையில் உள்ளன.
* அரசு பள்ளிகளில் காலியாக உள்ள, 54,233 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புதல்
எட்டு லட்சம் பேர் ஆசிரியர் பணிக்கு காத்திருக்கின்றனர். 5 சதவீதம் பேருக்கு பலன் அளிக்கும். எப்படியிருந்தாலும் அறிவிப்பு வரவேற்கக்கூடியதுதான்.

போக்குவரத்து துறை:

* போக்குவரத்து கழக இழப்புகளை கட்டுப்படுத்த, 1990ல் அமைக்கப்பட்ட தில்லை நாயகம் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துதல்
 இந்த பரிந்துரையை ஏற்பதன் மூலம், ஒரே நேரத்தில், ஒரே வழித்தடத்தில் போக்குவரத்து கழகங்கள் போட்டி போட்டு, பஸ்களை இயக்குவது நிறுத்தப்படும் என்பதால், இதை வரவேற்கலாம்
* அனைத்து மாநகரங்களிலும் மகளிர், மாணவர்களுக்கு சிறப்பு பஸ்களை அதிகம் இயக்குதல்
சென்னையை போன்று, மதுரை, திருச்சி, கோவை உள்ளிட்ட பிற நகரங்களிலும் பள்ளி, கல்லுாரி, தொழிற்சாலைகள் அதிகரித்துள்ளதால், கூடுதல் பஸ்கள் இயக்கத்தை வரவேற்கலாம். போக்குவரத்து கழகங்களுக்கு வருவாய் அதிகரிக்கும்.
* அரசு பஸ்களில் பயண துாரத்தின் அடிப்படையில், ஒரே மாதிரியான பயண கட்டணம்
ஏற்கனவே, 2006 தி.மு.க., ஆட்சியில், பலவித பஸ் கட்டணம் நடைமுறையில் இருந்தது. இருப்பினும், மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில், ஒரே மாதிரியான கட்டணத்தை செயல்படுத்த முன் வந்திருப்பதை வரவேற்கலாம்.

* அரசு பஸ்களில் ஜி.பி.எஸ்., வசதி
ஏற்கனவே சென்னை மாநகர பஸ்களில், இந்த திட்டம் செயல்படுத்த முடியாமல் கிடப்பில் கிடக்கிறது. இதற்கு பதிலாக, ஓட்டை உடைசல்களாகவும், பொத்தலும், தொத்தலுமாகவும் உள்ள பஸ்களை முறையாக பராமரிக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தலாம்.
* நகராட்சி, மாநகராட்சி பஸ் நிலையங்களில், பெண் பயணிகளுக்கு கழிப்பிடம், குளியல் அறை மற்றும் ஆடை மாற்றும் அறைகள் அமைத்தல்
இந்த வசதிகள் ஏற்கனவே பல பஸ் நிலையங்களில் இருக்கின்றன; அதை, முறையாக பராமரித்தாலே போதும்.

அரசு பஸ், அரசு வாகனங்களிலும் பயணம் செய்வோர் விபத்தில் சிக்கும்போது, உரிய இழப்பீடு பெறும் வகையில், காப்பீடு திட்டம் திருத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்நல்ல திட்டம் தான். ஆனால், 22 ஆயிரம் பஸ்களும் காப்பீடு திட்டத்தில் கொண்டு வருவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. குறிப்பாக, போக்குவரத்துக் கழகங்கள் ஏற்கனவே நஷ்டத்தில் இயங்குவதால், காப்பீட்டு தொகையை கூட, சரியாக செலுத்துவரா என்பது கேள்விக் குறி.

பிற்பட்டோர் இட ஒதுக்கீடு
* பிற்பட்டோர் இட ஒதுக்கீடு ஆண்டு வருமான உச்சவரம்பை, 15 லட்சம் ரூபாயாக உயர்த்த வலியுறுத்துவோம்
இதன்மூலம், ஒரு இனத்தை சேர்ந்த குறிப்பிட்ட ஒரு சாரார் மட்டுமே, தொடர்ந்து இட ஒதுக்கீடு பயனைப் பெற முடியும். மற்றவர்களின் வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்படும்.
* மத்திய அரசின் அனைத்துப் பணிகளிலும், பிற்பட்டோருக்கு 27 சதவீதம் ஒதுக்க வேண்டும்
தகுதியின் அடிப்படையில் இல்லாமல், ஜாதியின் அடிப்படையில் பணிகளை ஒதுக்கும்போது, திறமை பின்னுக்கு தள்ளப்பட்டு, நிர்வாகம் சீர்குலையும்.
* பஞ்சமி நிலம் மீட்பு ஆணையம் மீண்டும் செயல்படும்
தொடர்ந்து செயல்பட்டும் இந்த ஆணையத்தால், அரசியல் தலையீடு காரணமாக, பஞ்சமி நிலங்களை முழுமையாக மீட்க முடியவில்லை. தேர்தலுக்காக அளிக்கப்படும் இந்த வாக்குறுதியில், உறுதியாகவும் நிற்பதுமில்லை.
முன்னேறிய வகுப்பைச் சேர்த்தவர்கள், ஆதி திராவிட பழங்குடியினத்தவரை, திருமணம் செய்தால், அவர்களுடைய வாரிசுகளுக்கும் அரசு கல்லுாரிகளில் இலவச உயர் கல்வி
ஜாதி மறுப்பு திருமணங்களினால் பாதிக்கப்பட்டோரின் வாரிசுகளுக்கு, இது கை கொடுக்கும்.

வணிகர் நலன்
* வணிகர் நல வாரியம் சீரமைக்கப்படும்; எளிதாக புதிய உறுப்பினர்சேர்க்கப்படுவர்
வாரியங்கள் முடங்கி உள்ள நிலையில், இந்த அறிவிப்பு முன்னேற்றம் தரும்.
* சிறு தொழில் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட, 21 விதமான பொருட்கள் மீண்டும் அந்த பட்டியலில் கொண்டு வரப்படும்
வணிகர்களின் எதிர்பார்ப்பு இதுதான். தமிழகத்தில், பல குடிசைத் தொழில்கள் அபிவிருத்திக்கு வழி வகுக்கும்.
* மதுரை, துாத்துக்குடி, திருச்சியில் வர்த்தக மையம் அமைக்கப்படும்
இதனால் வணிகர்கள் நலன் பெறுவர். ஆனால், திட்டமிடல், செயல்பாட்டில் தெளிவான நடைமுறை வேண்டும்.

* சில்லரை வணிகத்தின் அந்நிய முதலீட்டை அனுமதிக்க மாட்டோம் ஏற்கனவே, மத்திய அரசு இதற்கு அனுமதி அளித்தபோது, தி.மு.க., ஆதரவாக
ஓட்டளித்து. அ.தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்தது. இது, முரண்பாடாக உள்ளது.
* தெரு ஓர வியாபாரிகள், தள்ளுவண்டி, தலைச் சுமை பொருட்களை விற்போருக்கு, 2,000 ரூபாய் வட்டியில்லாத கடன்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறுவணிகர்களுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்பட்டது. நடைமுறையில் உள்ளது. கூட்டுறவு சங்கங்கள் தள்ளாடும் நிலையில், இத்திட்டம் சரிப்பட்டு வராது.

