காமராஜர் கனவு கண்ட கூட்டணி!

Tamilnadu Assembly Election News: காமராஜர் கனவு கண்ட கூட்டணி!

தேர்தல் போஸ்டர்களை பார்த்தால், கட்சி வேறுபாடில்லாமல் இடம்பெறும் ஒேர தலைவர் படம், காமராஜருடையது தான். அவர் வாழ்ந்த காலத்தில், அவரை, மிக கடுமையாகவும் கீழ்த்தரமாகவும் துாற்றியவர்கள், அரசியல் வாழ்க்கையிலிருந்து முழுமையாக தள்ளிவைக்க நினைத்தவர்கள் அனைவரும், இன்று, அவரது படத்தை போட்டு அரசியல் செய்கிறார்கள்.திராவிட இனவாத அரசியலில், காமராஜர், ராஜாஜிக்கு எதிராக நிறுத்தப்படுவார். ராஜாஜி குலக்கல்வி முறையை கொண்டு வந்தவர் என்றும், காமராஜர் கல்வி கண்ணை திறந்தவர் என்றும், எதிரெதிராக பிம்பங்கள் உருவாக்கப்பட்டு, அவை, இன்று வரை, தமிழக பொது மனதில், கேள்விகள் எழுப்பப்படாமல் ஏற்கப்பட்டு விட்டன.ஆனால், காமராஜரின் நிலைப்பாடு என்னவாக இருந்தது? அவரது லட்சிய கூட்டணி எதுவாக இருந்தது? காமராஜர் இருந்திருந்தால் எந்த கூட்டணியை அவர் ஆதரித்திருப்பார்? இதற்கு, காமராஜரின் வாழ்க்கையில் அதிகம் பேசப்படாத சில பக்கங்களை புரட்டியாக வேண்டும்.

தமிழகத்தில் இன்று சாதி அடிப்படையில் நடக்கும் கலவரங்கள், வன்கொடுமைகள், கவுரவ கொலைகளை வளர்த்துவிட்ட பெருமை, பெரிய அளவில், திராவிட கட்சிகளை, குறிப்பாக, தி.மு.க.,வை சேரும்.

கீழவெண்மணி படுகொலையில், அதை செய்தவர்களை தவிர, மற்ற அனைவரையும் திட்டி தீர்த்து ஒரு அறிக்கையை ஈ.வெ.ராமசாமி வெளியிட்டார்.

அவரது பேச்சுகளில், எப்போதுமே, பட்டியல் சமுதாய மக்கள் குறித்து உயர்வான பார்வை இருந்ததில்லை என்பதை, ஒரு கட்டத்தில் திராவிட இயக்க நாளேடு ஒன்றே கேலிச்சித்திரமாக வெளியிட்டது.

பிராமண வெறுப்பும், பட்டியல் சமுதாய மக்களிடமிருந்து விலகலும் கொண்ட ஒரு இயக்கமாகவே, திராவிட இயக்கம் உருவானது. இதில் திராவிட இனவாதமும் சேர்ந்து கொண்டது.

அன்றைக்கு, 'இடைநிலை சாதிகள்' என சொல்லப்படும் சாதிகளின் ஏதோ ஒரு தேவையை பூர்த்தி செய்ததன் விளைவாக, அது வெகுஜன இயக்கமாகி விட்டது.

ஆனால், தொடர்ந்து அந்த இயக்கம், தம் அடிப்படை ஆதரவு சாதிகளின் முன்னேற்றத்தை, வெறுப்பு பார்வையுடன் முன்வைத்து வந்தது. குறிப்பிட்ட இடைநிலை சாதியினருக்கு, காவல் துறை முதல் நீதி துறை வரை, தாம் செய்தது என்ன என்றெல்லாம், சுவரொட்டியை அரசு விளம்பரமாக வெளியிடக் கூட, திராவிட ஆட்சியினர் தயங்கியதில்லை.

பொதுவாக, ஒரு மோதல் மனப்பான்மையையும் வெறுப்பையுமே சமூகநீதி என்ற பெயரில், திராவிட இயக்கம் முன்வைத்தது. கூடவே அதீதமான இந்துமத வெறுப்பையும் திராவிட இயக்கம் உமிழ்ந்து வந்தது.

இதற்கு நேர்மாறாக செயல்பட்டவர் காமராஜர். இந்திய பண்பாட்டின் மீது அதீத பற்று கொண்டவர். சமஸ்கிருதத்தை படிக்க வேண்டுமென்று காமராஜர் கூறினார். யார் படிக்க வேண்டும்?

'பாரதிய கலாசார பண்பாட்டிற்கு இருப்பிடமாக உள்ள சமஸ்கிருத மொழியை, இந்த நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் கற்பது அவசியம்' என்கிறார் காமராஜர்.

