சபாஷ்:தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராள சலுகை அறிவிப்புகள்:மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும் என உறுதி: 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவார்களாம்

Tamilnadu Assembly Election News: சபாஷ்:தி.மு.க., தேர்தல் அறிக்கையில் ஏராள சலுகை அறிவிப்புகள்:மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும் என உறுதி: 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை தருவார்களாம்

சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்; 3.5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும்; அனைத்து மாணவர்களுக்கும், 3ஜி / 4ஜி இணையதள வசதி உள்ளிட்ட ஏராளமான சலுகை அறிவிப்புகளை, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டுள்ளது. அத்துடன், மதுவிலக்கை அமல்படுத்த தனிச்சட்டம் இயற்றப்படும் என, உறுதி அளித்ததோடு, இலவசங்கள் குறித்த அறிவிப்பை வெளியிடாததால், சபாஷ் பெற்றுள்ளது.

தமிழகத்தில், மே, 16ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கையை, சென்னை அறிவாலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் கருணாநிதி வெளியிட்டார்.அப்போது பேசிய கருணாநிதி, ''தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் நிறைவேற்ற, தமிழக மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்,'' என்றார்.


தி.மு.க., தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

*மது விலக்கை நடைமுறைப்படுத்த சட்டம் இயற்றப்படும்

*'லோக் ஆயுக்தா' சட்டம் கொண்டு வரப்படும்

*சேவை உரிமை சட்டம் நிறைவேற்றப்படும்

*வேளாண்மைக்கென தனி நிதி நிலை அறிக்கை வெளியிடப்படும்

*சிறு, குறு விவசாயிகளின் பயிர் கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்யப்படும்

*நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, குவின்டால் ஒன்றுக்கு, 2,500 ரூபாய் வரை வழங்கப்படும்

*கரும்பு, டன் ஒன்றுக்கு, 3,500 ரூபாய் வழங்கப்படும்

*மின் இணைப்பு கோரி விண்ணப்பித்து உள்ள, அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு தரப்படும்

*விவசாயிகளுக்கும், விவசாய தொழிலாளர்களும் ஆண்டுதோறும் வேட்டி, சேலையுடன் *பொங்கல் பரிசு, 500 ரூபாய் வழங்கப்படும்

*100 நாள் வேலை திட்டத்தில், விவசாய பணிகளுக்கு மேலும், 50 நாட்கள் சேர்த்து, 150 நாட்கள் என, புதிய சட்டம் இயற்றப்படும்


*கிருஷ்ணகிரியில், தோட்டக்கலை பல்கலைக்கழகம் நிறுவப்படும்

*நீர்ப்பாசன துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்படும்

*2,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில், 200 தடுப்பணைகள் கட்டப்படும்

*சென்னை பெருநகர் வெள்ள தடுப்பு மேலாண்மை குழு அமைக்கப்படும்

**மீனவர்களுக்காக, ஐந்து லட்சம் வீடுகள் கட்டப்படும்

*மீனவர் சமுதாயத்தினர், பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர்

*மீன்பிடி தடைக்கால நிவாரணம், மழை - வெள்ள நிவாரணம், 5,000 ரூபாயாக உயர்த்தப்படும்

*தனி ஜவுளி ஆணையம் நிறுவப்படும்

*கைத்தறி நெசவாளர்களுக்கு, 200 யூனிட்இலவசமின்சாரம் தரப்படும்*விசைத்தறிகளுக்கு, 750 யூனிட் இலவச மின்சாரம் உண்டு

*ஆட்டோ ஓட்டுனர் சொந்தமாக ஆட்டோ வாங்கிட, 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படும்

*புதிய கல்வி கவுன்சில் நிறுவப்படும்கல்வி கடன் தள்ளுபடி

*மாணவர்களின் கல்விக் கடன்களைத் தள்ளுபடி செய்ய, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்

அனைத்து மாணவர்களுக்கும், 3ஜி / 4ஜி இணையதள வசதி தரப்படும்

*கலந்தாய்வு முறையில் தேர்வு செய்யப்பட்டு, கட்டணம் செலுத்த முடியாத, ஏழை - எளிய மாணவர்களுக்கு, தொழில் கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும்

*அரசு துறைகளில் காலியாக உள்ள, மூன்றரை லட்சம் காலி பணியிடங்கள் நிரப்பப்படும்

*படித்து விட்டு, வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் உதவி தொகை தரப்படும்