சிவாஜிக்கு மணி மண்டபம்
* நாகை - கடலுார் துறைமுகங்கள் ஆழ்கடல் துறைமுகம் ஆக்கப்படும்
வெறும் வாக்குறுதி எதற்கும் உதவாது. ஆழ்கடல் துறைமுகமாக்கப்படுவது வரவேற்கக்கூடிய ஒன்று தான். ஆனால், ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கான, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மீனவர்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கான மானியம், பயிற்சி தர வேண்டும்.

* சிவாஜிக்கு மணி மண்டபம்


நடிகர் சிவாஜிக்கு, சிலை வைத்ததே, தி.மு.க., அரசு தான். இப்போது, அதுவும் பிரச்னையாகி விட்டது. சிவாஜிக்கு அ.தி.மு.க., ஆட்சியிலேயே மணிமண்டபம் அமைத்திருக்க வேண்டும்.
அரசு இடம் கொடுத்தும் நடிகர் சங்கத்தின் முந்தைய நிர்வாகிகளால், மணிமண்டபம் கட்ட முடியாமல் போய் விட்டது. இருந்தாலும், இது தேவையில்லை.
* எம்.ஜி.ஆர்., திரைப்பட நகர் புதுப்பொலிவு
எம்.ஜி.ஆர்., திரைப்பட நகர் புதுப்பொலிவாக மாற்றப்பட்டால், நிறைய குறைந்த பட்ஜெட் படங்கள் உருவாகும். சமீப காலமாக, கதைக்கு முக்கியத்துவம் படங்கள் ஏராளமாக வருகின்றன. அதற்கு திரைப்பட நகரம் உதவியாக இருக்கும்.

பாதாள சாக்கடை
* பாதாள சாக்கடை, மலக் குழிகளில் பணியாற்றும்போது, நச்சு வாயு தாக்கி, உயிர் இழப்போர் குடும்பத்துக்கு, 3 லட்சம் ரூபாய் இழப்பீடு இப்பணிகளில் மனிதர்களை பயன்படுத்தக் கூடாது என, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. அத்தீர்ப்பை அமல்படுத்தாமல், இறப்போர் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்குவது சரியல்ல என்பது பொதுவான கருத்தாக
உள்ளது.
* துாய்மை பணியில் இருக்கும்போது, 10 வகுப்பு தேர்ச்சி பெற்றால், அதே துறையில் காலியாக உள்ள பணியிடத்தில் நியமிக்க பதவி உயர்வு அளிக்கப்படும்
துாய்மைப் பணியிலிருந்து விடுதலை அளிப்பதோடு, அவர்களின் கல்வி தரம் மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.

தொழிலாளர் நலன்
* தொழிலாளர் நல வாரியங்கள் மீண்டும் முழுவீச்சில் செயல்படுத்தப்படும்; புதிய நல வாரியங்களும் துவக்கப்படும்
தொழிலாளர் நல வாரியங்கள், செயல்படாமல் முடங்கி விட்டன. உரிய பலன்கள் கிடைக்கவில்லை என குற்றச்சாட்டு உள்ளது. நல வாரியங்களை சீரமைத்து, முழுமையாக செயல்படுத்த வேண்டும்.
* மீனவர்களுக்கு போன்று, உப்பள தொழிலாளர்களுக்கும் மழைக்கால நிவாரணம், 5,000 ரூபாய் வழங்கப்படும்
மழைக் காலத்தில், உப்பள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதாக அமையும்.
* பீடி தொழிலாளர் அதிகம் வாழும் பகுதிகளில், 50 படுக்கை வசதிகளுடன் உயர் மருத்துவமனைகள் அமைக்கப்படும்
இது, பீடி தொழிலாளர்களுக்கு ஏற்படும் நோய் பாதிப்புகளுக்கு, சிகிச்சை அளிக்கும் பிரத்யேக வசதிகள் அவசியம்.
ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள், ஆட்டோ வாங்க, 10 ஆயிரம் ரூபாய் மானியம் தரப்படும்
கால் டாக்சி வரத்து, கூடுதல் ஆட்டோக்கள் அனுமதியால், சரியாக சவாரி இன்றி ஆட்டோக்கள் முடங்கி உள்ளன. மீட்டர் போட்டும் இயக்குவதில்லை. அதனால், இந்த மானியத் திட்டம் தேவை இல்லாதது.
காலணி தயாரிப்போர், நெசவாளர்கள், மண் பாண்ட தொழிலாளர், தையல்காரர்கள், பாய் முடைவோருக்கு அரசு செலவில் உபகரணங்கள் வழங்கப்படும்
நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. இலவசம் என்பதெல்லாம் தவிர்க்கப்பட வேண்டும்.

பேரிடர் மேலாண்மை
* பேரிடர் குறித்த முன்னெச்சரிக்கை செய்திகள் கிடைக்க தொழில்நுட்பங்கள் உருவாக்கப்படும், காவல் நிலையங்கள், வருவாய் அலுவலகங்கள், மருத்துவமனைகளுக்கு ஜெனரேட்டர்கள் வாங்கப்படும்
* மீட்பு பணியில் ஈடுபடுவோருக்கு, அரசுத் துறைகள் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும்
மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதல்களில் குறிப்பிடப்பட்டு உள்ள நடைமுறைகளை செயல்படுத்தினாலே போதும். அதை விடுத்து, இதுபோன்று பயிற்சி அளிப்பது, ஜெனரேட்டர் வாங்குவோம் என்ற அறிவிப்பெல்லாம் தேவையில்லை.

ஊனமுற்றோருக்கு சலுகை
* மாற்றுத் திறனாளிகளுக்குக் கட்டணமில்லா பயணச் சலுகை மாநில அளவில் மாற்றுத் திறனாளிகள் பஸ்களில் பயணிக்கவும், உடன் உதவியாளர் ஒருவர் செல்ல, அதற்கான தனி சான்று மூலமும், கட்டண சலுகை நடைமுறையில் உள்ளது.
அதேபோல, மாவட்ட அளவில், பஸ்சில் பயணிக்க, இலவச பஸ் பாஸ் சலுகையும் நடைமுறையில் உள்ளது. பார்வையற்றோர் மற்றும் பணிக்கு
செல்லும் மாற்றுத் திறனாளிகளுக்கு, நகர பஸ்களில் செல்ல, இலவச பஸ் பாஸ் வசதி உள்ளது. எனவே, இப்போதைய அறிக்கை ஏற்கனவே உள்ளது தான்.

தொழில்வழிப்பாதை
* சென்னை-- ஓசூர்; மதுரை-தூத்துக்குடி ஆகிய இரு தொழில் பெருவழிப் பாதைகள் உருவாக்கப்படும்கடந்த, 2006-11 ஆட்சிக் காலத்தில், சென்னை - ஸ்ரீபெரும்புதூர் - ராணிப்பேட்டை - ஓசூர் - பெங்களூரு, தடத்தில் தொழில் வளத்தை பெருக்க, பெரு வழித்தடம் அமைக்க, கருணாநிதி முடிவெடுத்தார். ஆனால், அது, முடியாமல் போனது.
* தற்போது, ஜப்பான் கூட்டுறவு வங்கி உதவியுடன், பெங்களூரு சென்னை மற்றும் மதுரை - தூத்துக்குடி ஆகிய இரு தொழில் பெருவழிப் பாதை திட்டங்களை, செயல்படுத்த
;
மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
திட்டம் சாத்தியம் தான். என்றாலும், பழைய திட்டத்தை துாசி தட்டி உள்ளனர்.