கக்கன், நேர்மைக்கும் திறமைக்கும் இலக்கணமாக திகழ்ந்த அமைச்சர். தனது அமைச்சரவையில், அவரை இடம் பெறச் செய்து, அவர் மூலம், தமிழகத்தின் விவசாயத்தை காமராஜர் வளப்படுத்தினார். உள்துறை

அமைச்சராகவும் கக்கன் இருந்தார்.

காமராஜரின் சிந்தனை, ஏதோ பட்டியல் சமுதாய மக்களுக்கு ஒரு இடம் கொடுக்க வேண்டும் என்ற, 'டோக்கனிசம்' அல்ல. பட்டியல் சமுதாய மக்கள் இந்த மண்ணில் வேறெவருக்கும் சளைத்தவரல்ல, அவர்கள் இம்மண்ணின் பண்பாட்டின் சக சிற்பிகள் என்பதை பள்ளிக்கு செல்லாமலே புரிந்துணரும் பண்பாட்டு அறிவு, காமராஜருக்கு இருந்தது.

கடந்த 1969ல், காமராஜர், நாகர்கோவிலில், லோக்சபா தேர்தலில் நின்றார். அப்போது, அவரை எதிர்த்து, மத்தியாஸ் என்ற பிரபல மருத்துவர் ஒருவர் போட்டியிட்டார். அந்த மருத்துவரை ஆதரித்து, காமராஜருக்கு எதிராக பிரசாரத்தில் ஈடுபட்டார் இன்றைய தி.மு.க.,வின் உடைமையாளர் கருணாநிதி.

அவர், காமராஜரை, ''விருதுநகரில் விலை போகாத மாடு, வடசேரி சந்தைக்கு வந்திருக்கிறது. பல்லை பிடித்துப் பார்த்து, வாலைப் பிடித்துப் பார்த்து, ஓட்டுப் போடுங்கள்,'' என மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்தார்.

சாதி மத உணர்வுகளை, காமராஜருக்கு எதிராகத் துாண்டிவிட, கருணாநிதி தயங்கவில்லை, ''ஒருவர் வந்த நாடார். மற்றொருவர் சொந்த நாடார். ஒருவர் சிவனை வணங்குகிறவர். மற்றொருவர் சிலுவையை வணங்குகிறவர். இந்த மாவட்ட மக்கள் நன்கு படித்தவர்கள். எனவே, சொந்த நாடாருக்கு வாக்களியுங்கள்,'' என்று பேசினார்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், 1969 ஜனவரி 2ம் தேதி அன்று, கிறிஸ்தவ நாடார் கூட்டமைப்பு ஒரு செய்தியை வெளியிட்டது. அதில், 'இந்த தொகுதியில் பாதிக்கு மேற்பட்டோர் கிறிஸ்தவ நாடார்கள். எனவே இத்தொகுதி கிறிஸ்தவர்களுக்குரியது. ஒரு கிறிஸ்தவரை தேர்ந்தெடுக்க வேண்டியது கிறிஸ்தவர்களின் கடமையாகும்' என குறிப்பிட்டு, மத்தியாசுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது.

ஆனால், இதை எல்லாம் மீறி, வகுப்பு ஒற்றுமையின் பலத்தில், காமராஜர் தேர்தலில் வெற்றி பெற்றார். இதில் நெய்தல் சமுதாய மக்களின் பங்களிப்பு முக்கியமானது.தி.மு.க.,வின் வகுப்புவாத வியூகங்களுக்கு மாறாக, காமராஜர் எடுத்துக் கொண்ட நிலைப்பாடுகள், வகுப்பு நல்லிணக்கத்தை முன்வைப்பவையாக இருந்தன.

தி.மு.க.,வின் இனவாத பிரசாரம், குறிப்பாக ராமாயணத்தை கீழ்த்தரமாக விமர்சிக்கும் நாடகங்களை, கடுமையாக ஆட்சேபித்தவர் காமராஜர். திராவிட இயக்கத்தின் இத்தகைய நாடகங்களை தடுக்கும் விதத்தில், சிறப்பு சட்ட வரைவு ஒன்றை அவர், சட்டசபையில் தாக்கல் செய்தார்.

கடந்த 1957 தேர்தலின் போது, ஈ.வெ.ரா.,வின் திராவிடர் கழகம், காமராஜரை ஆதரிப்பதாக தீர்மானம் நிறைவேற்றியது. தனிப்பட்ட முறையில் கழகத்தவர்கள் தன்னை ஆதரித்தால் தான் அதை மறுக்க முடியாது என்றும்; தன்னுடைய காங்கிரஸ் கட்சி ஈ.வெ.ரா.,வின் வகுப்புவாத நிலைப்பாடுகளை ஏற்கவில்லை என்றும், தான் தனிப்பட்ட அளவிலும்

ஈ.வெ.ரா., வின் நிலைப்பாடுகளை ஏற்கவில்லை என்றும், பெருந்தலைவர் காமராஜர் தெள்ளத் தெளிவாக கூறினார்.

