உடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி?

Tamilnadu Assembly Election News:  உடைக்கும் அளவுக்கு பலமானதா மக்கள் நல கூட்டணி?

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன், மக்கள் நல கூட்டணியை உடைப்பதற்கு தி.மு.க., சதி செய்வதாக ஒரு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். தே.மு.தி.க.,வை எதிர்பார்த்து தி.மு.க., காத்து இருந்ததாகவும், அது கைகூடாததால், மக்கள் நல கூட்டணியை உடைக்க தி.மு.க., சதி செய்வதாகவும் அவர் சொல்கிறார்.


தி.மு.க., வலிமையாக ஓராண்டுக்கு முன்பு இருந்தே, சட்டசபை தேர்தலை சந்திக்க தன்னை தயார்படுத்திக் கொண்டு வருகிறது. ஒருமித்த கருத்துடைய கட்சிகளை கூட்டணிக்கு அழைப்பதும், கூட்டணி அமைப்பதும் வழக்கமான தேர்தல் யுக்திதான்.


தேர்தலில் போட்டியிடும் ஒவ்வொரு கட்சியும், வெற்றி என்ற இலக்கை நோக்கி தான் பயணிக்கும். தமிழகத்தில் கடந்த, ஐந்து ஆண்டுகளாக, அ.தி.மு.க.,வின் அலங்கோல ஆட்சியால், மக்கள் வெறுப்புற்று உள்ளனர்.இதனால், தி.மு.க., ஆட்சி வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. ஸ்டாலின் தமிழகம் முழுவதும் மேற்கொண்ட, 'நமக்கு நாமே' பயணம், வெளிப்படையாக இதை காண்பித்துள்ளது.


இந்த நேரத்தில், தா.பாண்டியன் போன்றவர்கள் அவர்களது கூட்டணியை தி.மு.க., உடைப்பதாக சொல்வது நகைச்சுவையாக உள்ளது. மக்கள் நல கூட்டணியை உடைத்து, அதன்மூலம் ஆதாயம் பெற வேண்டிய அவசியம், தி.மு.க.,வுக்கு இல்லை.


மக்கள் நல கூட்டணியை, உடைக்கும் அளவுக்கு வலுவான கூட்டணியும் அல்ல. அலங்கோல ஆட்சியை அளித்த ஜெயலலிதா அரசை எதிர்க்காமல், தி.மு.க.,வை தாக்கும் கம்யூனிஸ்ட்களின் போக்கு, அவர்களின் எண்ணத்தை வெளிப்படுத்துகிறது.மக்கள் நல கூட்டணி கட்சி தலைவர்களின் போக்கை பார்த்து தான், அவர்கள் அ.தி.மு.க.,வின் 'பினாமி' என, ஸ்டாலின் கூறினார்.


தா.பாண்டியன் போன்றவர்களுக்கு எப்போதுமே தி.மு.க.,வை கண்டால் பிடிக்காது. எந்த நல்லது செய்தாலும் அதை விமர்சிப்பதையே தொழிலாக கொண்டவர்கள்.'நில உச்சவரம்பு சட்டம் மற்றும் பொது உடமை கொள்கைகளை பின்பற்றி, தி.மு.க., செயல்படுகிறது; ஆட்சி நிர்வாகத்தை சிறப்பாக அளிக்கிறது' என, கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர்களில் ஒருவரான, மணலி கந்தசாமி போன்றவர்கள் பாராட்டி உள்ளனர்.


ஆனால், தா.பாண்டியன் போன்றவர்களுக்கு தி.மு.க., எப்போதும் விரோதியாகவே தென்படுவது போல் தெரிகிறது.குறிப்பாக, தி.மு.க., தலைமை மற்றும் அவர்கள் குடும்பத்தை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதை தி.மு.க., தலைவர் கருணாநிதியும் சுட்டிக்காட்டி உள்ளார். எனவே, இவர்களது போக்கு எதை நோக்கி சொல்கிறது என்பதை, மக்கள் நன்றாகவே உணர்ந்துள்ளனர்.


தி.மு.க., மத்திய அரசில் பங்கெடுத்தபோதும், தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைத்து இருந்த போதும், தவறுகளை சுட்டிக்காட்ட தயங்கியது இல்லை. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, அவசரநிலை காலத்தை நாடே எதிர்த்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்து, மத்திய அரசோடு கைகோர்த்து நின்றதை, மக்கள் மறந்துவிட மாட்டார்கள்.


இவர்கள் எல்லாம், தி.மு.க.,வை விமர்சிக்க தகுதியற்றவர்கள். கட்சியின் கொள்கை, மக்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்ற திட்டம், இதுவரை சாதித்தது என்ன? என்ற பட்டியலை வைத்து இருப்பவர்கள், தேர்தல் களத்தில் அவற்றை முன்னிறுத்தி பிரசாரம் செய்வர்.

எதுவுமே இல்லாதவர்கள், பிற கட்சிகளை புறம் சொல்லியும், வீண் பழி சுமத்தியும் தான் தேர்தலை சந்திப்பர். எங்களைப் போன்ற முற்போக்கு எண்ணம் கொண்டவர்களை, இவர்களால் சகித்துக் கொள்ள முடியாது.


எனவே தான், எங்கள் கூட்டணியை உடைக்கப் பார்க்கின்றனர்; சதி செய்கின்றனர் என, எல்லை மீறிய விமர்சனங்களை முன் வைக்கின்றனர். எந்த அடிப்படையில், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர் என்பதற்கு அவர்களது பலமின்மையே காரணம்.


ஜனநாயக மரபில் நம்பிக்கை கொண்ட தி.மு.க., தன் பலத்தை நம்பியே களமிறங்குகிறது. மற்றவர்களை எதிர்பார்த்தோ, பிற கட்சிகளை உடைத்தோ அரசியல் செய்ய வேண்டிய அவசியம் தி.மு.க.,வுக்கு இல்லை.


திருச்சி சிவா, எம்.பி., கொள்கை பரப்பு செயலர், தி.மு.க.,


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016