வீட்டுவசதி


* கிராமங்களில் ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை; குக்கிராமங்களில் அடிப்படை வசதிகள்; அண்ணா மறுமலர்ச்சி மற்றும்
நமக்கு நாமே திட்டம் இத்திட்டங்கள்ஏற்கனவே நடைமுறையில் உள்ளன. திட்ட பெயரை வேண்டுமானால் மாற்றிக் கொள்ளலாம்.
* சென்னை போன்ற பெருநகரங்களில் நவீன அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம்
மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லையில் நவீன வசதிகள் கொண்ட புறநகரங்கள்
அனைத்துக்கும் இடம் அடிப்படைத் தேவை. பெருநகரங்களுக்கு அருகில் நிலம் கையகப்படுத்துவதில் தெளிவான திட்டம் இல்லாமல், திட்டத்தை நிறைவேற்றும்போது, சிக்கல் ஏற்படும். முந்தைய ஆட்சியில், இதுபோல பல திட்டங்கள் அறிவிப்போடு நின்றுள்ளன.
* அனைத்து கிராமங்களிலும் துாய்மையான குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும் துாய்மையான குடிநீர் என்பது, கேனில் அடைக்கப்பட்ட குடிநீரை குறிக்கிறதா என்ற சந்தேகம் இருக்கிறது. சாதாரண நீரை குழாய் மூலம் வினியோகித்தாலே போதும் என, மக்கள் எதிர்பார்கின்றனர்.
கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்இத்திட்டத்தால், பெரும் பயன் கிடைத்ததாகத் தெரியவில்லை. பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் நிறைவேற்றி, அவர்கள் சம்பாதித்து செல்லவே உதவும்
என்பது பொதுக் கருத்து.

முதியோர் நலன்
* முதியோருக்கு சாதாரண அரசு பஸ்களில் கட்டணமில்லா பயணச் சலுகை வழங்கப்படும்
தற்போது மாநகர பஸ்களில் மாதத்திற்கு, 10 டோக்கன் என்ற முறையில் இலவச பயணத் திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது. இது
சரியான நடைமுறை அல்ல. மாறாக, தமிழகம் முழுவதும் அடையாள அட்டையுடன் (ஆதார் போன்ற அட்டை) செல்லும் முதியோரை இலவசமாக அனுமதிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

 முதியோருக்கு ஓய்வூதியமாக வழங்கப்படும், 1,000 ரூபாய், 1,300 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்
இந்த தொகை போதுமானதாக இருக்காது. முதியோரின் அத்தியாவசிய செலவுகளை கருத்தில் கொண்டு பார்க்கும்போது, மேலும் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டியது அவசியம்.

வை பை வசதி
* அனைத்து பஸ் நிலையங்கள், மக்கள் வரக்கூடிய பொது அலுவலகங்கள், நீதிமன்றங்கள், மருத்துவமனைகள், நுாலகங்கள், ஆகிய
இடங்களில், அதிவேக 'வை - பை' வசதி, அரசு செலவில் செய்து தரப்படும். முதல் கட்டமாக, இந்த வசதிகள் மாநகரங்களில் உருவாக்கப்பட்டு, படிப்படியாக தமிழகம்
முழுவதும் விரிவாக்கம் செய்யப்படும்.
மொபைல் போன் வைத்திருப்போர், இன்டர்நெட் கார்டு போடுவதால், இது தேவையற்றது.
ரயில்வே துறை


* திருக்குவளை - நாகை; திருவாரூர் - திருத்துறைப்பூண்டி - காரைக்குடி; மன்னார்குடி - ஒரத்தநாடு - பட்டுக்கோட்டை; மன்னார்குடி - மதுக்கூர் - பட்டுக்கோட்டை; காரைக்குடி - ராமநாதபுரம் - துாத்துக்குடி; மதுரை - தேனி - போடி; திண்டுக்கல் - தேனி - போடி - கம்பம் - கடலுார் - குமுளி; மொரப்பூர் - தர்மபுரி; கும்பகோணம் - ஜெயங்கொண்டம் -
விருத்தாசலம்; மதுரை - மேலுார் - காரைக்குடி; மதுரை - அருப்புக்கோட்டை - துாத்துக்குடி; ஆவடி -
ஸ்ரீபெரும்புதுார் - கூடுவாஞ்சேரி; பேரளம் - காரைக்கால் ஆகிய பகுதிகளில் அகல ரயில் பாதை திட்டங்களை கொண்டு வருதல்
இவற்றில் பெரும்பாலான திட்டங்கள் ரயில்வே துறையால் அறிவிக்கப்பட்டு, பணியும் நடந்து வருவதால் அனைத்தும்
சாத்தியமே. இருப்பினும், சில திட்டங்களை விரைவில் செயல்பாட்டிற்கு கொண்டு வர, மாநில அரசின் நிதி உதவியுடன் பணியை முடிக்க வேண்டியிருக்கும்.
* ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையின் இரண்டாவது
அலகு அமைக்கும் மத்திய அரசு அறிவிப்பை செயல்படுத்துவது
இதைச் செயல்படுத்துவதன் மூலம், பெரும்பாலான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிட்டும் என்பதால், வரவேற்கக்கூடியது.
* ரயில்வே கிராசிங்குகளில் பாலங்கள், அறிவிப்பு ஒலி இயந்திரம் அமைத்தல் விபத்துகளை தவிர்க்க, இந்த வசதி அவசியம் என்பதால் வரவேற்கக்கூடியது.
* ராயபுரம் முனையம்
மீண்டும் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவது இது அவசியமான கோரிக்கை தான். இருப்பினும்,
முனையம் அமைப்பதற்கு, நிலம் கையகப்படுத்துவதில் சிக்கல் நீடிப்பதால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில், ரயில்வே வாரியம் ஆர்வம் காட்டவில்லை. தேவையான இடத்தை தமிழக அரசு வழங்கினால் மட்டுமே, ராயபுரம் முனையம் சாத்தியம். அதற்கான
ஏற்பாடுகளை, தமிழக அரசு செய்யாத வரை, திட்டம் சாத்தியமாவது சிக்கலே.

கட்டுமானம்
* நிலங்களுக்கான வழிகாட்டி மதிப்பீடு சீரமைக்கப்படும் நிலங்களுக்கும், வீட்டு மனைகளுக்கும் பத்திரப்பதிவுத் துறை நிர்ணயிக்கும் வழிகாட்டி மதிப்புகளில் குளறுபடிகள் இருப்பது உண்மை தான். ஆனால், இதில் சீரமைப்பு என, தி.மு.க., முன்வைக்கும் திட்டம், எந்த வகையில் நிறைவேறும் என்பதற்கான சாத்தியக் கூறுகள் இல்லை.
எந்த காலத்திலும், உயர்த்தப்பட்ட மதிப்புகள் குறைக்கப்பட்டதாக வரலாறு இல்லை. இந்த பின்னணியில், தி.மு.க., முன்வைக்கும்
சீரமைப்பு திட்டம், தற்போதைய சூழலில் சாத்தியமில்லை.
* ஒற்றை சாளர முறையில், விண்ணப்பித்த, 60 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதிகள் வழங்கப்படும்
விண்ணப்பித்த நாளில் இருந்து, 30 நாட்களுக்குள் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என, மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதைவிட அதிகமாக, 60 நாள் என்பது,
கூடுதலான கால அவகாசம் தான். இருப்பினும், இதில்சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அணுகுமுறையில், மாற்றம் ஏற்படாத வரை, இத்திட்டம் வெற்று அறிவிப்பு தான்.

