தே.மு.தி.க.,விடம் தி.மு.க., கெஞ்சலாமா?

Tamilnadu Assembly Election News: தே.மு.தி.க.,விடம் தி.மு.க., கெஞ்சலாமா?

'தே.மு.தி.க.,வை கூட்டணியில் சேர்க்க, பாரம்பரியம் மிக்க, தி.மு.க.,வும், காங்கிரசும் வலியக் காத்திருக்கின்றன. இதனால், சுயமரியாதையை இழந்து விட்டன. தேர்தல் லாபத்துக்காக அக்கட்சிகள் எதை வேண்டுமானாலும் செய்கின்றன' என, ஒரு தரப்பு சாடுகிறது. மற்றொரு தரப்போ, 'எதிரியை வீழ்த்த தேர்தல் வியூகம் அமைப்பது தான் சாணக்கியத்தனம். இதை விரும்பாத சக்திகள் வேண்டுமென்றே சேற்றை வாரி இறைக்கின்றன' என்கிறது. இதுபற்றிய நேர் எதிர் கருத்துக்கள்:


காங்கிரசை ஆட்சியிலிருந்து வீழ்த்த, தி.மு.க., துவங்கப்பட்டது. ஆனால், அக்கட்சியோடு கூட்டணி ஏற்படுத்தியபோதே, தி.மு.க., அதன் சுயமரியாதையை இழந்துவிட்டது. காங்கிரசுடன் கூட்டணியை முறித்துக் கொண்டபோது, தி.மு.க., தலைவர் கருணாநிதி என்ன விளக்கம் அளித்தார்! 'கூடா நட்பு' என்றார்; 'கூட்டணியில் தொடருவதால், தமிழனுக்கு எந்தப் பயனும் கிடைக்காது' என்றார். 'என் குடும்பத்தை அசிங்கப்படுத்தினர்' என்று கூட, தி.மு.க., தலைவர் சென்னார்.

இப்போது, அதெல்லாம் மாறிவிட்டதா?


விஜயகாந்த் தலைமையிலான, தே.மு.தி.க.,வுக்கு என்ன இருக்கிறது என, இவர்கள் நினைக்கின்றனரோ, அது அக்கட்சியிடம் இல்லை. இருந்தாலும், ஏதாவது நடந்து ஆட்சிக்கு வந்து விட மாட்டோமா என்ற, நப்பாசையில் இவர்கள் செயல்படுகின்றனர். இதை நான் சொன்னால், தி.மு.க.,வுக்கு எதிர் நிலையில் உள்ளவன் அப்படி தான் சொல்வான் என்பர். ஆனால், கருணாநிதியின் மகன் அழகிரி, 'தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணிக்கு யாரும் ஓட்டுப் போடமாட்டார்கள்' என்கிறார். இதற்கு, இவர்கள் பதில் என்ன?


சீமான், தலைவர் நாம் தமிழர் கட்சி


தன்மானம், சுயமரியாதை என்பவை கட்சியின் கொள்கை. கூட்டணியின் போது கட்சி கொள்கை பேசப்படுகிறதா என்பதை, அரசியல் கட்சிகளும் விளக்க வேண்டும். தி.மு.க., - காங்கிரஸ் மட்டுமே, கூட்டணிக்காக காத்திருக்கவில்லை. அ.தி.மு.க., - பா.ஜ., - மக்கள் நலக் கூட்டணி என அனைத்து கட்சிகளும் காத்திருக்கின்றன.


தே.மு.தி.க.,வைத் தேடி, தி.மு.க., வலிந்து செல்கிறது என்பது, ஆதங்கத்தில் கூறும் விமர்சனம். 'தேர்தலில் எதிரி யார்; அவரை வீழ்த்த என்ன வியூகம் வகுக்கலாம்' என்பதே கூட்டணி. தி.மு.க.,வுடன் முஸ்லிம் லீக் கூட்டணி வைப்பதால், அதன் மார்க்கத்தை, முஸ்லிம் லீக் இழந்து விட்டது என, எப்படி கூற முடியும்!


தேர்தல், மே 16ல் நடக்கிறது. பிற மாநிலங்களோடு சேர்ந்து தேர்தல் நடப்பதால், தேர்தல் தேதியை ஆணையம் முன் கூட்டி அறிவித்துள்ளது. உண்மையில், ஏப்ரல் 22ல் தான் தமிழகத்துக்கு, தேர்தல் அறிவிப்பு துவங்குகிறது. அதுவரை கூட்டணி குறித்துப் பேசவும், புதிய கட்சிகளை அணியில் சேர்க்கவும், அரசியல் கட்சிகளுக்கு அவகாசம் உள்ளது. தே.மு.தி.க.,வை

கூட்டணியில் சேர்க்க, தி.மு.க., முயற்சிப்பது, நல்லாட்சியை ஏற்படுத்தவே.


காதர்மொய்தீன், மாநில தலைவர் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016