விஜயகாந்த் அறிவிப்பு குழப்பத்தின் உச்சமா?

Tamilnadu Assembly Election News:  விஜயகாந்த் அறிவிப்பு குழப்பத்தின் உச்சமா?

சட்டசபை தேர்தலில், 234 தொகுதியிலும் தே.மு.தி.க., தனித்து போட்டியிடும் என, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்து, கூட்டணி அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். ஆனால், 'கூட்டணியே இல்லை என விஜயகாந்த் சொல்லவில்லையே' என கூறி தே.மு.தி.க.,வுடன் கூட்டணி அமைக்க முயற்சிக்கிறோம் என சில கட்சிகள் கூறுகின்றன. ஆனால், இதை முரண்பாடு என்றும் குழப்பத்தை ஏற்படுத்துகின்றனர் என்றும் சில கட்சிகள் சொல்கின்றன. இது குறித்த நேர் எதிர் கருத்துகள்:ரவிகுமார்:பொதுச் செயலர், விடுதலை சிறுத்தைகள்:தே.மு.தி.க.,வுடன், தி.மு.க., மற்றும் பா.ஜ., கட்சிகள் கூட்டணி அமைப்பதாகவும், அதற்கான பேச்சு நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நான் தனித்து தான் இருக்கிறேன். அக்கட்சிகளுடன் கூட்டணி இல்லை என, விஜயகாந்த் அறிவித்தார்.இதை, அவர் தனித்துப் போட்டியிடுகிறார் என புரிந்து கொண்டனர். விஜயகாந்த் பேசியதற்கு பின், ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் வரலாம். கூட்டணி அமைக்கலாம் என, அக்கட்சியின் மகளிர் அணி பிரமுகரான பிரேமலதா அறிவித்தார். இதனால், தே.மு.தி.க.,வை மக்கள் நல கூட்டணிக்கு வருமாறு அழைக்கிறோம்.


மக்கள் நலக் கூட்டணியுடன் கூட்டணி இல்லை என விஜயகாந்த், இதுவரை அறிவிக்கவில்லை. எனவே, தே.மு.தி.க.,வுடன் கூட்டணி ஏற்படுத்த, நாங்கள் முயற்சிக்கிறோம். அதேபோல், த.மா.கா.,வுடன் கூட்டணி அமைக்கவும் அழைப்பு விடுத்துள்ளோம். அக்கட்சியும், எங்களுடன் கூட்டணி இல்லை என அறிவிக்கவில்லை.எங்கள் கூட்டணிக்கான அழைப்புக்கு, மறுப்பு தெரிவிக்காத வரை, எங்களின் அழைப்பு ஏற்கப்படலாம் என்ற நம்பிக்கை இருக்கிறது. எனவே, தனித்துப் போகிறோம், வேறு கூட்டணிக்கு போகிறோம் என அறிவித்தவர்களை, நாங்கள் வலுக்கட்டாயமாக அழைக்கவில்லை.


வேல்முருகன்,நிறுவனர், தமிழக வாழ்வுரிமை கட்சி:விஜயகாந்த் நடித்த சினிமாக்களில் பல திருப்பங்கள் இருக்கும். அதுபோல தான், அவரது கட்சியிலும், அதிரடி திருப்பங்கள் நடக்கின்றன. தேர்தல் முடியும் வரை இது நீடிக்கும்.சில நாட்களுக்கு முன், பல்வேறு கட்சித் தலைவர்கள், அவரை பலமுறை சந்தித்து எங்களுடன் வாருங்கள் என அழைத்தனர். ஏதாவது ஒரு அணியில், தே.மு.தி.க., ஐக்கியம் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென்று தனித்துப் போட்டியிடுவேன் என, விஜயகாந்த் அறிவித்தார். கட்சியின் தலைவர் என்ற முறையில், அவர் இந்த அறிவிப்பை வெளியிட்ட பின், அவரது மனைவி பேசுகிறார். அவரோ, 'எங்களுடன் வாருங்கள்; இணைந்து போட்டியிடலாம்' என்கிறார். அப்படியானால், விஜயகாந்த் சொன்ன தனித்துப் போட்டி என்பதற்கு என்ன அர்த்தம்.


கட்சியில் என்ன நடக்கிறது என்பது, அவருக்குத் தெரியாது. அவரது மனைவி, மைத்துனர் பிடியில் கட்சி உள்ளது. அதனால், பெரும் குழப்பத்தில், அக்கட்சி தொண்டர்கள் உள்ளனர். இந்நிலையில், மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத கட்சிகள் சில, தனித்துப் போட்டி என அறிவித்தவரை, மீண்டும் கூட்டணிக்கு அழைத்து, அதன் மூலம் ஏதாவது ஓட்டு கிடைத்து விடாதா என ஏங்குகின்றனர். ஆனால், இந்த எதிர்பார்ப்பை, தே.மு.தி.க., நிறைவேற்றாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016