லோக்ஆயுக்தா


* தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி காலத்தில், 1973ம் ஆண்டு, பொது ஊழியர் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், 1977ல், ஆட்சிக்கு வந்த, அ.தி.மு.க., அந்த சட்டத்தை ரத்து செய்து விட்டது.
மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், முதல்வர், அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு ஊழியர்கள் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க, 'லோக் ஆயுக்தா' சட்ட அமைப்பு உருவாக்கப்படும்
அதன்பிறகு பல முறை ஆட்சிக்கு வந்த, தி.மு.க., ஏன் இந்த சட்டத்தை கொண்டு வரவில்லை என்பதற்கு, சரியான விளக்கம் இல்லை.
தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது, ஏராளமான குற்றச்சாட்டு உள்ள நிலையில், இச்சட்ட அமைப்பை, தி.மு.க., உருவாக்குவது சந்தேகமே.

குழந்தைகள் நலன்
* குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுக் கூடைத் திட்டம் செயல்படுத்தப்படும்
'அம்மா' பரிசுப் பெட்டகத்தின் நகல்தான் என்றாலும், ஊட்டச்சத்துக்கு திட்டம் பயன் தரும்.
* குழந்தை தொழிலாளர் தடைச் சட்டம் கண்டிப்பாக, அமல்படுத்தப்பட்டு, குழந்தைகள் கல்வி முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தப்படும்
குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க, சரியான முயற்சிகள் இல்லை. எண்ணிக்கையை குறைத்துக் காட்டவே, இதுவரை முயற்சிகள் நடந்தன. உண்மையில், திட்டத்தை செயல்படுத்தும் முறையில் தான் திட்டம் வெற்றி பெறும்.

* குழந்தைகள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை தரும் வகையில், குழந்தைகள் கடத்தல் சட்டம் நிறைவேற்றப்படும்
ஏற்கனவே உள்ள சட்டங்களில், கடும் தண்டனை தர, விதிமுறைகள்
உள்ளன. இதற்காக, சட்டத் திருத்தம் தேவையில்லாதது. இருக்கும் சட்டத்தை, போலீஸ் துறை செயல்படுத்தினாலே, கடத்தலை தடுக்க முடியும்.

நெசவாளர் நலன்
* தி.மு.க., ஆட்சி காலத்தில், காஞ்சிபுரத்தில் அறிவிக்கப்பட்ட, அண்ணா பட்டுப் பூங்கா மீண்டும் துவக்கப்பட்டு, 25 ஆயிரம் நெசவாளர்கள் பயன்பெறத்தக்க வகையில்,
செயல்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இத்திட்டம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு, பூங்கா அமைக்க, நிலம் ஒதுக்கப்பட்டது. அதன்பின்,
எந்தப் பணியும் நடைபெறவில்லை. தற்போது நெசவாளர்கள், தங்கள் வீடுகளிலே தறி அமைத்து, நெசவு செய்து வருகின்றனர். குடும்ப
உறுப்பினர்கள் உதவுகின்றனர். இந்நிலையில், அவர்கள் தறிக்கூடம் சென்று, நெசவு நெய்ய விரும்புவதில்லை.
அதேபோல், பட்டுப் பூங்காவில் சாய சுத்திகரிப்பு நிலையம் அமைப்பது, நகருக்குள் இருக்கும்
சாயத் தொழிற்சாலைகளை அங்கு இடம் மாற்ற முடிவு செய்யப்பட்டது. சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, டெண்டர் விடப்பட்டது. அதன்பின், பணி நடைபெறவில்லை. சாயத்
தொழிற்சாலைகள் பட்டுப் பூங்காவிற்கு வர சம்மதித்தாலும், தறிக்கூடங்கள் அமைக்க, நெசவாளர்கள் வருவது சிரமம்.
* விசைத்தறிக்கு இரண்டு மாதத்திற்கு, 500 யூனிட் ஆக உள்ள இலவச மின்சாரம், 750 யூனிட் ஆக உயர்த்துவது குறித்து பரிசீலிக்கப்படும்
* நெசவாளர் வீடு கட்ட, மானியம் 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும்
* கைத்தறி நெசவாளர்களுக்கு, தற்போது இலவச மின்சாரம், இரண்டு மாதத்திற்கு, 100 யூனிட் வழங்கப்படுகிறது. இது, 200 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும்
இது எளிதில் சாத்தியமாகக்கூடியது தான்.

நெசவாளர்களுக்கு என்று தனியாக கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். ஜவுளி துறையை மேம்படுத்த, தனியாக ஜவுளி ஆணையம் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
இவ்விரண்டும் தேவையற்றவை. நெசவாளர்களுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில், கடன் வழங்க ஏற்பாடு செய்தாலே போதுமானது.

அரசு சான்றிதழ்
* பட்டா, வில்லங்க சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக பெறுவதற்கு வசதி செய்தல் பட்டா, சிட்டா, அடங்கல் உள்ளிட்ட
வருவாய்த் துறை ஆவணங்களை, டிஜிட்டல் மயமாக்கும் திட்டத்தை, மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதில், மற்ற மாநிலங்களை காட்டிலும், தமிழகம் பின்தங்கி உள்ளது.
கடந்த, 10 ஆண்டுகளுக்கும் மேலாக, இதற்கான அறிவிப்புகள், அரசின் கொள்கை விளக்க
குறிப்புகளில் இடம் பெறுகின்றன. இதே போன்று, வில்லங்க சான்று விவரங்களை இணையதளத்தில் சரி பார்க்கும் வசதி, தற்போது நடைமுறையில் உள்ளது. ஆனால், இந்த ஆவணங்களை இணையதளம் வாயிலாக பெறும் திட்டத்தை செயல்படுத்த, அரசு எந்த அளவுக்கு உறுதி இருக்கும் என்பது கேள்விக்குறியே.

மொழி ஆளுமை
* தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்களில், இணை ஆட்சி மொழியாக பிரகடனப்படுத்தப்பட்டு, தமிழகத்தில் உள்ள, மத்திய அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அனைத்தும், தமிழிலும் செயல்பட வேண்டும். இதற்காக இந்திய அரசியலமைப்பு சட்டம் 343வது பிரிவில், உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என, மத்திய அரசை தி.மு.க., தொடர்ந்து வலியுறுத்தும்
* செம்மொழித் தமிழுக்கு, மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், உலகப் பொதுமறையான திருக்குறளை, தேசிய நுாலாக
அறிவிக்க வேண்டும் என, மத்திய அரசை தி.மு.க., வலியுறுத்தும்
* உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடந்த, கோவை மாநகரில், சென்னையில் உள்ளதுபோல், செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்
இவை அனைத்தும் எளிதில் சாத்தியமாகக் கூடியது தான்.

