அ.தி.மு.க.,வின் அதீத நம்பிக்கை வெற்றி தருமா?

Tamilnadu Assembly Election News: அ.தி.மு.க.,வின் அதீத நம்பிக்கை வெற்றி தருமா?

கடந்த, 2011 சட்டசபை தேர்தலில், மெகா கூட்டணியுடன் களம் கண்ட, அ.தி.மு.க., அபார வெற்றியைப் பெற்றது. இக்கூட்டணி நீண்ட நாள் நீடிக்கவில்லை. லோக்சபா தேர்தலில் தனித்து நின்று, 37 தொகுதிகளை வென்றது. இதனால், வரும் சட்டசபையில் பெரிய கட்சிகளுடன் சேராமல், தேர்தலை சந்திக்க அ.தி.மு.க., வியூகம் வகுத்து வருகிறது. இந்த நம்பிக்கை, கடந்த ஐந்தாண்டு கால ஆட்சி தருவதுஎன்கிறது ஒரே தரப்பு. மற்றொரு தரப்போ, அ.தி.மு.க.,வின் அதீத நம்பிக்கைக்கு, தேர்தலில் தக்க பாடம் புகட்டப்படும் என்கிறது.

இதுபற்றிய நேர் எதிர் கருத்துக்கள்:

வீரபாண்டியன்,துணை செயலர், இந்திய கம்யூ.,:
சில இலவச திட்டங்களை அளித்துவிட்டு, 'மக்கள் பிரச்னைகளை எல்லாம் தீர்த்துவிட்டோம். இதனால், மக்கள் ஆதரவு, எங்கள் பக்கம் உள்ளது' என்ற எண்ணத்தில் அ.தி.மு.க., உள்ளது. ஆனால், விலைவாசி உயர்வு, வேலையின்மை, புதிய தொழில்களை ஏற்படுத்தாதது, சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அழிந்து வருவது, இதனால் ஏற்படும் நெருக்கடி ஆகியவை, இந்த அரசின் மீது, கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.இதுதவிர, ஜனநாயக முறைப்படி, எந்த செயல்களையும் அனுமதிக்க மறுத்தது, அமைச்சர்கள் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளின் ஊழல் போன்றவை, பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அ.தி.மு.க., மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு இல்லை.ஆனால், தேர்தல் முறைகேடுகள் மூலமும், ஓட்டுக்கு பணம் கொடுத்தும் வெற்றி பெற்று விடலாம் என்ற எண்ணத்தில், அ.தி.மு.க., இருக்கிறது. இந்த மமதையில், 'பெரிய கட்சி களின் கூட்டணி அவசியமில்லை. எங்கள் சொந்த காலில் வெல்வோம்' என்கின்றனர். லோக்சபா தேர்தல் வெற்றி தொடரும் என்றும் கணக்கிடுகின்றனர். ஆனால், இதற்கு எல்லாம் மக்கள் மசிய மாட்டார்கள்.எனவே, அ.தி.மு.க.,வின் அதீத நம்பிக்கைக்கு, தேர்தல் முடிவுகள் தக்க பாடம் கற்றுத் தரும்.


மாத்ருபூதம், பேச்சாளர், அ.தி.மு.க.,: அ.தி.மு.க.,வுக்கு, மக்களின் செல்வாக்கு அபரிமிதமாக உள்ளதால், மக்கள் மீண்டும் வாய்ப்பு தருவர். எனவே, கூட்டணி சேர வேண்டிய அவசியமில்லை. கடந்த, ஐந்து ஆண்டு களில், பல்வேறு மக்கள் பணிகளை இந்த அரசு செய்துள்ளது.
பிறக்கும் குழந்தைகள் முதல் முதியோர் என, ஒவ்வொரு தரப்பினரும் பலனடையும் திட்டங்களை, முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி உள்ளார்.ஒரு அரசு, ஐந்தாண்டுகள் ஆட்சியில் இருந்தால், அந்த அரசின் மீது, மக்களுக்கு அதிருப்தி இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால், அ.தி.மு.க.,வின், ஐந்தாண்டு கால ஆட்சியில், மக்களின் செல்வாக்கு மேலும் பெருகியே உள்ளது.கடந்த, 2011ல், சட்டசபைக்கு தேர்வு செய்த தமிழக மக்கள், மூன்றாண்டு ஆட்சியை மெச்சித் தான், லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்ட, அ.தி.மு.க.,வுக்கு, 37 தொகுதிகளில் வெற்றியைத் தந்தனர். இந்த வெற்றி, தற்போதைய சட்டசபை தேர்தலிலும் தொடரும்.மக்கள் செல்வாக்கு பெருமளவு இருந்தாலும், ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் கட்சிகளையும், அரவணைத்து செல்ல வேண்டும் என்ற, பரந்த மனப்பான்மையுடன், அவர்களுடன் கூட்டணி ஏற்படுத்த உள்ளது. எனவே, அ.தி.மு.க., கூட்டணியில் மக்கள் இருப்பதால், வெற்றி பெறுவது உறுதி.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016