சர்க்கரை ஆலைகளில், 10 சதவீத, 'எத்தனால்' உற்பத்தி செய்யப்படும்

*மதுரை முதல் துாத்துக்குடி வரை மற்றும் சென்னை முதல் ஓசூர் வரை தொழிற்சாலைகள் நிறைந்த நெடுஞ்சாலை அமைக்கப்படும்

*மாதம் ஒரு முறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமலுக்கு வரும்

*15 நாட்களில், புதிய குடும்ப அட்டைகள், 'ஸ்மார்ட் கார்டு' வடிவில் தரப்படும்

*நியாய விலை கடைகளில், மாதத்தின் அனைத்து நாட்களிலும் பொருட்கள் வழங்கப்படும்

*மகளிருக்கு, 9 மாத பேறுகால விடுமுறை தரப்படும்

*கருவில் இருக்கும் குழந்தைக்கும், தாய்க்கும் காப்பீடு உண்டு

*திருமண உதவித் தொகை, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு, 4 கிராம் தங்கம் வழங்கப்படும்

*பேறுகால உதவித் தொகை, 18 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்*மாற்றுத்திறனாளிகளுக்கு, கட்டணமில்லா பயண சலுகையுண்டு

*மதுரை, துாத்துக்குடி, திருச்சியில் வர்த்தக மையங்கள் அமைக்கப் படும்

*கோவில் நிலங்களை பாதுகாக்க, நில வங்கி ஏற்படுத்தப்படும்

*முக்கிய கோவில்களின் தேரோடும் வீதிகள், கான்கிரீட் வீதிகளாக மாற்றப்படும்

*கிராம கோவில் பூஜாரிகளின் ஊதியம், ஓய்வூதியம் உயர்த்தப் படும்

*பயணிகள் பேருந்துகளில், ஜி.பி.எஸ்., வசதி அறிமுகம் செய்யப்படும்

*திருச்சி, மதுரை, கோவையில், 'மெட்ரோ' ரயில் சேவை துவக்கப்படும்

*ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, ரேக்ளா பந்தயம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும்

*மீண்டும், 'நமக்கு நாமே' திட்டம் நடைபெறும்

*மணல் உள்ளிட்ட கட்டுமான பொருட்கள், நியாயமான விலையில் பொதுமக்களுக்கு கிடைக்க வகை செய்யப்படும்

*ஒற்றை சாளர முறையில், 60 நாட்களில், கட்டட அனுமதி தரப்படும்

சிறப்பு வகை கைபேசிகள் வாங்க வசதியற்றவர்களுக்கு, அரசு செலவில் கைபேசிகள் தரப்படும்

*பொது இடங்கள் அனைத்திலும், தகவல் தொடர்புக்காக, 'வைபை' வசதி ஏற்படுத்தப்படும்

இப்படி பல்வேறு சிறப்பு அம்சங்கள், தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளன.


இலவச அறிவிப்புகள் இல்லை:கடந்த, 2006 தேர்தலின் போது, தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையில், அனைவருக்கும், 'டிவி' என, இலவசத்துக்கு பிள்ளையார் சுழி போட்டது. அதன் பின், 2011ல், அ.தி.மு.க., இலவச மிக்சி, கிரைண்டர், மின் விசிறி, மாடு, ஆடு என, இலவச அறிவிப்புகளை அள்ளி வீசியது.


இதனால், தேர்தல் அறிக்கை என்றால், அதில் இலவசம் கட்டாயம் இடம் பெறும் என்ற எதிர்பார்ப்பு, மக்கள் மத்தியில் ஏற்பட்டது. இந்த முறை, தி.மு.க., சார்பில், வாஷிங் மிஷின், பிரிஜ் என, இலவசங்கள் இருக்கும் என, தகவல் பரவியதால், அதை விட கூடுதலாக அறிவிப்பு களை வெளியிட, அ.தி.மு.க., தரப்பு தயாராக இருந்தது.


அதற்காகவே, 'தி.மு.க., தேர்தல் அறிக்கையை முதலில் வெளியிடட்டும்' என, அ.தி.மு.க., தன் தேர்தல் அறிக்கையை தள்ளி போட்டு வருகிறது. ஆனால், அ.தி.மு.க.,வினரே ஆச்சரியம் அடையும் வகையில், இலவச அறிவிப்பு இல்லாமல், தி.மு.க., தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.


- நமது சிறப்பு நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016