தமிழ் மொழியை, மத்திய ஆட்சி மொழிகளின் ஒன்றாக ஆக்க வேண்டும் என்று, 1996ம் ஆண்டு, திருச்சியில் நடந்த, தி.மு.க., மாநில மாநாட்டில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை
நடைமுறைப்படுத்த வேண்டும் என, தி.மு.க., தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தும்தி.மு.க., மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றிய பிறகு, 10 ஆண்டுகள் தி.மு.க., ஆட்சியில் இருந்தது. மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசிலும் பங்கு வகித்தது. அப்போது நிறைவேற்ற
முடியாததை, மக்களை ஏமாற்ற, மீண்டும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கரும்பு ஆலை
* கரும்பு ஆலைகளில் 10 சதவீத 'எத்தனால்' உற்பத்தி சர்க்கரை ஆலைகளில் கரும்பை பிழிந்த பிறகு, எஞ்சியுள்ள, 'மொலாசஸ்' எனப்படும்
உபபொருளை நொதிக்க வைத்து, எரி சாராயம் தயாரிக்கப்படுகிறது. அதை மேலும் சுத்தப்படுத்தினால், 'எத்தனால்' எரி திரவம் கிடைக்கும். அதை, பெட்ரோலுடன் கலந்து அனைத்து வாகனங்களிலும், எரி பொருளாக பயன்படுத்தலாம். தற்போது, கரும்பாலைகளில் 5 சதவீதம், எத்தனால் உற்பத்திக்கு மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எத்தனால் உற்பத்தி
அதிகரித்தால், ஆலைகளுக்கும் வருமானம் அதிகரிக்கும். நெருக்கடியில் இருக்கும் விவசாயிகளுக்கு, நிலுவைத் தொகையும் விரைவாக கிடைக்கும்.
அதனால் இந்த முயற்சி வரவேற்கக்கூடியதே.

ஒப்புக்காக


* அனைத்துத் தரப்பு மக்களும் ஏற்க கூடிய பாதையில் சேதுசமுத்திர திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் மத்திய ஆட்சியில், தி.மு.க., பங்குபெற்று
இருந்தபோதே நிறைவேற்ற முடியாத திட்டம். பல கோடிகள் ரூபாய் வீணானதே மிச்சம். தேர்தலுக்காக, இப்பிரச்னையை மீண்டும் கையில் எடுப்பதாக பொதுமக்கள் கருதுகின்றனர்.
* கச்சத் தீவை திரும்பப் பெறுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும் இரு நாடுகளுக்கு இடையே, முடிந்துபோன பிரச்னை இது.
மீனவர்கள் ஓட்டுக்காக, தமிழக கட்சிகளின் வழக்கமான வாக்குறுதிகளில் இதுவும் ஒன்று.

வேளாண்துறை
* வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் கர்நாடகா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில், வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. அதேபோன்று, தமிழகத்தில், தனிபட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விவசாயிகளிடம் நீண்டகால கோரிக்கை. தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால், துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்கும். பட்ஜெட் தயாரிப்பதற்காக, துறை மீது தனி கவனம் செலுத்த வேண்டிய நிர்பந்தம்
அரசுக்கு ஏற்படும். இதன்மூலம், புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும்.
 வேளாண்பொருள் உள்ளிட்ட கிராமப்புற உற்பத்தி பொருள்கள் அனைத்தையும் சந்தைப்படுத்த புதிய அமைப்புகள்
கடந்த பிப்., மாதம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் பட்ஜெட்டில், இதேபோன்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. எனவே, மத்திய அரசு நிதியில், இந்த திட்டத்தை எவ்வித சிக்கலும் இன்றி
தமிழகத்தில் செயல்படுத்த முடியும்.
* சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை, சமீப காலமாக விவசாயிகள் அதிகரித்துள்ளது. இது போன்று செய்வதால், சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகள் ஆர்வம் குறையும். சாகுபடி செய்யாமலே, பயிர் கடன்கள் பெற்று, அடுத்த ஆட்சியில், அது ரத்தாகும் என்ற எண்ணத்தோடு இருக்க வேண்டிய மனநிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர்.
* கரும்பு டன்னுக்கு, 3,500 ரூபாய் கொள்முதல் விலையாக நிர்ணயம் செய்யப்படும்
உலக நாடுகளில் கரும்பு சாகுபடி பரப்பு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் போலவே, சர்க்கரைக்கும் உலக சந்தையில் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அதேநேரம், கரும்பு சாகுபடியில் ஈடுபடும், தமிழக விவசாயிகளுக்கு, உரிய விலை கிடைக்கவில்லை.
இதனால், கரும்பு சாகுபடியில் அவர்கள் ஆர்வம் குறைந்துள்ளது. கரும்பு பயிர் செய்யும் விவசாயிகளை, மாற்று பயிர் செய்ய ஊக்குவிக்க வேண்டும். சர்க்கரை தேவையை வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும்,
பூர்த்தி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீபகாலமாக உள்ளது.

* இயற்கை வேளாண்மைக்கு தனிப்பிரிவு
வேளாண் துறையில் தற்போது வேளாண்மை, தோட்டக் கலை ஆகிய பிரிவுகள் தனித் தனியாக இயங்குகின்றன. தோட்டக் கலைத் துறையின் கீழ், தோட்டக் கலை வளர்ச்சி முகமை உள்ளிட்ட பிரிவுகள் இயங்குகிறது.
சமீப காலமாக இயற்கை விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், தங்கள் வீடுகளில், சிறிய தோட்டங்களை இயற்கை விவசாயம் மூலம் செய்து வருகின்றனர். எனவே, இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்க தனிப்பிரிவு துவங்குவது வரவேற்கத்தக்கது.

* விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களுக்கும் ஆண்டுதோறும் வேட்டி, சேலையுடன் பொங்கல் பரிசு, 500 ரூபாய்
விவசாயிகள் பலரும் இலவசங்கள் வேண்டாம் என்ற மனநிலையில் உள்ளனர். சாகுபடி செய்வதற்கு தட்டுப்பாடின்றி, விதை, உரம் உள்ளிட்ட இடுபொருட்கள், பாசனத்திற்கு தண்ணீர் கொடுத்தாலே போதும். எனவே, இந்த அறிவிப்பு தேவையில்லை.

* விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு
மதுரை முதல் துாத்துக்குடி வரையும், சென்னை முதல் ஒசூர் வரையும்
தொழிற்சாலைகள் நிறைந்த சாலை ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்றால், விவசாய நிலங்களை கையகப்படுத்தியே ஆக வேண்டும். அவ்வாறு இருக்கும் போது, விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தும் சட்டத்திற்கு எதிர்ப்பு என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதை, தி.மு.க.,வின் இரட்டை வேடமாகவே, விவசாயிகள் பார்க்கும் நிலை உள்ளது.
* தனிநபர் விளைநிலங்களில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புக்கு இழப்பீடு இந்த திட்டத்திற்காக விவசாயிகள் போராடி வருகின்றனர். இது
வரவேற்கத்தக்கது.
* கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம்
தோட்டக்கலை பொருட்கள் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் கிருஷ்ணகிரிக்கு முக்கிய இடம் உள்ளது. இங்கு உற்பத்தியாகும்
தோட்டக்கலை பொருட்கள், மாநிலம், உள்நாடு தேவையை மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகிறது. இங்கு தோட்டக்கலை பல்கலைக்கழகம் அமைப்பதால், புதிய விதைகள்,
சாகுபடிமுறைகள் கண்டறியப்படவாய்ப்புள்ளது.

