தனியார் ஏஜன்டுகளை நம்பியே கட்சி பணி இருக்கிறதா?

Tamilnadu Assembly Election News:  தனியார் ஏஜன்டுகளை நம்பியே கட்சி பணி இருக்கிறதா?

கட்சி தொண்டர்கள் ஒரு கோடியை தாண்டி விட்டனர். புதிய உறுப்பினர்கள், பல லட்சம் பேர் சேர்ந்துள்ளனர் என, ஒவ்வொரு ஆண்டும் அரசியல் கட்சிகள் உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்து காட்டி வருகின்றன. கட்சி தொண்டர்கள் எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு, கட்சிப் பணிகளை செய்ய தொண்டர்கள் இல்லை. கட்சி வேலைகளை ஒப்பந்த அடிப்படையில், தனியாருக்கும் அளிக்கும் நிலையில் தான் கட்சிகள் உள்ளன. இது குறித்த நேர் எதிர் கருத்துக்கள்:


வன்னி அரசுசெய்தி தொடர்பாளர், விடுதலை சிறுத்தைகள்

தமிழகத்தில் உள்ள பெரிய கட்சிகள் அனைத்தும், 'கார்ப்பரேட்' நிறுவனங்களாக மாறிவிட்டன. திருமணத்துக்கு தேதியை குறித்துக் கொண்டு, ஏஜன்டை அணுகினால், திருமணத்துக்கான அனைத்து வேலைகளையும் செய்து முடித்துவிட்டு, பணம் வாங்கிக் கொள்வர்.

அதுபோல், கட்சியின் மாநாடு நடக்கிறது என, தேதியையும், இடத்தையும் சொல்லிட்டால் போதும்; மாநாட்டு சுவர் எழுத்து, கொடி கட்டுதல், போஸ்டர் ஒட்டுதல், மாநாட்டு பந்தல் போடுதல், தொண்டர்களை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் அழைத்து வருதல் ஆகிய வேலைகளை, தனியார் ஏஜன்டுகள் செய்து விடுகின்றனர்.

ஒரு காலத்தில், கட்சியின் கொள்கை முழக்கத்தையும், கோட்பாடுகளையும் உள் வாங்கிக் கொண்ட தொண்டர்கள் இருந்தனர். அவர்கள் அனைத்து வேலைகளையும் கட்சிக்காக செய்தனர். இன்று பல கட்சிகள், அவற்றின் கொள்கையிலிருந்து விலகிச் சென்றுவிட்டன.

இதனால், தலைமைக்கும், தொண்டனுக்குமான இடைவெளி அதிகரித்து விட்டது. கட்சியின் பிற மாவட்ட நிர்வாகிகளுக்கும், அம்மாவட்ட தொண்டனுக்கும் தொடர்பே இல்லை. இதனால், தனியார் முகமைகளை கொண்டு இயங்கும் கார்ப்பரேட் கம்பெனிகளாக அரசியல் கட்சிகள் மாறிவிட்டன.


பாலுசெய்தி தொடர்பாளர், பா.ம.க.,

எங்களைப் பொறுத்தவரை, தொண்டர்களை நம்பித் தான் உள்ளோம். தொண்டர்கள் தான் எங்களது பலம். கட்சிப் பணிகளை அவர்கள் தான் எங்களுக்கு செய்கின்றனர். கட்சி ஒரு அறிவிப்பை வெளியிட்டால் அதை, தன் சைக்கிளில் எழுதி விளம்பரப்படுத்துவது முதல் கிராமங்கள்தோறும் சென்று பரப்புவது வரை, தொண்டர்கள் தான் செய்கின்றனர்.

எங்கள் கூட்டங்களுக்கு, மடிப்பு கலையாத சட்டை, வேட்டி அணிந்த படி தொண்டர்கள் வருவதில்லை; வயல்வெளிகளில் வேலை செய்த கையோடு வரும் விவசாய கூலிகள், நிறுவனங்களிலும் பணியாற்றிவிட்டு வரும் தொழிலாளர்கள் தான் மிக அதிகம்.


இவர்களுக்காகத் தான் நாங்கள் கட்சி நடத்துகிறோம். கடந்த காலங்களில், வன்னியர் இனத்துக்காக, பா.ம.க., பெற்றுத்தந்த இட ஒதுக்கீட்டில், படித்து பட்டம் பெற்ற இளைஞர்கள், கட்சிக்கு வந்துள்ளனர். அவர்கள் தன்னெழுச்சியாக வருவதால், இளம் ரத்தங்களின் கட்சிப் பணி, மிகத் துரிதமாக நடக்கிறது.தொண்டர்களையும், கட்சி நிர்வாகிகளையும் நம்பாமல், 'கார்ப்பரேட்' நிறுவனங்களைப் போல, தனியார் முகமைகளை நம்பி, கட்சி பணிகளை ஒப்படைத்த எந்தக் கட்சியும் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றதில்லை; அதில் எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016