கண்காணிப்பை மீறி பணம் கொண்டு செல்ல கட்சிகள் வியூகம்: சோதனையை தீவிரப்படுத்தியது தேர்தல் கமிஷன்

Tamilnadu Assembly Election News: கண்காணிப்பை மீறி பணம் கொண்டு செல்ல கட்சிகள் வியூகம்: சோதனையை தீவிரப்படுத்தியது தேர்தல் கமிஷன்

சட்டசபை தேர்தலில், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் வினியோகம் செய்யப்படுவதைத் தடுக்க, தேர்தல் கமிஷன், வாகனச் சோதனையை தீவிரப்படுத்தி உள்ளது. ஆனாலும், கண்காணிப்பை மீறி, பணம் கொண்டு செல்ல, கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன.

தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு, மே, 16ம் தேதி, தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது, பரிசுப் பொருள் கொடுப்பது, மதுபானம் கொடுப்பது, ஒவ்வொரு தேர்தலிலும் அதிகரித்து வருகிறது. பண நடமாட்டத்தை கட்டுப்படுத்த, ஒவ்வொரு தேர்தலின்போதும், தேர்தல் கமிஷன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதை மீறி, அரசியல் கட்சியினர், பணம் பட்டுவாடாவை கச்சிதமாக முடிக்கின்றனர்.

702 சோதனைச் சாவடிகள்:வழக்கம்போல், இம்முறையும் பணம் பட்டுவாடாவை தடுத்து விட வேண்டும் என்ற துடிப்புடன், தேர்தல் கமிஷன் களம் இறங்கி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட, மார்ச், 4ம் தேதி முதல், தேர்தல் கமிஷன் அதிரடி சோதனையை துவக்கி விட்டது.சட்டசபை தொகுதிக்கு, மூன்று பறக்கும் படைகள், மூன்று சோதனைச் சாவடிகள் என, மாநிலம் முழுவதும், 702 சோதனைச் சாவடிகள், 702 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், சோதனை நடத்த, இரண்டு வருவாய் துறை அதிகாரிகள், இரண்டு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பணம் பறிமுதல் :தேர்தல் விதிமீறல் குறித்து, பொதுமக்கள் புகார் தெரிவிக்க, கட்டணமில்லா டெலிபோன் எண், 'வாட்ஸ் ஆப்' எண், போன்றவை அறிவிக்கப்பட்டுஉள்ளன. தேர்தல் கமிஷன் இணையதளத்தில் புகார் அளிக்கவும், ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு தேர்தலிலும்,
50 ஆயிரம் ரூபாய் வரை எடுத்துச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால், இம்முறை ஒருவர் எவ்வளவு தொகை எடுத்துச் செல்லலாம் என, அளவுகோல் எதுவும் நிர்ணயிக்கவில்லை. குறிப்பிட்ட தொகை நிர்ணயம் செய்தால், அதே அளவு பணத்தை, அரசியல் கட்சியினர் தனித்தனி நபர்களிடம் கொடுத்து அனுப்ப வாய்ப்புள்ளதால், ஒருவர் எவ்வளவு பணம் எடுத்துச் செல்லலாம் என அறிவிக்கவில்லை. சந்தேகத்திற்குரிய நபர்களை பிடித்து விசாரிக்கும்போது, அவரிடம் உரிய ஆவணங்கள் இல்லாமல், அதிக பணம் வைத்திருந்தால், அந்த பணம் பறிமுதல் செய்யப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு இல்லை!தேர்தல் கமிஷன், பணம் நடமாட்டத்தை கட்டுப்படுத்த, தீவிர நடவடிக்கை மேற்கொண்டாலும், மாநில அதிகாரிகள் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை.இதை சாதகமாக பயன்படுத்தி, அரசியல் கட்சியினர் பணத்தை பரவலாக, தேவையான நபர்களுக்கு கொடுத்து வருகின்றனர். திருச்சியில், கரூர் சாலையில் காவிரி பாலம் அருகிலும், புதுக்கோட்டை சாலையில் சுப்பிரமணியபுரம் பகுதியிலும், சேலம் சாலையில் நம்பர் - 1 டோல்கேட் பகுதியிலும், சோதனைச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பல சோதனைச் சாவடிகளில், வாகனச் சோதனை நடைபெறவில்லை. இதைச் சாதகமாக பயன்படுத்தி, கெடுபிடி அதிகரிக்கும் முன், தேர்தலுக்காக பணம் மற்றும் இலவசப் பொருட்களைஎளிதாக நகருக்குள் கொண்டு
சென்று பதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.வேட்பு மனு தாக்கல் துவங்கிய பிறகே, தேர்தல் கமிஷன் கெடுபிடி அதிகரிக்கும். அதற்கு முன், ஒவ்வொரு பகுதிக்கும் வழங்க வேண்டிய பணம் மற்றும் பரிசுப் பொருட்களை, தற்போதே நம்பிக்கையான நபர்களிடம் கொடுத்து வைக்க, அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளன. எனவே, வழக்கம்போல் தேர்தல் கமிஷனுக்கு டிமிக்கி கொடுத்து, அரசியல் கட்சிகள் பணம் பட்டுவாடாவை வெற்றிகரமாக நடத்துமா; அல்லது, தேர்தல் கமிஷன் பணம் வினியோகத்தை தடுக்குமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
பத்திரிகையுடன் போங்க!கடந்த தேர்தல்களில் திருமணம், பூப்புனித நீராட்டு விழா, கோவில் விழா, திருமண விழா போன்றவற்றுக்கு பொருட்கள் வாங்க, பணம் கொண்டு சென்றோர், பறக்கும் படை சோதனையில் பிடிபட்டனர்.ஆவணம் காட்டாதவர்களிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனால், தேவையின்றி பலர் பாதிக்கப்பட்டனர். இதை தவிர்க்க, விசேஷங்களுக்கு பொருட்களை வாங்க செல்வோர், திருமண பத்திரிகை போன்ற ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.

ஜி.பி.ஆர்.எஸ்., கண்காணிப்பு:

பறக்கும் படையினர் செல்லும் வாகனங்களில், ஜி.பி.ஆர்.எஸ்., எனப்படும் வாகன போக்குவரத்து கண்காணிப்பு கருவி பொருத்த, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பறக்கும் படையினர் வாகனம், எந்த இடத்தில் நிற்கிறது, அவர்கள் என்ன பணி செய்கின்றனர் என்பதை, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் தலைமை தேர்தல் அதிகாரி, தங்கள் அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

தேர்தல் முடிவுகள் 2016