நீர்வளத்துறை:
* நீர்வளத்துறைக்கு தனி அமைச்சகம் பொதுப் பணித் துறையின் கீழ், நீர்வளத் துறை இயங்குகிறது. இதனால், போதுமான அதிகாரிகள், நிதி ஒதுக்கீடு ஆகியவை கிடைப்பது இல்லை. இதனால், துறையில் மேம்பாட்டு பணிகளை செய்ய முடியாததால், ஆண்டுதோறும் பல டி.எம்.சி., நீர் வீணடிக்கப்படுகிறது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்று, தமிழக நீர்வளத் துறைக்கும் தனி அமைச்சம் தேவை. இதை வரவேற்கின்றனர்.
* கிட்டத்தட்ட, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், தமிழகத்தின் பராம்பரிய நீர்நிலைகளை துார்வாருதல், புதிய கால்வாய்கள் அமைத்தல், பாசன வசதிகள் மற்றும் குடிநீர் வசதியை பெருக்குதல்
கடந்த ஐந்து ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில், மாநில அரசு நிதி மட்டுமின்றி, மத்திய அரசு நிதியிலும், பல்வேறு நீர்நிலைகளை துார்வாரி பராமரிக்க பணிகள் நடந்தது.
உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, நபார்டு வங்கி போன்ற நிதியுதவிகளுடன், பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அந்த பணிகளை முறையாக செய்யவில்லை. இந்த நிலையில்,
இதே திட்டத்திற்கு, 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்குவது தேவையற்றது. அரசியல்வாதிகள் ஆதாயம் பெறுவதற்காகவே, இந்த திட்டம் பயன்படும்.
 மொத்தம், 2,000 கோடி ரூபாய் செலவில், 200 தடுப்பணைகள்- ஏற்கனவே, இதுபோன்ற திட்டங்களை, தி.மு.க., தனது ஆட்சியில் அறிவித்தது. ஆனால், அதை முறையாக செயல்படுத்தவில்லை. எனவே, இம்முறை அறிவிக்கப்பட்ட திட்டமும் செயல்பாட்டிற்கு வருமா என்ற சந்தேகம் உள்ளது.
சென்னை பெருநகர் வெள்ளதடுப்பு மேலாண்மை குழு-சென்னை நீர்வழித் தடங்கள் ஆக்கிரமிப்பில் சிக்கி குறுகியுள்ளது. இந்த நீர்வழித் தடங்களில் ஆக்கிரமிப்புகளை முறையாக அகற்றி, மீண்டும் ஆக்கிரமிப்புகள் வராமல் தடுத்தாலே போதுமானது. புதிய மேலாண்மை அமைப்பு தேவையற்றது.

காவல்துறை
* நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் அடிப்படையில், காவலர் நலன்களில் தனி கவனம் செலுத்தப்படும்
போலீசாரின் குறைகள் கேட்க, காவல் நிலையங்கள் மறுசீரமைப்பு, சம்பளம், பதவி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு காண, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், ஐ.பி.எஸ்., அதிகாரிகள் கொண்ட குழு அமைப்பதற்கு பெயர் தான், காவல் ஆணையம்.
கடந்த, 1969ம் ஆண்டில் இருந்து, தி.மு.க., ஆட்சியில், மூன்று காவல் ஆணையங்கள் அமைக்கப்பட்டன. 'நான்காவது காவல் ஆணையம்' அமைப்பதால், அரசுக்கு நெருக்கமான ஓய்வு பெற்ற நீதிபதிக்கு புதிய பொறுப்பு, 'ஜால்ரா' ஐ.பி.எஸ்., அதிகாரிகளை குளிரூட்டுதல் போன்ற நடவடிக்கைகள் இருக்குமே தவிர, இந்த அறிவிப்பு வெத்துவேட்டு அறிவிப்பு தான் என்கின்றனர், மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள்.
* காவல்துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை
காவலர்கள், சிறை காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும்
போலீஸ் துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்பது, வழக்கமான அறிவிப்புதான். என்றாலும், இதற்கு போலீசார் மற்றும் வாலிபர், யுவதிகளிடம் வரவேற்பு உள்ளது. வேலையற்று இருக்கும் தங்களுக்கு, அந்த வாய்ப்பு கிட்டும் என, எதிர்பார்க்கின்றனர்.
* காவலர்கள் 20 ஆண்டுகள் பணியை நிறைவு செய்தால், எஸ்.ஐ.,யாகவும்; 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால் இன்ஸ்பெக்டர்களாகவும் பதவி உயர்வு அளிக்கப்படும்
தி.மு.க., ஆட்சியில், போலீஸ் துறையில், 25 ஆண்டுகள் பணி நிறைவு செய்வோருக்கு, சிறப்பு எஸ்.ஐ., என்ற பதவி உயர்வு வழங்கப்பட்டது. அதுபோல, 20 ஆண்டுகள் பணி நிறைவு செய்தால், எஸ்.ஐ., 25 ஆண்டுகளில் இன்ஸ்பெக்டர் என, அறிவித்து இருப்பது போலீசார் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. சீனியாரிட்டி குழப்பம் எதுவும் இல்லாமல் இதை நிறைவேற்ற வேண்டும் என, போலீசார் எதிர்பார்க்கின்றனர்.
* பெண் போலீசார் மற்றும் பெண் போலீஸ் அதிகாரிகளின் குறைகளை கேட்க, பெண் ஐ.ஜி., தலைமையில் குறை தீர்க்கும் பிரிவு ஏற்படுத்தப்படும்
என்னதான் போலீஸ் துறையாக இருந்தாலும், அங்கு பெண்களுக்கு பாலியல் ரீதியாக துன்புறுத்தல்கள் தொடர்ந்து இருந்து வருகிறது என்ற புகார்கள் நிறைய உள்ளன. இப்படிப்பட்ட புகார்களை ஒரு பெண் போலீஸ் அதிகாரி தான் விசாரிக்க முடியும் என்பதால், இந்த அறிவிப்பு பெண் போலீசார் மத்தியில் வரவேற்கப்படுகிறது.

