கூட்டணியில் பா.ஜ., ஓரங்கட்டப்பட்டது ஏன்?

Tamilnadu Assembly Election News: கூட்டணியில் பா.ஜ., ஓரங்கட்டப்பட்டது ஏன்?

கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் பா.ஜ., தலைமையில் புதிய அணி உருவானது. அ.தி.மு.க., - தி.மு.க.,வுக்கு மாற்று என, முன்னிறுத்தப்பட்டது. இரு ஆண்டுகளில் நிலைமை தலைகீழாகி, பா.ஜ., தனித்து சட்டசபை தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு, மாநில கட்சிகளின் தனிப்பட்ட ஆசாபாசங்கள் காரணம் என்கிறது, ஒரு தரப்பு. மற்றொரு தரப்போ, பா.ஜ.,வின் செயல்பாடே காரணம் என்கிறது. இது பற்றிய நேர் எதிர் கருத்துகள்:

'மாலையாய் இருந்தால், மலராய் இருப்பேன்; நீ பாலையாய் இருந்தால், மணலாய் இருப்பேன்' என்பது தான் உறவு. ஆனால், லோக்சபா தேர்தலில் பா.ஜ., அமைத்த கூட்டணி உறவு என்பது, பொய்யான வாக்குறுதிகளைக் கொடுத்து, சில கட்சிகளை வளைத்துப் போட்டது.

தேர்தல் முடிந்த பின், கூட்டணிக் கட்சிகளை பொருட்டாகவே மதிக்கவில்லை. ஈழ விவகாரம் உள்ளிட்ட தமிழகத்தின் உணர்வு ரீதியான பிரச்னைகளில், தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என, பா.ஜ., அளித்த வாக்குறுதிக்கு எதிராக, தேர்தலுக்குப் பின் நடந்து கொண்டது.


எந்த குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் மீது சொல்லி, வெறுப்பை உமிழ்ந்தனரோ, அந்த குற்றச்சாட்டுகளுக்கும் அதிகமாக, பா.ஜ.,வின் செயல்பாடு இருக்கிறது. இதனால், சொல்வது ஒன்று; செய்வது ஒன்று என இருக்கும் பா.ஜ.,வுடன் தொடர்ந்து இருந்தால், உள்ளூர் அரசியலில், குப்பை கொட்ட முடியாது எனக் கருதியே, கூட்டணிக் கட்சிகள் பா.ஜ.,வை விட்டு எட்டி நிற்கின்றன.


இதை சமாளிக்க, 'லோக்சபா தேர்தலின் போது, தமிழகத்தில் வாங்கிய ஓட்டுகள் எல்லாம் எங்களுடைய ஓட்டு, அது மேலும் அதிகரித்தே உள்ளது' என அக்கட்சி கூறுவது, இருட்டில் போகிறவர், பயம் போக பாட்டு பாடுவது போலத்தான். எனவே, பா.ஜ.,வின் செயல்பாடுகள் தான், அந்த கட்சியை தனிமைப்படுத்தி உள்ளது.


காசி முத்துமாணிக்கம்

மாநில வர்த்தக அணி செயலர், தி.மு.க.,


லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் அமைந்த தேசிய ஜனநாயகக் கூட்டணி, 19.4 சதவீத ஓட்டுகளை வாங்கியது. இந்த ஓட்டுகள் எல்லாம், மோடி என்ற கதாநாயகனுக்கு கிடைத்தது. மோடி ஆட்சிக்கு வந்த பின், ஒவ்வொரு வீட்டுக்கும், ஏதாவது ஒரு வகையில் பயன் கிடைத்துள்ளது. இதனால், லோக்சபா தேர்தலில் வாங்கிய, 19.4 சதவீத ஓட்டு கள், இப்போது மேலும் அதிகரித்து உள்ளன.


எனவே, நாங்கள் தனியாக களம் இறங்கி, எங்களின் ஓட்டு சதவீதத்தை நிரூபித்துக் காட்ட தயாராக இருக்கிறோம். இதற்காக, 234 தொகுதிகளிலும் 'பூத்' கமிட்டி அமைக்கப்பட்டு உள்ளது. வேட்பாளர் நேர்காணல் முடிந்து விட்டது. இம்மாதம், 19, 20ம் தேதிகளில் தேசிய நிர்வாகக் குழுக் கூட்டம் நடக்கிறது. இதில், ஐந்து மாநில தேர்தல் குறித்து விவாதிக்க உள்ளோம்.


இருந்தாலும், லோக்சபா தேர்தலின் போது, எங்களுடன் இருந்த கட்சிகளுடன், சட்டசபை தேர்தல் குறித்த கருத்து அறிய, பல சந்திப்புகளை நடத்தினோம். அதில், யார் முதல்வர் வேட்பாளர், யார் கூட்டணிக்கு தலைமை ஏற்பது என, சில கருத்து வேறுபாடுகள் நிலவுகிறது. சிறிய கட்சிகள் கூட, அவர்களுக்கு என, மாநில அளவில் ஆசாபாசங்களை முன் வைக்கின்றனர். எனவே, பா.ஜ., தனித்துவிடப்படவில்லை. மக்களின் ஆதரவுடன், மகத்தான இடத்தை சட்டசபை தேர்தலில் பெறுவோம்.


எச்.ராஜா தேசிய செயலர், பா.ஜ.,

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016