இம்முறை கூட்டணி ஆட்சி தான் தலையெழுத்தா?

Tamilnadu Assembly Election News: இம்முறை கூட்டணி ஆட்சி தான் தலையெழுத்தா?

முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு, தமிழக சட்டசபை தேர்தலில் கட்சிகள் தனித்தனியாகவும், கூட்டணியாகவும் போட்டியிடுகின்றன. இதனால், ஓட்டுகள் பிரிந்து, எந்த ஒரு கட்சிக்கும் தனி பெரும்பான்மை கிடைக்காமல், கூட்டணி ஆட்சி ஏற்படலாம் என்ற கருத்து நிலவுகிறது.இதனால், 'தனி நபர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, பங்கேற்பு ஜனநாயகம் ஏற்படும்' என்கிறது ஒரு தரப்பு. மற்றொரு தரப்போ, 'தனி நபர் ஆட்சிக்கு மாற்று என்பது, பெயர் மாற்றம் அல்ல; நிர்வாக மாற்றம். இதனால், புதிய விடியல் ஏற்படும்' என்கிறது.

இதுபற்றிய இரு தரப்பு கருத்துகள்:


செந்தில், முன்னாள் எம்.பி.,தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர், பா.ம.க.,:இந்தத் தேர்தல் மாற்றத்துக்கான தேர்தல். மாற்றம் என்பது, வெறும் பெயர் மாற்றத்துக்கானது அல்ல; நிர்வாக மாற்றத்துக்கானது. சமூக, ஜனநாயக மற்றும் மனித உரிமை என்ற அடிப்படையில், மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.இப்போதைய அரசு, அடிப்படைத் தேவையான சாலை அமைத்தல், குடிநீர் வழங்குதல் போன்ற திட்டங்களை நிறைவேற்றினால் கூட, முதல்வரை பல்வேறாக புகழ்ந்து, அவரது கருணையின் அடிப்படையில் அளிக்கப்படுவதாக கூறுகின்றனர். இது, மன்னர் ஆட்சியில் நடக்கும் செயல் போல் உள்ளது.


சாலை, குடிநீர் போன்றவை, ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை. இதை அளிக்க வேண்டியது, ஒரு அரசின் கடமை. எனவே, மக்களின் உரிமைகளை அளிக்கும்போது, அதை பிச்சை போடுவதாக கூறுவது முறையற்றது.

இந்நிலையில், உரிமைகளை பெறும் ஆட்சியாக, புதிய ஆட்சி மலரும். அந்த ஆட்சி, தனிப் பெரும்பான்மை ஆட்சியாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம். பா.ம.க.,வின் இந்த முழக்கத்துக்கு, பெரும் வரவேற்பு கிடைத்து உள்ளது.குறிப்பாக, அ.தி.மு.க.,- தி.மு.க., போன்ற கட்சிகள், முழுமையாக வெளியேற்றப்படுவர். இவர்களை வெளியேற்றும்போது, பெரும்பான்மை ஆட்சியை உருவாக்கவே மக்கள் விரும்புவர்.


நன்மாறன்,செய்தி தொடர்பாளர், ம.தி.மு.க.,:தனிக்கட்சி ஆட்சி என்பது, தனி மனித ஆளுமைக்குள் இருக்கும் ஆட்சியாகவே இருக்கிறது. இதில், ஜனநாயகம் இருப்பதில்லை. தனி நபர் துதிபாடல்களுக்குத் தான் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.


அனைத்து தரப்பின் பங்கேற்புடன், ஆட்சி நிர்வாகம் இருக்க வேண்டும் என்பதற்கு தான், விகிதாசார பிரதி நிதித்துவம் கேட்கப்படுகிறது. இந்நிலையில், கூட்டணி ஆட்சி என்பதே, மக்கள் நலனுக்கு உகந்தது. மக்களும் இதைத்தான் இந்தத் தேர்தலில் உருவாக்குவார்கள் என, நம்புகிறோம்.

பல கட்சிகள் இணைந்து, ஆட்சி நிர்வாகத்தை செய்யும்போது, சொந்த விருப்பு, வெறுப்பு இல்லாமல், சமூகத்துக்கு எது தேவை என்பதை அறிந்து, ஆலோசித்து முடிவுகளை எடுப்பர். இதனால், மக்கள் பயனடைவர்.


தமிழகத்தில், கடந்த காலங்களில் நடந்த ஆட்சி எல்லாம், தனி நபரின் விருப்பு, வெறுப்புகளுக்கு உட்பட்டு நடந்தது. இதனால், சர்வாதிகாரம் தான் மேலோங்கி இருந்தது; மக்கள் ஆட்சி மலரவில்லை.தனிநபர் ஆட்சியில், எதிர்க்கட்சிகள் கூட, அவர்களின் சட்டசபை பணியை செய்ய முடியாத நிலை தான் உள்ளது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பங்கேற்பு ஜனநாயகம் ஏற்பட வேண்டும் என்றால், கூட்டணி ஆட்சி மட்டுமே, ஒரே தீர்வு. அதற்கு இந்த தேர்தல் வழிவகுக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016