கல்வித்துறை* பிளஸ் 2 மற்றும் கல்லுாரி மாணவ - மாணவியர், 16 லட்சம் பேருக்கு, 'டேபலெட்' அல்லது லேப்-டாப் வழங்கப்படும்; அவற்றுக்கு, இணைய வசதிக்காக, மாதம் 10 ஜிபி இலவச டவுன்லோடு செய்வதற்காக, '3ஜி/4ஜி, டேட்டாகார்ட்' வழங்கப்படும்
பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச 'லேப்-டாப்'களை அ.தி.மு.க., அரசு ஏற்கனவே கொடுத்துள்ளது. அது தான் தற்போது, வேறு பெயரில் திட்டமாக சொல்லப்பட்டுள்ளது. சில ஆயிரங்களுக்கு, 'டேப்லெட்' கிடைக்கும் நிலையில்,
இலவச, 'லேப்-டாப்' திட்டத்தை தொடர்ந்தாலே போதும். 'டாங்கிள்' கொடுத்தால், அதை பொழுதுபோக்குக்குத்தான் பயன்படுத்துவர்.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை
* பதிவு மூப்பு அடிப்படையில், முதல் கட்டமாக, ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க ஒரு லட்சம் ரூபாய் வரை மானியம் தரப்படும்; வேலை வாய்ப்பு மையங்கள் பயிற்சி மையங்களாகவும் செயல்படும். மாவட்ட வாரியாக ஆண்டுதோறும், வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி, ஆண்டுக்கு, ஒரு லட்சம் பேருக்கு, தனியார் துறைகளில் வேலை வாய்ப்பு அளிக்கப்படும்-
வேலை வாய்ப்பு மையங்களில், பதிவு செய்து, 89 லட்சம் பேர் காத்திருக்கின்றனர். இது, ஆண்டுக்கு ஆண்டு உயர்கிறது. சுய தொழில் மானியம், இளைஞர்களை சுய வேலை வாய்ப்பில் திரும்ப வைக்கும். வேலை வாய்ப்பு மையங்களில், தேவையான பயிற்சிகள் அளிப்பது, சுய வேலை வாய்ப்புக்கும், தனியார் துறை வேலை வாய்ப்பு பெற வழி வகுக்கும். மாவட்ட வாரியாக, வேலை வாய்ப்பு முகாம் நடத்துவது, வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு பயனளிக்கும்.
* முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு, அரசு வேலையில் முன்னுரிமை
திருமண உதவித் திட்டத்தால், பெண் குழந்தைகளை, 10ம் வகுப்பு, பிளஸ் 2 வரை படிக்க வைப்பது அதிகரித்துள்ளது. அதுபோல், முதல் தலைமுறை பட்டாதாரிக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை, ஏழைக் குடும்பங்கள், கிராமப்புறத்திலும் இளைஞர்கள், இளம் பெண்கள் பட்டப்படிப்பு வரை படிக்க வழிவகுக்கும்.
* கிரானைட் கற்கள், தாது மணல், மணல் ஆகிய அகழ்வு தொழில்களில், 2 லட்சம் வேலையில்லா
இளைஞர்கள் பங்கேற்புடன் அரசு, வணிகப் பணிகளை மேற்கொள்ளும்
தாது மணல் முறைகேடு புகார்கள் உள்ள நிலையில், முறைப்படுத்ததுல், வேலையில்லா இளைஞர்ளைக் கொண்டு வணிகப் பணிகள் மேற்கொள்வது, வேலை வாய்ப்பை ஏற்படுத்தும்; முறைகேடுகளை தடுக்க முயற்சிக்கலாம். கனிம வளங்களை முறைப்படுத்துவதன் மூலம், அரசுக்கு கூடுதல் வருவாய் கிட்டும். மதுக்கடைகளை மூடுவதன் மூலம் ஏற்படும் வருவாய் இழப்பை, கனிம வள கூடுதல் வருவாய் ஈடுகட்டும்.
* படித்து விட்டு வேலை இல்லாத இளைஞர்களுக்கு, மாதந்தோறும் உதவித்தொகை -
இது, வேலை தேட முயற்சிப்போரை கட்டாயம் சோம்பேறிகளாக்கும். அரசுத் தரப்பில், ஒவ்வொருவரும் உழைத்து வேலை செய்து பிழைக்க, திட்டங்களை உருவாக்க வேண்டுமே தவிர, உதவித் தொகை அளித்து, இளைஞர்களின் வாழ்க்கையை வேறு திசையில் திருப்பக்கூடாது.

மெட்ரோ ரயில்
* திருச்சி, மதுரை, கோவை நகரங்களில், மெட்ரோ ரயில் சேவை வசதிக்கு முன்னுரிமை
சென்னையை போன்று, இந்த நகரங்களிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ளதால், இந்த திட்டம் வரவேற்கக்கூடியது. மதுரை, கோவை திட்டங்களை செயல்படுத்த, மத்திய அரசு ஏற்கனவே திட்டமிட்டு உள்ளதால், இது சாத்தியமானதே.
* மாமல்லபுரம் வரை விரிவாக்க பாதை ஒன்றும், தொழில் நகரமான ஸ்ரீபெரும்புதுார் வழியாக இருங்காட்டுக்கோட்டை மற்றும் ஒரகடம் வரை நீட்டிப்பதற்கான மற்றொரு மெட்ரோ ரயில் பாதையும் அமைத்தல்
சென்னையில் இரு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை துவங்க உள்ள நிலையில், மூன்று புதிய வழித்தடங்களுக்கான ஆய்வு பணி நடக்கிறது.
இவற்றில், சோழிங்கநல்லுார் வரை புதிய பாதை அமைவதால், அதை மாமல்லபுரம் வரை நீட்டிப்பது சாத்தியமே. தொழில் நகரத்துக்கு புதிய மெட்ரோ ரயில் சேவை துவக்குவதும் வரவேற்கக்கூடியது.

கலை


* நாட்டுப்புற கலையை நலிவிலிருந்து மீட்டு, மேம்படுத்தி, நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு அடையாள அட்டை
வழங்குவதோடு, அவர்களுக்கான ஓய்வூதியத்தையும் உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
ஓய்வூதியம் மட்டுமே நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை மேம்படுத்திடாது; அக்கலையை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றால் மட்டுமே, நலிவிலிருந்து காப்பாற்ற முடியும். இருந்த போதும், இத்திட்டத்தை செயல்படுத்தினால், ஓய்வூதியம் பெறுவோர் பயன் அடைவர்.

எதற்கு மொபைல் போன்?
* அரசு செலவில், ஏழை விவசாயிகளுக்கு ஸ்மார்ட்போன்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொள்வதற்கும், இணையதளம் மூலம், அவற்றின் பயனை அடைவதற்கும், 'ஸ்மார்ட் போன்'கள் பயனுள்ளதாக இருக்கும்.
மொபைல்போன்கள் பெற தகுதியுடையோர் யார், இன்டர்நெட் இணைப்புக்கு பணம் தரப் போவது யார் என்பது போன்ற குழப்பங்கள் உள்ளன.
சில ஆயிரங்களுக்கு மொபைல்போன் கிடைப்பதால், இது தேவையா என்ற கேள்வி எழுந்துள்ளது. பயனாளிகள் தேர்வு, மொபைல்போன் நிறுவனம் தேர்வு ஆகியவற்றில் முறைகேடு நடக்க வாய்ப்பு உள்ளது. இதனால், இது தேவையற்றது.

ஆறுகம் பாதுகாப்பு
* பறவைகள் சரணாலயங்களில், பறவைகள் ஆய்வு மையம் அமைக்கப்படும்
பறவைகள் கணக்கெடுப்பு நடத்துவது வரவேற்கத்தக்கதது என்றாலும், பறவைகள் வருவதற்கு ஏற்ற வகையில், சரணாயலங்களை மேம்படுத்த வேண்டும்.
* சுற்றுச்சூழலை பாதுகாக்க அதிக எண்ணிக்கையில் மரங்கள் நடப்படும் மரங்கள் நடுவதைக்கூட, தேர்தல் அறிக்கையில் அறிவிக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விட்டது.
* சென்னை அடையாறு, கூவம், பக்கிங்ஹாம் கால்வாய் மட்டுமின்றி, தமிழகம் முழுவதும் உள்ள ஆறுகளில், கழிவுநீர் கலப்பதைத் தடுக்கும் வகையில், 'தமிழ்நாடு ஆறுகள் பாதுகாப்பு திட்டம்' உருவாக்கப்படும்
நீர்நிலைகள் பாதுகாக்க, ஏற்கனவே, 1,300 கோடி, சென்னைக்கு மட்டும், 490 கோடி ஒதுக்கியும், முந்தைய தி.மு.க., ஆட்சியில், ஒன்றும் செய்யவில்லை. அறிவிப்பு நல்லதுதான் என்றாலும்,
சரியான திட்டமிடல் அவசியம்.
* சாலைகள், பாலங்கள், பொது கட்டட சுவர்கள் மீது, போஸ்டர் ஒட்டுவது, சாயப் பூச்சுகளால் எழுதுவது, எளிதில் மக்காத பாலிதீன் துணிகளால் அச்சடித்த பேனர்கள் அமைக்க முற்றிலும் தடை விதிக்கப்படும்
பேனர் கலாசாரத்தை திராவிட கட்சிகள் தான் துவக்கின. இப்போது தடை விதிப்பதாக அறிவித்துள்ளது, ஆச்சர்யமாக உள்ளது. மெல்லிய பிளாஸ்டிக் தடையைக் கூட, நம்மால் செயல்படுத்த முடியவில்லை.
* பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, அறிஞர்கள் குழு அமைக்கப்படும்
உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. மாநில அளவில் நடத்துவது தேவையில்லாதது.