ஆனால் அதே காமராஜர், மற்றொரு கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் முழுமையாக இருந்தார். அந்த கூட்டணி என்ன தெரியுமா?

பரம்பரை ஆட்சியையும் ஜனநாயக மற்ற ஆட்சியையும் உருவாக்கும் போக்கில், இந்திரா காந்தியின் காங்கிரஸ் இறங்கியது. அத்தகைய சூழலில், ராஜாஜி காங்கிரசுக்கு மாற்றாக ஒரு கூட்டமைப்பு ஏற்படுத்த வேண்டுமென்று முனைந்தார். அதற்கு தன் முழு ஆதரவை நல்கினார் காமராஜர். காமராஜரின் ஸ்தாபன காங்கிரஸ், ராஜாஜியின் சுதந்திரா கட்சி, பாரதிய ஜனசங்கம் ஆகியவை இணைந்த கம்யூனிச, -திராவிட, காங்கிரஸ் மறுப்பு கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கிட வேண்டும் என்பதில் காமராஜர், -ராஜாஜி ஆகியோரின் இதயங்கள் இணைந்தன.

இந்த அமைப்புக்கு, 'தேசிய ஜனநாயக கூட்டமைப்பு' என்று பெயர். தமிழகத்தின், ஆதர்ச கூட்டணியாக நாம் இதைத்தான் கருத முடியும். திராவிட வாய்ப்பந்தல்கள், இனதுவேஷம், வகுப்புவாத வாக்கு வங்கிகள், பண்பாட்டுச் சீரழிவு ஆகியவற்றுக்கு நடுவில், காமராஜர் - -ராஜாஜி கூட்டணி மட்டும் மேலும் இயக்க ரீதியில் பலமடைந்திருந்தால், இன்று தமிழகம் இந்தியாவுக்கே ஒரு ஆதர்ச மாநிலமாகிஇருக்கும்.

ஆனால் ராஜாஜியும் காமராஜரும் தம் காலத்தின் இறுதியில் கண்டு நிறைவேறாத ஒரு கனவாகவே அது முடிந்தது. இந்திரா காங்கிரஸ் என்ற நேரு பரம்பரை காங்கிரஸ், எமர்ஜென்சி என்ற பாசிச இருளைக் கொண்டு வந்து, பாரம்பரிய தேசிய காங்கிரஸ் தலைவர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. காமராஜரும் அமரரானார்.

இன்றைய காங்கிரஸ், திராவிட கட்சிகள் போன்றே வகுப்புவாத வாக்கு வங்கிகளால் சமுதாயத்தை சீரழிக்கும் ஒரு கட்சியாக தான் இயங்குகிறது. அதன் தலைவர்கள் சிலரின் பேச்சுகள், திராவிட

இயக்க மேடை பேச்சாளர்களின் மூன்றாந்தர பேச்சுகளுடன் போட்டியிடுவது போல அமைந்து உள்ளன. திராவிட கட்சிகளோ, தமிழ் சமுதாயத்தை குட்டிச் சுவராக்கி விட்டன. ஒரு சிறு வேறுபாடு,

எம்.ஜி.ஆரின் ஆட்சியில் மட்டுமே தோன்றியது.

அவ்விதத்தில், இன்று நாம் காணும் தேசிய ஜனநாயக கூட்டணி காமராஜர் - -ராஜாஜி கனவு கண்ட மாற்று அரசியலின் இன்றைய நீட்சியே. காமராஜர் - -ராஜாஜி ஆகியோரின் லட்சியங்களின் வரலாற்று பொறுப்பை, இன்று தாம் சுமந்திருக்கிறோம் என்ற பெரும் நெருப்பை, தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைமை உணர்ந்திருக்கிறதா என்பதும், காமராஜர் - -ராஜாஜி கண்ட லட்சிய தமிழகத்தை உருவாக்கும் ஒரு வாய்ப்பை, தேசிய ஜனநாயக கூட்டணி அளிக்கிறது என்பதை, தமிழக வாக்காளர்களும் உணர்ந்திருக்கிறார்களா என்பதுமே பெரும் கேள்விகள்.

கட்டுரையாளர், எழுத்தாளர், 'சுவராஜ்யா' இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர்.

தொடர்புக்கு:

aravindan.neelakandan@gmail.com

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016