மக்கள் நல்வாழ்வு
* மாவட்ட தலைமை மருத்துவமனைகள் அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்படும்
அனைத்து நோய்களுக்கு பரிசோதனை வசதிகளுடன் கூடியதாக அமைக்க வேண்டும்.
* பிசியோதெரபி கவுன்சில் முழுமையாக செயல்படுத்தப்படும்; வட்ட மருத்துவமனைகளில், பிசியோதெரபி பிரிவு தொடங்கப்படும்
இதற்கான, கவுன்சில் இல்லாததால், முறையான பதிவுகள் இன்றி, ஆங்காங்கே பலரும் சிகிச்சை அளித்து வருகின்றனர்; முறைப்படுத்த வசதியாக அமையும்.
* வரும் முன் காப்போம் திட்டம், மீண்டும் கொண்டு வரப்படும். தொடர் சிகிச்சைக்கு, ஸ்மார்ட் கார்டு தரப்படும்
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கைவிடப்பட்ட திட்டம்; இது, கிராமப்புறங்களில் பயன் அளிக்கும்.
* அரசு மருத்துவமனைகளில், ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரம் செய்யப்படுவர்
நல்ல முயற்சி என்றாலும், சிகிச்சையின் தரம் மேம்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.
* மாவட்ட நெடுஞ்சாலைகளில், 50 கி.மீ., தொலைவிற்கு ஒன்று வீதம், அவசர சிகிச்சை மையம் அமைக்கப்படும்
ஏற்கனவே சில இடங்களில், முதல் உதவி மையம் உள்ளது. 50 கி.மீ., தொலைவில் அமைப்பது நல்லது. இதற்காக, தனியாரை ஊக்கப்படுத்தும் முயற்சியாக அமைந்து விடக் கூடாது.
* கோவை, மதுரை, நெல்லையில் உயர் மருத்துவ ஆய்வு மையம்
உயர் மருத்துவ மையம் வரவேற்கத் தக்கது; மற்ற மாவட்டங்களிலும் கவனம் செலுத்தலாம்.
* மாவட்ட அரசு மருத்துவமனைகளில், இதய அறுவைச் சிகிச்சை வசதி கொண்டு வரப்படும்
சென்னையில் வசதி இருந்தும், இதய மாற்று சிகிச்சை செய்ய முடியவில்லை. அந்த வசதிகளையும் மேம்படுத்துதல் நலம்
* சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவமனை டாக்டர்களுக்கு அரசு அங்கீகாரம் அளிக்கப்படும்
போலி டாக்டர்கள் என, இந்திய மருத்துவமனை டாக்டர்கள் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்கின்றன. இவை முறைப்படுத்தி
அங்கீகாரம் வழங்குவது நல்லது தான்.

மீனவர் நலன்
* மீன்பிடி தடைக்கால நிவாரணம், 2,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாகவும், மழைக்கால நிவாரணம், 4,000 ரூபாயில் இருந்து, 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்
மீனவர்களின் வாழ்வாதாரம் சார்ந்த திட்டம் என்பதால், வரவேற்கலாம்; நடைமுறைப்படுத்துவது சாத்தியம்; பெருமளவு நிதிச் சுமை ஏற்படாது.
* கடலில் மீனவர்கள் இறந்தால், இறப்புச் சான்று பெற ஏழு ஆண்டுகள் காத்திருக்காமல், மீனவர் சங்கங்களின் பிரமாண வாக்கமூலம் அடிப்படையில், இறப்பு சான்றிதழ் வழங்கப்படும்
கடலில் விழுந்து இறந்தால், உடல் கிடைக்காத நிலையில், இறப்புச் சான்று கிடைக்க ஏழு ஆண்டுகள் காத்திருப்பதால், அரசின் எந்த உதவிகளும் பெற முடியாத நிலை உள்ளது. இந்த அறிவிப்பு செயல்
பாட்டுக்கு வந்தால், சில மாதங்களில் இறப்புச் சான்று பெற்று, அவரது குடும்பம் அரசின் பயன்களை பெற முடியும்.
* மீனவர்களுக்கு, ஐந்து லட்சம் வீடுகள் கட்டும் திட்டம்; பழைய மீனவர்கள் குடியிருப்புக்களை
இடிக்கப்படும்
மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, ஆழ்கடல் மீன்பிடித்தலை ஊக்கப்படுத்தலாம். அதற்கான வசதிகளை செய்து தரலாம். இது போன்ற, இலவசமாக வீடு கட்டித் தரும் திட்டம் வாழ்வாதாரத்தை
மேம்படுத்தாது.
* தேசிய மீனவர் நல ஆணையம் அமைக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும்
இது மத்திய அரசு தான் செயல்படுத்தும். தனி அமைச்சகம், விவசாயத்திற்கு இணையாக மீன்பிடித்தலுக்கு அங்கீகாரம் எல்லாம், மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.
* அரசின் மீன் வள கல்லுாரிகளில், மீனவர் குழந்தைகளுக்கு, முன்னுரிமை அளிக்கப்படும்
மீன் வள கல்லுாரிகளில், பயிற்சி மையங்களில் நவீன மீன்பிடி தொழில் குறித்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கல்லுாரிகளில், இட ஒதுக்கீடு வழங்குவதில் சட்ட ரீதியாக சாத்தியம் இல்லை.
* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும், பழங்குடியினருக்கான அனைத்து சலுகைகளும் கிடைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்
இதை நடைமுறைப்படுத்துவதில் பல சிக்கல்கள் உள்ளன. வேலைவாய்ப்பு, இட
ஒதுக்கீடுகளிலும் குழப்பம் ஏற்படும்.

விடுதிகள்
* பணிபுரியும் மகளிர் தங்கும் விடுதி ஏற்படுத்தப்படும்
ஏற்கனவே சென்னை, காஞ்சிபுரம் உள்பட 25க்கும் மேற்பட்ட இடங்களில் பணிபுரியும் மகளிர் இல்லங்கள் செயல்படுகின்றன. அதற்காக, ஆண்டுக்கு லட்சக்கணக்கில் செலவழிக்கப்படுகிறது. நகர்களை விட்டு ஒதுக்குப்புறமாகவும், அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு இல்லாததால், பணிபுரியும் பெண்கள் மத்தியில் போதிய வரவேற்பு இல்லை. அதனால், அரசு இந்த விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டியதில்லை என்பதுதான், பலரின் கருத்து.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016